Wednesday, June 3, 2015

பாகப் பிரிவினை-9

பாகப் பிரிவினை-9
கோர்ட் மூலமாக வழக்குப் போட்டு பாகப் பிரிவினை செய்து கொள்ளலாம். பங்குதாரர்கள் அல்லது வாரிசுதாரர்களுக்குள் சமாதானமாக சொத்தை பாகம் பிரித்து பத்திரம் எழுதிக் கொள்ள முடியாவிட்டால், அல்லது ஒரு பங்குதாரர் அல்லது பல பங்குதாரர்கள் பாகம் பிரித்துக் கொள்ள உடன்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தால், அவ்வாறு கொடுக்க மறுப்பவர்மீது கோர்ட்டில் வழக்குப் போடலாம்.
அதற்குமுன், “எனக்கு பங்கு வேண்டும்; பிரித்துக் கொடுக்கவும்” என்று  அவருக்கு கடிதம் அனுப்பலாம்; இல்லையென்றால், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம்; அதற்கும் உடன்படாமல், பங்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தால், அவர்மீது பாக வழக்கு தொடுக்கலாம்.
சொத்தில் நாம் குடியிருக்கவில்லை என்றாலும், பத்திரம் நம்மிடம் இல்லாமல் இருந்தாலும், நமக்கு அதில் வாரிசு முறைப்படி பங்கு இருக்கிறது என்பது உறுதியானால், வழக்கு தொடுக்கலாம்; நாமும் கூட்டுப் பங்குதாரர்தான்; எனவே நாம் பங்கு கேட்கும் பாகத்துக்கு எவ்வளவு பங்கு என்று குறிப்பிட்டு அதற்குறிய கோர்ட் கட்டணத்தை செலுத்தி (மிகக் குறைவான கட்டணம்தான்) வழக்கை தொடுக்கலாம்.
நமக்கு, அந்த சொத்தில் உரிமையே இல்லை என்றும் ஏற்கனவே ஒரு பங்குதாரர் சொத்தை அடைந்து கொண்டார் என்று இருந்தால், பங்கு கேட்பவர் அவர் கேட்கும் பங்குக்கு உரிய சொத்தின் மார்கெட் மதிப்புக்கு அதிக கோர்ட் கட்டணம் செலுத்தி பாக வழக்கில் பங்கும், சொத்தின் சுவாதீனமும் கேட்கலாம்.
பாகவழக்கு போட்டவுடன், எதிர் பார்ட்டிகளான மற்ற பங்குதாரர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பப்படும். அதை வாங்கிக் கொண்டு அவர் கோர்ட்டுக்கு வரவேண்டும், அவரோ, அவரது வக்கீலோ ஆஜராகி, அவரின் நியாயத்தை எழுத்து மூலமாக சொல்ல வேண்டும்,. பின்னர் சாட்சிகள் விசாரனை நடக்கும், வக்கீல் வாதம் நடக்கும். பின்னர் நீதிபதி தீர்ப்பு சொல்வார்.
பொதுவாக பாக வழக்குகளில் இரண்டு தடவை தீர்ப்பு (Decree) சொல்லப்படும். அதை Preliminary Decree and Final Decree முதல்நிலை தீர்ப்பானை, கடைசி தீர்ப்பானை என இரண்டு தீர்ப்புகள் வேறு வேறு காலக்கட்டங்களில் சொல்லப்படும். முதல் தீர்ப்பில், எவ்வளவு பங்கு பெற உரிமையுண்டு அல்லது பங்குபெற உரிமையில்லையா என்பதை தீர்ப்பாக சொல்லப்படும்; பின்னர் அடுத்த தீர்ப்பில் அந்த பங்கை பிரித்து நீள அகலத்துடன் வரைபடத்துடன் பங்கு கேட்டவர்களுக்கு தனித்தனியே ஒப்படைத்து பத்திரத்தில் எழுதி முடிவான தீர்ப்பாக கோர்ட் கொடுக்கும்.
அந்த பத்திரத்தில் எழுதிய தீர்ப்பை பெற்றவர்கள் நேரடியாக பத்திர பதிவு அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே வைத்துக் கொண்டு தனிதனியே அனுபவித்தும் வரலாம்;
ஒரேவேளை, வழக்குப் போட்ட சொத்தை தனிதனி துண்டு பாகங்களாக பிரிக்க முடியாவிட்டால், அதை கோர்ட் உறுதி செய்து கொண்டு, அந்த பிரிக்கு முடியாத சொத்தை கோர்ட் ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடும். அந்த ஏலத்தில் பங்குதாரர்களும் கலந்து கொள்ளலாம், வெளியாட்களும் கலந்து கொள்ளலாம்; அந்த ஏலத்தில் யார் அதிக விலைக்கு ஏலம் கேட்கிறார்களோ அவர்களுக்கு அந்த சொத்தை கிரயப்பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுப்பார் நீதிபதி. அதில் கிடைக்கும் பணத்தை, அந்த சொத்தின் பங்குதாரர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவார்.
வழக்கு போட்டதிலிருந்து, கடைசி தீர்ப்பு வந்து, சொத்தினை பங்கு பிரித்து கொடுப்பது அல்லது ஏலவிற்பனை செய்து பணத்தை பங்கு பிரித்துக் கொடுப்பதுவரை உள்ள செயல்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான சட்டங்கள் உள்ளன. அதை நீதிபதி பின்பற்றி மிகச் சரியாக செய்துமுடிப்பார்.
அதில் குறைகள் ஏதேனும் இருப்பின் அப்பீல் என்னும் மேல்முறையீடும் செய்து கொள்ள வழியுண்டு.


No comments:

Post a Comment