இந்து பெண்களின் ஆயுட்கால சொத்துரிமை
இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956-ல் பிரிவு 14-ல் இந்து பெண்களின் சொத்துரிமை எப்படிப் பட்டது என்று சொல்கிறது.
இந்துக்களின் பூர்வீகச் சொத்தில், 1937 வரை பெண்களுக்கு (குறிப்பாக விதவைகளுக்கு) பங்கு கொடுக்கப்படவில்லை. இதை சரி செய்வதற்காக, 1937-ல் இந்து விதவைகள் சொத்துரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பூர்வீகச் சொத்தில், ஒரு ஆண் இறந்து விட்டால், அந்த பூர்வீகச் சொத்தில், அவருக்கு கிடைக்க வேண்டிய பங்கானது, அவரின் விதவை மனைவிக்கு போய் சேரும். அந்த அளவில் விதவைப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பை இந்தச் சட்டம் ஏற்படுத்தியது. அதன்படி, அந்த விதவை, அவளின் இறந்த கணவரின் பங்கை, அவளின் ஆயுட்காலம் வரை அனுபவிக்க முடியும். இதை ஆயுட்கால உரிமை என்பர். Life interest or Limited interest. அவளின் ஆயுட்காலத்துக்குப் பின்னர், அந்த பங்கானது, மற்ற பங்காளிகளுக்கு திரும்ப போய் சேர்ந்து விடும். ஆக, இந்த 1937 சட்டத்திலும் விதவைகளுக்கு சொத்தில் முழு உரிமை கொடுக்கவில்லை.
எனவே, 1956-ல் கொண்டு வரப்பட்ட, இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில், இதற்கென ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தினர். அது பிரிவு 14. இதில் இரண்டு உட்பிரிவுகள் ஏற்படுத்தப் பட்டன. பிரிவு 14(1) மற்றும் பிரிவு 14(2).
பிரிவு 14(1)-ன்படி ஒரு இந்து பெண்ணுக்கு இப்படிப்பட்ட ஆயுட்கால உரிமை மட்டும் வைத்து, கொடுக்கப்பட்ட சொத்தில், 1956 சட்டம் வந்தபிறகு, அவள் அதை முழு உரிமையுடன் அனுபவித்துக் கொள்ளலாம் என்றும், அவள் அதை கிரயம் செய்யும் உரிமையும் பெறுவாள் என்றும் சொல்லப்பட்டது.
பிரிவு 14(2)-ல், ஒரு இந்துப் பெண்ணுக்கு, ஒரு பத்திரம் மூலம் அப்படிப் பட்ட ஆயுட்கால உரிமை கொடுக்கப் பட்டிருந்தால், அது எப்போது அப்படியே இருக்கும், அது முழு உரிமை உடைய அவளின் சொத்தாக மாறாது என்று சொல்லப் பட்டுள்ளது.
இப்படி இரண்டு நிலை இருப்பதால், குழப்பம் அதிகமாகியது. கோர்ட்டுகளுக்கு வழக்குகள் வந்தன. வக்கீல்களுக்கு இது வருமானம் ஆனது. இந்த சட்டப்பிரிவுகளை தெள்ளத் தெளிவாக எழுதப்படாததே இதற்கு முக்கிய காரணம்.
இதைப்பற்றி சுப்ரீம் கோர்ட் துளசம்மா என்ற வழக்கில் (Thulasamma Case) இப்படி சொல்லி
உள்ளது.
“This is a classic incident of a statutory provision which, by reason of its inapt draftmanship, has created endless confusion for litigants and proved a paradise for lawyers.”
பிரிவு 14(1) என்னவென்றால்:
“14(1):
Any property possessed by a female Hindu, (whether acquired before the Act or
after the Act) shall be held by her as “full owner” thereof and not as a
“limited owner”.
அதில் உள்ள வார்த்தையான “சொத்து” (Property) என்றால் என்ன என்று விளக்கமும் கொடுத்துள்ளது. அதில், சொத்து என்பது அசையும் சொத்தையும் அசையாச் சொத்தையும் சேர்த்துத் தான் என்றும், அந்த சொத்தை, அந்த இந்து பெண், வாரிசு முறைபடி அடைந்திருந்தாலும், அவளின் ஜீவனாம்ச உரிமைக்காக பெற்று இருந்தாலும், அல்லது பாகப்பிரிவினை மூலம் பெற்று இருந்தாலும், அவளின் சீதனச் சொத்தாக இருந்தாலும், கிரயம் வாங்கி இருந்தாலும், இப்படி எப்படிக்கிடைத்திருந்தாலும் அது அவளின் சொத்து என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தச் சொத்துக்கு விளக்கம் சொல்லி உள்ளது.
பிரிவு 14(2): ஆனால், இதில் கீழ்கண்ட சொத்துக்கள் அடங்காது என்று விலக்கி வைத்துள்ளது. அது, ஒரு செட்டில்மெண்ட், உயில், கோர்ட் டிகிரி, போன்ற பத்திரங்கள் மூலம் அவளுக்கு “ஆயுட்கால உரிமை மட்டும்தான்” என்று குறிப்பிட்டு எழுதிக் கொடுத்த சொத்துக்களுக்கு பிரிவு 14(1)-ல் சொல்லி உள்ள “சொத்து” என்ற வார்த்தை பொருந்தாது என்று சொல்லி உள்ளது.
பிரிவு 14(1)-ல் அந்தப் பெண்ணின் எல்லாச் சொத்துக்களும் என்று சொல்லி விட்டு, பிரிவு 14(2)-ல் அவளுக்கு பத்திரங்கள் மூலம் “ஆயுட்கால உரிமைதான்” என்று குறிப்பிட்டு எழுதி இருக்கும் சொத்துக்களில் அவளுக்கு முழு உரிமை இல்லை என்று விலக்கி வைத்து உள்ளது.
இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட்டுகளுக்கு வழக்குகள் வந்தவண்ணம் இருந்தன. இந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் விதமாக சுப்ரீம் கோர்ட், துளசம்மா வழக்கில் தீர்ப்பு கூறி உள்ளது.
ஏற்கனவே 1970-ல் ஒரு வழக்கில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பாக “பிரிவு 14(1)-ல் சொல்லி உள்ள சொத்துக்கள் என்பது, அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்ச உரிமை கிடைக்கும் சொத்துக்களை மட்டுமே சொல்லி உள்ளது” என்று விளக்கி உள்ளது. அதாவது, 1937 இந்து விதவைகளின் சொத்துரிமை சட்டத்தில், அவளுக்கு கணவன் சொத்தில் ஜீவனாம்ச உரிமையாக, கணவனின் பங்கை ஆயுட்காலம் வரை அனுபவிக்கும் உரிமையை வழங்கி உள்ளது. அந்த உரிமை உள்ள சொத்துக்கள்தான் பிரிவு 14(1)-ல் சொல்லப்பட்டுள்ளது என்று சொல்லி உள்ளது.
ஆனால், பிரிவு 14(2) அப்படி உரிமை ஏதும் இல்லாமல், ஒரு இந்து பெண்ணுக்கு, புதிதாக ஒரு சொத்தைக் கொடுக்கும்போது, அவளுக்கு அதில் ஆயுட்காலம் வரை அனுபவிக்கும் உரிமை மட்டும்தான் என்று சொல்லி இருந்தால், அதில் பிரிவு 14(1) தலையிட முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கி உள்ளது.
சென்னை ஐகோர்ட் Rangaswami Naicker v. Chinnammal என்ற வழக்கில், பிரிவு 14(1)-ல் சொல்லி உள்ள சொத்து என்பது “ஏற்கனவே அவளுக்கு உரிமையுடன் கிடைக்கும் சொத்து” என்பதற்காகவே, இந்தப் பிரிவில் “Pre-existing interest” என்று விளக்கப் பட்டுள்ளது.
குழப்பமான தீர்ப்புகள்:
பாம்பே ஐகோர்ட், பஞ்சாப் ஐகோர்ட், கல்கத்தா ஐகோர்ட், பாட்னா ஐகோர்ட் ஆகியவைகள், ஒரு பெண்ணுக்கு, ஜீவனாம்ச உரிமை என்பதே சட்டபூர்வமான உரிமை என்பதால், அதுவே Pre-existing right என்னும் ஏற்கனவே உள்ள உரிமை என்றும், எனவே அப்படிப்பட்ட உரிமைக்காக கொடுத்த சொத்துக்களில் அவளுக்கு ஆயுட்கால உரிமை இருந்தால், அது முழு உரிமை ஆகி விடும் என்று தீர்ப்புகளைச் சொல்லி உள்ளது.
ஆனால், ஒரிசா ஐகோர்ட், அலகாபாத் ஐகோர்ட், மெட்ராஸ் ஐகோர்ட், ஆந்திரா ஐகோர்ட் இவைகள் in lieu of maintenance என்னும் ஜீவனாம்ச உரிமை என்பது, அவளுக்கு ஏற்கனவே சட்டபூர்வமாக அங்கீகரிக்கபட்ட உரிமை மட்டும்தான், இனி ஏற்படும் ஜீவனாம்ச உரிமை இல்லை என்றும், எனவே 1937 இந்து விதவைகள் சொத்துரிமைச் சட்டத்தில், சொல்லி உள்ள ஜீவனாம்ச உரிமை மட்டுமே அப்படிப்பட்ட pre-existing interest என்னும் ஏற்கனவே உள்ள உரிமையைக் குறிக்கும் என்று தீர்ப்புகளைச் சொல்லி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் துளசம்மா வழக்கு:
எனவே இப்போது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இது சம்மந்தமாக,
துளசம்மாள் வழக்கில் கீழ்கண்ட் தீர்ப்பை சொல்லி, இந்த சட்டப் பிரச்சனைக்கு
கீழ்கண்டபடி சட்ட முடிவைச் சொல்கிறது.
“இந்து திருமணம் என்பது மத சம்பிரதாயம் கொண்டது Hindu Marriage is a sacrament and not a contract. மதச் சடங்குகளின் மூலம் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், கணவன்-மனைவியாக கூடி வாழ ஏற்படுத்தும் மதச்சடங்காகும். பிறந்த வீட்டில் இருந்து, புகுந்த வீட்டுக்கு வாழ வருபவள் அந்தப் பெண். இந்து மதம், கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்கிறது. எனவே தன் வாழ்நாளை, கணவனின் நன்மைக்காக அர்பணிக்கிறாள்.
Coolbrook
என்பவர் Digest of Hindu Law என்ற சட்டப்
புத்தகத்தை எழுதியவர். அவர் சொல்கிறார், “மனைவி என்பவள், கணவனின் பாதி உடல்”
என்கிறார். “A wife is considered as half the body of her husband,
equally sharing the fruit of pure and impure acts.”
மேலும், கணவன் இறக்கும் போது, அவளும் அவனுடனேயே செல்வாள். அல்லது அவனின் கடமைகளை நிறைவேற்ற இங்கு வாழ்வாள், என்கிறார்.
மேலும், Coolbrook மகாபாரதத்தை சுட்டிக் காட்டிச் சொல்கிறார், “எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ, அங்கு கடவுள் வாசம் செய்வார்” என்று சொல்லப் பட்டுள்ளதாக சொல்கிறார்.
எனவே கணவன் இறந்த பின்னர், அவள் வாழ்நாள் வரை அவளைப் பாதுகாத்துக்
கொள்ள, கணவனின் சொத்து தேவைப்படுகிறது. எனவேதான், அவனின் பங்கை, கணவனில் பாதியான,
அவனின் மனைவி அடைகிறாள். அப்படி அடைந்தாலும், அவள் வாழ்நாள் வரை மட்டும் அது
போதும் என்பதால், அவளுக்கு, கணவன் சொத்தில் “வாழ்நாள் வரை அனுபவிக்கும் உரிமையை”
வழங்கி உள்ளனர். இதைத்தான் Life
interest or Limited interest in property என்று சொல்லப்
பட்டுள்ளது.
எனவே இப்படிப்பட்ட ஜீவனாம்ச உரிமை உள்ள சொத்து மட்டுமே அவளுக்கு in lieu of maintenance என்னும் ஜீவனாம்ச உரிமை கோரும் சொத்துக்கள் ஆகும், என்பதால், அந்த சொத்துக்களை 1956 சட்டம் வந்தபின்னர் அவள் வைத்திருந்தால், அந்த சொத்து, அவளின் முழு உரிமையுடன் அடையும் சொத்து ஆகும் என்று பிரிவு 14(1)-ல் விளக்கி உள்ளதாக சுப்ரீம் கோர்ட் சொல்லி உள்ளது.
அவளுக்கு ஒரு பாதுகாப்புக்காக, புதிதாக ஒரு சொத்தைக் கொடுக்கும்போது, அதில் அவளுக்கு ஆயுட்கால உரிமை மட்டுமே என்று எழுதிக் கொடுத்திருந்தால், அது in lieu of maintenance என்னும் அவளின் ஜீவனாம்ச உரிமை கோரும் சொத்து அல்ல என்பதால், அதில் அவள் முழு உரிமையுடன் அந்தச் சொத்தை அடைந்து விட முடியாது என்று பிரிவு 14(2)-ல் சொல்லி உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் விளக்கி உள்ளது.
SC
in V.Thulasamma v. V.Sesha Reddi, 1977 AIR 1944 = 1977 SCR (3) 261.
**
No comments:
Post a Comment