Tuesday, August 11, 2020

பூர்வீகச் சொத்தில் மகளுக்கும் பங்கு உண்டு

 

Daughter’s Right in Coparcenary Property

2005 முதல் இந்து பூர்வீகச் சொத்திலும் மகள்களுக்கும் பங்கு:

பூர்வீகச் சொத்து என்பது எது:

பழைய இந்து மித்தாக்சரா சட்டப்படி, பூர்வீகச் சொத்து என்பது, ஒருவருக்கு, தன் தகப்பனார், பாட்டன், முப்பாட்டன் இவர்களிடமிருந்து கிடைத்த சொத்தாகும். அவ்வாறு கிடைத்த சொத்தில், அவருக்கும், அவரின் மகனுக்கும், அவரின் பேரனுக்கும், அவரின் கொள்ளுப் பேரனுக்கும் “அவர்களின் பிறப்பால்” பங்கு பெறுவர். இதுவே பூர்வீகச் சொத்து என்பது.

ஆண்களுக்கு மட்டும்:

இப்படியான பூர்வீகச் சொத்துக்களில் ஆண்களுக்கு மட்டுமே, அந்தச் சொத்தின் வாரிசு உரிமை உண்டு. இதிலும் அவர்களில் உயிருடன் இருப்பவர் சொத்தை அடைவார். இதை சர்வைவர்ஷிப் (Survivorship) என்ற முறைப்படி அடைவர். ஆண்கள் என்பது, ஒருவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை மட்டுமே. அதற்கு மேல் உள்ளவர்களை இது சேர்க்காது. ஆக, ஒருவருக்கு, தன் தந்தை, பாட்டன், முப்பாட்டன், மற்றும், ஒருவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் என, இவரிலிருந்து மேலே மூன்று தலைமுறையும், இவரின் கீழே மூன்று தலைமுறையும் ஆக இவருடன் சேர்த்து மொத்தம் ஏழு தலைமுறைகளை இந்து கோபார்சனர்கள் (Coparceners) என்பர். இதில் குறிப்பிடாத மற்ற ஆண்கள் சேர மாட்டார்கள். பெண்களும் சேர மாட்டார்கள். இந்த ஆண்களை மட்டுமே கோபார்சனர்கள் என்பர். அந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களை (மனைவிகளாகவோ, மகள்களாகவோ) இருப்பவர்கள் இந்த இந்து கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்கள் (Hindu Joint Family Members) என்பர். இந்தப் பெண்களை கோபார்சனர்கள் என்று சொல்ல மாட்டார்கள். இவர்களுக்கு பிறப்பால் எந்த சொத்துரிமையும் கிடையாது. இவர்களாக சொத்தை வாங்கிக் கொண்டால் அந்தச் சொத்தை அனுபவிக்கலாம். அல்லது இவர்களின் திருமணத்தின் போது சீதனமாகக் கொடுத்ததால் கிடைக்கும் சொத்தை சீதனச் சொத்து என்று அனுபவிக்கலாம்.

1937-ல் இந்து விதவைகளுக்கு சொத்துரிமைச் சட்டம்:

இந்து மனைவிகளுக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்வரை, இந்து கூட்டுக் குடும்பத்தில் அவர்களின் வாழ்க்கை ஆதரவுக்காக ஜீவனாம்ச உரிமை மட்டும் உண்டு. இந்த உரிமையானது, உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றையும், இந்த கோபார்சனர்கள் என்று சொல்லும் ஆண்கள், இந்தப் பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது இந்து சாஸ்திர சட்டத்தின் கட்டாயம். அதனால் இந்தப் பெண்களுக்கு பூர்வீகச் சொத்தில் எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது.

இதை மாற்றி, கோபார்சனர்கள் என்னும் ஆண்கள் இறந்து விட்டால், அவர்களின் விதவை மனைவிகளுக்கு ஒரு சொத்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அப்போதைய இந்திய பிரிட்டீஸ் அரசு கருதியது. எனவே இந்து விதவைகள் சொத்துரிமைச் சட்டம் 1937-ஐ கொண்டு வந்தது. அதன்படி, ஒரு கோபார்சனரி ஆண் இறந்து விட்டால், அப்போது அந்தக் குடும்பத்தில் உள்ள கோபார்சனர்களுக்கு என்ன பங்கு கிடைக்கும் என்று கணக்குப் போட்டு, அதில் அப்போது இறந்த கோபார்சனருக்குக் கிடைக்க வேண்டிய பங்கு சொத்தை அந்த இறந்தவரின் விதவை மனைவிக்குக் கொடுத்து விடுவர். ஆனால் இந்த பங்கில், விதவைக்கு முழு உரிமை கிடைக்காது. அதை அந்த விதவையின் வாழ்நாள்வரை அனுபவிக்கும் உரிமை மட்டுமே உண்டு. இதை “ஆயுட்கால உரிமை” (Life-interest or Limited Interest) என்று அந்தச் சட்டம் சொல்கிறது. இந்த விதவையின் ஆயுட்காலத்துக்குப் பின்னர் அந்தச் சொத்து மற்ற கோபார்சனர்களுக்குப் போய்விடும். இதை ரிவர்சனரி உரிமை (Reversionary right) என்பர். இப்படிப்பட்ட நிலைதான் இந்து விதவைகளுக்கு 1937-ல் கொடுக்கப்பட்டது.

1956-ல் இந்து விதவைகளுக்கு ஆயுட்கால உரிமையானது முழு உரிமையாகி விட்டது:

சுதந்திர இந்தியா ஆனபின்னர், இந்து வாரிசுஉரிமைச் சட்டத்தை தொகுத்தார்கள். அதற்கு The Hindu Succession Act 1956 இந்து வாரிசு உரிமைச் சட்டம் என்று கொண்டு வந்தார்கள். இதில் பிரிவு 14(1)-ல் இப்படிப்பட்ட இந்து விதவைகளுக்கு ஆயுட்கால உரிமையுடன் கிடைத்த சொத்தானது, அன்று முதல் அவர்களின் முழுஉரிமையான சொத்தாக மாறி விட்டது. 1956-க்கு பின்னர் இப்படிப்பட்ட ஜீவனாம்ச உரிமைக்காக, கணவரின் சொத்தில் கிடைத்த ஆயுட்கால உரிமையானது, அந்த விதவைக்கு முழு உரிமை உள்ள சொத்தாக மாறி விட்டது.

இந்த 1956 சட்டத்தில், மூன்று விதமான சொத்துக்களைப் பற்றி சொல்லி உள்ளது. (1) பூர்வீகச் சொத்துக்கள். (2) ஆண்களின் தனிப்பட்ட சொத்துக்கள். (3) பெண்களின் சொத்துக்கள். மூன்றுக்கும் வேறு வேறு சட்டப் பிரிவுகளை 1956 சட்டம் வகுத்துள்ளது. (1) பூர்வீகச் சொத்துக்களைப் பற்றி பிரிவு 6-ல் சொல்லி உள்ளது. (2) ஆண்களின் தனிப்பட்ட சொத்துக்களைப் பற்றி பிரிவு 8-ல் சொல்லி உள்ளது. (3) பெண்களின் சொத்துக்களைப் பற்றி பிரிவு 15-ல் சொல்லி உள்ளது.

(1)பூர்வீகச் சொத்துக்கள் (1956 சட்டத்தில்):

1956 சட்டத்தில் பூர்வீகச் சொத்துக்களின் வீச்சைக் குறைத்து விட்டார்கள். அதாவது, பழைய இந்து சாஸ்திர சட்டப்படி, இந்து கோபார்சனர்கள் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். இது ஒரு கார்பரேஷன் என்னும் கம்பெனி மாதிரி இருக்கும். ஏழு தலைமுறை ஆண்கள் கோபார்சனர்கள் எனப்படுவர். இது ஒரு தொடர்கதை மாதிரி தொடரும். இந்த ஏழு தலைமுறை ஆண்களுக்கு பிறப்பால் பங்குரிமை உண்டு என்று இருந்து வந்தது. இந்த நிலையை 1956 சட்டத்தில் மாற்றி விட்டார்கள். அந்த 1956 சட்டம் பிரிவு 6-ல் இந்த பூர்வீகச் சொத்து இனி எப்படி பங்குரிமை வரும் என்று சொல்லி உள்ளது. அதன்படி, 1956-க்கு பின்னர், அதுவரை இருந்துவந்த சர்வைவர்ஷிப் (Survivorship) அதாவது ஆண்களுக்கு பிறப்பால் பங்குரிமை என்பது ரத்து ஆகி விட்டது. வாரிசு உரிமைப்படி (Succession) அவரவரின் வாரிசுகளுக்கு பங்கு செல்லும் என்று மாற்றி விட்டது. ஆனாலும், ஏற்கனவே பூர்வீகச் சொத்தாக இருந்த வந்த சொத்தை பங்கு பிரிக்கும்போது, கடைசியாக இறந்த கோபார்சனருடன், மற்ற உயிருடன் இருக்கும் கோபாரசனர்கள் சேர்ந்து கற்பனையாக ஒரு பாகப் பிரிவினை நடத்திக் கொள்ள வேண்டும். இதை நோஷனல் பார்ட்டிசன் (Notional Partition) அல்லது கற்பனைப் பாகப் பிரிவினை என்று வழக்கத்தில் சொல்வார்கள். இதன்படி, உயிருடன் இருக்கும் கோபார்சனர்களுக்கு தலா ஒரு பங்கும், இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கும் பிரித்துக் கொள்ள வேண்டும். இறந்த கோபார்சனரின் பங்கில், அவரின் விதவை மனைவி, தாய், மகள்கள், மகன்கள் இருந்தால், அவர்கள் சரிசமமாக ஆளுக்கு ஒரு பங்கை அடைவார்கள். இந்தச் சட்டப் பிரிவு 6 என்பது வக்கீல்களுக்கும் கோர்ட்டுக்குமே விளங்கிக் கொள்வதில் கொஞ்சம் குழப்பம் இருக்கும். இதை ஒரு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக: ஒரு பூர்வீகச் சொத்து இருக்கிறது. ஒருவருக்கு அவரின், தாய், மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் 1956 சட்டம் வந்தபின்னர் இறக்கிறார். இந்த சொத்து எப்படி பங்கு பிரியும்? இறந்தவர் ஒரு இந்து ஆண் கோபார்சனர். அவரின் இரண்டு மகன்களும் இரண்டு ஆண் கோபார்சனர்கள். (ஆண்கள் தான் கோபார்சனர்களாக இருக்க முடியும்). ஆக மொத்தம் மூன்று கோபார்சனர்கள் இருக்கிறார்கள். இது பூர்வீகச் சொத்து என்பதால், கோபார்சனர்களுக்கு மட்டுமே பிறப்பால் உரிமை உள்ள சொத்து. எனவே இது மூன்று பங்காகப் பிரிகிறது. இறந்தவருக்கு (தந்தை என்று வைத்துக் கொள்ளலாம்) ஒரு பங்கு கிடைக்கிறது. இறந்தவரின் மூன்றில் ஒரு பங்கானது, 1956 சட்டம் பிரிவு 6-ன்படி தனிச் சொத்தாக ஆகி விட்டது. எனவே அதில் இறந்தவரின் தாய், மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்களை அவருக்கு நேர் வாரிசு என்பதால், அனைவரும் தலா ஒரு பங்கு பெறுவார்கள். இரண்டு மகன்களும் ஏற்கனவே கோபார்சனர்கள் என்ற முறையில் பிறப்பால் (Survivorship) தலா மூன்றில் ஒரு பங்கு பெற்று இருக்கிறார்கள். மேலும்,  தந்தையின் பங்கில் மற்ற வாரிசுகளுடன் சேர்ந்து தலா ஒரு பங்கு “வாரிசு முறையில்” (Succession) பெறுகிறார்கள்.

இப்படியாக, பழைய இந்து சாஸ்திர சட்டத்தில் இருந்து வந்த சர்வைவர்ஷிப் முறை (Survivorship) ஒழிக்கப்பட்டு, வாரிசுரிமை முறையை (Succession) 1956 சட்டத்தில் கொண்டு வந்துள்ளார்கள். எனவேதான் 1956 சட்டத்தை இந்து வாரிசுரிமை சட்டம் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும், இதிலும் சில குழப்பங்கள் உண்டு. இந்த இரண்டு மகன்களுக்கும் பிறப்பால் சர்வைவர்ஷிப் முறைப்படி கிடைத்த தலா மூன்றில் ஒருபங்கு சொத்தின் பெயர் என்ன என்ற கேள்வி எழுகிறது. அது பூர்வீகச் சொத்தின் தன்மை கொண்டதா? அல்லது அதன் வாசனை அதற்கு இருக்கிறதா? இல்லை, அது இனி மகன்களின் தனிச் சொத்தாகவே கருத வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகள் வேறு வேறு மாதிரி முடிவுகளை எடுத்துள்ளது. சென்னை ஐகோர்ட், இப்படிப்பட்ட சொத்து தனிச் சொத்துதான் என்று தீர்ப்புக் கூறி உள்ளது.

(2) ஆண்களின் தனிச் சொத்துக்கள்:

1956 சட்டத்தில் பிரிவு 8-ல் ஆண்களின் தனிச் சொத்துப் பற்றிய வாரிசு உரிமையைப் பற்றிச் சொல்கிறது. தனி சொத்து என்பது, ஒருவர் பணம் கொடுத்து வாங்கிய சொத்து, மற்றும் ஒருவருக்கு பூர்வீக வழியில் (ஆண் மூதாதையர் என்னும் கோபார்சனர்கள் வழியில்) கிடைக்காத, அல்லது பெண் வழி அல்லது மற்ற ஆண்களின் வழியில் உயில் மூலம், செட்டில்மெண்ட் மூலம், வாரிசுசாகக் கிடைத்த சொத்துக்கள் ஆகும். இதை தனிச் சொத்து என்பர். அதாவது கோபார்சனரி சொத்துக்கள் அல்லாத வழியில் கிடைத்த சொத்துக்கள் இவைகள். 1956க்குப் பின்னர் ஒரு ஆண், அத்தகைய அவரின் தனிச் சொத்தை விட்டுவிட்டு (உயில், செட்டில்மெண்ட் எழுதாமல்) இன்டஸ்டேட்டாக (Intestate என்பது யாருக்கும் எழுதிக் கொடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு இறப்பவர் என்று பொருள்) இறந்துவிட்டால், அந்தச் சொத்து, அவரின் தாய், மனைவி, மகன்கள், மகள்கள், ஏற்கனவே இறந்துபோன  மகன் அல்லது மகளின் வாரிசுகள் இவர்களுக்குப் போகும். இவர்களை முதல் நிலை வாரிசுகள் (Class-I heirs) என்று 1956 சட்டம் சொல்கிறது.  இவர்கள் தலைக்கு ஒரு பங்கு என்று பிரித்துக் கொள்வார்கள். ஒருவேளை, முதல்நிலை வாரிசுகள் யாரும் உயிருடன் இல்லை என்றால், இரண்டாம் நிலை வாரிசுகள் (Class-II heirs) என்ற ஒரு பட்டியல் உள்ளது. அதன்படி ஒரு நிலையில் உள்ளவர் அதை எடுத்துக் கொள்வார். அவர் இல்லையென்றால், அடுத்து நிலையில் உள்ளவர் அதை எடுத்துக் கொள்வார். அதன்படி, இரண்டாம் நிலை வாரிசுகளில் முதலில் வருபவர் இறந்தவரின் தந்தை. இறந்தவருக்கு, முதல்நிலை வாரிசுகள் யாரும் உயிருடன் இல்லை என்றால், இறந்தவரின் தந்தை உயிருடன் இருந்தால், சொத்து முழுவதையும் அவரே எடுத்துக் கொள்வார். தந்தையும் உயிருடன் இல்லை என்றால், இறந்தவரின், உயிருடன் உள்ள சகோதர, சகோதரிகள் எடுத்துக் கொள்வார்கள். இறந்த சகோதர, சகோதரி பிள்ளைகளுக்குப் போகாது.  அடுத்து, உயிருடன் உள்ள சகோதர, சகோதரி யாரும் இல்லை என்றால் அவர்களின் பிள்ளைகளுக்கு  அந்தச் சொத்து போகும். அவர்களும் யாரும் இல்லை என்றால், மற்ற நெருக்கத்தில் உள்ள பந்துக்கள் என்னும் உறவுகளுக்குப் போகும். இந்த பட்டியல் ஒரு பெரிய நீண்ட பட்டியல் ஆகும்.

(3) இந்து பெண்களின் சொத்தில் வாரிசுரிமை:

 இந்துப் பெண்களின் சொத்தில் பூர்வீகச் சொத்து (கோபார்சனரி சொத்து) என்று ஏதும் இல்லை. பெண்களுக்கு, அவர்கள் கிரயம் வாங்கிய சொத்து இருக்கும். அவர்களுக்கு திருமணத்தின் போது சீதனமாக கொடுத்த சொத்து இருக்கும். கணவர் இறந்த பின்னர் அவரின் சொத்து அவரின் மனைவியான இருவருக்கு வாரிசு முறையில் கிடைத்திருக்கும். மேலும், அந்தப் பெண்ணுக்கு, அவரின் தந்தை, தாய் வழியில் அவர்கள் இறந்த பின்னர் இவருக்கு அதில் வாரிசு உரிமையாக சொத்து கிடைத்திருக்கும். ஆக, ஒரு இந்து பெண்ணுக்கு (1) தனிச் சொத்து இருக்கும். (சீதனத் சொத்து உட்பட). (2) கணவர் வழியில் சொத்து கிடைத்திருக்கும். (3) தந்தை, தாய் வழியில் சொத்து கிடைத்திருக்கும்.

இந்த பெண் இறந்துவிட்டால், அவரின் சொத்துக்கள் எப்படி வாரிசு முறைப்படி அவரின் வாரிசுகளுக்குப் போக வேண்டும் என்று 1956 சட்டம் பிரிவு 15 தெளிவு படுத்தி உள்ளது. அதன்படி, அந்தப் பெண்ணின் எந்த வகைச் சொத்தாக இருந்தாலும், அந்த பெண் இறந்து விட்டால், அவரின் கணவருக்கும், பிள்ளைகளான மகன்கள், மகள்கள் இவர்களுக்கு தலா ஒரு பங்கு கிடைக்கும்.

ஒருவேளை, அந்தப் பெண்ணுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை என்றால், அந்தப் பெண்ணின் சொத்து எந்தவகை என்பதை வைத்து மாறுபடும். (1) அந்தப் பெண்ணின் தனிச் சொத்தாக இருந்தால், அல்லது அவரின் கணவர் மூலம் கிடைத்த சொத்தாக இருந்தால், (இந்த இரண்டு வகைச் சொத்துக்களும்) அந்தப் பெண்ணுக்கு குழந்தை இல்லாதபோது, அவரின் கணவருக்கு, அல்லது இறந்த கணவரின் வாரிசுகளுக்குப் போய் சேரும். அதாவது, அது கணவர் சொத்தாகக் கருதி, அவரின் வாரிசுகளான பிரிவு 8-ன்படி போய்ச் சேரும்.

மேலும், அந்தப் பெண்ணுக்கு, தன் தந்தை தாய் மூலம் கிடைத்த சொத்தாக இருந்து, குழந்தை இல்லாமல் இறந்தால், அந்த சொத்து மட்டும், அந்த பெண்ணின் தந்தைக்குப் போகும், அல்லது தந்தை இல்லை என்றால், தந்தையின் வாரிசுகளுக்குப் போய்ச் சேரும். அதாவது அது தந்தை சொத்தாகக் கருதி, பிரிவு 8-ன்படி தந்தையின் வாரிசுகளை அடையும்.

1956-ல் இந்து பெண்களின் நிலை:

இதுவரை பார்த்தபடி, 1956 சட்டப்படி பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு குறிப்பாக மகள்களுக்கு பிறப்பால் பங்கு உரிமை கிடையாது. தந்தையின் பங்கில் ஒரு சிறு பகுதி மட்டும் வாரிசு உரிமைப்படி கிடைத்து வந்தது. ஆனால், மகன்களுக்கு பிறப்பால் ஒரு பங்கு பூர்வீகச் சொத்தில் கிடைத்தது. இது ஆண், பெண் என்ற வித்தியாசத்தைக் காட்டியது. ஆண்களுக்கு பூர்வீகச் சொத்தில் பிறப்பால் பங்கு உண்டு. ஆனால் பெண்களுக்கு (மகள்களுக்கு) பிறப்பால் பூர்வீகச் சொத்தில் பங்கு இல்லை. இது இந்திய அரசியல் சாசனச் சட்டத்துக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் சாசனச் சட்டத்தின்படி எதிலும் ஆண் பெண் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்று சொல்லி உள்ளது.

2005 இந்து வாரிசு உரிமைத் திருத்தல் சட்டம்:

எனவே, 2005-ல் இந்து வாரிசு உரிமைத் திருத்தல் சட்டம் வருகிறது. அதன்படி, 1956 இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஐ (இதுதான் பூர்வீகச் சொத்தில் மகள்களுக்கு பங்கு இல்லை என்று சொல்கிறது) மாற்றி அமைக்கிறது.

அதன்படி, 2005-க்குப் பின்னர், பூர்வீகச் சொத்தில் ஆண்களைப் போலவே (மகன்களைப் போலவே) மகள்களுக்கும் “பிறப்பால் பங்குரிமை” (Survivorship) உண்டு என்று திருத்தம் செய்கிறது. அதன்படி, பூர்வீகச் சொத்தை விட்டுவிட்டு ஒரு கோபார்சனர் (தந்தை என்று வைத்துக் கொள்வோம்) இறந்து விட்டால், மகன்களும், மகள்களும் கோபார்சனர்கள் ஆவார்கள் என்றும், மகள்களுக்கும் மகன்களைப் போலவே தலைக்கு ஒரு பங்கு உண்டு என்றும் விளக்கி உள்ளது.

இந்தச் சட்டம் இப்படித் திருத்தப்பட்டாலும், அதிக சட்டசிக்கல்களைக் கோர்ட்டில் சந்திக்க வேண்டி வந்துள்ளது. இன்றுவரை சட்ட விளக்கங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தக் குழப்பங்கள் என்ன என்று பார்ப்போம்.

2005 திருத்தல் சட்டத்தின் சட்டக் குழப்பங்கள்:

(1)இந்தச் சட்டம் 1956ல் இருந்தே அமலுக்கு வருமா அல்லது 2005 முதல் அமலுக்கு வருமா? Prospective or Retrospective or Retroactive?

(2) இந்த 2005 சட்டம் வந்த பின்னர் பிறக்கும் மகள்களுக்கு மட்டுமே பங்கு உண்டா அல்லது ஏற்கனவே பிறந்த மகள்களுக்கும் பங்கு உண்டா?

(3)இந்த 2005 சட்டம் வருவதற்கு முன்னர் பாகம் பிரித்துக் கொண்ட சொத்துக்களின் கதி என்ன.

(4)இந்த 2005 சட்டம் வருவதற்கு முன்னர் பாக வழக்குகள் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கின்றன, அவைகளின் நிலை என்ன.

(5) 2005 சட்டம் வருவதற்கு முன்னர் தந்தை இறந்து விட்டால், மகன்களுக்கு தானாகவே பங்கு போய்ச் சேர்ந்துவிடும். எனவே இந்தச் சட்டம் வந்தபோது, தந்தை உயிருடன் இருக்க வேண்டும் என்று சொல்வது சரியா?

(6) இப்படிப் பல கேள்விகள் எழுந்தன.

முடிவாக, பூர்வீகச் சொத்தில் மகன்களைப் போன்றே மகள்களுக்கும் பிறப்பால் உரிமை உண்டு என்பதே இந்த 2005 சட்டத் திருத்தத்தின் நோக்கம். இந்த 2005 சட்டம் வருவதற்கு முன்பே பிறந்த மகள்களுக்கும் இந்த பூர்வீகச் சொத்தில் உரிமை உண்டு. ஆனால், 2005 சட்டம் ஏற்பட்ட 20.12.2004 க்கு முன்னர் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டாலோ, பாகம் நடந்து இருந்தாலோ, அவைகள் முடிந்து பிரச்சனை ஆகி விட்டதால், அதில் மகள்கள் பங்கு கேட்க முடியாது. கோர்ட்டில் பாக வழக்குகள் இருந்தால், அதில் பைனல் டிகிரி கொடுக்காதவரை அதில் மகள்களுக்கும் பங்கு உண்டு. இப்படியாக முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும், ஒரு வழக்கில், 20.12.2004 தேதி அன்று தந்தை (கோபார்சனர்) உயிருடன் இருந்தால் மட்டுமே, அதில் மகள்கள் பங்கு கேட்க முடியும் என்றும், ஏனென்றால், அதற்கு முன்னர் தந்தை (கோபார்சனர்) இறந்து விட்டால், அப்போதே நோஷனல் பாகப் பிரிவினையின்படி, மகன்களுக்கு பங்கு வந்துவிடுகிறது என்பதால், மகள்கள் பங்கு பெற முடியாது என்று கோர்ட் தீர்ப்புகளாகச் சொல்லிப்பட்டிருந்தது.

இப்போது, 2020 ஆகஸ்டு மாதத்தில், பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தன. அதில் முடிவாக, தந்தை உயிருடன் இருந்தாலும், இல்லை என்றாலும், மகள் என்பவள் அவள் பிறப்பிலேயே பங்கு பெற உரிமை உள்ளவர் என்று 2005 திருத்தல் சட்டம் கூறி உள்ள படியால், பூர்வீகச் சொத்துக்கள் இருந்தால், மகன் பங்குபெறும்போது, மகளும் பங்கு பெறுவாள் என்று புதிய தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்னர்வரை, 20.12.2004-ல் தந்தை (கோபார்சனர்) உயிருடன் இருந்தால் மட்டுமே மகளுக்குப் பங்கு என்ற நிலை இருந்தது. அதை மாற்றி, புதிய தீர்ப்பாக மகன்கள் கோபார்சனர்களாக இருக்கும்போது, மகளும் கோபார்சனராக இருப்பாள் என்று தீர்ப்பு மாறி விட்டது. அதன்படி, தந்தை முன்னரே இறந்திருந்தாலும், மகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு உண்டு என்று என்று புதிய தீர்ப்பு வந்துவிட்டது.

ஆக பூர்வீகச் சொத்து விற்கப் படாமல் இருந்தாலும், பத்திரப் பதிவு மூலம் பாகம் நடக்காமல் இருந்தாலும், அதிலும் மகளுக்கு பங்கு உண்டு. தந்தை இறந்து விட்டதால், கற்பனைப் பாகப் பிரிவினையில் பங்கு மகன்களுக்குப் போய் சேர்ந்து விட்டது என்றும் எனவே பிரிந்த சொத்தில் மகள் பங்கு பெற முடியாது என்று இருந்த நிலை மாறி விட்டது.  

**

No comments:

Post a Comment