Thursday, December 29, 2016

HUF and its Income Tax


HUF (Hindu Undivided Family)

HUF என்பது ஒரு இந்து கூட்டுக் குடும்பத்தில் தகப்பன், மகன், பேரன், உட்பட உள்ள ஆண்களையும் அவர்களைச் சார்ந்து இருக்கிற பெண்களையும் குறிப்பது; இது இந்து மதத்தில் மட்டும் இருக்கும் ஒரு சிறப்பு ஏற்பாடு; இவர்கள் இந்த HUF ஐ ஒரு தனி நிறுவனமாக கருதிக் கொண்டு, அதில் சொத்துக்கள் வாங்கி வைத்திருக்கலாம், வியாபாரம் செய்யலாம், பணமும் வைத்திருக்கலாம்; இந்த HUFஐ கர்த்தா என்னும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் நிர்வாகம் செய்வார்; அதில் இந்த குடும்பத்து ஆண் உறுப்பினர்கள் இருப்பார்கள்; மனைவிகள், திருமணம் ஆகாத மகள்கள், மைனர் சிறுவர்கள் இவர்களும் அங்கத்தினர்களாக இருப்பார்கள்; இந்த HUF என்பது ஒரு தனி நபர் போல சட்டம் கருதுகிறது; இன்கம்டாக்ஸ் சட்டமும் அவ்வாறே கருதுகிறது;

இன்கம்டாக்ஸ் கட்டுவதற்காக பல பெரிய குடும்பங்கள் இதை உபயோகித்து டாக்ஸ் சலுகையும் பெற்றுக் கொள்கிறது; ஒருவர் தனது தனி சொத்துக்கும் வருமானத்துக்கும் தனியே இன்கம்டாக்ஸ் வரி கட்டுவார்; ஆனால், அவரே கூட்டுக் குடும்ப சொத்து, பணம், வருமானம் என்று கூறி, HUF முறையில் தனியே இன்கம்டாக்ஸ் வரியை கட்டுவார்; தனி நபருக்கு வருடத்திற்கு ரூ.2,50,000/- வரை வரி இல்லை; அதேபோலவே, HUF கூட்டுகுடும்பம் என்பதற்கும் தனியே ரூ.2,50,000/- வரை வரி இல்லை; இந்த சலுகையை உபயோகித்துக் கொண்டு, விபரமான நபர்கள் இப்படி இரண்டு நிலையில் இன்கம்டாக்ஸ் சலுகை பெற்று வருகின்றனராம்; இந்தியாவில் மொத்தம் சுமார் 10 லட்சம் HUF வரி செலுத்துபவர்கள் உள்ளனராம்; வரியைக் குறைத்துக் கொள்வதற்காகவே இந்த முறையை பின்பற்றி வருகின்றனர் என்ற புகாரும் உண்டு;

இன்கம்டாக்ஸ் சட்டம் 1961-ல் பிரிவு 2(31)ல் HUF என்பதும் தனியான நபரே என்ற சட்ட சலுகையும் உண்டு; இந்துக்களுக்கு இந்த சலுகை என்று இருக்கிறது; சட்டத்தில், இந்து என்பவர் யார் என்ற விளக்கத்தில், இந்து என்பவர் சீக்கியர், புத்தமதத்தினர், ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர் என்று விளக்கம் உள்ளது; எனவே இவர்களும் இந்து HUF முறையில் இரண்டு விதமாக இன்கம்டாக்ஸ் வரியை சலுகையில் அனுபவிக்கின்றனர்;

ஆனால், இந்தச் சலுகை, மற்ற மதத்தினரான பார்சிக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இவர்களுக்கு கிடையாது; எனவே இது இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்று ஒரு வாதம் கிளம்பி உள்ளது; எல்லோரையும் ஒரே நிலையிலேயே சட்டம் பார்க்க வேண்டும், அதாவது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சாசனக் கொள்கைக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது;
**



No comments:

Post a Comment