பாகப் பிரிவினை-6
குடும்ப பாகப் பிரிவினைகளில், சொத்தானது,
வாரிசு முறைப்படிதான் கிடைத்திருக்கும். நமக்கு கிடைத்த அந்த சொத்து நம்
முன்னோர்கள் மூலம் கிடைத்த சொத்து. அதை நாம் சம்பாதித்து வாங்கவில்லை. எனவே அது
வாரிசு முறைப்படி கிடைக்கும். இறந்தவருக்கு யார் யார் வாரிசுகள் என்பதிலும்,
எந்தெந்த வாரிசு எவ்வளவு பங்கை அடைய முடியும் என்பதிலும், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு
சட்டத்தையும், மத கோட்பாட்டையும் வைத்துள்ளது. இந்து மதத்துக்கு “இந்து
வாரிசுரிமைச் சட்டம் 1956”ம், கிறிஸ்தவ மதத்துக்கு “இந்தியன் வாரிசுரிமைச் சட்டம்
1925”ம், முஸ்லீம் மதத்துக்கு “ஷரியத் சட்டம் 1937”ம், பார்சி மதத்துக்கு “இந்தியன்
வாரிசுரிமைச் சட்டம் 1925-ன் ஒரு பகுதியும்” என ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு தனி
வாரிசு சட்டமே உள்ளது.
இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 (திருத்தம்
2005ல்):
இந்த சட்டமானது இந்துக்களுக்கு மட்டும்
பொருந்தும். “இந்து” யார் என்பதை இந்திய அரசியல் சாசன சட்டம் 1950ன் ஆர்ட்டிகிள்
25(2)(பி) விளக்குகிறது. “இந்து மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பவர்கள், சீக்கியர்கள்,
ஜைனர்கள், (ஜெயின்கள்), புத்த மதத்தவர்கள், இவர்கள் எல்லோருமே “இந்து” என்ற மதத்தில்
அடங்குவர். இவர்களுக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956”ல் சொல்லப்பட்டுள்ள
சட்டங்கள் பொருந்தும். வேறுசிலரும் இந்து மதம் என்கிறது சட்டம், அதாவது, ஒருவர் “கிறிஸ்தவராகவோ,
முஸ்லீமாகவோ, யூதராகவோ” இல்லாமல், அதாவது அந்த மூன்று மதத்தையும் சாராமல் வேறு
ஏதாவது ஒரு கொள்கையில் இருந்தால், அவரையும் பொதுவாக இந்து என்று ஏற்றுக் கொண்டு,
அவருக்கு இந்த “இந்து வாரிசுரிமை சட்டத்தை” உபயோகிக்கலாம் என்கிறது சட்டம்.
இந்துமதச் சட்டப்படி, “ஒரு இந்து ஆண்” அவரின்
சொத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரின் வாரிசுகள் அந்த சொத்தை அடைவார்கள்.
இந்து மதச் சட்டத்தில், வாரிசுகள் என்பவர்கள் (1) முதல் வாரிசுகள், (2) இரண்டாம்
வாரிசுகள் (3) பங்காளி உறவுகள் என பல வகைகள் உண்டு.
இந்து ஆணின் முதல் வாரிசுகள்:
ஆணின் முதல்வாரிசுகள்: அவரின் தாய், மனைவி,
மகன், மகள், இறந்த மகனின் விதவை மனைவி, இறந்த மகனின் குழந்தை, இறந்த மகளின்
குழந்தை, இறந்த மகனின் இறந்த மகனின் குழந்தை, இறந்த மகளின் இறந்த மகனின் குழந்தை
இவர்கள் மட்டுமே முதல் வாரிசாக வருவார்கள். (இவர்களில், இறந்தவரின் தந்தை, முதல்
வாரிசாக வரவில்லை என்பது ஆச்சரியமே!).
இந்து ஆணின் இரண்டாம் வாரிசுகள்;
முதல் வாரிசுகளில் யாருமே உயிருடன் இல்லையென்றால்,
இரண்டாம் வாரிசுகள், அவரின் சொத்தை அடையலாம். இரண்டாம் வாரிசு வேறு யாருமல்ல,
தகப்பனார் மட்டுமே. முதல் வாரிசுகள் இல்லையென்றால், தகப்பனார் அவரின் இறந்த மகனின்
சொத்தை முழுவதுமாக அடையலாம்.
இரண்டாவது வாரிசுகளில், தகப்பனாரும் இல்லையென்றால்,
இறந்தவரின் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் எல்லோரும் சமமாக அடையலாம். (ஆனால், அவர்கள்
அப்போது உயிருடன் இருக்க வேண்டும்; ஏற்கனவே இறந்த சகோதர சகோதரிகள் பங்கு
பெறமுடியாது).
சரி, சகோதர சகோதரிகள் யாருமே அப்போது
உயிருடன் இல்லையென்றால், அவர்களின் மகன்கள், மகள்கள் (அதாவது சகோதர சகோதரிகளின்
பிள்ளைகள்) வாரிசாக அந்த சொத்தை அடையலாம். இப்படியாக இன்னும் நீண்டுகொண்டே
செல்கிறது.
இந்து பெண்ணின் வாரிசுகள் யார்?
இந்து
பெண் ஒருவர், அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டால், கீழ்கண்ட
முறைப்படி வாரிசுகள் அடைவார்கள்.
(1) அந்த பெண்ணின் மகன்கள், மகள்கள், (முன்னரேஇறந்த
மகனின் குழந்தைகள், முன்னரே இறந்த மகளின் குழந்தைகள்) மற்றும் அவரின் கணவர் –
இவர்கள் மட்டும் சொத்தை அடைவார்கள்.
(2) இவர்கள் யாரும் இல்லையென்றால், அவரின்
கணவனின் வாரிசுகள் அடைவார்கள்;
(3) கணவனின் வாரிசுகளும் இல்லையென்றால், அவளின்
தகப்பனாரின் வாரிசுகள் அடைவார்கள்; தகப்பனார் வாரிசுகளும் இல்லாவிட்டால், அவளின்
தாயாரின் வாரிசுகள் அடைவார்கள்.
(4) மேலும் ஒரு சிக்கல் இதில் உள்ளது; ஒருவேளை
அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லையென்றால், கணவன் மட்டுமே வாரிசா அல்லது வேறு யாரும்
வாரிசா என்ற கேள்வியும் எழும்.
(5) அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லையென்றால்,
அவள் இறக்கும்போது அவள் விட்டுச் செல்லும் சொத்தானது அவள் சம்பாதித்த சொத்தாக
இருந்தாலும், அல்லது அவளின் கணவன் வழியில் வாரிசு முறையில் கிடைத்திருந்தாலும்,
அந்த சொத்து அவளின் இறந்த கணவனின் வாரிசுகளை சென்று அடையும்.
(6) இந்தப் பெண்ணுக்கு குழந்தை இல்லாமல்
இருந்தால், அவளின் சொத்து அவளின் தகப்பனார் வழியில் வாரிசு முறையில்
கிடைத்திருந்தால், அந்த சொத்து மட்டும் அவளின் தகப்பனார் வழி வாரிசுகளையே
திரும்பச் சென்று அடையும்; அவளின் கணவன் வாரிசுகளை சென்று அடையாது. (குழந்தை
இல்லாதபோது மட்டும் இந்த வாரிசுக் குழப்பத்தைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள
வேண்டும்).
No comments:
Post a Comment