Tuesday, August 2, 2016

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-1

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-1
(The Constitution of India, 1950)
ஒவ்வொரு நாட்டுக்கும், அந்தந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம்தான் பைபிள் ஆகும்; அரசியல் அமைப்புச் சட்டம் இல்லாத நாடுகளே இல்லை எனலாம்; ஆனாலும் ஆச்சரியப்படும்படி, இங்கிலாந்து நாட்டுக்கு எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் இல்லையாம்! இதுவரை நடந்து வந்துள்ள முறைகளைக் கொண்டே நடந்து கொள்வார்களாம்! ஜென்டில்மென்!
இந்த அரசியல் அமைப்புச் சட்டங்களில், மிகப் பெரியது இந்திய அரசியல் சட்டமாகவே இருக்கும் என நினைக்கிறேன்! மொத்தம் 395 ஆர்ட்டிகிள்கள்; அதாவது 395 பிரிவுகளைக் கொண்டது:  இந்த 395 பிரிவுகளும், 22 அத்தியாயங்களில் அடக்கப்பட்டுள்ளது;
ஆனால் அமெரிக்க அரசியல் சாசனம், கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது; மிகப் பழமையான சட்டம் இதுவாகத்தான இருக்கும்! உலகத்திலேயே இதுவே மிகச் சிறிய அரசியல் அமைப்புச் சட்டமாக இருக்கும் என நினைக்கிறேன்! மொத்தமே ஏழு ஆர்ட்டிகிள்கள்தான்! (இந்தியாவின் 395 பிரிவுகள் எங்கே! அமெரிக்காவின் ஏழு பிரிவுகள் எங்கே!)
இந்திய அரசியல் சாசனத்தில் சில விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை! அவை;-
1)       இந்தியக் குடிமகன் என்பவர் யார் யார்?
2)       அவனின் அடிப்படை உரிமைகள் என்ன என்ன? (இதுதான் இப்போது முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது! இதில் பல வழக்குகள் மாநில ஐகோர்ட்டிலும், இந்திய சுப்ரீம் கோர்ட்டிலும் நடந்துள்ளன! இதை விளக்குவதற்காக சுப்ரீம் கோர்ட் பல தெளிவான, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளையும் கொடுத்துள்ளது)
3)       ஜனாதிபதி, பார்லிமெண்ட், சுப்ரீம்கோர்ட், இந்திய ஆடிட்டர் ஜெனரல், மாநில கவர்னர்கள், மாநில சட்டசபைகள், மாநில ஐகோர்ட்டுகள், யூனியன் டெரிட்டரி, பஞ்சாயத்துக்கள், முனிசிபாலிட்டிகள், கோ-ஆப்ரேடிவ் சொசைட்டிகள், பழங்குடிகள் வசிக்கும் பகுதிகள், தேர்தல்கள், எமர்ஜென்சி கால நடைமுறைகள், என்று பல விஷயங்களை இதில் குறிப்பிட்டுள்ளார்கள்;
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில புதிய பிரிவுகளை திருத்தல் சட்டம் மூலம் கொண்டு வந்துள்ளனர்; இதுவரை (2015 வரை) 100 முறை இந்த அரசியல் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது;
பார்லிமெண்ட் விரும்பினால் எந்த புதிய சட்டத்தையும் கொண்டு வரலாம்! அதுபோல, பார்லிமெண்ட் விரும்பினால், இந்த அரசியல் சாசன சட்டத்தைக் கூட திருத்திக் கொள்ளலாம் என்று இந்த சட்டத்தின் பிரிவு 368 சொல்கிறது! இந்த பிரிவில்தான், இதுவரை ஆண்ட அரசுகளுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் பிரச்சனையும் ஏற்பட்டிருக்கிறது;
சுப்ரீம்கோர்ட் தீர்ப்புப்படி, “ஒரு சட்டம் என்று இருந்தால், தேவைப்படும்போது அதை திருத்திக் கொள்ள பார்லிமெண்டுக்கு உரிமை உண்டுதான்! இதே அரசியல் சாசன சட்டத்தில் பிரிவு 368லிலும் பார்லிமெண்டுக்கு அந்த உரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான்! அதற்காக, மொத்த அரசியல் சாச சட்டத்தையுமே பார்லிமெண்ட் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட முடியாது; ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் சில உண்டு; அதில் எந்த பார்லிமெண்டும் கை வைக்க முடியாது! அதுதான் அரசியல் சாசன சட்டத்தின் சிறப்பு என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம்” என பல வழக்குகளில் கூறி உள்ளது;
**

No comments:

Post a Comment