Sunday, May 29, 2016

பவர் ஆப் அட்டார்னி-3

பவர் ஆப் அட்டார்னி-3
ஒரே ஏஜெண்ட் நியமிக்கும் பவர் பத்திரங்களில் ஒரு குழப்புமும் இல்லை; இரண்டு ஏஜெண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஏஜெண்டுகளை நியமித்தால், சிறிது குழப்பமாகவே இருக்கும்; எல்லா ஏஜெண்டுகளும் ஒரே நேரத்தில் இருந்து கையெழுத்துச் செய்து அந்த வேலையை முடிக்க வேண்டுமா அல்லது யாராவது ஒருவர் அல்லது இருவர் மட்டும் இருந்து ஒரு வேலையைச் செய்து கொள்ளலாமா என்பதை எல்லாம் தெளிவாக அந்தப் பவர் பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்; அதைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்றால், எல்லா ஏஜெண்டுகளும் நேரில் ஒரே நேரத்தில் இருந்து கையெழுத்துச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் உண்டு;
ஏஜெண்ட் என்பதே நம்பிக்கையின்பால் பட்டது; எனவே, எப்போது ஏஜெண்டுகளை நியமித்தாலும், தனக்கு நம்பிக்கையான நபர்களையே நியமித்துக் கொள்ள வேண்டும்; என்னதான் ஏஜெண்ட் செய்த தவறுகளுக்கு அவர் பொறுப்பானவர் என்றாலும், தவறு செய்தபின்னர், அவர் பின்னல் அலைவது சாத்தியமில்லாதது. ஏஜெண்டுகள் தகுதியான நபராகவும் இருக்க வேண்டும்; எனவேதான், ஏஜெண்டுகளை, அவரவர் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், இவர்களிலிருந்தே நியமித்துக் கொள்வர்;

ஒருவரை ஏஜெண்டாக நியமித்து விட்டால், அவரை நீக்கம் செய்யும் வரை, அவர் செய்து வந்த செயல்கள் (வேலைகள்) எல்லாம் சட்டபடி செய்யப்பட்டதாகவே கருத வேண்டும்; உதாரணமாக – ஒரு சொத்தை விற்பதற்கு ஏஜெண்ட் நியமித்து விட்டோம்; அந்த ஏஜெண்ட், ஒரு கிரய அக்ரிமெண்ட் செய்து கொண்டு, அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டார் என்று வைத்துக் கொள்வோம்; அந்த கிரய அக்ரிமெண்ட் செல்லும்; அதற்குப் பின் அந்த ஏஜெண்டை நீக்கி விட்டாலும், அந்த அக்ரிமெண்ட்டின்படி சொத்தை வாங்க வந்தவருக்கு நாம் பதில் சொல்ல வேண்டும்; வாங்கிய அட்வான்ஸ் தொகைக்கும் பதில் சொல்ல வேண்டும்; ஏஜெண்டே அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு ஓடி விட்டாலும், பவர் கொடுத்தவர் அந்த பணத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்; உங்கள் அதிகாரம் பெற்ற ஏஜெண்டிடம்தானே நான் பணம் கொடுத்தேன்; நீங்கள்தானே அவரை இந்த வேலைக்கு நியமித்தீர்கள்; அப்படி இருக்கும்போது, இப்போது, அந்த ஏஜெண்ட் ஏமாற்றுக்காரன் என்று எனக்குத் தெரியவில்லை என்று சொல்ல உங்களுக்கு உரிமையில்லை; ஏஜென்சி சட்டப்படி, ஒரு ஏஜெண்டை நியமித்து விட்டால், அவரை நீக்கும்வரை, அந்த ஏஜெண்ட் செய்த எல்லா வேலைகளும், பவர் கொடுத்தவரை கட்டுப்படுத்திவிடும்; இதுதான் ஏஜென்சி சட்டவிதி;
contd...4

No comments:

Post a Comment