Sunday, May 29, 2016

பவர் ஆப் அட்டார்னி-5

பவர் ஆப் அட்டார்னி-5
பொதுவாக, சொத்தை வாங்குபவர், கிரயப் பத்திரத்துக்குப் பதிலாக, பவர் பத்திரமாக எழுதிக் கேட்டால், அவ்வாறு பவர் கொடுக்கக் கூடாது; அதனால் பல சிக்கல்கள் பின்நாளில் வர வாய்ப்பு உண்டு; பவர் பத்திரம் எழுதி வாங்குபவர் எல்லாருமே யோக்கியர்கள் இல்லை; வியாபாரிகளாகவே இருப்பதால், அவர்கள் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு, நம்பி பவர் எழுதிக் கொடுத்தவர்களை நட்றாற்றில் விட்டுவிட்டவர்கள் ஏராளம்! எனவே சொத்தை வாங்குபவர் பவர் பத்திரம் கேட்டால், கண்டிப்பாக ஒரு சட்ட ஆலோசனையை தெளிவாகப் பெற்று, பின்னர்தான் பவர் பத்திரம் எழுதிக் கொடுக்கவேண்டும்; அத்தகைய பவர் பத்திரத்தில் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுக்கும் பவர் மட்டுமே இருக்க வேண்டும்; கடன் வாங்கவோ, வீடு கட்டவோ, சிறு சிறு பகுதிகளாக விற்கவோ எழுதி இருந்தால், அதற்கு ஒப்புக் கொள்ளக்கூடாது; சொத்தை வாங்கியவர், இப்படி பவர் வாங்கிக் கொண்டு, நம் பெயரிலேயே எல்லா வியாபாரமும் செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை அவர் எடுத்துக் கொள்வார்; ஆனால் அதற்குறிய இன்கம்டாக்ஸ் பிரச்சனையை நாம் தான் சமாளிக்க வேண்டி வரும்; காலி மனையாக பவர் வாங்கிக் கொண்டு, அதில் வீடு கட்டி விற்பவர்கள் இத்தகைய செயல்களை செய்துள்ளார்கள்; அவ்வாறு வீடு கட்டி விற்கும்போது பிரச்சனை ஏற்பட்டு கோர்ட்டுக்கு போனால், அங்கு பவர் கொடுத்த உங்கள் பெயரில்தான் வழக்கே நடந்துவரும்; எனவே இத்தகைய பவர் பத்திரங்களில் ஜாக்கிரதையாக இயங்க வேண்டும்;

பவர் பத்திரங்களில் வாசகங்கள் எழுதும்போது, இந்த பவர் பத்திரம் மூலம், எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவரிடமிருந்து எந்தப் பணமும் வாங்கவில்லை என்று ஒரு உறுதிமொழியும் எழுதி இருக்க வேண்டும்; பணம் வாங்கிக் கொண்டு பவர் பத்திரம் எழுதிக் கொடுக்க முடியாது; பணம் வாங்காமல் எழுதிக் கொடுக்கும் பவர் பத்திரங்களை மட்டுமே ரு.100 மதிப்புள்ள முத்திரைதாளில் எழுதிக் கொள்ள முடியும். எனவே பணம் வாங்கவில்லை என்று ஒரு பொய்யையாவது அதில் சொல்லி இருக்க வேண்டும்; பணம் கொடுத்ததை வேறு ஒரு ரசீது பத்திரம் மூலம் எழுதிக் கொள்வர்; இரண்டும் ஒரே நாளில் நடந்திருந்தால் அந்த இரண்டு பத்திரங்களும் சேர்ந்து அதை கிரயம் என்றே கருத வேண்டும்; பவர் எழுதிக் கொடுத்தபின்னர், மறுநாளில் பணம் வாங்கி இருந்தால், பவர் கொடுத்தவருக்குச் சேரவேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்றே சட்டம் கருதுகிறது; அத்தகைய பணம் பெற்ற பவர் பத்திரத்தை பின்நாளில் ரத்து செய்ய முடியாது; ஏன் என்றால், அதில் அவர் என்ன நோக்கத்துக்கு பவர் கொடுத்தாரோ அந்த நோக்கத்தில் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று சட்டம் கருதுகிறது; எனவே பவர் கொடுத்தபின்னர் பணம் பெற்றிருந்தால் அத்தகைய பவர் பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரம் குறைவாகவே உள்ளது என கோர்ட் தீர்ப்புகளில் சொல்லப்பட்டுள்ளது;
contd...6

No comments:

Post a Comment