Thursday, June 25, 2020

Pious Obligation இறைக்கடமை

Pious Obligation இறைக் கடமை

இந்து சாஸ்திரப்படி, தந்தை பட்ட கடனை மகன் கொடுக்க வேண்டும் என்பது இறைக்கடமை (Pious Obligation) என்று சொல்லப்பட்டுள்ளது. இது கூட்டுக் குடும்பமாக வாழும் போது, அதாவது, தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகிய நான்கு தலைமுறையும் கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அல்லது கோபாசனர்கள் (Coparceners) என்ற இந்து கூட்டுக் குடும்பம் என்பதால், அதில் யார் பட்ட கடனையும் மற்ற உறுப்பினர் அடைத்துவிட வேண்டும் என்பது மதம் சார்ந்த கடமையாக வைத்திருந்தது. (இப்போது அது இல்லை. சொத்து இருந்தால், அது வாரிசுமுறையில் கிடைத்தால், அத்தகைய கடனை அடைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்த கடமை இல்லை என்றும் தற்போதைய சட்டம் சொல்லிவிட்டது).

இந்து தர்மபபடி, தந்தை பட்ட கடனை மகன் அடைக்க வேண்டும் என்று சொன்னாலும், அந்தக் கடன் அந்த கூட்டுக் குடும்ப அத்தியாவசிய செலவுகளுக்காக வாங்கப்பட்டிருக்க வேண்டும். தந்தை, அவரின் சொந்தச் செலவுக்கு வாங்கி இருந்தால் பரவாயில்லை. ஆனால், அவரின் கெட்ட நடவடிக்கைகளுக்கு (immoral purposes) அதாவது, குடித்து கும்மாளம் இடுவதற்கும், பெண்களுடன் சல்லாபம் செய்யும் செலவுகளுக்கும், சூது விளையாடுவதற்கும், போன்ற கெட்ட காரியங்களுக்கு கடன் வாங்கிச் செலவு செய்திருந்தால், அந்தக் கடனை மகன் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இப்படிப்பட்ட கெட்ட நடவடிக்கைகளுக்கு வாங்கிய கடனை “அவயவகரிகா கடன்” (Avayavaharika) என்பர். Coolbrook என்னும் சட்ட வல்லுநர் இந்த அவயவகரிகா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு “a debt for a cause repugnant to good morals” என்று விளக்கி உள்ளார். “வயவகரிகா” என்றால் நல்ல காரியத்துக்கு என்றும், “அவயவகரிகா” என்றால் கெட்ட காரியங்களுக்கு என்றும் பொருள் கொள்ளலாம்.

அவயவகரிகா அல்லது கெட்ட செயல்களுக்காக வாங்கிய கடன், அவரின் மகன் கொடுத்துத் தீர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தந்தைக்கு கிடைக்கும் சொத்துப் பங்கில் இருந்து வேண்டுமானல் அவர் கொடுத்துக் கொள்ளட்டும். கூட்டுக் குடும்பச் சொத்திலோ, கூட்டுக் குடும்ப உறுப்பினர்களோ அதைக் கொடுத்துத் தீர்க்க வேண்டும் என்ற சட்டக் கட்டாயம் இல்லை.

1897-ல் அலகாபாத் ஐகோர்ட் ஒரு வழக்கில் இப்படித் தீர்ப்புச் சொல்லி உள்ளது.

தந்தை (குர்ஷித் பகதூ்ர்) அந்தக் காலத்தில் (1897-ல்) ரூ.4,000 கடன் வாங்கி உள்ளார். அதற்கு ஒரு உண்டி (Hundi) கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் கூட்டுக் குடும்பச் சொத்துக்களை ஜாமின் காட்டி ஒரு பாண்டும் எழுதிக் கொடுத்துள்ளார்.

உண்டி (Hundi) என்பது ஒருவகையான புராமிசரி நோட்  (Promissory Note) போன்றது. இதை பொதுவாக வியாபாரிகள் பயன்படுத்துவார்கள். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வியாபாரத்தில் இது அதிகமாகப் பயன்பட்டது. இந்தியாவிலிருந்து, வேறு நாடுகளில், (மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை போன்ற நாடுகளில்) அவர்களின் வியாபாரம் இருந்ததால், இந்த உண்டி முறையை ஒரு வங்கி (Bank) போல உபயோகித்து வந்தனர். (இப்போது, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள், இந்தியாவுக்கு ரகசியமாகப் பணம் அனுப்புவதற்கு இந்த உண்டி முறையானது வேறு வடிவத்தில் உதவி வருகிறது. உள்நாட்டு வியாபாரத்துக்கும் இந்த உண்டி முறையை வேறு மாதிரி பயன்படுத்துகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்படி இது தவறாகும். FERA என்னும் வெளிநாட்டு பணப்புழக்கச் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும்).

இந்த அலகாபாத் வழக்கில், கடன் வாங்கிய தந்தை இறந்து விடுகிறார் எனவே கடன் கொடுத்தவர், இறந்தவரின் மகன்மீது வழக்குப் போட்டு, “தந்தை பட்ட கடனை மகன் கொடுக்க வேண்டும் என்ற Pious Obligation என்ற இந்து மதக் கொள்கைப்படி பணத்தைத் திரும்பக் கேட்கிறார்.

வழக்கு கடைசியாக அலகாபாத் ஐகோர்ட்டுக்கு வருகிறது. அங்கு, தந்தை பட்ட கடனை மகன் கொடுக்க வேண்டும் என்பது மதக் கடமைதான். ஆனாலும் அவர் அதை கெட்ட நடவடிக்கைகளுக்காக வாங்கியதால், மகன் கொடுக்கத் தேவையில்லை என்று அவரின் மகன் வாதம் செய்கிறான்.

அவனின் தந்தை ஒரு குடிகாரர் என்றும், கண்ட கெட்ட செலவுகளைச் செய்பவர் என்றும், இந்த விஷயங்கள் எல்லாம் பணத்தை கடன் கொடுத்தவருக்கு நேரில் தெரியும் என்றும், அப்படி இருக்கும்போது, அந்தக் கெட்ட செயல்களுக்குக் கொடுத்த கடனை அவர் மகனிடம் கேட்பது சட்டப்படி சரியல்ல என்று வாதம் செய்கிறான் மகன்.

ஐகோர்ட், “அவர் கெட்ட வழிகளுக்காக கடன் வாங்கினார் என்பதை மகனே கோர்ட்டில் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஒருவர் குடிகாரர் என்று சொல்வதால் மட்டுமே, அவர் கெட்ட நடத்தை உள்ளவர் என்று அனுமானிக்க முடியாது. அவர் அந்தக் கடன் பணத்தை வேறு கெட்ட நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தினார் என்பதை மகன் கீழ்கோர்ட்டில் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கவில்லை. எனவே இந்தக் கடன் அவயவகரிகா கடன் (கெட்ட கடன்) இல்லை என்பதால், மகன் அந்தக் கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி தீர்ப்புக் கொடுத்து விட்டது.

“We are of opinion that evidence of general character is not sufficient for the discharge of the onus which lies on the son. He must prove that the particular debt in question was incurred for an immoral purpose and this son has not been able to do in this case.”

**

 


No comments:

Post a Comment