Tuesday, October 13, 2020

உயிலில் Gift over ஆக கொடுப்பது:

 உயிலில் Gift over ஆக கொடுப்பது:

சென்னை ஐகோர்ட்டில் 1940-ல் நடந்த வழக்கு இது.

Minor Anantha Sayana Naidu v. Kondappa Naidu alias Devarajulu, 

Citation: (1940) 1 MLJ 212

Judgment by: Justice Venkatramana Rao J.

விஜயராகவலு நாயுவுக்கு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள நான்கு ஊர்களில் நிலபுலன்கள் உண்டு. அவருக்கு திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போகிறது. ஆஸ்துமா நோய் அதிகமாகி விட்டது. (அப்போது ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வாக எந்த மருந்தும் கண்டுபிடிக்கப் படவில்லை). எனவே அவரின் நான்கு ஊர்களில் உள்ள நிலங்களைப் பொறுத்து அவசர அவசரமாக உயில் எழுதி வைக்கிறார்.

அவருக்கு, ஒரு மனைவி சின்னம்மாள். ஒரு மகள் குப்பம்மாள். மகன் யாரும் இல்லை. மகளைத் திருமணம் செய்து கொடுத்து அவளின் கணவன் ரங்கசாமி நாயுடு வீட்டுடனே இருக்கிறார். 

எனவே விஜயராகவலு நாயுடு 1-வது உயிலை 25.7.1917-ல் எழுதி அதன்படி சில ஊர் சொத்துக்களை மகளுக்கு முழு உரிமை கொடுக்கிறார். 2-வது உயிலை 21.11.1917-ல் எழுதி அதன்படி வேறு சில ஊர் சொத்துக்களை மகளுக்கும் மருமகனுக்கும் முழு உரிமை கொடுக்கிறார்.

இந்த 2-வது உயிலை எழுதிய பின்னர், ஆறு நாட்கள் கழித்து 3-வது உயிலை எழுதுகிறார். ஏனென்றால், முதல் இரண்டு உயில்களிலும், ஒரு சொத்தைக் கூட அவரின் மனைவிக்கு எழுதி வைக்கவில்லை. எனவே, 3-வது உயிலில், ஏற்கனவே மகளுக்கு கொடுத்த சில சொத்துக்களை, தன் மனைவிக்கு முழுஉரிமையுடன், அதாவது கிரயம், செட்டில்மெண்ட் உட்பட முழு உரிமையுடன் அடைந்து கொள்ளும்படியும், அவர் ஆயுட்காலத்துக்குப் பின்னர் ஏதாவது சொத்தை மனைவி விட்டுச் சென்றால், அதை அவரின் மகள் சர்வ சுதந்திரமாய் அடையும் படியும் (ஒரு குழப்பத்தை) ஏற்படுத்தி இருந்தார். 

உயிலை எழுதி வைத்த விஜயராகவலு நாயுடு இறந்து விடுகிறார். 3-வது உயிலின்படி, சில சொத்துக்கள், அவரின் மனைவிக்கு சர்வ சுதந்திர உரிமையுடன் கிடைக்கிறது. அதை அவர், தன் சகோதரன்களுக்கும், மற்றும் தன் சகோதரியின் கணவனுக்கும் 1927-ல் இரண்டு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்து விடுகிறார்.

இவ்வாறு தாயார் எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட்டை, மகள் குப்பம்மாள் ஆட்சேபம் செய்கிறார். தாயாருக்கு அவ்வாறு சொத்தில் முழு உரிமை கொடுப்பப்பட வில்லை என்றும், ஆயுட்கால உரிமைதான் உண்டு என்றும், எனவே அவர் அந்த சொத்துக்களை அவரின் சகோதரனுக்கும், சகோதரி கணவனுக்கும் எழுதி வைத்த செட்டில்மெண்ட் செல்லாது என்றும் வழக்கு. அது கடைசியாக சென்னை ஐகோர்ட்டுக்கு வருகிறது.

சென்னை ஐகோர்ட்டில்:

மனைவிக்கு எழுதிக் கொடுத்த 3-வது உயிலில், அந்த நிலங்களை, அவரின் மனைவி சர்வ சுதந்திர உரிமைகளுடன், கிரயம், தானம், செட்டில்மெண்ட், உயில் முதலிய உரிமைகளுடன் அடைந்து கொள்ள வேண்டியது என்றும், அவர் காலத்துக்குப் பின்னர், விட்டுச் செல்லும் நிலங்களை, அவரின் மகள் சர்வ சுதந்திரமாய் புத்திர பௌத்திர பாரம்பரியமாய் அடைந்து கொள்ள வேண்டியது என்றும் எழுதி உள்ளார். (இதில்தான் குழப்பம்).

ஒருவருக்கு முழு உரிமை கொடுத்து எழுதியபின்னர், அந்த சொத்தை வேறு ஒருவருக்கும் பின்னர் முழு உரிமையுடன் கொடுக்க முடியுமா என்ற கேள்வி. முழு உரிமை கொடுத்து விட்டால், அத்துடன் முடிந்து விடுகிறது. மறுபடியும் அதை வேறு ஒருவருக்கு அதே முழு உரிமையுடன் அடையும்படி எழுத முடியாது. (ஆனால் இப்படிப்பட்ட  உயில்கள் தவறுதலாக அதிகம் எழுதப்படுகின்றன. அதனால்தான் இது கோர்ட்டுக்கு வந்து விட்டது).

மகளின் வக்கீலின் வாதம் என்னவென்றால்:

ஏற்கனவே எழுதிய இரண்டு உயில்களிலும் இந்தச் சொத்துக்களை முழுவதுமாக மகளுக்கு கொடுத்து இருந்தார். ஆனால், மனைவிக்கு ஒரு சொத்தும் கொடுக்கவில்லையே என்று கருதியதால், 2-வது உயில் எழுதிய பின்னர் ஆறு நாட்கள் கழித்து இந்த 3-வது உயிலை எழுதுகிறார். அதனால், அதில் மனைவிக்கு ஜீவனாம்ச உரிமை கொடுக்கும் விதமாகவே, 3-வது உயில் எழுதப்பட்டதன் நோக்கம். அதனால்தான், அவர் காலம் வரை சுதந்திரமாய் அனுபவித்து வந்து, அவர் காலத்துக்குப் பின்னர் அவர் விட்டுச் செல்லும் சொத்தை, மகள் சர்வ சுதந்திர உரிமைகளுடன் அடைந்து கொள்ள வேண்டும் என்று அந்த 3-வது உயிலில் எழுதி இருக்கிறார் என்று வாதம் செய்கிறார். 

ஆனால் மனைவியிடன் செட்டில்மெண்ட் வாங்கியவர்களின் வக்கீலீன் வாதம் என்னவென்றால்:

கீழ்கோர்ட், மனைவிக்கு ஆயுட்கால உரிமைதான் என்று தீர்ப்புச் சொன்னது. ஆனால் சப்- கோர்ட் அப்பீலில் மனைவிக்கு முழு உரிமை உண்டு என்பதால், அவர் எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட் செல்லும் என்று தீர்ப்பை மாற்றிச் சொன்னது. 3-வது உயிலில், “மனைவி, இந்தச் சொத்துக்களை தானம் கிரயம் முதலிய உரிமைகளுடன் புத்திர பௌத்திர பாரம்பரியமாய் அடைந்து கொள்ள வேண்டியது என்றும், அவர் காலத்துக்குப் பின்னர் அவர் விட்டுச் செல்லும் நிலங்களை, அவரின் மகள் முழு உரிமையுடன் புத்திர பௌத்திர பாரம்பரியமாய் அடைந்து கொள்ள வேண்டியது என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே மனைவிக்கு இந்த 3-வது உயில் சொத்துக்களில் முழு உரிமை உண்டு என்பதால், அவர் அதை செட்டில்மெண்ட் செய்துள்ளது சரிதான் என்று வாதம்.

ஐகோர்ட் விளக்கம்:

பொதுவாக, ஒரு உயிலைப் படிக்கும்போது, அதிலுள்ள எந்த வார்த்தையையும் தேவையில்லாத வார்த்தை என்றோ, பொருத்தமில்லாத வார்த்தை என்றோ, விட்டுவிடக் கூடாது; அது, அந்த உயிலை எழுதியவரின் நோக்கத்தை சிதறடித்துவிடுக்கூடும் என்பதே சட்டத்தின் தலையாய கொள்கை. ஒட்டுமொத்த உயிலையும் படித்துபின்னரே ஒரு முடிவுக்கு வர வேண்டும். 

இந்த 3-வது உயிலில்: “….. shall after my lifetime, be enjoyed by you (wife) with powers of alienation by gift, mortgage, sale etc and after you, the properties then remaining shall……” இப்படித்தான் எழுதப் பட்டுள்ளது. 

ஒருவேளை இந்த உயிலை அவர் எழுதாமல் இருந்திருந்தால், கணவன் இறந்த பின்னர், அவருக்கு ஆண் குழந்தை இல்லாததால், மனைவியே எல்லாச் சொத்துக்களையும் ஆயுட்கால உரிமையுடன் அடைந்திருப்பார். (Under The Hindu Widows Right to Property Act 1937). எனவே மகளுக்கு எந்தப் பங்கும் கிடைத்திருக்காது. 

இரண்டு உயில்கள் மூலம் மகளுக்கு எல்லாச் சொத்தையும் கொடுத்தபின்னர், ஆறு நாட்கள் கழித்து, மனைவிக்கு ஒன்றும் கொடுக்காமல் உயில் எழுதி விட்டோமே என்ற நினைப்பில்தான், அவர் ஒரு சில நிலங்களை மனைவிக்கு முழு உரிமை கொடுத்து எழுதி இருக்கிறார். இல்லையென்றால், இந்த உயில் எழுதி வேண்டிய அவசியமே ஏற்பட்டு இருக்காது. 

எனவே இந்த 3-வது உயிலில் மனைவிக்கு ஆயுட்கால உரிமை கொடுத்தாரா? அல்லது முழுஉரிமை கொடுத்தாரா? என்பதே இங்கு பிரச்சனையாகி வழக்காக வந்துள்ளது. 

மனைவிக்கு முழு உரிமை கொடுத்திருந்தார் என்று கருதினால், மனைவி, பின்னர் எழுதி வைத்த செட்டில்மெண்ட் செல்லும். ஒரு உயிலில், முழு உரிமை கொடுத்த பின்னர், அதை மேலும் வேறு ஒருவருக்கு முழு உரிமை கொடுத்து எழுத முடியாது. ஒன்று, ஆயுட்கால உரிமை என்று எழுதி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மனைவிக்கே முழு உரிமை கொடுத்து, கிரயம் தானம் போன்ற எதுவும் செய்யலாம் என்று எழுதி இருப்பதைப் பார்க்கும்போது, அது முழு உரிமையுடன் மனைவிக்கு கொடுத்த சொத்தாகவே தெரிகிறது. 

Gift Over:

It is setteld by authority that if you give a man some property (real or personal), to be his absolutely, then you cannot by your will dispose of that property which becomes his. You cannot say that, if he does not spend it, if he does not give it away, if he does not will it, that which he happened to have in his possession, or in his pocket at the time of his death, shall not got to his heir at law if it is realty, or to his next kin. You cannot do that if you once vest property absolutely in the first donee. In short, a man cannot create a new course of devolution when a gift is made. 

Gift over என்பது to provide for the gift of property to a second recipent if a certain event occurs, such as death of the first recipent.

பொதுவாக, உயில் எழுதும்போது, ஒருவருக்கு ஒரு சொத்தை கொடுத்திருப்பார். ஒருவேளை, உயில் எழுதியவர் இறக்கும்போது, அவர் இல்லையென்றால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் சொத்தை அடைந்து கொள்ள வேண்டியது என்று எழுதி இருப்பார். அல்லது சொத்தில் ஆயுட்கால உரிமை கொடுத்து, அவர் காலத்துக்குப் பின்னர், மற்றவருக்கு முழு உரிமை கொடுத்து இருப்பார். இப்படிக் கொடுப்பதையே Gift over என்று சட்டம் சொல்கிறது. 

அந்த Gift Over முறைப்படி, இந்த 3-வது உயில் எழுதப்பட்டுள்ளதா என்று பார்த்தால், அப்படியும் அது இல்லை என்றே முடிவுக்கு வரலாம். ஏனென்றால், மனைவிக்கே முழு உரிமையுடன் கொடுத்து இருக்கிறார். அவரும், கணவன் இறக்கும்போது, உயிருடன் இருந்திருக்கிறார். எனவே அந்த சொத்தை அடைந்து விட்டார். 

ஆயுட்கால உரிமையை ஒருவருக்குக் கொடுத்து, அவர் காலத்துக்குப் பின்னர் மற்றவர் முழு உரிமையுடன் அடைந்து கொள்ள வேண்டியது என்று எழுதப்பட்ட உயில்களும், இந்த Gift over முறைப்படி எழுதிய உயில்களே ஆகும்.

ஆனால் இங்கு, மனைவிக்கு ஆயுட்கால உரிமை கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கொடுக்கப்பட்ட உயிலாக இது இருந்திருந்தால், அதை Gift over உயில் என்று சொல்லலாம். ஆனால், மனைவி எல்லா உரிமைகளுடனும் அடைந்து கொள்ள வேண்டும் என்றே எழுதி இருக்கிறார்.

தீர்ப்பு:

எனவே மனைவிக்கு முழு உரிமை கொடுத்து எழுதப்பட்ட உயில்தான் இது. மனைவிக்குப் பின்னர் மகளுக்கு Gift over கொடுத்து எழுதப் பட்ட உயில் இல்லை. எனவே மனைவி, இந்த சொத்துக்களை, தன் சகோதரனுக்கும், சகோதரியின் கணவனுக்கும் செட்டில்மெண்ட் செய்து கொடுத்தது செல்லும்.

**


No comments:

Post a Comment