Friday, July 24, 2015

Life imprisonment ஆயுள் தண்டனை

Life imprisonment: ஆயுள் தண்டனை:

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 45-ன்படி “life” “ஆயுள்” என்பது ஒரு மனிதனின் கடைசி மூச்சுவரை, அதாவது “அவனின் இறப்புவரை” என்று சொல்லியுள்ளது.

இதே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 53ன்படி, பல்வேறு குற்றங்களுக்கு ஏற்ப, தண்டனைகளையும் பிரித்து சொல்லியுள்ளது. பிரிட்டீஸ் காலத்தில் இது 6 வகையாக இருந்து இப்போது 5 வகையாக குறைந்துள்ளது.
1)   முதல் தண்டனையாக – மரணதண்டனை. (Death).

2)  இரண்டாவதாக – ஆயுட்காலம் வரை சிறை. (imprisonment for life).

3)  மூன்றாவதாக – (நாடு கடத்துவது; இது இப்போது அமலில் இல்லை; அந்த கைதிகளை எல்லாம் 1955க்கு பின்னர் கடும்சிறை தண்டனை கைதிகளாக மாற்றிக் கொள்ளப்பட்டதாம்).

4)  நான்காவதாக – (1) கடும் சிறைதண்டனை Rigorous imprisonment) (சிறையில் வேலை செய்ய வைப்பர்); மற்றும் (2) சாதாரண சிறை தண்டனை Simple imprisonment.

5)    ஐந்தாவதாக -- சொத்தை பறிமுதல் செய்வது. 

6)  ஆறாவதாக -- அபராதமாக பணம் கட்டச் சொல்வது. (Fine).


பிரிவு 54-ன்படி மரணதண்டனை கொடுத்திருந்தால், அதை அடுத்த குறைந்த தண்டனைக்கு மாற்றிக் கொள்ள தகுந்த அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு. இங்கு “தகுந்த அரசாங்கம்” என்று சொல்லி உள்ளதற்கு விளக்கமாகத்தான், தற்போது சுப்ரீம்கோர்ட், சிபிஐ வழக்குகளுக்கு மத்திய அரசு என்றும் மற்ற வழக்குகளுக்கு மாநில அரசு என்றும் விளக்கம் அளித்துள்ளது. (ராஜிவ்காந்தி வழக்கின் குற்றவாளிகளுக்கு, தண்டனையை குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா அல்லது மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது).

பிரிவு 54-ல் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற தகுந்த அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு.
பிரிவு 55-ல் ஆயுள் தண்டனையை 14 வருடங்களுக்கு மிகாத தண்டனையாக மாற்ற தகுந்த அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு. (இந்தப் பிரிவை வைத்துத்தான், எல்லா ஆயுள் தண்டனை கைதிகளும் 14 வருடத்திலோ, அல்லது நன்நடத்தை விதிகளின்படி அதற்கு முன்னரோ சிறையிலிருந்து வெளியே வந்துவிடுகின்றனர்.)

இதுஇல்லாமல், பிரிவு 57-ல் ஆயுள் தண்டனை என்பதை 20 வருட தண்டனைக்கு சமமானதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இது இல்லாமல், குற்றவாளி, கடும்சிறை அனுபவிக்க வேண்டுமா அல்லது சாதாரண சிறை அனுபவிக்க வேண்டுமா என்பதை, தண்டனை கொடுத்த நீதிபதிதான் முடிவு செய்து தீர்ப்புடன் அறிவிப்பார்.

அபராத தொகை எவ்வளவு என்பது அதே சட்டத்திலேயே (மிக அதிகபட்சம் எவ்வளவு என்று) சொல்லப்பட்டிருக்கும். அதற்கு மேல் அபராதம் விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், அதற்கும் குறைவாக அபாரதம் விதிக்க அவருக்கு அதிகாரம் உண்டு. அந்த அபராத தொகையையும் கட்ட முடியாதவராக இருந்தால், அதற்கும் சேர்த்து சாதாரண சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்தால் போதும். (50 ரூபாய்க்கு 2 மாதமும், 100 ரூபாய்க்கு 4 மாதமும், எவ்வளவு பணமாக இருந்தாலும் 6 மாதமும் சிறைதண்டனை; இது பொருத்தமாக இல்லாதது போலவே உள்ளது, இன்னும் இதை யாரும் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது).

மேலே சொன்னசட்டத்தின்படி, நாம் விளங்கிக்கொள்வது;
ஆயுள் தண்டனை என்பது 20 வருடங்களுக்கு மட்டுமே (பிரிவு 57-ஐ பார்க்க);
ஆயுள் தண்டனையை 14 வருடங்கள் என குறைத்துக்கொள்ள அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. (பிரிவு 55-ஐ பார்க்க);
அந்த 14 வருடத்திலும், நன்னடத்தை விதிகளைக் கொண்டு இன்னும் குறைத்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. (பார்க்க -சிறைவிதிகள்);
ஆனால், 2013ல் கிரிமினல் சட்ட திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. கற்பழிப்பு குற்றங்களுக்கு தண்டனையாக 7 வருடத்திற்கு குறையாத ஆனால் 10 வருடத்திற்கு மிகாத சிறை தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது. இதை இந்த 2013 திருத்த சட்டத்தின்படி திருத்தி, “குற்றவாளியின் உண்மையான ஆயுள் முடியும்வரை ஆயுள்தண்டனை” என்று மாற்றியுள்ளது.

இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், வெறும் ஆயுள்தண்டனை என்பது 14 வருடத்திற்கு மட்டுமே என்றும், உண்மையான ஆயுள் தண்டனை ஆயுள்முடியும்வரை என்றும் விளங்கிக் கொள்ளலாம்.

கற்பழிப்பு குற்றங்களுக்கு “ஆயுள் முடியும்வரை ஆயுள்தண்டனை” என்று திருத்திய அரசு, கொலைக் குற்றங்களுக்கு “வெறும் ஆயுள்தண்டனை” மட்டுமே (அதாவது 14 வருட தண்டனை மட்டுமே) என்று விட்டுவிட்டது. ஏனென்று தெரியவில்லை. கற்பழிப்பு குற்றத்தைக் காட்டிலும், கொலைக்குற்றம் குறைந்ததா என்று சுப்ரீம் கோர்ட்டும் ஒருவழக்கில் கேள்வியும் எழுப்பியுள்ளது. நமக்கும் அதே ஆச்சரியம்தான்!


Commute = reduce a judicial sentence to one less severe; தண்டனை மாற்றம்;

Remission = reduce period of judicial sentence; தண்டனை காலத்தை குறைத்து சலுகை அளிப்பது;
**


No comments:

Post a Comment