Showing posts with label Power of Attorney. Show all posts
Showing posts with label Power of Attorney. Show all posts

Monday, September 14, 2020

பவர் ஆப் அட்டார்னி பத்திரம்

பவர் ஆப் அட்டார்னி

தமிழ்நாட்டில் அசையாச் சொத்து இருக்கும்போது, அதன் பவர் பத்திரத்தை வேறு மாநிலத்தில் பதிவு செய்ய முடியுமா?

Registration Act Sec.28(a)-ன்படி தமிழ்நாட்டில், ஒரு சொத்து எந்த சார்-பதிவாளர் அலுவலக எல்லைக்குள் இருக்கிறதோ, அந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில்தான், பவர் பத்திரத்தை பதிவு செய்ய முடியும். 

ஆனாலும், அதற்கு விதிவிலக்காக – பவர் பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் பிரின்சிபல் வேறு சார்-பதிவாளரின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்தால் (வேறு மாநிலத்தில் வசித்தாலும்) அந்த சார்-பதிவாளர் முன்னர் பவர் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம். அது செல்லுபடியாகும் என்று Regn Act Sec.28(a) Proviso சொல்கிறது. (இதை தமிழ்நாடு பதிவுத்துறையும் அங்கீகரிக்கிறது).

ஆனால், Regn Act Sec.28(b)-ன்படி, ஒரு சொத்து தமிழ்நாட்டில் இருக்கும்போது, வெளி மாநிலத்தில் பவர் பத்திரத்தை பதிவு செய்திருந்தால், அந்த பவர் பத்திரம் செல்லாது என்று சொல்கிறது.

இந்த குழப்பத்தை தீர்க்க – Tamil Nadu IG of Regn Circular-ல் தெளிவுபடுத்தி உள்ளது. அதன்படி, Regn Act Sec.28(a) Proviso-வின் படி, வெளி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பவர் பத்திரத்தைக் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள சொத்தை பதிவு செய்யலாம் என்றும் அதற்கு தடையில்லை என்றும் சொல்லி உள்ளது.

எனவே, முடிந்தவரை, சொத்து இருக்கும் அந்த அந்த சார்-பதிவாளர் அலுவலகத்திலேயே அந்த பவர் பத்திரத்தை பதிவு செய்வது நல்லது. ஆனாலும், சொத்தின் உரிமையாளர் / பிரின்சிபல் தமிழ்நாட்டில் வேறு இடத்தில் (சொத்து இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்தில் இருந்தால்), அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள சார்-பதிவாளரிடம் பவர் பத்திரம் பதிவு செய்து கொள்ளலாம். அதுவும் செல்லுபடியாகும்.

அதேபோல, சொத்து தமிழ்நாட்டில் இருக்கும்போது, சொத்தின் உரிமையாளர்/ பிரின்சிபல் வேறு மாநிலத்தில் இருந்தாலும், அவரும் அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள சார்-பதிவாளரிடம் பவர் பத்திரம் பதிவு செய்து அனுப்பலாம். அதுவும் செல்லுபடியாகும். அதற்கு Regn Act Sec.28(b) தடையாக இருக்காது.

அப்படி தமிழ்நாட்டில், சொத்து-இருக்கும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாத பவர் பத்திரங்களி்ல் (அதாவது வேறு பகுதியில் அல்லது வேறு மாநிலத்தில் அந்தப் பவர் பத்திரத்தை பதிவு செய்திருந்தால்), அதைக் கொண்டு கிரயம் முதலிய பத்திரங்களை பதிவு செய்ய வரும்போது, அந்த கிரயம் முதலிய பத்திரங்களை பதியும் போது நிரந்தர பதிவு எண் கொடுக்காமல் (Pending Regn) தற்காலிக பதிவு எண் கொடுத்து, பவர் பதிவு செய்து கொடுத்த அலுவலகத்திற்கு தபால் மூலம் தகவல் கேட்டு, அதை சரிபார்த்துக் கொண்ட பின்னரே, பதிவு செய்த பத்திரத்துக்கு நிரந்த எண் (Regular Document Number) கொடுக்க வேண்டும் என்று IG of Regn சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்தின் விற்பனை சம்மந்தப்பட்ட பவர் பத்திரத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 29/2012-ன்படி, சொத்தின் விற்பனை சம்மந்தப்பட்ட பவர் பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவானது, வில்லங்க சர்டிபிகேட்டில் பிரதிபலிக்கும். ஏனென்றால், இந்த வகை பவர் பத்திரங்களை Regn Act Sec.17(1)(h)-ல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற வகைப்பாட்டில் 1.12.2012 முதல் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பவர் பத்திரங்களை தமிழ்நாட்டில் பதிவுப் புத்தகம்-1-ல் பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறை தமிழ்நாட்டில் 01.12.2012 முதல் அமலில் இருந்து வருகிறது.

வெளிநாட்டில் எழுதி அனுப்பும் பவர் பத்திரங்கள்:

சொத்தின் விற்பனைக்கோ அல்லது வேறு வேலைக்கோ, எந்தப் பவர் பத்திரமாக இருந்தாலும், அதை வெளி நாட்டில் வசிக்கும் நபர் அங்கேயே எழுதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியும். அத்தகைய பவர் பத்திரங்களுக்கு மேற்சொன்ன நடைமுறைகள் தேவையில்லை. 

பொதுவாக பத்திரங்களை அதற்குறிய ஸ்டாம்பு பேப்பரில் எழுத வேண்டும். அல்லது அதற்குறிய ஸ்டாம்பு கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு பத்திரத்தை எழுதி, அதில் உள்ள பார்ட்டிகள் கையெழுத்துப் போட்ட பின்னர், அதற்குறிய ஸ்டாம்பு கட்டணத்தை நான்கு மாதங்களுக்குள் செலுத்தி இருக்க வேண்டும். 

எனவே தான், வெளிநாட்டில் எழுதும் பத்திரங்களை (குறிப்பாக பவர் பத்திரங்களை) வெள்ளைப் பேப்பரில் எழுதிக் கொள்ளலாம். அதை இந்தியாவுக்கு அனுப்பி விட்டால், அது இந்தியாவுக்குள் நுழைந்த தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குள் அதற்குறிய ஸ்டாம்பு கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அந்தப் பத்திரத்தை நடைமுறைப்படுத்த முடியாது. இந்த ஸ்டாம்பு கட்டணத்தை இதற்கு முன்னர் உள்ள சட்டங்களின்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி வசூலித்துக் கொண்டு, சரியான ஸ்டாம்பு கட்டணம் செலுத்தப்பட்டது என்று சான்று தருவார். இப்படிச் செய்வதை Adjudication of Stamps என்று சட்டம் சொல்கிறது. இப்போது இந்த வேலையை செய்வதற்கு எல்லா சார் பதிவாளர்களுக்கும் அரசு அதிகாரம் அளித்துள்ளது (Delegation of Power has been given to all the Sub-Registrars and District Registrars for such Adjudication Process).

Attestation of Power deed in a Foreign Country:

வெளிநாட்டில் எழுதிக் கொள்ளும் பவர் பத்திரத்துக்கு அங்கேயே Attestation வாங்க வேண்டும். இதில் இரண்டு வகை உள்ளது. 

Common Wealth Countries என்னும் நேச நாடுகளாக இருந்தால் அங்கு (இந்தியாவில் உள்ளது போல) நோட்டரி வக்கீல்கள் இருப்பபார்கள். அவர்களிடம் அந்த பவர் பத்திரத்தின் பிரின்சிபலின் கையெழுத்தை Attestation வாங்கிக் கொள்ள வேண்டும். காமன்வெல்த் நாடுகள் என்பது, பழைய பிரிட்டீஸ் சாம்ராஜியத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த நாடுகள் எல்லாம் Common Law நடைமுறையை பின்பற்றி வருகின்றன. அதாவது, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இலங்கை, பர்மா போன்ற நாடுகள் Common Law Principle-படி சட்ட நடைமுறை உள்ள நாடுகளாகும். இங்கு நோட்டரி-வக்கீல் முறை நடைமுறையில் உள்ளது (இந்தியாவைப் போலவே).

ஆனால், இந்த நாடுகள் இல்லாத, மற்ற நாடுகளில் Common Law சட்ட நடைமுறை இல்லாத நாடுகளான, சவுதி அரேபியா, துபாய், ஏமன், எகிப்து, போன்ற மன்னர் ஆட்சி அல்லது வேறு சட்ட நடைமுறை உள்ள நாடுகளில் நோட்டரி-வக்கீல் நடைமுறை இருக்காது. எனவே அப்படிப்பட்ட நாடுகளில் உள்ள இந்தியர் யாரேனும் பவர் பத்திரம் எழுதி Attestation பெற விரும்பினால், அங்குள்ள இந்திய தூதரகத்தில் உள்ள அதிகாரியான Consul General or Asst Consul General என்னும் கான்சல் அலுவலரிடம் சென்று அந்த பவர் பத்திரத்தை Attestation பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு Attestation பெற்றுக் கொண்ட பவர் பத்திரத்தை தபாலில் அல்லது நேரில் வரும் நபரிடம் இந்தியாவுக்கு கொடுத்து விடலாம். அந்த பவர் பத்திரம் இந்தியாவுக்கு வந்தவுடன், அது தபாலில் வந்தது என்ற ஆதாரத்துடன்  அல்லது அதை அங்கிருந்த நபர் நேரில் கொண்டு வந்தார் என்ற ஆதாரத்துடன், இந்தியாவில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் (எந்தப் பகுதி அலுவலகமாக இருந்தாலும் பரவாயில்லை), அங்கு பவர் பத்திரத்துக்கு உரிய ஸ்டாம்பு கட்டணம் ரூ.100-ம் அபராதம் ரூ.5-ம் சேர்த்து ரூ.105 செலுத்தி சான்று பெற வேண்டும். இதையே Power Adjudication என்கின்றனர். எந்த சார் பதிவாளரிடமும் அதை தாக்கல் செய்து ஸ்டாம்பு கட்டணம் செலுத்தலாம். எனென்றால் அதற்கு ஸ்டாம்பு கட்டணம் மட்டும் அவர் வசூலித்து சான்று அளிக்கிறார். 

வெளிநாட்டில் இருந்து எழுதிக் கொடுக்கும் பவர் பத்திரத்தைக் கொண்டு, சொத்தின் விற்பனை, செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, விடுதலை, அடமானம் போன்ற எந்த பத்திரத்தையும் செய்யலாம். ஆனால், அந்த பவர் பத்திரத்தில் அத்தகைய வேலைகளைக் குறிப்பிட்டு, சொத்தையும் குறிப்பிட்டு, அவருக்கு உள்ள உரிமையையும் குறிப்பிட்டுச் சொல்லி இருக்க வேண்டும். 

** 

Sunday, May 29, 2016

பவர் ஆப் அட்டார்னி-6

பவர் ஆப் அட்டார்னி-6
இது இல்லாமல், பவர் பத்திரத்திலேயே, பணம் வாங்கிக் கொண்டேன் என்றும் எழுதிக் கொள்ளலாம்; அத்தகைய பவர் பத்திரங்களை “பணம் கொடுத்து வாங்கிய பவர்” என்றே சட்டமும் ஏற்றுக் கொள்கிறது: அத்தகைய பத்திரங்களுக்கு, அதில் குறிப்பிட்டுள்ள தொகைக்கு 4% மதிப்புள்ள முத்திரைதாளில் எழுதி இருக்க வேண்டும்; அந்த தொகைக்கு 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; இத்தகைய பவர் பத்திரங்கள் மட்டுமே, பணத்துக்காக கொடுக்கும் பவர் பத்திரம் என்றும், இத்தகைய பத்திரங்களை மட்டுமே சில காரணங்களுக்காக ரத்து செய்வது சிரமம் என்றும் சட்டம் வரையறை செய்துள்ளது;
இவ்வளவு செலவு செய்து பணம் வாங்கியதை ஒப்புக்கொள்ளும் பவர் பத்திரம் தேவையா என்று பலர் கருதிக் கொண்டே, பணம் வாங்காத பவர் பத்திரம் போலவே பலரும் எழுதிக் கொள்கிறார்கள்; இது அரசாங்கத்துக்கு வருமானத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால், தமிழக அரசு ஒரு சட்டம் மூலம், பணம் வாங்காத பவர் பத்திரமாக இருந்தால், அது அசையாச் சொத்தின் விற்பனை தொடர்பான பவர் பத்திரமாக இருந்தால், குடும்ப உறுப்பினர்களுக்குள் இல்லாத பவர் பத்திரமாக இருந்தால், ரூ.10,000 பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என 2013 டிசம்பர் மாதம் ஒரு சட்டம் மூலம் கொண்டு வந்து, இன்றுவரை அது அமலில் இருந்து வருகிறது; மேலும், சொத்தின் கிரயம் சம்மந்தப்பட்ட பவர் பத்திரமாக இருந்தால், அது வில்லங்க சான்றிதழில் பதிவாகிவிடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது; அதிலிருந்து ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் இத்தகைய பவர் பத்திரத்தை பெறுவதை குறைத்துக் கொண்டனர்; கடந்த இரண்டு வருடமாக, ரியல் எஸ்டேட் வியாபாரமும் மந்தமாகி விட்டதற்கு இதுவும் மிகப் பெரிய காரணம் என்ற சொல்கிறார்கள்;
மேலும், அத்தகைய பவர் பத்திரங்களுக்கு ஒரே ஒரு மாதம் மட்டுமே மதிப்பு இருக்கும் என்றும், அதற்கு மேல் கால தாமதம் ஆனால், அந்த பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் உயிருடன்தான் இன்றுவரை உள்ளார் என்பதற்கு ஒரு அரசு மருத்துவமனையில் பணியில் உள்ள டாக்டர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் அதற்கு “லைப் சர்டிபிகேட்” என்று பெயரிட்டு அதையும் கட்டாயமாக்கி விட்டனர்; எனவே ரியல் எஸ்டேட் வியாபாரிகள் இத்தகைய பவர் பத்திரங்களைப் பெறுவது என்பது வியாபார ரீதியாக மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால், அவர்கள் இத்தகைய எளிய வழி பவர் மூலம் செய்யும் வியாபாரங்களை இப்போது செய்ய முடியவில்லை; தமிழக அரசின் நோக்கமும் அதுவேதான்; இத்தகைய வியாபார நோக்கம் கொண்ட பவர் பத்திரங்களை ஒழித்துவிட வேண்டும் என்று அரசும் நினைத்தது; பொன் முட்டை இடும் வாத்தை அறுத்த கதையாகி விட்டது;

 Contd...7

பவர் ஆப் அட்டார்னி-5

பவர் ஆப் அட்டார்னி-5
பொதுவாக, சொத்தை வாங்குபவர், கிரயப் பத்திரத்துக்குப் பதிலாக, பவர் பத்திரமாக எழுதிக் கேட்டால், அவ்வாறு பவர் கொடுக்கக் கூடாது; அதனால் பல சிக்கல்கள் பின்நாளில் வர வாய்ப்பு உண்டு; பவர் பத்திரம் எழுதி வாங்குபவர் எல்லாருமே யோக்கியர்கள் இல்லை; வியாபாரிகளாகவே இருப்பதால், அவர்கள் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு, நம்பி பவர் எழுதிக் கொடுத்தவர்களை நட்றாற்றில் விட்டுவிட்டவர்கள் ஏராளம்! எனவே சொத்தை வாங்குபவர் பவர் பத்திரம் கேட்டால், கண்டிப்பாக ஒரு சட்ட ஆலோசனையை தெளிவாகப் பெற்று, பின்னர்தான் பவர் பத்திரம் எழுதிக் கொடுக்கவேண்டும்; அத்தகைய பவர் பத்திரத்தில் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுக்கும் பவர் மட்டுமே இருக்க வேண்டும்; கடன் வாங்கவோ, வீடு கட்டவோ, சிறு சிறு பகுதிகளாக விற்கவோ எழுதி இருந்தால், அதற்கு ஒப்புக் கொள்ளக்கூடாது; சொத்தை வாங்கியவர், இப்படி பவர் வாங்கிக் கொண்டு, நம் பெயரிலேயே எல்லா வியாபாரமும் செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை அவர் எடுத்துக் கொள்வார்; ஆனால் அதற்குறிய இன்கம்டாக்ஸ் பிரச்சனையை நாம் தான் சமாளிக்க வேண்டி வரும்; காலி மனையாக பவர் வாங்கிக் கொண்டு, அதில் வீடு கட்டி விற்பவர்கள் இத்தகைய செயல்களை செய்துள்ளார்கள்; அவ்வாறு வீடு கட்டி விற்கும்போது பிரச்சனை ஏற்பட்டு கோர்ட்டுக்கு போனால், அங்கு பவர் கொடுத்த உங்கள் பெயரில்தான் வழக்கே நடந்துவரும்; எனவே இத்தகைய பவர் பத்திரங்களில் ஜாக்கிரதையாக இயங்க வேண்டும்;

பவர் பத்திரங்களில் வாசகங்கள் எழுதும்போது, இந்த பவர் பத்திரம் மூலம், எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவரிடமிருந்து எந்தப் பணமும் வாங்கவில்லை என்று ஒரு உறுதிமொழியும் எழுதி இருக்க வேண்டும்; பணம் வாங்கிக் கொண்டு பவர் பத்திரம் எழுதிக் கொடுக்க முடியாது; பணம் வாங்காமல் எழுதிக் கொடுக்கும் பவர் பத்திரங்களை மட்டுமே ரு.100 மதிப்புள்ள முத்திரைதாளில் எழுதிக் கொள்ள முடியும். எனவே பணம் வாங்கவில்லை என்று ஒரு பொய்யையாவது அதில் சொல்லி இருக்க வேண்டும்; பணம் கொடுத்ததை வேறு ஒரு ரசீது பத்திரம் மூலம் எழுதிக் கொள்வர்; இரண்டும் ஒரே நாளில் நடந்திருந்தால் அந்த இரண்டு பத்திரங்களும் சேர்ந்து அதை கிரயம் என்றே கருத வேண்டும்; பவர் எழுதிக் கொடுத்தபின்னர், மறுநாளில் பணம் வாங்கி இருந்தால், பவர் கொடுத்தவருக்குச் சேரவேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்றே சட்டம் கருதுகிறது; அத்தகைய பணம் பெற்ற பவர் பத்திரத்தை பின்நாளில் ரத்து செய்ய முடியாது; ஏன் என்றால், அதில் அவர் என்ன நோக்கத்துக்கு பவர் கொடுத்தாரோ அந்த நோக்கத்தில் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று சட்டம் கருதுகிறது; எனவே பவர் கொடுத்தபின்னர் பணம் பெற்றிருந்தால் அத்தகைய பவர் பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரம் குறைவாகவே உள்ளது என கோர்ட் தீர்ப்புகளில் சொல்லப்பட்டுள்ளது;
contd...6

பவர் ஆப் அட்டார்னி-4

பவர் ஆப் அட்டார்னி-4
பொதுவாக இப்போதெல்லாம், இதுபோன்ற பவர் பத்திரங்கள் குறைவாகவே உள்ளன; அதற்குப் பதிலாக, வியாபார ரீதியில் இந்த பவர் பத்திரங்கள் நடைமுறையில் உள்ளது; ரியல் எஸ்டேட் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சொத்தைக் கிரயம் வாங்குபவரே அல்லது வாங்கி விற்பவரே, தன் பெயரிலோ அல்லது தனது நாமினி அல்லது பினாமி பெயரிலோ பவர் பத்திரத்தை வாங்கிக் கொண்டு விடுகிறார்; சொத்தின் கிரயத் தொகை முழுவதையும் கொடுத்துவிட்டு, அதற்கு ஒரு ரசீதும் பெற்றுக் கொள்கிறார்; இப்படியான பவர் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என்று ஒரு விதி இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டு இதை செய்து வருகிறார்கள்; இதைக் கட்டுப்படுத்தவே இப்போது தமிழ்நாட்டில் ஒரு புதிய பவர் சட்ட நடைமுறை வந்துவிட்டது; அதாவது வெளி நபர்கள் பெற்றுக் கொள்ளும் பவர் பத்திரங்களுக்கு ரூ.10,000 பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ரூ.100 மதிப்புள்ள முத்திரை தாளில் அந்த பவர் பத்திரம் எழுதிக் கொள்ள வேண்டும் என்றும் நடைமுறை வந்து வெகுகாலம் ஆகி விட்டது; இது இல்லாமல், உண்மையில் குடும்ப உறுப்பினர்களுக்கு எழுதிக் கொடுக்கும் பவர் பத்திரமாக இருந்தால், அந்த பவர் பத்திரத்தை, ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதிக் கொண்டு, அதை பதிவு செய்ய ரூ.1,000 பதிவுக் கட்டணம் செலுத்தினால் போதும் என்று புதிய முத்திரைச் சட்டத்தில் பவர் பத்திர விபரம் சொல்கிறது;

சொத்தின் விற்பனை அல்லாத மற்ற பவர் பத்திரங்களாக இருந்தால், அத்தகைய பவர் பத்திரங்களை ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதி, ரூ.150 பதிவுக் கட்டணமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்; ஆக எந்தப் பவர் பத்திரமாக இருந்தாலும் (பொது பவர்) அதற்கு ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளே போதும்; ஆனால் பதிவு அலுவலகத்தில் பதிவுக் கட்ட்ணம் மட்டுமே வேறுபடும்; 
contd...5

பவர் ஆப் அட்டார்னி-3

பவர் ஆப் அட்டார்னி-3
ஒரே ஏஜெண்ட் நியமிக்கும் பவர் பத்திரங்களில் ஒரு குழப்புமும் இல்லை; இரண்டு ஏஜெண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஏஜெண்டுகளை நியமித்தால், சிறிது குழப்பமாகவே இருக்கும்; எல்லா ஏஜெண்டுகளும் ஒரே நேரத்தில் இருந்து கையெழுத்துச் செய்து அந்த வேலையை முடிக்க வேண்டுமா அல்லது யாராவது ஒருவர் அல்லது இருவர் மட்டும் இருந்து ஒரு வேலையைச் செய்து கொள்ளலாமா என்பதை எல்லாம் தெளிவாக அந்தப் பவர் பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்; அதைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்றால், எல்லா ஏஜெண்டுகளும் நேரில் ஒரே நேரத்தில் இருந்து கையெழுத்துச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் உண்டு;
ஏஜெண்ட் என்பதே நம்பிக்கையின்பால் பட்டது; எனவே, எப்போது ஏஜெண்டுகளை நியமித்தாலும், தனக்கு நம்பிக்கையான நபர்களையே நியமித்துக் கொள்ள வேண்டும்; என்னதான் ஏஜெண்ட் செய்த தவறுகளுக்கு அவர் பொறுப்பானவர் என்றாலும், தவறு செய்தபின்னர், அவர் பின்னல் அலைவது சாத்தியமில்லாதது. ஏஜெண்டுகள் தகுதியான நபராகவும் இருக்க வேண்டும்; எனவேதான், ஏஜெண்டுகளை, அவரவர் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், இவர்களிலிருந்தே நியமித்துக் கொள்வர்;

ஒருவரை ஏஜெண்டாக நியமித்து விட்டால், அவரை நீக்கம் செய்யும் வரை, அவர் செய்து வந்த செயல்கள் (வேலைகள்) எல்லாம் சட்டபடி செய்யப்பட்டதாகவே கருத வேண்டும்; உதாரணமாக – ஒரு சொத்தை விற்பதற்கு ஏஜெண்ட் நியமித்து விட்டோம்; அந்த ஏஜெண்ட், ஒரு கிரய அக்ரிமெண்ட் செய்து கொண்டு, அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டார் என்று வைத்துக் கொள்வோம்; அந்த கிரய அக்ரிமெண்ட் செல்லும்; அதற்குப் பின் அந்த ஏஜெண்டை நீக்கி விட்டாலும், அந்த அக்ரிமெண்ட்டின்படி சொத்தை வாங்க வந்தவருக்கு நாம் பதில் சொல்ல வேண்டும்; வாங்கிய அட்வான்ஸ் தொகைக்கும் பதில் சொல்ல வேண்டும்; ஏஜெண்டே அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு ஓடி விட்டாலும், பவர் கொடுத்தவர் அந்த பணத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்; உங்கள் அதிகாரம் பெற்ற ஏஜெண்டிடம்தானே நான் பணம் கொடுத்தேன்; நீங்கள்தானே அவரை இந்த வேலைக்கு நியமித்தீர்கள்; அப்படி இருக்கும்போது, இப்போது, அந்த ஏஜெண்ட் ஏமாற்றுக்காரன் என்று எனக்குத் தெரியவில்லை என்று சொல்ல உங்களுக்கு உரிமையில்லை; ஏஜென்சி சட்டப்படி, ஒரு ஏஜெண்டை நியமித்து விட்டால், அவரை நீக்கும்வரை, அந்த ஏஜெண்ட் செய்த எல்லா வேலைகளும், பவர் கொடுத்தவரை கட்டுப்படுத்திவிடும்; இதுதான் ஏஜென்சி சட்டவிதி;
contd...4

பொது அதிகாரப் பத்திரம்-2

பொது அதிகாரப் பத்திரம்-2
பொது அதிகாரப் பத்திரம் என்னும் ஜெனரல் பவர் பத்திரத்தில், ஒரு வேலைக்குப் பதிலாக, பல வேலைகளோ அல்லது அந்த ஒரு வேலையைத் தொடர்புடைய பல தொடர் வேலைகளையோ செய்யவதற்காக எழுதிக் கொள்ளலாம்; உதாரணமாக ஒரு சொத்தை நிர்வகித்து வரவும், வரி செலுத்தி வரவும், அடமானம் வைத்துக் கொள்ளவும், அடமானப் பத்திரம் எழுதிக் கொடுக்கவும், கிரய விற்பனை செய்யவும், கிரயப் பத்திரம் எழுதிக் கொடுக்கவும், லீஸ் என்னும் வாடகைக்கு விடவும், கட்டிடம் கட்டவும், அப்ரூவல் வாங்கவும், வாடகை வசூல் செய்யவும், வாடகைதாரரை காலி செய்யவும், கோர்ட்டில் வழக்கு தொடரவும், வக்கீல் நியமித்துக் கொள்ளவும், இப்படி பல வேலைகளைக் குறிப்பிட்டு ஒரே பவர் பத்திரத்தில் எழுதிக் கொள்ளலாம்; அல்லது, கிரயம் செய்ய மட்டுமே பவர் பத்திரம் எழுதிக் கொள்ளலாம்; கிரய செய்து கொள்ள மட்டும் என்று எழுதி இருந்தாலும், அது ஒரே ஒரு வேலை என்று சட்டம் கருதவில்லை; அதை பல வேலைகள் கொண்டதாகவே சட்டம் கருதுகிறது; அதாவது, கிரயப் பத்திரத்தை எழுதிக் கொடுப்பது ஒரு தனி வேலை; அதை ஒப்புக் கொண்டு பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து கொடுப்பது வேறு ஒரு தனி வேலை; சொத்தின் சுவாதீனத்தைக் கொடுப்பது தனி வேலை; இப்படி பல வேலைகள் இருப்பதால், அதை பொது அதிகாரப் பத்திரம் அல்லது ஜெனரல் பவர் பத்திரம் என்ற வகையில்தான் எழுதிக் கொடுக்க முடியும்;
பொது அதிகாரப் பத்திரத்தை ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதிக் கொள்ள வேண்டும்; பல வேலைகள் அதில் இருந்தாலும், அதையும் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; நோட்டரி வக்கீல் சான்று பெற்றுக் கொண்டாலே போதும்; ஆனால், அசையாச் சொத்தினை விற்பனை செய்வதற்காக எழுதிக் கொள்ளும் பொது அதிகாரப் பத்திரமாக இருந்தால் மட்டும் அதைக் கண்டிப்பாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது;
பொதுவாக ஒரு பொது அதிகாரப் பத்திரத்தில் ஒரே ஒரு ஏஜெண்டை மட்டும் நியமிப்பது பொதுவான பழக்கம்; ஆனால் அதற்கு மேலும் ஏஜெண்டுகளை நியமித்துக் கொள்ள தடை ஏதும் இல்லை; ரூ.100 முத்திரை தாளில் எழுதிக் கொள்ளும் பொது பவர் பத்திரத்தில் மிக அதிகபட்சமாக ஐந்து ஏஜெண்டுகளை ஒரே நேரத்தில் நியமித்துக் கொள்ளலாம்; அதற்கு மேல் ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும் என்றால் ரூ.175 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதிக் கொள்ள வேண்டும்;

 Contd...3

பவர் ஆப் அட்டார்னி-1

பவர் ஆப் அட்டார்னி-1
 தன் வேலையை வேறு ஒருவரைக் கொண்டு செய்வது; பவர் ஆப் அட்டார்னி என்பது அதிகாரப் பத்திரம்; தனக்கு ஒரு ஏஜெண்டை வைத்து, அந்த வேலையைச் செய்து கொள்வது; தனக்கு வேறு வேலை இருந்தாலும், அல்லது தன்னால் அந்த வேலைக்காக தனியே அலைய முடியாதபோது, இப்படி ஏஜெண்ட் மூலம் அந்த வேலைச் செய்து கொள்வதே பவர் ஆப் அட்டார்னி;
தனக்கு நம்பிக்கையான ஆட்களைக் கொண்டு தன் வேலையை இந்த பவர் ஆப் அட்டார்னி பத்திரம் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்; ஆனால், இப்போது இது வியாபார ரீதியில் போய் விட்டது; வயதானவர், தன்னால் அலைய முடியாது என்பதற்காக, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு, (மகனுக்கு, மகளுக்கு, மனைவிக்கு, கணவருக்கு) பவர் பத்திரம் எழுதிக் கொடுத்து அந்த வேலையைச் செய்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த பவர் பத்திர முறையை பிரிட்டீசார் ஏற்படுத்தி இருந்தனர்;
பவர் பத்திரங்களில் இரண்டு வகை உண்டு; ஒன்று – ஸ்பெஷல் பவர் பத்திரம்; மற்றொன்று – பொது பவர் பத்திரம்; ஸ்பெஷல் பவர் பத்திரம் என்பது ஓரே ஒரு வேலையை மட்டும் செய்வதற்காக கொடுக்கும் பவர் பத்திரம்; பொதுப் பவர் பத்திரம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வேலையை செய்வதற்கு கொடுக்கும் பவர் பத்திரம்;
கோர்ட்டில் ஒரு வழக்கு போடவேண்டும் என்றால், அதற்காக கொடுக்கும் பவர் பத்திரம் ஸ்பெஷல் பவர் பத்திரம்; ஏன் என்றால், அது அந்த வழக்கை மட்டும் நடத்துவதற்காக ஒரே ஒரு வேலைக்காக கொடுக்கும் பவர் ஆகும்; அந்த வழக்கு தொடர்பாக உள்ள தொடர் வேலைகளைச் செய்தாலும், அது ஓரே ஒரு வேலை என்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது; இப்படியான ஸ்பெஷல் பவர் பத்திரத்தை ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாளில் எழுதிக் கொள்ளலாம்; அதை நோட்டரி வக்கீல் மூலம் சான்று பெற்றுக் கொண்டால் போதுமானது; அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; அத்தகைய ஸ்பெஷல் பவர் பத்திரத்தின் அதிகாரத்தைக் கொண்டு, வழக்கறிஞரை நியமித்து, ஏஜெண்டாகவே வக்காலத்து கையெழுத்துச் செய்து கொள்ளலாம்; வழக்குக்குத் தேவைப்படும் வழக்குறைகள், பதில் மனுக்கள், அப்பீல், மற்றும் அது தொடர்பான எல்லா வேலைகளையும் அந்த ஸ்பெஷல் பவர் பத்திரத்தைக் கொண்டே செய்து கொள்ளலாம்;

 contd...2