Tuesday, June 30, 2020

சபிண்டா உறவு முறை - Sapinda Relationship

சபிண்டா உறவுமுறை (Sapinda Relationship)

பழக்க-வழக்கம் – Custom and Usage:

இந்து திருமணச் சட்டம் 1955 என்பது மத்திய சட்டம். இதில் பிரிவு 3-ல் “பழக்க வழக்கம்(Custom and Usage) என்றால் என்ன என்று சொல்லப் பட்டுள்ளது. அதாவது ஒரு பகுதியில், அல்லது ஒரு சமுதாயத்தில், அல்லது ஒரு குடும்ப வழியில், தொடர்ந்து ஒரு பழக்கத்தை, வெகுகாலமாக, கடைபிடித்து வந்தால், அதை “பழக்க-வழக்கம்” (Custom and Usage) என்பர்.

ஆனாலும் இந்தத் தொடர் பழக்க-வழக்கமானது, பொதவான “சமுதாயக் கொள்கைகளுக்கு” எதிரானதாக இருக்கக் கூடாது.

மேலும், ஒரு குடும்பத்துக்குள் மட்டும் கடைப்பிடிக்கும் தொடர் பழக்க வழக்கமானது, இடையில் அந்தக் குடும்பத்தில் கடைப்பிடிக்காமல் விடுபட்டிருக்கக் கூடாது.

சபிண்டா உறவுமுறை – Sapinda Relationship:

இந்து திருமணச் சட்டம் 1955-ல் “சபிண்டா உறவுமுறை” (Sapinda Relationship)  என்றால் என்ன என்று பிரிவு 3-ல் சொல்லி உள்ளது.

சபிண்டா உறவு என்பது ஒருவருக்கு, தனது தாய்வழி உறவில், தாயுடன் சேர்த்து மூன்று தலைமுறை மேலாகவும், மற்றும் தந்தைவழி உறவில், தந்தையுடன் சேர்த்து ஐந்து தலைமுறை மேலாகவும் இருக்கும் உறவுகள் சபிண்டா உறவுகள் எனப்படும்.

ஒருவரை ஒன்று என கணக்கில் எண்ணிக் கொண்டால் அவரிலிருந்து மேலாக ஒவ்வொரு தலைமுறையையும் எண்ண வேண்டும்.

இந்து திருமணச் சட்டத்தின்படி, இந்த சபிண்டா உறவு முறைகளுக்குள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, இந்த சபிண்டா உறவு என்பது, “அத்தைமகள்” அல்லது “மாமன்மகள்” என்பவரையும் சேர்த்தே குறிக்கும். ஒரே மூதாதையரைக் கொண்டவர்கள் சபிண்டா என்பதால், இந்த அத்தை மகளும், மாமன் மகளும் அல்லது அத்தை மகனும், மாமன் மகனும், தடை செய்யப்பட்ட திருமண உறவுகள் ஆகும். இவர்களுக்குள் திருமணம் செய்து கொண்டால் அது இந்து திருமணச் சட்டம் 1955-ன்படி செல்லாது.

ஆனாலும், இந்து திருமணச் சட்டத்தில், பிரிவு 3-ல் ஒரு சமுதாயத்தில் தொடர்ந்து இத்தகைய “பழக்க-வழக்கம்” இருந்து வந்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அது சமுதாயக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கக் கூடாது.

இந்த சலுகையைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டில் பல சமுதாயங்களில் இந்த சபிண்டா உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது சமுதாயக் கொள்கைக்கு எதிரானது என்று சொல்லவில்லை. ஆனாலும் மருத்துவக் காரணங்களைச் சொல்லி இப்படிப்பட்ட சபிண்டா உறவுத் திருமணத்தை ஆதரிக்கவில்லை.

சபிண்டா (Sapinda) என்றால் என்ன?

சபிண்டா என்றால் சக-பிண்டம் என்று பொருள். அதாவது தனது மூதாதையரின் பிண்டத்தில் ஒருபகுதியில் இருந்து தோன்றியவர்கள் என்று பொருள். இந்த உறவானது, தன் தாய் வழி முன்னோர்களின் வழியில் மூன்று தலைமுறைக்கும், தன் தந்தை வழி முன்னோர்களின் வழியில் ஐந்து தலைமுறைக்கும் தொடரும் என்று இந்து சாஸ்திரச் சட்டமான மித்தாக்சரா சட்டம் சொல்கிறது.

மத்சைய புராணத்தில், சபிண்டா என்பது தந்தை வழியில் ஏழு தலைமுறைக்குத் தொடரும் என்று சொல்கிறது. ஏனென்றால் ஷ்ரதா என்னும் இறந்தவர்களுக்கு உணவுப் பிண்டம் கொடுக்கும் மகாளய தினத்தில் (the great annual sacrifice in the month of Bhadropada புரட்டாசி) இந்த சபிண்டா உறவுகளுக்குத் தான் உரிமை உள்ளது.

ஆனால், மித்தாக்சரா கொள்கையின் ஆசிரியரான விஞ்ஞானேஸ்வரா கூற்றுப்படி, “பிண்டம் கொடுப்பவர் சகபிண்டம் இல்லை. மாறாக மூதாதையரிடமிருந்து ஒரு பிண்டமாகத் தொடர்பவரே சகபிண்டர்” என்று கூறியுள்ளார்.

**

 


No comments:

Post a Comment