Sunday, September 13, 2015

பூர்வீகச் சொத்தில் மகள்கள்

பூர்வீகச் சொத்தில் மகள்கள்:

1956-ல் இந்து வாரிசு உரிமைச் சட்டம் வந்தது.
1956-க்கு முன்னர், எந்த பெண்ணுக்கும் சொத்தில் பங்கு கிடையாது. அந்த பெண்கள், தங்களின் சொந்த பணத்தைக் கொண்டு ஏதாவது ஒரு சொத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஆனால், கணவர் சொத்திலோ, தகப்பன் சொத்திலோ, அல்லது மற்றவர் சொத்திலோ, வாரிசு என்ற முறையில் பங்கு கேட்க முடியாது. ஆனால், கணவர், தகப்பனார் இவர்களிடமிருந்து சீதனச் சொத்தாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும், பெண்கள், வாரிசு என்ற முறையில் பங்கு வாங்க முடியாது. இதுதான், 1956க்கு முன் இருந்துவந்த, இந்து வாரிசு சட்டமுறை. இருந்தபோதிலும், மனைவியைப் பாதுகாப்பது அவள் கணவனின் கடமை. அதை ஜீவனாம்ச உரிமை என்கின்றனர். கணவன் இல்லாத மகளைப் பாதுகாப்பதும் தந்தையின் கடமை; இதையும் ஜீவனாம்ச உரிமை என்கின்றனர்; அவளின் தந்தை இல்லையென்றால், அவளின் சகோதரன் அந்த பொறுப்பை செய்ய வேண்டும். ஏனென்றால், அவளுக்கு வேறு சொத்து ஆதரவே இல்லை; எல்லாச் சொத்துக்களையும் மகன்களே எடுத்துக் கொள்கின்றனர். மகள்களுக்கு தனியே ஏதும் சொத்து கொடுப்பதில்லை. (அவளாக வாங்கி வைத்துக் கொள்ளும் சீதனச் சொத்தைத் தவிர வேறு வழியில் அவளுக்கு சொத்து கிடைக்காது).

1956-க்கு முன்னர், ஒரு இந்து ஆண் இறந்து விட்டால், அவரின் சொத்துக்களை அனைத்தும் அவரின் மகன்களுக்கும், பேரன்களுக்கும், கொள்ளுப் பேரன்களுக்கும் மட்டுமே போய்ச் சேரும்; மகள்களுக்கு ஒன்றும் கிடைக்காது; இதில் திருமணம் ஆன மகள்கள், அவளின் கணவர் வீட்டில் இருப்பார், எனவே பிரச்சனை இல்லை; திருமணம் ஆகாத மகள் இருந்தால், அவளை, அவளின் சகோதரன், அவர்களின் குடும்ப வழக்கப்படி திருமணம் செய்து கொடுக்க வேண்டும்; அதன் செலவை ஏற்க வேண்டும்; திருமணம் ஆகி, கணவன் இறந்து விதவையாக பிறந்த வீட்டுக்கு வந்த மகளாக இருந்தால், அவளை வாழ்நாள் வரை வைத்து காப்பாற்றும் பொறுப்பு அந்த சகோதரனுக்கே உண்டு; இது இல்லாமல், அவனின், தகப்பன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் இவர்கள் விட்டுச் சென்ற கடன்களையும் அந்த மகனோ, பேரனோ, கொள்ளுப் பேரனோ தான் அந்த கடன்களை கொடுத்தத் தீர்க்க வேண்டும். அவனுக்கு அந்த கட்டாயமும் உள்ளது. இதை Pious Obligation  பயஸ் ஆப்ளிகேஷன் என்று இந்து சட்டம் சொல்கிறது. அப்பன், தாத்தன் பட்ட கடனை மகன், பேரன் கொடுக்க வேண்டும் என்ற இந்துமதக் கொள்கையாம். அப்போதுதான் இறந்த தந்தை, பாட்டன் இவர்கள் சொர்க்கத்திற்கு போய் கடன் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியுமாம்.

1956-க்கு முன்னர், ஒரு இந்து ஆண் இறந்து விட்டால், அவரிடமிருந்து வந்த  சொத்தை பூர்வீக சொத்து என்றே சட்டம் கருதுகிறது. அந்த சொத்து, அந்த இறந்த இந்துவின் தந்தையிடமிருந்து கிடைத்திருந்தாலும், அல்லது பாட்டனிடமிருந்து கிடைத்திருந்தாலும் அந்த சொத்தை பூர்வீகச் சொத்து என்றே சட்டம் கருதுகிறது. மேலும், அந்த இந்து, தன்னுடைய சுயமான சம்பாத்தியத்தில் ஒரு சொத்தை 1956க்கு முன்னர் வாங்கி இருந்தாலும், அதையும் பூர்வீகச் சொத்து என்றே அன்றைய இந்து சட்டம் கருதியது. அவ்வாறன சொத்துக்களில், (1956க்கு முன்னர்) அந்த இந்து ஆணுக்கு ஒரு மகன் பிறந்தால் அவன், அவனின் தந்தை வைத்திருக்கும் சொத்தில் ஒரு பார்ட்னர் ஆகி விடுவான். அதேபோல் அவனின் பாட்டன் சொத்திலும் அவன் பார்டனர் ஆகி விடுவான். மேலும் அவரின் பூட்டன் சொத்து இருந்தாலும் அதிலும் அவன் பார்ட்னர் ஆகி விடுவான். ஆக பிறந்த ஆண் குழந்தைக்கு, அவனின் தகப்பன், பாட்டன், பூட்டன் இவர்களின் சொத்துக்களில் "பிறந்தவுடனேயே" பங்கு கிடைத்துவிடும். இவர்கள் இறக்கும்வரை காத்திருக்க தேவையில்லை; இதைத்தான் "கோபார்சனரி சொத்து" என்கின்றனர். அல்லது பூர்வீகச் சொத்து எனலாம். Coparcenary property.

இந்த சொத்துக்களை விட்டுவிட்டு ஒரு இந்து ஆண் இறந்தால், அவரின் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் அந்த சொத்தை, அவர்களின் பிறப்பு உரிமையால் அடைந்து கொள்வர். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடத்த மட்டும் பொறுப்பு உண்டு; விதவை மகள்களை வாழ்நாள்வரை காப்பாற்றும் பொறுப்பு உண்டு; இறந்தவரின் மனைவிக்கு என்ன கிடைக்கும்? அதாவது ஒரு இந்து 1956க்கு முன்னர், தன் சொத்தை விட்டுவிட்டு இறந்திருந்தால், அவரின் மகன்கள் அவரின் சொத்துக்களை எடுத்துக் கொள்வார்கள்; இறந்தவரின் மனைவி (அதாவது மகன்களின் தாயார்) என்ன ஆவார்? 1956-க்கு முன்னர், அந்த விதவை மனைவி, இறந்த அவளின் கணவனின் ஒரு பங்கை தன் வாழ்நாள் வரை வைத்து அனுபவித்துவிட்டு, இறக்கும்போது அந்த சொத்தை மகன்களுக்கு விட்டுவிட்டு இறந்து போக வேண்டுமாம். அவள் அந்த பங்கை விற்க முடியாதாம். அதாவது அவளுக்கு அவளின் கணவனின் பங்கில் "ஆயுட்கால அனுபவ உரிமை" மட்டும் உண்டாம். முழுஉரிமை கிடையாதாம். இறந்த கணவனின் பங்கு என்றால் என்ன என்ற கேள்வி இங்கு வருகிறது. அதாவது, பூர்வீகச் சொத்தை, (1956-க்கு முன்னர்) விட்டுவிட்டு தகப்பன் இறந்தால், இறந்த தகப்பனுக்கு, ஆண் என்ற முறையில் ஒரு பங்கு என்றும், இறந்த தகப்பனின் மகன்கள், ஆண்கள் என்ற முறையில் தலைக்கு ஒரு பங்கு எனவும் பிரித்துக் கொண்டால் (கற்பனையாகப் பிரித்துக் கொண்டால்), இறந்த தகப்பனுக்கு ஒரு பங்கு கிடைக்கிறதே, அந்தப் பங்கைத்தான் அவரின் மனைவி அவளின் வாழ்நாள் வரை அனுபவித்துக் கொள்ளும் உரிமை மட்டும் கிடைக்கிறதாம். ஆக மனைவியாக இருந்தாலும், மகளாக இருந்தாலும், திருமணம் ஆக மகளாக இருந்தாலும், திருமணம் ஆகாத மகளாக இருந்தாலும், விதவை மகளாக இருந்தாலும், விதவை மனைவியாக இருந்தாலும் (மருமகள்கள் எல்லோரும், ஒருவரின் மனைவி என்றே கருதப்படுவர்) எந்தப் பெண்ணாக இருந்தாலும், 1956-க்கு முன்னர் இத்தகைய சொத்தில் எந்த பங்கையும் வாங்கிவிட முடியாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 1956க்கு முன்னர் பெண்கள் இருந்துள்ளனர்.


No comments:

Post a Comment