Monday, May 1, 2017

சாத்தப்பையர் மடம் வழக்கு

மதராஸ் ஐகோர்ட்டின் நீதிபதி ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரின் தீர்ப்பு
Citation: Sathappayar v. Periasami (1891) ILR 14 Mad 1
இந்த வழக்கு 1890-ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. மதராஸ் மாகாணத்தில், மதுரை ஜில்லாவில் உள்ள சிவகங்கை என்ற ஊரில் சாத்தப்பையர் மடம்என்ற ஒரு மடத்தை ஒரு பரதேசி நடத்தி வந்தார். அது ஒரு, சமயம் சார்ந்த மடம் ஆகும். அப்போது சிவகங்கையை பெரியசாமி என்ற ஜமின்தார் ஆண்டு வந்தார். 1883-ல் அந்த ஜமின்தாரின் தகப்பனாரான பெரிய ஜமின்தார் இறந்து விட்டதால், அவரின் மகன் சின்ன ஜமின்தாரான பெரியசாமி நிர்வாகம் செய்து வந்தார்.

அந்த மடத்தை, அந்தப் பரதேசியான சாத்தப்பையர் நடத்தக் கூடாது என்றும், அவர் அதை ஜமின்தாரின் நிர்வாகத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லது ஒரு சரியான சாமியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று வழக்கு போடுகிறார்.

ஜமின்தார் சொல்லும் காரணங்கள் என்னவென்றால், இந்த பரதேசிக்கு கல்யாணம் ஆகி விட்டது. ஒன்று அல்ல இரண்டு திருமணங்கள். எனவே சாத்தப்பையர் மடத்தை நிர்வாகம் செய்யத் தகுதி இல்லை என்கிறார். குடும்ப வாழ்க்கை இல்லாத சாமியார்கள் மட்டுமே மடத்தை நிர்வாகம் செய்ய தகுதி உடையவர்கள் என்கிறார். இந்த மடத்தை தற்போது நிர்வாகம் செய்யும் பரதேசிக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாலும், அவர் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வதாலும் அவருக்கு இந்த மடத்தை நிர்வாகம் செய்யும் தகுதி இல்லை என்று வழக்குப் போடுகிறார்.

இந்த மடமானது 1734-ல் உருவாக்கப்படுகிறது. அப்போது ஒரு சாரிட்டி பத்திரம் மூலம் சிவகங்கையின் முதலாம் ஜமின்தார் உருவாக்கி வைத்தார். ஜமின்தாரின் குருவின் நினைவாக இது உருவாக்கப்பட்டதாம். அந்த குருவின் பெயர் தான் சாத்தப்பையர். எனவே இது குரு-சிஷ்ய பாரம்பரியம் கொண்ட மடம். இந்த மடம் காலம் காலமாக, சூரியன் சந்திரன் இருக்கும் காலம் வரை இயங்கிவர வேண்டும் என்று செப்பு பட்டயத்தில் எழுதப்பட்டுள்ளதாம். இந்த மடத்தின் செலவுக்காக, ஜமின்தாரின் மருதவாயல் ஊரில் உள்ள தனக்குச் சொந்தமான அதிகமான நிலங்களை எழுதிக் கொடுத்துள்ளார். இந்த மடத்தில், ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், அதில் பரம்பரை பரம்பரையாக மடத்தின் தலைவர் இருந்து வர வேண்டும் என்றும், அந்த மடத்தின் தலைவருக்கு பரதேசிஎன்ற பட்டம் கொடுக்க வேண்டும் என்றும் உள்ளதாம். அந்த கட்டிடத்தில், “சிவயோக நிஷ்டைநடத்தப்பட வேண்டும் என்றும், குருவின் நினைவாக வருடாவருடம் குருபூஜையும் தெகபூஜையும் நடத்தி வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாம்.

சிவயோக நிஷ்டை என்பது கடவுள் சிவன் ஐந்தெழுத்து மந்திரமும், எட்டு எழுத்து மந்திரமும் ஆகும். இந்த மந்திரத்தை காலையில் ஒரு வேளையும், மலையில் ஒரு வேளையும் கடைப்பிடித்து வர வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தை பஞ்சாச்சரம் என்பர். எட்டெழுத்து மந்திரத்தை அஷ்டாச்சரம்என்பர். இதை சொல்லும்போது இறைவனை நினைத்து தியானம் செய்வதால், அவனை நெருங்க முடியும் என்பது ஐதீகம்.

குருபூஜை என்பது குருவுக்காக அவரின் நினைவு நாளில் பூஜை செய்வது. இங்கு சிவகங்கை பழைய ஜமின்தாரின் ஆன்மீக குருவாக இருந்த சாத்தப்பையர் நினைவாக அவரின் திதி நாளன்று பூஜைகள் செய்து அவரின் அருளைப் பெறுவது.

தெகபூஜை என்பது அறவழியில் வாழ்பவரையும் மதவழியில் வாழ்பவரையும் ஆதரிப்பது.
மேலும், இந்த மடத்தின் மற்றொரு கைங்கரியமாக, கோடைகாலத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்குவது.

இந்த மடம் ஆரம்பித்த காலத்திலிருந்து ஆறு மடாதிபதிகள் (இங்கு இவர்களை பரதேசிகள் என்பர்) இருந்துள்ளனர். முதல் மூன்று பரதேசிகள் திருமணம் செய்யாமல், சன்னியாச வாழ்க்கை மேற்கொண்டவர்கள். நான்காவது பரதேசிக்கு திருமணம் ஆனது. அவர் இறக்கும்போது அவரின் விதவை மனைவி இருந்துள்ளார். இப்போது உள்ள ஆறாவது பரதேசிக்கு இரண்டு மனைவிகள்.

இந்த மடத்தின் பழக்க வழக்கப்படி, ஒரு பரதேசி, தன் வாழ்நாளில் தன் சிஷ்யனை அடுத்த பரதேசியாக தயார் செய்து தன் வாரிசாக நியமிக்க வேண்டுமாம்.  ஆனால், மூன்றாவது பரதேசி அவ்வாறு தனக்கு அடுத்து யார் இந்த மடத்துக்கு பரதேசியாக வரவேண்டும் என்று நியமிக்கவில்லையாம். எனவே சிவகங்கை பழைய ஜமின்தாரே ஒருவரை அடுத்த பரதேசியாக நியமித்துள்ளார்.

பழைய ஜமின்தாரின் மகன் இப்போதுள்ள ஜமின்தார், இந்த வழக்கை இப்போதுள்ள பரதேசி மீது தொடுத்துள்ளார். இந்த பரதேசிக்கு இரண்டு மனைவிகள். எனவே இவர் இந்த மடத்துக்கு பரதேசியாக இருக்க முடியாது என்றும், இந்த பரதேசி இந்த மடத்தை ஒழுங்காக நிர்வாகம் செய்யவில்லை என்றும், வந்த வருமானத்தைக் கொண்டு தன்னுடைய வசதிக்கு வீடு கட்டிக் கொண்டு இரண்டு மனைவிகளுடன் குடும்ப வாழ்க்கை வாழ்கிறார் என்றும், மடத்தில் பஞ்சாடசரம், அஷ்டாச்சரம் மந்திரங்களை அனுஷ்டிக்காமல், அதற்குறிய முற்றம் என்னும் கட்டிடத்தை கட்டாமல் இருக்கிறார் என்றும், மடத்தின் எந்த காரியங்களையும் சரியாக செய்வதில்லை என்றும், எனவே இவரை நீக்கிவிட்டு, வேறு ஒருவரை பரதேசியாக நியமிக்க வேண்டும் என்றும் வழக்குப் போடுகிறார்.

இந்த வழக்கின் ஐகோர்ட் தீர்ப்பு:
மடத்தின் தலைவராக இருப்பவரான பரதேசிஒரு சன்னியாசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; மதராஸ் மாகாணத்தில் உள்ள பல மடங்களில் இவ்வாறான நிலை உள்ளது. மேலும் இந்த மடத்தின் முன்னாள் மடத்தலைவரும் திருமணம் செய்துள்ளார். எனவே இப்போதுள்ள பரதேசிக்கு இரண்டு மனைவிகள் இருந்தபோதும், அதற்காக அவரை மடத்தின் தலைவர் பதவியான பரதேசி பதவியில் இருந்து நீக்கிவிட முடியாது.

ஆனாலும், மடத்தின் வருமானங்களைக் கொண்டு இவர் தனக்குச் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டுள்ளார். ஜமின்தார் கூறுவதுபோல இவர் மடத்தின் காரியங்களை ஒழுங்காகச் செய்யவில்லை என்றே தெரிகிறது.

எனவே அவரை பரதேசி பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடுகிறோம். வேறு ஒரு பரதேசியை நியமித்துக் கொள்ள ஜமின்தார் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது.
(இந்த தீர்ப்பானது 1890-ல் மதராஸ் ஐகோர்ட்டில் நீதிபதிகளான ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரும், ஜஸ்டிஸ் பெஸ்ட் ஆகிய இருவரின் பெஞ்ச் வழங்கியது.
**


No comments:

Post a Comment