Tuesday, December 10, 2013

அஸ்வினிதேவர் Asvini Devar (The Great Twin Doctors)

அசுவினிதேவர்:
சூரியன் பாரியாகிய (மனைவியாகிய) வடவாரூபம் பெற்ற சௌஞ்ஞா தேவியுனுடைய நாசியில் பிறந்தவர்கள் இருவர். இருவரும் மிக்க அழகுள்ளவர்கள். இருவரும் தேவ-மருத்துவர்கள். இவர்கள் ஒரே இடத்தில் வசிக்காமல் எங்கும் சென்று, ஔஷதம் (Medicine), சஸ்திரம் (சத்திரச் சிகிச்சை என்னும் Surgery) என்னும் இருவகை வைத்தியத்திலும் அற்புதம் ஏற்படுத்துபவர்கள். 

ஒருமுறை இவர்கள் மிகவும் அழகிய பெண்ணான சுகன்னிகை என்பவளையும் அவளுக்கு விதிவழி வாய்த்த அவளின் கண்தெரியாத கணவன் சியவனனையும் பார்த்து, ‘இவனை நீ ஏன் மணந்தாய்?’ என கேட்டனர். அதற்கு அவள், உங்களிடம் உள்ள குற்றத்தை விட்டு, ஏன் என் குற்றத்தை ஆராய்கிறீர்கள்? என்று பதிலுக்கு கேட்டாள். எங்கள் குற்றமென்ன என்று கேட்டனர். நீங்கள் உங்களின் தேவமருத்துவம் மூலம் என் கணவரின் கண்ணுக்கு பார்வையை கொடுத்தீர்களானால், உங்கள் குற்றம் என்ன என்று நான் சொல்வேன் என்றாள். 

இதற்கு சம்மதித்து, அவள் கணவனின் கண் பார்வையை சரிசெய்து கொடுத்துவிட்டு, இப்போது, ‘நாங்கள் செய்த குற்றம் என்ன?’ என்று கேட்டனர். அதற்கு அவள், ‘நீங்களோ தேவ-மருத்துவர்கள். ஆனால், உங்களை யாகத்தில் வைத்து கொண்டாடாததற்கு என்ன காரணம் என்று கேட்டாள். இது கேட்டு வெள்கிய (வெட்கமடைந்த) அசுவினிதேவர் அவளது அறிவை வியந்து வாழ்த்தினர்.  

இவளின் கணவன் சியவனன் இவர்களின் நன்றியை மறவாமல், அவன் மாமன் சரயாதியை ஒரு யாகம் செய்யச் சொல்லி, அதில் இந்த தேவ-மருத்துவர்களான அசுவினி தேவர்களை கலந்து கொள்ளச் செய்து மரியாதை செய்தான். இது தெரிந்த இந்திரன் சினம் கொண்டு தனது சக்கிராயுதத்தை எடுத்தான். ஆனால் அசுவினிதேவர் அவனுக்கு கையிலே சோர்வு வாத நோயை உண்டாக்கினார். இதை தீர்க்கும்படியும் அதனால் சமரசமாக செல்வதாக இந்திரன் கேட்டுக் கொண்டான். அசுவினிதேவர் இந்த நோயை நீக்கி,  அதுமுதல் தேவர்களோடு சரிசம மரியாதை பெற்றார்கள்.

அவர்களின் மருத்துவ நூலும் அறிவும் நமக்குக் கிடைக்காதது பெரிய இழப்பே!

No comments:

Post a Comment