Sunday, May 29, 2016

பவர் ஆப் அட்டார்னி-6

பவர் ஆப் அட்டார்னி-6
இது இல்லாமல், பவர் பத்திரத்திலேயே, பணம் வாங்கிக் கொண்டேன் என்றும் எழுதிக் கொள்ளலாம்; அத்தகைய பவர் பத்திரங்களை “பணம் கொடுத்து வாங்கிய பவர்” என்றே சட்டமும் ஏற்றுக் கொள்கிறது: அத்தகைய பத்திரங்களுக்கு, அதில் குறிப்பிட்டுள்ள தொகைக்கு 4% மதிப்புள்ள முத்திரைதாளில் எழுதி இருக்க வேண்டும்; அந்த தொகைக்கு 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; இத்தகைய பவர் பத்திரங்கள் மட்டுமே, பணத்துக்காக கொடுக்கும் பவர் பத்திரம் என்றும், இத்தகைய பத்திரங்களை மட்டுமே சில காரணங்களுக்காக ரத்து செய்வது சிரமம் என்றும் சட்டம் வரையறை செய்துள்ளது;
இவ்வளவு செலவு செய்து பணம் வாங்கியதை ஒப்புக்கொள்ளும் பவர் பத்திரம் தேவையா என்று பலர் கருதிக் கொண்டே, பணம் வாங்காத பவர் பத்திரம் போலவே பலரும் எழுதிக் கொள்கிறார்கள்; இது அரசாங்கத்துக்கு வருமானத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால், தமிழக அரசு ஒரு சட்டம் மூலம், பணம் வாங்காத பவர் பத்திரமாக இருந்தால், அது அசையாச் சொத்தின் விற்பனை தொடர்பான பவர் பத்திரமாக இருந்தால், குடும்ப உறுப்பினர்களுக்குள் இல்லாத பவர் பத்திரமாக இருந்தால், ரூ.10,000 பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என 2013 டிசம்பர் மாதம் ஒரு சட்டம் மூலம் கொண்டு வந்து, இன்றுவரை அது அமலில் இருந்து வருகிறது; மேலும், சொத்தின் கிரயம் சம்மந்தப்பட்ட பவர் பத்திரமாக இருந்தால், அது வில்லங்க சான்றிதழில் பதிவாகிவிடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது; அதிலிருந்து ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் இத்தகைய பவர் பத்திரத்தை பெறுவதை குறைத்துக் கொண்டனர்; கடந்த இரண்டு வருடமாக, ரியல் எஸ்டேட் வியாபாரமும் மந்தமாகி விட்டதற்கு இதுவும் மிகப் பெரிய காரணம் என்ற சொல்கிறார்கள்;
மேலும், அத்தகைய பவர் பத்திரங்களுக்கு ஒரே ஒரு மாதம் மட்டுமே மதிப்பு இருக்கும் என்றும், அதற்கு மேல் கால தாமதம் ஆனால், அந்த பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் உயிருடன்தான் இன்றுவரை உள்ளார் என்பதற்கு ஒரு அரசு மருத்துவமனையில் பணியில் உள்ள டாக்டர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் அதற்கு “லைப் சர்டிபிகேட்” என்று பெயரிட்டு அதையும் கட்டாயமாக்கி விட்டனர்; எனவே ரியல் எஸ்டேட் வியாபாரிகள் இத்தகைய பவர் பத்திரங்களைப் பெறுவது என்பது வியாபார ரீதியாக மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால், அவர்கள் இத்தகைய எளிய வழி பவர் மூலம் செய்யும் வியாபாரங்களை இப்போது செய்ய முடியவில்லை; தமிழக அரசின் நோக்கமும் அதுவேதான்; இத்தகைய வியாபார நோக்கம் கொண்ட பவர் பத்திரங்களை ஒழித்துவிட வேண்டும் என்று அரசும் நினைத்தது; பொன் முட்டை இடும் வாத்தை அறுத்த கதையாகி விட்டது;

 Contd...7

No comments:

Post a Comment