Sunday, September 27, 2020

பிறக்காத குழந்தைக்கு சொத்து கொடுக்க முடியுமா

பிறக்காத குழந்தைக்கு சொத்து கொடுக்க முடியுமா

Settlement or Gift by Hindus: (இந்துக்களின் செட்டில்மெண்ட் அல்லது தானம்);

செட்டில்மெண்ட் அல்லது தானம் என்பது ஒரு சொத்தை தானம் கொடுப்பது. அதாவது அந்தச் சொத்துக்கு எந்தவித பணமும் பெறாமல் தானமாக மற்றொருவருக்கு கொடுப்பது. 

குடும்பத்துக்குள் ஒரு சொத்தை தானமாகக் கொடுப்பது செட்டில்மெண்ட் (Settlement) என்றும், வெளி நபருக்கு ஒரு சொத்தை இனாமாக கொடுப்பது தானம் (Gift) என்றும் பொதுவான கருத்து. ஆக இரண்டுமே  தானம் (Gift) தான்). இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இப்படிப்பட்ட தானம் (Gift) எப்படி இருக்க வேண்டும் என்று சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 (The Transfer of Property Act 1882) Sec.122-ல் சொல்லப் பட்டுள்ளது. 

உயிலும், செட்டில்மெண்டும்:

ஒரு உயிலில் (Will), சொத்தை எழுதி வைத்தவர், இறந்த பிறகு, மற்றொருவருக்கு அந்தச் சொத்து கிடைக்கும். ஆனால் செட்டில்மெண்ட் (தானம்) பத்திரத்தில், சொத்தை கொடுத்தவர் இறப்பதற்கு முன்னரே, அந்த சொத்தைத் தானம் பெற்றவர் அதைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 122=ல் தெளிவு படுத்தி உள்ளது. (இதுதான் உயிலுக்கும், செட்டில்மெண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்).

இந்துக்களின் செட்டில்மெண்ட் பத்திரம்:

இந்துக்கள் உயில் எழுதலாம் (தன் ஆயுட்காலத்துக்கு பிறகு அந்த சொத்தை யார் அடையலாம் என்று எழுதுவது உயில்). இந்துக்கள் செட்டில்மெண்ட் எழுதலாம் (தன் ஆயுட்காலத்திலேயே அதை கொடுத்துவிட்டுச் செல்வது செட்டில்மெண்ட்).

பிறக்காத குழந்தைக்கு சொத்தைக் கொடுப்பது:

இந்துக்களின் உயில், செட்டில்மெண்டுகளில், பிறக்காத குழந்தைக்கும் எழுதி வைக்கலாம் என்று சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882-ல் பிரிவு 13-ல் சொல்லி உள்ளது. எனவே ஒரு இந்துவின் உயில் அல்லது செட்டில்மெண்ட் பத்திரத்தில் (தானப்பத்திரத்தில்) ஒருவர், திருமணம் ஆகாத தன் மகனுக்கோ, மகளுக்கோ (அதாவது அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு) அவரின் சொத்தை செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்து, அதை அவரின் மகன்/மகள் ஆயுட்காலம் வரை அனுபவித்து வந்து, பின்னர் அவர்களுக்கு இனிமேல் பிறக்கும் குழந்தைகள் முழு உரிமையுடன் அந்தச் சொத்தை அடையும்படி எழுதி வைக்கமுடியும். 

சொத்து மாற்றம் என்றால் என்ன (What is Transfer of Property):

இப்படி சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 13-ல் சொல்லி உள்ளதில் சிலர் குழம்பி விடுகின்றனர். பொதுவாக, சொத்துரிமை மாற்றுச் சட்டம் Transfer of property-ல் “சொத்து மாற்றம்” என்றால் என்ன என்று அந்தச் சட்டத்தின் பிரிவு 5-ல் சொல்லி உள்ளது. அதன்படி, ஒரு சொத்தை (அசையும் சொத்து, அசையாச் சொத்து) ஒரு உயிர் உள்ள  நபர், மற்றொரு உயிர் உள்ள நபருக்கு, சொத்தை உரிமை மாற்றிக் கொடுப்பது என்று விளக்கி உள்ளது. (Transfer of property means – an act by which a living person conveys property to another living person). இங்கு “உயிர் உள்ள நபர்” என்பதற்கு விளக்கமாக, மனிதர்களையும், கம்பெனிகளையும், தனிநபர் நிறுவனங்களையும், கூட்டு நிறுவனங்களையும், சொசைட்டிகளையும்  சேரத்தே “உயிர் உள்ள நபர்” என்று சொல்லி உள்ளது. எனவே கம்பெனிகளும் ஒரு உயிர் உள்ள நபர் போலவே என்று இந்தச் சட்டம் விளக்கி உள்ளது.

ஆனால், பிரிவு 13-ல் பிறக்காத பிள்ளை என்பது ஒரு உயிர் உள்ள மனிதன் இல்லையே, அப்படி இருக்கும்போது, அவனுக்கு எப்படி சொத்தை மாற்றம் செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்துக்களுக்கு மட்டும் அப்படி ஒரு சிறப்பு சலுகையை, இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 இவை இரண்டிலும் இந்தச் சலுகையைக் கொடுத்துள்ளது. 

இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 என்பது கிறிஸ்தவர்களின் வாரிசு உரிமை பற்றியது. மேலும் அதில் இந்துக்களின் உயில் எப்படி இருக்க வேண்டும் என்று விரிவாகச் சொல்லி உள்ளது. அதை அப்படியே சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882-ல் 2-வது அத்தியாயம் (பிரிவுகள் 5-லிருந்து 53ஏ வரை) சொல்லி உள்ளது. இது ஒன்றை ஒன்று காப்பி அடித்தது போலவே இருக்கும்.

இந்துக்களின் பிறக்காத பிள்ளைக்கு ஒருவர், தனது சொத்தை எழுதிக் கொடுப்பது என்பது, இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 5-க்கு எதிராகவே உள்ளது. எப்படி என்றால்: அந்த சட்டப்படி, உயிரோடு இருப்பர், மற்றொரு உயிரோடு இருப்பவருக்கு மட்டுமே சொத்தை கொடுக்க முடியும் என்று பிரிவு 5-ல் சொல்லி உள்ளது.

ஆனால் இந்த பிரிவு 5-க்கு விதிவிலக்காகவே, அந்த சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் பிரிவு 13-ல் சொல்லப் பட்டுள்ளது. அந்த பிரிவு 13-ன்படி, பிறக்காத பிள்ளைக்கும் சொத்தை மாற்றிக் கொடுக்கலாம் என்று சொல்லி உள்ளது. (ஆண், பெண் யாராக இருந்தாலும், தன்னுடைய பிள்ளையாக இருந்தாலும், வேறு யாருடைய பிள்ளையாக இருந்தாலும் சரியே).

அப்படி என்றால், அந்த பிறக்காத பிள்ளை, எப்படி அந்த சொத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற சந்தேகம் எழுகிறது. சொத்தை தானம் கொடுக்கும்போது, அதை வாங்கிக் கொள்வதற்கு ஒரு ஆள் வேண்டும். அவர்தான் இன்னும் பிறக்கவே இல்லையே என்பதே அந்த சந்தேகம்.

அதற்குதான், அந்த பிரிவு 13-ல், ஒருவர் ஒரு சொத்தை, உயிருடன் இருப்பவருக்கு கொடுத்து, அவர் காலத்துக்குப் பின்னர், அந்த பிறக்காத பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று தெளிவு படுத்தி உள்ளது.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். அதாவது, ஒருவர் தன் சொத்தை, செட்டில்மெண்ட் (அல்லது உயில்) எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் ஆயுட்காலம் வரை அதை அனுபவிக்க உரிமை உண்டு என்றும், அவரின் காலத்துக்குப் பின்னர், அவரின் அப்போது உயிருடன் உள்ள திருமணம் ஆகாத மகன், அவன் ஆயுட்காலம் வரை இந்த சொத்தை அனுபவித்து வரு வேண்டும் என்றும், அந்த மகன் ஆயுட்காலத்துக்குப் பின்னர், அவனுக்கு திருமணம் ஆகி அதன் மூலம் பிறந்த அவனின் மகனுக்கு முழு உரிமையுடன் சேர வேண்டும் என்று எழுதி இருக்கிறார். இந்த செட்டில்மெண்ட் எழுதும்போது, அவரின் மகன் மட்டுமே உயிருடன் இருக்கிறான். பேரன் பிறக்கவேயில்லை. இப்படிப்பட்ட செட்டில்மெண்ட் சட்டப்படி செல்லும்.

Contingent Interrest நடக்கும் வாய்ப்பு உள்ள செயல்கள்:

ஆனால், அந்த பிறக்காத பிள்ளையின், பிறக்காத பிள்ளைக்கு அவ்வாறு எழுதி வைக்க முடியாது. ஏனென்றால், பிறக்காத பிள்ளை என்பதே, பிறக்குமா பிறக்காதா என்பதே சந்தேகம். அப்படி இருக்கும்போது, பிறக்காத பிள்ளையின், பிறக்காத பிள்ளை  என்பது இரண்டு சந்தேகங்களை கொண்டது. இதை Contingent Interest என்று சட்டம் சொல்கிறது. அதாவது, நடக்குமா நடக்காதா என்ற ஒரு வாய்ப்புக்கு மட்டும் சட்டம் அனுமதிக்கிறது. அப்படி சந்தேகத்தில் இருக்கிற இன்னொரு வாய்ப்புக்கு சட்டம் அனுமதிக்கவில்லை.

இன்னொரு உதாரணம்: ஒருவர் தன் சொத்தை, தனது பிறக்காத மகனுக்கு எழுதிக் கொடுக்கிறார். அவர் செட்டில்மெண்ட் எழுதும்போது, அவர் மகன் பிறக்கவே இல்லை. இது செல்லும். ஆனால், சொத்தை கொடுத்தவர் இறக்கும்போது, அந்த மகன் பிறந்து இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த பத்திரம் செல்லாது. அவர் இறந்தபின்னர் பிறந்த மகனுக்கு சொத்து கிடைக்காது. ஏனென்றால், அவர் இறக்கும்போது, சொத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஆளே இல்லை. 

இதையே, அவர் தன் மனைவி அவள் ஆயுட்காலம் வரை அனுபவித்து வந்து, அவள் ஆயுட்காலத்துக்குப் பின்னர், அவரின் பிறக்காத மகன் அடைய வேண்டும் என்று எழுதி இருந்தால் அது செல்லும். ஒரே வேளை, அவளுக்கு மகனே பிறக்காமல் போய் விட்டால், Contingent Interest என்னும் வாய்ப்பு நடக்கவே இல்லை என்பதால், அவளே முழுஉரிமையுடன் அடைந்து கொள்வாள். (அதாவது அவள் கணவன் இறந்துவிட்டால், அவளுக்கு குழந்தை பிறக்காது, அல்லது அவளுக்கு 50 வயதை தாண்டி விட்டால் அவள் Menopause என்னும் கரு உருவாகும் நிலை முடிந்து விட்டால், அப்போது அவள் சொத்தை முழுஉரிமையுடன் அடைந்து கொள்வாள்.

ஆக, Contingent என்பது நடக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று பொருள். ஆனால் அது இதுவரை நடக்கவில்லை. இனி நடக்கலாம் என்ற வாய்ப்பு உள்ளவைகளை இவ்வாறு Contingent என்று சட்டம் சொல்கிறது. ஒருவன் ஆகாயத்தில் நடந்து சென்றால் அவனுக்கு என் சொத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று எழுதி இருந்தால், அது எப்போதுமே நடக்க முடியாத வாய்ப்பு உள்ளது. அவ்வாறு எழுதி இருந்தால், நடக்க முடியாத வாய்ப்பு (Not certain to happen) என்று சட்டம் கருதி அந்த நிபந்தனையே செல்லாது என்றும், எனவே அந்த நடத்திக் காட்ட முடியாத நிபந்தனையை நிறைவேற்றாமலேயே அவனே சொத்தை முழுஉரிமையுடன் அடைந்து கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது.

இப்படிப்பட்ட விபரங்களைத்தான் இந்திய சொத்துரிமை சட்டம் அத்தியாயம் 2-ல் பிரிவு 5 முதல் 53ஏ வரை சொல்லி உள்ளது. இந்த அத்தியாயம் 2-ல் சொல்லி உள்ள எவையும் முஸ்லீம்களுக்கு பொருந்தாது. ஆகவே முஸ்லீம்கள், பிறக்காத பிள்ளைக்கு சொத்தை எழுதிக் கொடுக்க முடியாது.

முகமதியர்களின் (Mohammedan or Muslim) செட்டில்மெண்ட் அல்லது தானம்:

 இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 என்பது ஒரு பொதுச் சட்டம். அது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் என்பது பொதுவான விதி. ஆனால், அந்த சட்டத்தின் அத்தியாயம்-2 (Chapter-II) என்பது, பிறக்காத குழந்தைக்கு சொத்துக் கொடுப்பது பற்றிச் சொல்வதால், அது முகமதியர்களுக்கு அந்த அத்தியாயம் மட்டும் செல்லாது என்று அந்தச் சட்டத்தில் விலக்கி வைக்கப் பட்டுள்ளது.

அதே போலவே, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் தானம் என்பதைப் பற்றிச் சொல்லும் பிரிவான பிரிவு 122-ம் அதேபோல முகமதியர்களுக்குச் செல்லாது என்று விலக்கி வைக்கப் பட்டுள்ளது.

ஏனென்றால், ஒரு சொத்தை தானம் கொடுக்கும்போது, இந்துக்கள் பிறக்காத பிள்ளைக்கும் கொடுப்பது வழக்கம். அதைப்பற்றி அந்த சட்டம் பிரிவு 122 சொல்வதால், அதையும் முகமதியர்களுக்குச் செல்லாது என்று விலக்கி விட்டுள்ளது. 

முகமதியர்களின் தானம் (செட்டில்மெண்ட்) சற்று வித்தியாசமானது. முகமதிய சட்டப்படி, (ஷரியத் சட்டப்படி- Sharit Law), ஒரு முகமதியர், அவரின் சொத்தை எந்த பத்திரமும் (தானம், செட்டில்மெண்ட்) எழுதாமலேயே, வாய்மொழியாக, அவரின் சொத்தை யாருக்காவது தானம் கொடுக்கலாம் என்று முகமதிய சட்டம் சொல்கிறது. இதை ஷரியத் சட்டப்படி ஹிபா (Hiba) என்பர். ஹிபா என்றால் அரபு மொழியில் “தானம்” என்று பொருள்.  ஹிபா என்ற தானம் கொடுக்கும்போது, பத்திரம் எழுதிக் கொள்ள வேண்டியதில்லை என்றும் அதை பதிவு செய்து கொள்ள வேண்டியதில்லை என்றும் சொல்கிறது. ஆனால், அந்த தானம் கொடுக்கும் சொத்தை உடனே முழு உரிமையுடன் கொடுக்க வேண்டும் என்பதே நிபந்தனை. ஆயுட்கால உரிமை ஏதும் வைத்துக் கொள்ள முடியாது. அதேபோல பிறக்காத பிள்ளைக்கும் கொடுக்க முடியாது. ஏனென்றால், சொத்தை தானமாகப் பெறுபவர் அன்றே கைநீட்டி அதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது அதன் பொருள்.

ஆனாலும், முகமதியர் எழுதிக் கொள்ளும் செட்டில்மெண்ட் பத்திரங்களை எழுதிப் பதிவு செய்து கொள்வது நல்லது என்பதால், (அப்போதுதான் அது ஒரு பத்திர ஆதாரமாக இருக்கும் என்பதால்), பலரும் செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதிப் பதிவு செய்து கொள்கின்றனர். 

முகமதியர்களின் செட்டில்மெண்ட் எழுதும் போது, கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், சொத்தின் முழு உரிமையும் அன்றே கொடுத்திருக்க வேண்டும். ஆயுட்கால உரிமை போன்றவைகளை எழுத முடியாது. பிறக்காத பிள்ளைக்கு செட்டில்மெண்ட் எழுத முடியாது. அவ்வளவுதான். (இந்துக்களின் செட்டல்மெண்ட் பத்திரத்தில்  இதை எல்லாம் எழுதிக் கொள்ள முடியும். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்).

** 




No comments:

Post a Comment