Monday, August 10, 2020

அவதூறு வழக்கு

 

Defamation அவதூறு வழக்கு:

1931-ல் நடந்த வழக்கு: திருவள்ளூர் யூனியன் போர்டுக்கு மெம்பர்களின் தேர்தல் நடக்கிறது. சென்னை சட்டம் 14/1920-ன்படி குஷ்டரோகியாக இருப்பவர் தேர்தலில் பதவிக்கு நிற்க முடியாது என்பது விதி. கன்னியப்ப செட்டி என்பவருக்கு குஷ்டரோகம் என்று பொய்யாகச் சொல்லி அவரை தேர்தலில் நிற்க விடாமல் செய்து விட்டார்கள் என்று ஒரு 10 பேர் மீது மான நஷ்ட வழக்குப் போடுகிறார். ஐபிசி பிரிவு 500-ன்படி ஒவ்வொருவருக்கும் தலா ரூ.75 அபராதமும், ரூ.300 நஷ்ட ஈடாகவும் கொடுக்கும்படி உத்தரவு ஆகிறது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார்கள்.

 

அந்த சென்னை சட்டம் 14/1920-ல் குஷ்டரோகம் என்றால் என்ன என்பது பற்றிய எந்த விளக்கமும் சொல்லப்படவில்லை. அது அந்தச் சட்டத்தில் உள்ள குறை என்று ஐகோர்ட் அபிப்பிராயம் சொல்கிறது. மேலும் குஷ்ட ரோகம் என்பது விஞ்ஞான பூர்வமான பெயர் இல்லை. இதை Elephantiasis Graecorum or Lepra Graecorum என்று மருத்துவம் சொல்கிறது. இது ஒரு தோல் வியாதி. இங்கு, அந்த தேர்தலில் மனுச் செய்தவரின் காலில் உள்ள தோலில் வெள்ளையாக அடையாளம் உள்ளது. இதை வைத்து அவருக்கு குஷ்ட ரோகம் என்று சொல்லி விடுகிறார்கள். யூனியன் போர்டு தலைவருக்கு மனுக் கொடுக்கிறார்கள். எனவே அவர் தேர்தலில் நிற்க முடியாமல் போகிறது. தனக்கு குஷ்ட ரோகம் இல்லாதபோது, பொய்யாகச் சொல்லி தனக்கு அவமானத்தை உண்டாக்கி விட்டார்கள் என்று வழக்குப் போட்டிருந்தார்.

 

ஐபிசி பிரிவு 499-ல் அவதூறு (Defamation) என்றால் என்ன என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவர் அவரின் சொல்லாலோ, செயலாலோ, அல்லது செய்கையாலோ, மற்றவருக்கு அவதூறு உண்டாக்கும்படி நடந்து கொண்டாலோ, அல்லது அதை பொதுவெளியில் வெளிப்படுத்தினாலோ அது அவதூறு ஆகும். இறந்தவரைப் பற்றி அவதூறு பேசினாலும் அதுவும் அவதூறாகும். ஒரு நிறுவனத்தைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் அதுவும் அவதூறாகும். ஒருவரை வஞ்சப் புகழ்ச்சியாகப் பேசினாலும் அதுவும் அவதூறாகும்.

இதற்கு சில விதிவிலக்குகளும் (10 விதிவிலக்குகள்) உள்ளன. அதில்சில: உண்மை நிலையைக் கூறினால் அது அவதூறு இல்லை. அரசு ஊழியரின் அரசு வேலை சம்மந்தமாகச் சொல்லும் எதுவும் அவதூறு ஆகாது. ஒரு கோர்ட் தீர்ப்பு நடவடிக்கையைப் பற்றி அறிக்கையாகச் சொல்வது அவதூறு ஆகாது. ஒரு அதிகாரி முன்பு உண்மையான விபரத்தைக் கூறுவது அவதூறு ஆகாது. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மற்றவரைப் பற்றிய உண்மை நிலையை கூறுவது அவதூறு ஆகாது.

 

இந்த வழக்கில், ஒரு அதிகாரி (போர்டு தலைவர்) முன்னர் இந்தப் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே இது ஐபிசி பிரிவு 499-ல் 8-வது விதிவிலக்கில் உள்ளது. இதில் உள்ள குற்றவாளிகள் அந்த நபருக்கு குஷ்ட ரோகம் உள்ளது என்ற புகாரை தலைவருக்கு மட்டும் கொடுக்கிறார்கள். எனவே இது விதிவிலக்கில் வருகிறது. வெளியாருக்கு தெரியும் படி விளம்பரம் ஆகவில்லை. எனவே இது அவதூறு ஆகாது என்று சென்னை ஐகோர்ட் முடிவு செய்து அந்த குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து விட்டது.

**

No comments:

Post a Comment