Monday, September 14, 2020

பவர் ஆப் அட்டார்னி பத்திரம்

பவர் ஆப் அட்டார்னி

தமிழ்நாட்டில் அசையாச் சொத்து இருக்கும்போது, அதன் பவர் பத்திரத்தை வேறு மாநிலத்தில் பதிவு செய்ய முடியுமா?

Registration Act Sec.28(a)-ன்படி தமிழ்நாட்டில், ஒரு சொத்து எந்த சார்-பதிவாளர் அலுவலக எல்லைக்குள் இருக்கிறதோ, அந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில்தான், பவர் பத்திரத்தை பதிவு செய்ய முடியும். 

ஆனாலும், அதற்கு விதிவிலக்காக – பவர் பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் பிரின்சிபல் வேறு சார்-பதிவாளரின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்தால் (வேறு மாநிலத்தில் வசித்தாலும்) அந்த சார்-பதிவாளர் முன்னர் பவர் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம். அது செல்லுபடியாகும் என்று Regn Act Sec.28(a) Proviso சொல்கிறது. (இதை தமிழ்நாடு பதிவுத்துறையும் அங்கீகரிக்கிறது).

ஆனால், Regn Act Sec.28(b)-ன்படி, ஒரு சொத்து தமிழ்நாட்டில் இருக்கும்போது, வெளி மாநிலத்தில் பவர் பத்திரத்தை பதிவு செய்திருந்தால், அந்த பவர் பத்திரம் செல்லாது என்று சொல்கிறது.

இந்த குழப்பத்தை தீர்க்க – Tamil Nadu IG of Regn Circular-ல் தெளிவுபடுத்தி உள்ளது. அதன்படி, Regn Act Sec.28(a) Proviso-வின் படி, வெளி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பவர் பத்திரத்தைக் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள சொத்தை பதிவு செய்யலாம் என்றும் அதற்கு தடையில்லை என்றும் சொல்லி உள்ளது.

எனவே, முடிந்தவரை, சொத்து இருக்கும் அந்த அந்த சார்-பதிவாளர் அலுவலகத்திலேயே அந்த பவர் பத்திரத்தை பதிவு செய்வது நல்லது. ஆனாலும், சொத்தின் உரிமையாளர் / பிரின்சிபல் தமிழ்நாட்டில் வேறு இடத்தில் (சொத்து இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்தில் இருந்தால்), அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள சார்-பதிவாளரிடம் பவர் பத்திரம் பதிவு செய்து கொள்ளலாம். அதுவும் செல்லுபடியாகும்.

அதேபோல, சொத்து தமிழ்நாட்டில் இருக்கும்போது, சொத்தின் உரிமையாளர்/ பிரின்சிபல் வேறு மாநிலத்தில் இருந்தாலும், அவரும் அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள சார்-பதிவாளரிடம் பவர் பத்திரம் பதிவு செய்து அனுப்பலாம். அதுவும் செல்லுபடியாகும். அதற்கு Regn Act Sec.28(b) தடையாக இருக்காது.

அப்படி தமிழ்நாட்டில், சொத்து-இருக்கும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாத பவர் பத்திரங்களி்ல் (அதாவது வேறு பகுதியில் அல்லது வேறு மாநிலத்தில் அந்தப் பவர் பத்திரத்தை பதிவு செய்திருந்தால்), அதைக் கொண்டு கிரயம் முதலிய பத்திரங்களை பதிவு செய்ய வரும்போது, அந்த கிரயம் முதலிய பத்திரங்களை பதியும் போது நிரந்தர பதிவு எண் கொடுக்காமல் (Pending Regn) தற்காலிக பதிவு எண் கொடுத்து, பவர் பதிவு செய்து கொடுத்த அலுவலகத்திற்கு தபால் மூலம் தகவல் கேட்டு, அதை சரிபார்த்துக் கொண்ட பின்னரே, பதிவு செய்த பத்திரத்துக்கு நிரந்த எண் (Regular Document Number) கொடுக்க வேண்டும் என்று IG of Regn சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்தின் விற்பனை சம்மந்தப்பட்ட பவர் பத்திரத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 29/2012-ன்படி, சொத்தின் விற்பனை சம்மந்தப்பட்ட பவர் பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவானது, வில்லங்க சர்டிபிகேட்டில் பிரதிபலிக்கும். ஏனென்றால், இந்த வகை பவர் பத்திரங்களை Regn Act Sec.17(1)(h)-ல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற வகைப்பாட்டில் 1.12.2012 முதல் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பவர் பத்திரங்களை தமிழ்நாட்டில் பதிவுப் புத்தகம்-1-ல் பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறை தமிழ்நாட்டில் 01.12.2012 முதல் அமலில் இருந்து வருகிறது.

வெளிநாட்டில் எழுதி அனுப்பும் பவர் பத்திரங்கள்:

சொத்தின் விற்பனைக்கோ அல்லது வேறு வேலைக்கோ, எந்தப் பவர் பத்திரமாக இருந்தாலும், அதை வெளி நாட்டில் வசிக்கும் நபர் அங்கேயே எழுதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியும். அத்தகைய பவர் பத்திரங்களுக்கு மேற்சொன்ன நடைமுறைகள் தேவையில்லை. 

பொதுவாக பத்திரங்களை அதற்குறிய ஸ்டாம்பு பேப்பரில் எழுத வேண்டும். அல்லது அதற்குறிய ஸ்டாம்பு கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு பத்திரத்தை எழுதி, அதில் உள்ள பார்ட்டிகள் கையெழுத்துப் போட்ட பின்னர், அதற்குறிய ஸ்டாம்பு கட்டணத்தை நான்கு மாதங்களுக்குள் செலுத்தி இருக்க வேண்டும். 

எனவே தான், வெளிநாட்டில் எழுதும் பத்திரங்களை (குறிப்பாக பவர் பத்திரங்களை) வெள்ளைப் பேப்பரில் எழுதிக் கொள்ளலாம். அதை இந்தியாவுக்கு அனுப்பி விட்டால், அது இந்தியாவுக்குள் நுழைந்த தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குள் அதற்குறிய ஸ்டாம்பு கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அந்தப் பத்திரத்தை நடைமுறைப்படுத்த முடியாது. இந்த ஸ்டாம்பு கட்டணத்தை இதற்கு முன்னர் உள்ள சட்டங்களின்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி வசூலித்துக் கொண்டு, சரியான ஸ்டாம்பு கட்டணம் செலுத்தப்பட்டது என்று சான்று தருவார். இப்படிச் செய்வதை Adjudication of Stamps என்று சட்டம் சொல்கிறது. இப்போது இந்த வேலையை செய்வதற்கு எல்லா சார் பதிவாளர்களுக்கும் அரசு அதிகாரம் அளித்துள்ளது (Delegation of Power has been given to all the Sub-Registrars and District Registrars for such Adjudication Process).

Attestation of Power deed in a Foreign Country:

வெளிநாட்டில் எழுதிக் கொள்ளும் பவர் பத்திரத்துக்கு அங்கேயே Attestation வாங்க வேண்டும். இதில் இரண்டு வகை உள்ளது. 

Common Wealth Countries என்னும் நேச நாடுகளாக இருந்தால் அங்கு (இந்தியாவில் உள்ளது போல) நோட்டரி வக்கீல்கள் இருப்பபார்கள். அவர்களிடம் அந்த பவர் பத்திரத்தின் பிரின்சிபலின் கையெழுத்தை Attestation வாங்கிக் கொள்ள வேண்டும். காமன்வெல்த் நாடுகள் என்பது, பழைய பிரிட்டீஸ் சாம்ராஜியத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த நாடுகள் எல்லாம் Common Law நடைமுறையை பின்பற்றி வருகின்றன. அதாவது, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இலங்கை, பர்மா போன்ற நாடுகள் Common Law Principle-படி சட்ட நடைமுறை உள்ள நாடுகளாகும். இங்கு நோட்டரி-வக்கீல் முறை நடைமுறையில் உள்ளது (இந்தியாவைப் போலவே).

ஆனால், இந்த நாடுகள் இல்லாத, மற்ற நாடுகளில் Common Law சட்ட நடைமுறை இல்லாத நாடுகளான, சவுதி அரேபியா, துபாய், ஏமன், எகிப்து, போன்ற மன்னர் ஆட்சி அல்லது வேறு சட்ட நடைமுறை உள்ள நாடுகளில் நோட்டரி-வக்கீல் நடைமுறை இருக்காது. எனவே அப்படிப்பட்ட நாடுகளில் உள்ள இந்தியர் யாரேனும் பவர் பத்திரம் எழுதி Attestation பெற விரும்பினால், அங்குள்ள இந்திய தூதரகத்தில் உள்ள அதிகாரியான Consul General or Asst Consul General என்னும் கான்சல் அலுவலரிடம் சென்று அந்த பவர் பத்திரத்தை Attestation பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு Attestation பெற்றுக் கொண்ட பவர் பத்திரத்தை தபாலில் அல்லது நேரில் வரும் நபரிடம் இந்தியாவுக்கு கொடுத்து விடலாம். அந்த பவர் பத்திரம் இந்தியாவுக்கு வந்தவுடன், அது தபாலில் வந்தது என்ற ஆதாரத்துடன்  அல்லது அதை அங்கிருந்த நபர் நேரில் கொண்டு வந்தார் என்ற ஆதாரத்துடன், இந்தியாவில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் (எந்தப் பகுதி அலுவலகமாக இருந்தாலும் பரவாயில்லை), அங்கு பவர் பத்திரத்துக்கு உரிய ஸ்டாம்பு கட்டணம் ரூ.100-ம் அபராதம் ரூ.5-ம் சேர்த்து ரூ.105 செலுத்தி சான்று பெற வேண்டும். இதையே Power Adjudication என்கின்றனர். எந்த சார் பதிவாளரிடமும் அதை தாக்கல் செய்து ஸ்டாம்பு கட்டணம் செலுத்தலாம். எனென்றால் அதற்கு ஸ்டாம்பு கட்டணம் மட்டும் அவர் வசூலித்து சான்று அளிக்கிறார். 

வெளிநாட்டில் இருந்து எழுதிக் கொடுக்கும் பவர் பத்திரத்தைக் கொண்டு, சொத்தின் விற்பனை, செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, விடுதலை, அடமானம் போன்ற எந்த பத்திரத்தையும் செய்யலாம். ஆனால், அந்த பவர் பத்திரத்தில் அத்தகைய வேலைகளைக் குறிப்பிட்டு, சொத்தையும் குறிப்பிட்டு, அவருக்கு உள்ள உரிமையையும் குறிப்பிட்டுச் சொல்லி இருக்க வேண்டும். 

** 

No comments:

Post a Comment