Saturday, October 31, 2020

தாய் கார்டியனாக இருக்கலாமா

 தாய் கார்டியனாக இருக்கலாமா?

Jaganathan vs Vasudevan Chettiar AIR 2001 Mad 184

மாணிக்கம் செட்டியாரின் மகன்கள் பேரன்கள் இந்து கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். இவர்கள் ஏகப்பட்ட வியாபாரம் செய்கிறார்கள். மிக அதிகமாக சொத்துக்கள் இருக்கின்றன. 1976-ல் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஒரு பேரன் இந்த பாகப் பிரிவினை வழக்கைப் போடுகிறான். 1977-ல் வாதி (ஒரு பேரன்) மைனராக இருக்கும்போதே அவனிடம் விடுதலை எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். அவன் அவ்வளவு உஷாராவன் இல்லை. அவனின் தாயார் அவனுக்கு கார்டியனாக இருந்து அந்த விடுதலைப் பத்திரத்தை எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் மற்றவர்கள் சேர்ந்து 1977-ல் ஒரு பாகப் பிரிவினை பத்திரம் எழுதிக் கொண்டு சொத்துக்களை பிரித்துக் கொண்டனர். 

அந்த மைனர் பேரன், மேஜர் வயதை அடைந்தவுடன் பாக வழக்குப் போடுகிறான். அதில், அவனை ஏமாற்றி அந்த விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கப் பட்டுள்ளது என்றும், அவன் மைனராக இருந்தபோது, அவனின் தாயார் அவனுக்காக கார்டியனாக அதில் கையெழுத்து செய்துள்ளார் என்றும், அவனின் தாயார் அவனுக்கு கார்டியனாக இயங்க முடியாது (She is neither de facto guardian nor a natural guardian) என்றும் வழக்குப் போடுகிறான். தந்தை இருக்கும்போது, தாயார் இயற்கை கார்டியனாக இயங்க முடியாது என்று சொல்கிறான். 

மேலும் இது இந்து கூட்டுக் குடும்பச் சொத்து. இதை மகன் பேரன் என்ற வித்தியாசம் இல்லாமல் தலைக்கு ஒரு பங்கு என்றுதான் பிரித்து இருக்க வேண்டும். (per capita). மகன்களை மட்டும் வைத்த வகைக்கு ஒரு பங்கு என்று பிரித்து இருக்க கூடாது. (per stripes). எனவே இந்த பாகப்பிரிவினை இந்து சாஸ்திர சட்டத்துக்கு எதிரானது என்று வாதம். 

மேலும் இந்த பாக வழக்கை போட்ட பின்னர், பிரதிவாதிகள் சில சொத்துக்களை, இந்த கூட்டுக் குடும்ப பணத்தைக் கொண்டு, பினாபி பெயர்களில் வாங்கி உள்ளனர். அதிலும் தனக்கு பங்கு உண்டு என்று வாதம் செய்கிறான்.

ஆனால் பிரதிவாதிகள், இது மற்ற சகோதரர்களின் தூண்டுதலால் இந்த பாக வழக்கைப் வாதி போட்டுள்ளான் என்றும், ஏற்கனவே நடந்த பாகப் பிரிவினையை இப்போது மறுக்க முடியாது என்றும், பாகம் பிரிந்து விட்டதால், கூட்டுக் குடும்ப சொத்து என்று ஒன்று சட்டப்படி இல்லை என்றும், பாகப்பிரிவினை எல்லோரின் சம்மதத்தின் பேரிலேயே நடந்தது என்றும் சொல்கிறார்கள்.

தாயார் கார்டியனாக இயங்க முடியுமா?

பிரிவு 6 இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956-ன்படி தந்தை மட்டுமே இயற்கை கார்டியனாக இருக்க முடியும். தாயார் கார்டியனாக இருந்து எழுதிக் கொடுத்த விடுதலை பத்திரம் சட்டப்படி செல்லாத தன்மை ஆகி விடும் (void ab initio). இப்படிப்பட்ட சூழ்நிலையில் மைனர், மேஜர் வயதை அடைந்தவுடன் 12 வருடங்களில் அதை ரத்து செய்ய வழக்குப் போட முடியும். இது வாதியின் வாதம்.

பிரிவு 6 இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 என்பது மைனரின் தனிச் சொத்துக்களுக்கு மட்டுமே செல்லும். அது, இந்து கூட்டுக் குடும்பச் சொத்துக்களுக்குச் செல்லாது. மேலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தாயும் இயற்கை கார்டியன்தான். அவர் மைனருக்காக கார்டியனாக செயல்பட்டதில் ஒன்றும் தவறில்லை என்று பிரதிவாதிகள் வாதம்.

இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956-ன் பிரிவு 4-ல் கார்டியன் யார் என்பதைப் பற்றிச் சொல்கிறது. 

“கார்டியன்” என்பது மைனரையும் அவனின் சொத்துக்களையும் பாதுகாப்பவர் என்றும், அதில் (1) இயற்கை பெற்றோர், (2) தந்தை அல்லது தாய் அவரின் உயில் மூலம் நியமிக்கப்பட்ட கார்டியன், (3) கோர்ட் மூலம் நியமிக்கப்பட்ட கார்டியன், (4) கோர்ட் ஆப் வார்ட்ஸ் சட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட கார்டியன், இவர்களும் கார்டியன் என்றே கருதப்படுவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

“இயற்கை கார்டியன் என்றால் யார் என்று பிரிவு 4-சி-ல் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, மைனரின் தனிச் சொத்துக்களுக்கும் (கூட்டுக் குடும்பச் சொத்துக்கள் அல்லாதவைகளுக்கு) மைனருக்கும் அவனின் தந்தைதான் இயற்கை கார்டியன் என்றும், தந்தைக்குப் பிறகு தாய் தான் இயற்கை கார்டியன் என்றும் சொல்லப் பட்டுள்ளது. 

ஆனாலும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தையாக இருந்தால், அவன் அல்லது அவள், அவனின் தாய் அரவணைப்பில்தான் (custody) இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், சட்டபூர்வமற்ற குழந்தையாக இருந்தால் (illegititmate child) முதலில் தாயும், பின்னர் தகப்பனும் இயற்கை கார்டியனாக இருப்பர்.

இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956-ல் பிரிவு 11-ல் தற்காலிக கார்டியன் (de facto guardian) யார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் தற்காலிக கார்டியனாக இயங்க முடியும். ஆனால், அந்த தற்காலிக கார்டியன் மைனரின் சொத்துக்களை விற்கும் அதிகாரம் இல்லை. தற்காலிக கார்டியன் என்பது தந்தை, தாய் இல்லாத மற்ற உறவுகள் ஆகும்.

பிரிவு 12 மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டத்தில், இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் மைனருக்கு பங்கு இருந்தால், அதை விற்பனை செய்ய கார்டியன் யாரையும் நியமிக்க முடியாது. ஏனென்றால், அது கூட்டுக் குடும்பச் சொத்தின் கர்த்த்தா என்று மூத்த கோபார்சனரின் நிர்வாகத்தில் இருக்கும். 

ஆனாலும், இப்படிப்பட்ட கூட்டுக் குடும்பச் சொத்துக்கு, மைனருக்கு கார்டியனை நியமிக்கு ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு என்று அதே பிரிவு 12-ல் சொல்லப் பட்டுள்ளது. 

தாய் கார்டியனாக இயங்க முடியுமா?

தந்தை கார்டியனாக இயங்கும் நிலையில் இருக்கும்போது, தாய் கார்டியனாக இயங்க முடியாது. ஆனால், தந்தை பொறுப்பில்லாமல், மைனரின் சொத்துக்களை கவனிக்காமல் இருந்தால், தாய் கார்டியனாக இயங்கு முடியும். 

ஒரு வழக்கில், தந்தை இருக்கும்போது, தாய் கார்டியனாக இருந்து ஒரு சொத்தை விற்பனை செய்துள்ளார். ஆனால் அந்த கிரயப் பத்திரத்தில் தந்தை சாட்சிக் கையெழுத்தைப் போட்டுள்ளார். இருந்தாலும், இந்த கிரயம் செல்லாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. The sale was not merely voidable under Sec.8 but void, being outside the purview of that section.

எப்போது இயற்கை கார்டியன் மைனர் சொத்தை விற்கலாம்?

இயற்கை கார்டியன் மைனர் சொத்தை விற்கலாம் என்று சொன்னாலும், அதுவும், அவனின் அவசிய தேவைக்காக இருக்க வேண்டும். காரணம் இல்லாமல் சும்மா விற்று விட முடியாது. Only the legal guardian empowers to alienate a minor’s property, provided it is for the necessity or benefit of the minor or his estate.

தந்தை உயிருடன் இருக்கும்போது, தாய் ஏன் இயற்கை கார்டியனாக இயங்க முடியாது?

இந்தக் கேள்விக்கு சுப்ரீம்கோர்ட் 1999-ல் ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைச் சொல்லி உள்ளது. அது Hariharan vs Reserve Bank of India. இந்த தீர்ப்பில்தான், தந்தை, தாய் என்ற பாகுபாடு பார்க்க முடியாது. தந்தை இருக்கும்போது, தாய் இயங்க முடியாது என்பது பாகுபாடு பார்க்கும் செயல். எனவே தந்தை கார்டியனாக இயங்கும் நிலையில் இருந்தாலும், தாயும் இயற்கை கார்டியன் என்பதாலும், அவளும் மைனரின் நலனில் அக்கறை உள்ளவள் என்பதால், அவளும் தனித்து இயற்கை கார்டியனாக இயங்க முடியும் என்று தீர்ப்புக் கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பானது, இதற்கு முன்னர் முடிவான பல வழக்குகளின் தீர்ப்பை பின்னுக்குத் தள்ளி விட்டது. (இதற்கு முன்னர் கொடுத்த தீர்ப்புகளில் எல்லாம், தந்தை உயிருடன் இருக்கும்போது, தாய் கார்டியனாக இயங்க முடியாது என்றும், தந்தை காலத்துக்குப் பின்னரே தாய் கார்டியனாக இருக்க முடியும் என்றும் தீர்ப்புகள் இருந்தன. இந்த நிலை இந்த வழக்கின் தீர்ப்பால் மாறி விட்டது).

அடுத்து,

பாகப்பிரிவினைப் பத்திரத்தில் ஏமாற்றி கையெழுத்துப் பெறப்பட்டதா?

தந்தையும் பாகப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார். மைனருக்காக, தாயும் கார்டியனாக இருந்துள்ளார். எனவே இதில் ஏமாற்று வேலை ஏதும் நடக்கவில்லை. மைனரின் நன்மையை பாதுகாக்க இரண்டு இயற்கை கார்டியனும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மைனருக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று எந்த சாட்சியமும் இல்லாதபோது, அந்த பாகப் பிரிவினை நியாயமாகவே நடந்ததாக கருத வேண்டும். 

சென்னை ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் தீர்ப்பான Sankaranarayanan vs Kandasami, AIR 1956 Mad 670 என்ற வழக்கில் மைனருக்காக கார்டியன் கையெழுத்துச் செய்து ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுத்திருந்தால், அந்த மைனர் மேஜர் வயதை அடைந்த மூன்று வருடங்களுக்குள் அதை கேள்வி கேட்டு வழக்குப் போட உரிமையுண்டு. ஏனென்றால் அது ஒரு voidable transaction. அவ்வாறு வழக்குப் போடவில்லை என்றால், அந்த பத்திரம் செல்லும் தன்மை கொண்டதாக மாறிவிடும் என்று தீர்ப்புக் கூறி உள்ளது. 

ஆனால், மைனரை காண்பிக்காமல், மைனரின் சொத்தை விற்பனை செய்திருந்தால், அதாவது, மைனருக்காக கார்டியன் யாரும் கையெழுத்துப் போடாமல் மைனரின் சொத்தை அல்லது மைனருக்கு உரிமை உள்ள சொத்தை விற்பனை செய்திருந்தால், அதை அந்த மைனர் மேஜர் வயதை அடைந்த 12 வருடங்களில் வழக்குப் போடும் உரிமை அவனுக்கு உண்டு. ஏனென்றால், அந்த கிரயம் சட்டப்படியான கிரயம் இல்லை Sale is void in nature.

ஆக, மைனருக்காக கார்டியன் கையெழுத்துப் போட்டு விற்பனை செய்திருந்தால், அது Voidable Sale. எனவே அதை மைனர் மேஜர் வயதை அடைந்த மூன்று வருடங்களில் வழக்குப் போடும் உரிமை உண்டு. இங்கு மைனருக்காக கார்டியன் கையெழுத்துப் போடுவதை eo-nominee என்று சட்டம் சொல்கிறது. அதாவது மைனருக்காக ஒருவர் இயங்கினார் என்று பொருள்.

ஆனால், மைனருக்காக யாரும் கார்டியனாக இல்லாமல் மைனரின் சொத்தை விற்று இருந்தால், அது செல்லாத கிரயம். Void transaction. எனவே மைனர், மேஜர் வயதை அடைந்த 12 வருடங்களுக்குள் வழக்குப் போட உரிமை உண்டு. 

இந்த வழக்கில், தாய் கார்டியனாக இருந்துள்ளார், எனவே அவர் மைனருக்காக இயங்க முடியும் என்றும், ஈயோ-நாமினி ஒப்புக் கொண்ட பத்திரத்தை, மூன்று வருடங்களில் மட்டுமே கேள்வி கேட்க முடியும் என்பதால், இந்த வாதி தாக்கல் செய்த வழக்கு செல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறி உள்ளது. 


No comments:

Post a Comment