Thursday, December 29, 2016

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்

அமெரிக்க நாட்டின் மிக உயர்ந்த கோர்ட்டுதான் இந்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்; அமெரிக்க சட்டமான ஜூடிசியரி ஆக்ட் 1969-ன் படி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு தலைமை நீதிபதியும், மற்றும் எட்டு துணை நீதிபதிகளும் இருப்பர்; இந்த எண்ணிக்கை எப்போதும் மாறாது; இது அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தின் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும்; இதில் ஒரு வழக்கை விசாரிக்க குறைந்த பட்சம் ஆறு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமரும்; பெரும்பாலான வழக்குகளில், மொத்தமுள்ள ஒன்பது நீதிபதிகளுமே சேர்ந்து இருக்கும் பெஞ்ச் விசாரனை நடக்கும்;

அமெரிக்க சுப்ரீம் கோட்டுக்கு ஒரு நீதிபதியை நியமித்தால், அவர் வாழ்நாள் வரை அதே நீதிபதியாக இருப்பார்; இறந்தால் மட்டுமே பதவி போகும்; ரிட்டையர்மெண்ட் என்பதே இருக்காது; அவராக விரும்பினால், பதவி விலகிக் கொள்ளலாம்;

அமெரிக்க சுப்ரீம்கோர்ட்டுக்கு, நீதிபதியை நியமிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு; அவர் நாமினேட் செய்வார்; பல நீதிபதிகளை பரிந்துரைப்பார்; அதில் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என அமெரிக்க செனட் சபை முடிவை எடுக்கும்; அமெரிக்க செனெட் சபையில் மொத்தம் 100 செனட்டர்கள் இருப்பர்; அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன; அவற்றில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், இரண்டு செனட்டர்கள் தேர்வு செய்யப்படுவர்;

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கான நீதிபதிக்கு சம்பளமாக 2,25,500/- டாலர்கள் ஒரு வருடத்துக்கு சம்பளம்; கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் மாதச் சம்பளம்;

இப்போது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருப்பவர் ஜஸ்டிஸ் ஜான் ராபர்ட்; இவர் 2005ல் நியமிக்கப் பட்டவர்; இளவயதுக்காரர்; இவர் 1955 ஜன 27-ல் பிறந்தவர்; 61 வயதாகிறது; 2005-ல் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது இவர் நியமிக்கப்பட்டார்; ஹார்வடு பல்கலையில் சட்டம் படித்தவர்; 14 வருடங்கள் தனியாக வக்கீல் தொழில் செய்தவர்;
மொத்தமுள்ள ஒன்பது நீதிபதிகளில், ஒருவரான ஜஸ்டிஸ் ஆன்டனின் ஸ்கேலியா 20106 பிப். 13-ல் இறந்து விட்டார்; எனவே ஒரு இடம் காலியாக உள்ளது; புதிய அதிபராக வரும் டொனால்டு டிரம்ப் இனிமேல் புதிய நீதிபதியை பரிந்துரைப்பார்;

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டை முதன்முதலில் 1789-ல் ஏற்படுத்தினர்; அமெரிக்க அரசியல் சாசன சட்டம் 3-ன்படி இது ஏற்படுத்தப்பட்டது; ஆர்ட்டிகிள் 3-ன்படி The Judicial Power of the United States shall be vested in one supreme Court together with any lower courts Congress may establish. இந்த சுப்ரீம் கோர்ட், அப்பீல் வழக்குகளையும், தன்னிடம் வரும் அரசியல் சாசன வழக்குகளையும் விசாரிக்கும் அதிகாரம் கொண்டது; மொத்த அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 13 ஜூடிசியல் மாவட்டங்களாகப் பிரித்து உள்ளனர்; அதாவது மூன்று மாநிலங்கள் சேர்ந்தது ஒரு ஜூடிசியல் மாவட்டம்: அதன்படி, 13 சர்க்யூட் கோர்ட்டுகள் உருவாக்கப் பட்டுள்ளன; அவை அந்தந்த மாநிலங்களின் அப்பீல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது; இது இல்லாமல், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில சுப்ரீம் கோர்ட்டும் உள்ளது; அதன் கீழ், பல மாவட்ட கோர்ட்டுகளும் உள்ளன;

இப்போது உள்ள அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் எட்டு நீதிபதிகள்;
1)    தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ஜான் ராபர்ட்ஸ் (2005 முதல்)
2)    ஜஸ்டிஸ் ஆன்டனி கென்னடி (1988 முதல்)
3)    ஜஸ்டிஸ் கிளாரன்ஸ் தாமஸ் (1991 முதல்)
4)    ஜஸ்டிஸ் ரத் பாடர் கிங்ஸ்பர்க் (பெண்) (1993 முதல்)
5)    ஜஸ்டிஸ் ஸ்டீபன் ப்ரேயர் (1994 முதல்)
6)    ஜஸ்டிஸ் சாமுவேல் அலிட்டோ (2006 முதல்)
7)    ஜஸ்டிஸ் சோனியா சோட்டோமேயர் (பெண்) (2009 முதல்)
8)    ஜஸ்டிஸ் எலனா கெகன் (பெண்-2010 முதல்)
9)    ஜஸ்டிஸ் அன்டனின் ஸ்கேலியா (இறந்து விட்டார்)
**

HUF and its Income Tax


HUF (Hindu Undivided Family)

HUF என்பது ஒரு இந்து கூட்டுக் குடும்பத்தில் தகப்பன், மகன், பேரன், உட்பட உள்ள ஆண்களையும் அவர்களைச் சார்ந்து இருக்கிற பெண்களையும் குறிப்பது; இது இந்து மதத்தில் மட்டும் இருக்கும் ஒரு சிறப்பு ஏற்பாடு; இவர்கள் இந்த HUF ஐ ஒரு தனி நிறுவனமாக கருதிக் கொண்டு, அதில் சொத்துக்கள் வாங்கி வைத்திருக்கலாம், வியாபாரம் செய்யலாம், பணமும் வைத்திருக்கலாம்; இந்த HUFஐ கர்த்தா என்னும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் நிர்வாகம் செய்வார்; அதில் இந்த குடும்பத்து ஆண் உறுப்பினர்கள் இருப்பார்கள்; மனைவிகள், திருமணம் ஆகாத மகள்கள், மைனர் சிறுவர்கள் இவர்களும் அங்கத்தினர்களாக இருப்பார்கள்; இந்த HUF என்பது ஒரு தனி நபர் போல சட்டம் கருதுகிறது; இன்கம்டாக்ஸ் சட்டமும் அவ்வாறே கருதுகிறது;

இன்கம்டாக்ஸ் கட்டுவதற்காக பல பெரிய குடும்பங்கள் இதை உபயோகித்து டாக்ஸ் சலுகையும் பெற்றுக் கொள்கிறது; ஒருவர் தனது தனி சொத்துக்கும் வருமானத்துக்கும் தனியே இன்கம்டாக்ஸ் வரி கட்டுவார்; ஆனால், அவரே கூட்டுக் குடும்ப சொத்து, பணம், வருமானம் என்று கூறி, HUF முறையில் தனியே இன்கம்டாக்ஸ் வரியை கட்டுவார்; தனி நபருக்கு வருடத்திற்கு ரூ.2,50,000/- வரை வரி இல்லை; அதேபோலவே, HUF கூட்டுகுடும்பம் என்பதற்கும் தனியே ரூ.2,50,000/- வரை வரி இல்லை; இந்த சலுகையை உபயோகித்துக் கொண்டு, விபரமான நபர்கள் இப்படி இரண்டு நிலையில் இன்கம்டாக்ஸ் சலுகை பெற்று வருகின்றனராம்; இந்தியாவில் மொத்தம் சுமார் 10 லட்சம் HUF வரி செலுத்துபவர்கள் உள்ளனராம்; வரியைக் குறைத்துக் கொள்வதற்காகவே இந்த முறையை பின்பற்றி வருகின்றனர் என்ற புகாரும் உண்டு;

இன்கம்டாக்ஸ் சட்டம் 1961-ல் பிரிவு 2(31)ல் HUF என்பதும் தனியான நபரே என்ற சட்ட சலுகையும் உண்டு; இந்துக்களுக்கு இந்த சலுகை என்று இருக்கிறது; சட்டத்தில், இந்து என்பவர் யார் என்ற விளக்கத்தில், இந்து என்பவர் சீக்கியர், புத்தமதத்தினர், ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர் என்று விளக்கம் உள்ளது; எனவே இவர்களும் இந்து HUF முறையில் இரண்டு விதமாக இன்கம்டாக்ஸ் வரியை சலுகையில் அனுபவிக்கின்றனர்;

ஆனால், இந்தச் சலுகை, மற்ற மதத்தினரான பார்சிக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இவர்களுக்கு கிடையாது; எனவே இது இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்று ஒரு வாதம் கிளம்பி உள்ளது; எல்லோரையும் ஒரே நிலையிலேயே சட்டம் பார்க்க வேண்டும், அதாவது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சாசனக் கொள்கைக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது;
**



தேசிய கீதமும் அதன் அவமதிப்பும்

தேசிய கீதமும் அதன் அவமதிப்பும்

2016 நவ 30 அன்று இந்திய சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்தது; அதன்படி, தேசிய கீதத்தை எல்லாத் திரை அரங்குகளிலும், சினிமா படத்தை காட்டுவதற்கு முன்னரே இசைக்க வேண்டும் என்றும், அப்போது எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவை பிறப்பித்தது; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான ஜஸ்டிஸ் தீபக் மிஸ்ரா மற்றும் ஜஸ்டிஸ் அமித்வாராய் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது;

பின்னர், கேளராவில் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் என்னும் (IFFK) அமைப்பு பலநாட்டு திரைபடங்களை காண்பித்தது; அதில் எகிப்து நாட்டின் திரைப்படமான கிலாஷ் (Clash) என்ற படம் ஒளிபரப்பானது; அப்போது, இந்தியாவின் தேசியகீதம் ஒலிக்கபட்டது: அதில் கலந்து கொண்டவர்களில் ஆறு பேர் மட்டும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கவில்லையாம்; அவர்களை கைது செய்துள்ளனர்;

பாரதிய ஜனதா பார்ட்டியின் இளைஞர் அணியான பாரதிய யுவ மோர்ச்சா என்ற அமைப்பில் உள்ள இளைஞர்கள் இந்தப் புகாரை டிஜிபி-யிடம் அளித்துள்ளனர்; அவர் உதவி கமிஷனரை நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்; இந்த ஆறுபேரில் போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர் என்றும் சொல்லப்படுகிறது;

இந்த திரைப்பட விழாவை நடத்தும் குழுவினர், இந்த நிகழ்வுக்கு முன்னரே, சுப்ரீம் கோர்ட்டை அணுகி, வெளிநாட்டு திரைபடங்கள் வெளியிடும் விழாவுக்கு இந்திய தேசியகீதம் இசைப்பதில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என கேட்டுள்ளனர்; தினம் தினம் மிக அதிகமாக திரைப்படங்கள் வெளியிட வேண்டி உள்ளதால், ஒவ்வொரு முறையும் தேசியகீதம் இசைக்கும்போது, எழுந்து நிற்பது சிரமமானது என வேண்டுகோள் விடுத்தது; ஆனாலும், சுப்ரீம் கோர்ட் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது; 40 திரைபடங்கள் வெளியிட்டாலும், 40 முறை எழுந்துதான் நிற்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டது;

இந்திய அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 51ஏ-ன் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அரசியல் சாசன சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும்,  கூறிஉள்ளது;

இது இல்லாமல், மற்றொரு சட்டமும் நடைமுறையில் உள்ளது; The Prevention of Insults to National Honour Act, 1971. இதில், தேசியக்கொடி, தேசியகீதம் இவைகளுக்கு கண்ணியக் குறைவை ஏற்படுத்தினால் அவை தண்டனைக்கு உரிய குற்றம் எனச் சொல்கிறது; அந்தச் சட்டத்தில் பிரிவு 3-ல், “தேசிய கீதம் இசைப்பதை வேண்டுமென்றே தடுத்து குழப்பத்தை உண்டாக்கினால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அல்லது அபராதமும், அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது; இதில் பிரிவு 2-ல் என்னென்ன வகைகளில் இந்த அவமதிப்பு என்பதாக கருதப்பட வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது; ஆனால் அதில் எங்கும், தேசியகீதம் இசைக்கும் போது கண்டிப்பாக எழுந்து நிற்க வேண்டும் என்று தனிப்பட்டு கூறப்படவில்லை என்று சட்ட வல்லுனர்கள் சொல்கிறார்கள்;

மேலும், இந்திய தண்டனைச் சட்டம் என்னும் The Indian Penal Code, 1860 என்ற பொதுவான சட்டமும் உள்ளது; அதில், தேசியகீதத்தை அவமதிக்கும் செயலுக்கு தண்டனையாக தனியே எந்தப் பிரிவும் சொல்லப்பட வில்லையாம்;

கேரளாவில் திரைபடவிழாவில், தேசியகீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காத அந்த ஆறு பேர்களையும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ல் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்; அந்தப் பிரிவு என்னவென்றால், “ஒரு அரசு அதிகாரி (Public Servant) உத்தரவை மதிக்காமல் நடந்து கொண்டால் கொடுக்கும் தண்டனை சார்ந்தது”; பப்ளிக் அதிகாரி என்ற விளக்கத்தில் நீதிபதியும் அடங்கும்; ஆதனால் ஐபிசி பிரிவு 188-ன்படி, ஒரு பப்ளிக் அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருப்பது என்பதும் அடக்கம்;

ஆனாலும், சட்ட வல்லுனர்கள் கருத்து வேறாக உள்ளது; அது “பப்ளிக் அதிகாரியின் உத்தரவை மதிக்காதது என்பது மட்டுமே தண்டனைக்கு உரிய குற்றம் என கருதிவிட முடியாது என்றும், அதனால் குழப்பம் உண்டாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இருக்க வேண்டும் என்றும், அந்த கெட்ட எண்ணத்துடன் அந்த உத்தரவை தடுத்து இருக்க வேண்டும் என்றும் இருந்தால்தான் அது தண்டனைக்கு உரியதாகும் என்று சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்;

இந்திய அரசியல் சாசனச் சட்டத்தில், பிரிவு 19 உள்ளது; அதில் தனிமனித உரிமைகள் என்னும் பேச்சுரிமை, போன்றவை பற்றிச் சொல்லப் பட்டுள்ளது; ஆனாலும் அதற்கு ஒரு வரையறையும் உண்டு; பேச்சுரிமை என்பது இஷ்டத்துக்குப் பேசுவது என்பதாக கருதக் கூடாது; சட்டக் கட்டுப்பாட்டுக்குள் பேச உரிமை உண்டு என்றே கருத வேண்டும்;

எனவே இந்த கேரளா வழக்கு எப்படி இருக்கும் என்று இனிமேல்தான் தெரியவரும்;
**