Panchangam
Venkatacharyulu case
பஞ்சாங்கம்
வெங்டாச்சார்யுலு வழக்கு
Panchangam
Venkatacharyulu vs Gudimella Tirumala
Citation:
(1896) 6 MLJ 91
1884-ம் வருடம்; வெங்கடரங்கம்மா
என்ற சிறுமிக்கு அப்போது 9 வயது. இந்த சிறுமியின் தாயார், இவளை 1884-ல் பஞ்சாங்கம்
வெங்கடாச்சார்யுலுவுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். திருமணம் மங்களகிரியில்
உள்ள நரசிம்மசுவாமி கோயிலில் நடக்கிறது. அந்தத் திருமணத்தின்போது, அந்தச்
சிறுமியின் தகப்பனார் அங்கு இல்லை. இந்தத் திருமணத்துக்கு, தகப்பனின் அனுமதியை
அவளின் தாயாருக்கு கொடுத்திருந்தாரா என்று தெரியாது. (கணவர் அனுமதியுடன்தான்,
மனைவி, அவளின் மகளுக்கு திருமணம் செய்ய முடியும் என்பது அப்போதைய வழக்கம்).
இந்தச் சிறுமியின்
தகப்பனார் ஸ்ரீரங்கபுரத்தில் வசிக்கிறார். அவர் தனது சிஷ்யனைப் பார்ப்பதற்காக
வெளியூர் சென்றுள்ளார். அப்போது, அவரின் மனைவி (சிறுமியின் தாயார்) அந்தச்
சிறுமியை அழைத்துக் கொண்டு மங்களகிரிக்கு வருகிறார். அங்கு தானே, தன் மகளுக்குத் திருமணத்தை நடத்தி
விடுகிறார். ஏனென்றால், அந்த சிறுமிக்கு, வேறு ஒரு கணவரை, அந்தச் சிறுமியின் தகப்பனின்
தாயார் ஏற்பாடு செய்திருந்தாராம். (மாமியர் பார்த்த பையனுக்கு தன் மகளைக் கொடுக்க
தாய்க்கு விருப்பமில்லை).
எனவே பிரச்சனை
ஏற்படுகிறது. இந்தத் திருமணம் தகப்பனின் சம்மதமில்லாமல் நடந்திருக்கிறது எனவும்,
தகப்பனுக்குத் தெரியாமல் ஏமாற்றி நடத்திய திருமணம் எனவும், எனவே இந்தத் திருமணம்
செல்லாது எனவும் வழக்கு;
இந்து முறைப்படி
நடக்கும் திருமணம் எல்லாமே மதச் சடங்குகளின்படி நடக்கும் திருமணமே; இந்துமதக்
கோட்பாடுகளின் படி இது “சம்ஸ்காரம்” என்னும் மதநிகழ்வே; இந்த மதசடங்கின்படி,
மணப்பெண்ணின் ஆத்மா சுத்திகரிக்கப் படுகிறது என்கிறார்கள் முன்னோர்கள். இந்த
நிகழ்வின் போது, ஓமகுண்டம் வளர்த்து எல்லாக் கடவுள்களையும் அழைத்து அவர்களின்
முன்னிலையில் அந்த ஓமகுண்டத்தை ஏழு-அடி வலம் வர வேண்டும் என்பது இந்து திருமண
சடங்கின் நியதி. இந்த ஏழு-அடி எடுத்து நடப்பதை “சப்தபதி” என்பர். சப்த என்றால் ஏழு
என்ற எண்ணிக்கை. இப்படி ஏழு அடி எடுத்து வைத்து கணவனைக் கைப்பிடித்தால் அதுவே அவள்
கணவருடன் சேர்ந்து வாழ ஏற்படுத்திக் கொண்ட சம்ஸ்காரம்; அதை அவள் இனி எப்போதும்
பிரிக்க முடியாது.
இங்கு இந்த
வழக்கில் நடந்த திருமணமானது செல்லுபடியாகும் திருமணமே. ஏனென்றால், பெண்ணின்
தகப்பனோ, அல்லது அவனின் சம்மதத்துடன், அவன் சார்ந்த கார்டியனோ, உடனிருந்து இந்த
திருமணத்தை செய்திருந்தால், அந்த திருமணம் இந்து மத வழக்கப்படி செல்லுபடியாகும்
திருமணமே.
ஆனால், இங்கு வேறு
ஒரு பிரச்சனை வருகிறது. இந்து மத வழக்கப்படி இந்த திருமணம் நடந்ததா என்றே கேள்வி
இந்த கோர்ட்டில் பேசப்படுகிறது.
மனு தர்ம
சாஸ்திரப்படி: “ஏழு அடி எடுத்து வைத்தாலே திருமணம் நடந்ததாகவே பொருள்” என்று மனு
சொல்கிறார்.
வசிஷ்டர் தர்ம
சாஸ்திரப்படி: “மணமகனுக்கும் மணமகளுக்கும் சம்மதம் பெற்று, அவளின் கையை அவன்
பிடித்துக் கொண்டு நடந்தாலே திருமணம் கைகூடியதாக பொருள்” என்கிறார்.
யமா தர்ம
சாஸ்திரப்படி: “ மந்திர நீர் தெளிப்பதாலோ, பரிசுப் பணம் அளிப்பதாலோ கணவன் மனைவி
உறவை ஏற்படுத்தி விட முடியாது; மாறாக, மணமகன், மணமகளின் கையைப் பிடித்துக் கொண்டு
ஏழு அடிகள் எடுத்து வைத்து முடித்தால் மட்டுமே திருமணம் என்பது நிறைவுபெறும்”
என்கிறார்.
ப்ரம்ம விவாகம்
என்பது, பெண்ணின் தகப்பன், ஒரு பரிசுப் பொருளை மணமகனிடமிருந்து பெற்றுக் கொண்டு,
அதற்காக, தன் மகளை விவாகம் செய்து கொடுப்பது.
சப்தபதி
திருமணத்தில் – மூன்று கட்டங்கள் உள்ளன; (1) வக்த-னாம்; இது நான் என் மகளைத்
திருமணம் செய்து கொடுப்பதாக வாக்கு அளிக்கிறேன் என்பது; (2) மணமகளை, அவளின்
தகப்பன் பரிசாக மணமகனுக்குக் கொடுப்பது; இதைத்தான் “கன்னிகாதானம்” என்பர். (3) மூன்றாவதாக,
மணமகன், மணமகளின் கையைப் பிடித்துக் கொண்டு ஏழு அடி எடுத்து நடப்பது. கையைப்
பிடித்துக் கொண்டு நடப்பதை “பனிக்கிரகனம்” என்பர்; அந்த ஏழாவது அடி முடிவில்
திருமணம் முடியும். ஏழு அடிகள் எடுத்து வைப்பதை “சப்தபதி” என்பர்.
இந்த வழக்கில்,
பெண் பெற்றவரோ அல்லது அந்தச் சிறுமியின் பாதுகாவலரோ, இந்து தர்மப்படி திருமணம்
செய்து கொடுத்திருந்தால், அந்த திருமணத்தை ரத்து செய்யமுடியாது. ஆனால், ஒரு பெண்ணை
கடத்தி வந்து, மோசடியாக திருமணம் செய்து வைத்திருந்தால், அந்தத் திருமணம் “கன்னியா
தானத் திருமணமாக” கருத முடியாது.
பெங்காலிப்
பகுதியில் நடந்த மற்றொரு வழக்கில் – அந்தச் சிறுமி, அவளின் மூத்த சகோதரி
வீட்டுக்குப் போயிருந்தபோது, மூத்த சகோதரியின் கணவன், அந்தச் சிறுமியைக் கடத்திச்
சென்று திருமணம் செய்து கொள்கிறான். இதில், அந்தச் சிறுமியின் தாயின் சம்மதம்
இல்லை; கன்னியா தானம் இல்லை. இது ஒரு குற்ற நடவடிக்கை. எனவே குற்ற நடவடிக்கையை
அனுமதியாக ஏற்க முடியாது – என்று தீர்ப்பு உள்ளது.
ஆனால், இந்த வழக்கில்,
இந்தச் சிறுமியின் தாயாரே, அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து
வைத்திருக்கிறாள். இது ஏற்கக் கூடிய திருமணமே!
மற்றொரு வழக்கில்,
சிறுமியின் தாய், சிறுமியின் தகப்பனின் சம்மதம் இல்லாமல், இந்து முறைப்படி
திருமணத்தை நடத்தி வைக்கிறாள். அந்த திருமணத்தை ரத்து செய்ய முடியாது என்றே
தீர்ப்பு வழங்கி உள்ளது.
மற்றொரு வழக்கான 1885-ல்
நடந்த கல்கத்தா வழக்கில் – சிறுமியின் சித்தப்பா பாதுகாவலராக இருந்து அவளின்
திருமணத்தை நடத்தி வைக்கிறார். அதில், சிறுமியின் தாயாரின் சம்மதம் இருக்கிறது.
இதுவும் சரியான திருமணமே – என்ற தீர்ப்பு உள்ளது.
மற்றொரு வழக்கான 1886-ல்
நடந்த பாம்பே ஐகோர்ட் வழக்கில் – தகப்பனின் சம்மதம் இல்லாமல், தாயார் நடத்தி வைத்த
திருமணம். இந்த திருமணம் செல்லாது என தகப்பன் வழக்குப் போடுகிறான். ஆனால்,
தகப்பன், அவன் மனைவியுடன் சேர்ந்து வாழாமல் பிரிந்து வாழ்கிறான். எனவே
தகப்பனுக்கு, பழிவாங்கும் எண்ணமே தவிர, மகளின் வாழ்வைப் பற்றிய அக்கறை இல்லை –
எனத் தீர்ப்பு.
மற்றொரு வழக்கான
1889-ல் நடந்த மதராஸ் ஐகோர்ட் வழக்கில் – இதே சூழ்நிலையில், ஒரு திருமணம் நடந்து
முடிந்து விட்டால், அதை ரத்து செய்ய முடியாது எனத் தீர்ப்பு உள்ளது. இதில் சிறுமியின்
தாயார் ரூ.400 பரிசுப் பணமாகப் பெற்றுக் கொண்டு கன்னியா தானம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் சிறுமியின் தகப்பனோ, ரூ.600 பரிசுப் பணம் வேண்டும் என்று பிரச்சனை
செய்திருக்கிறான். அதனால் அவனின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடந்தது என்றும் அதை
ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்குப் போட்டிருக்கிறான். ஆனாலும், தாயாரின் செயல்
நியாயமானதே என்றும் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் எனவே திருமணம் செல்லும்
என்றும் தீர்ப்பு கூறியது.
ஸ்மிருதியை
வியாக்கியனம் செய்த பல பண்டிதர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் – “ஒரு சிறுமி, அவள்
வயசுக்கு வருவதற்கு முன்பே, அவளின் தகப்பன், அவளை திருமணம் செய்து கொடுக்க
வேண்டும் என்பது “கடமை” என்றும், அது “அவனுக்கு உரிய உரிமை இல்லை” என்றும் விளக்கி
உள்ளனர். அவ்வாறு செய்யாமல் விட்டு, அவள் வயசுக்கு வந்துவிட்டால் என்றால் அது அவன்
செய்த பாவம் என்றும் கூறிகிறார்கள். மேலும், நாராதா மற்றும் யக்ஞவால்கியர் ஆகிய
முனிவர்கள், இப்படிப்பட்ட செயல்கள் அந்தச் சிறுமியை கொலை செய்வதற்குச் சமம்
என்கிறார்கள்.
நாரத முனிவரின்
கூற்றுப்படி – “ஒரு பாகப்பிரிவினை நடந்து விட்டாலும், ஒரு பெண்ணைத் திருமணம்
செய்து கொடுத்து விட்டாலும், அவைகளை திரும்பப் பெற முடியாது” என்கிறார்.
ஸ்மிருதி
சந்திரிகா என்ற நூலில் – “இரண்டாவது சம்ஸ்கார அல்லது இரண்டாவது திருமணம் என்பது
தடை செய்யப் பட்டதே” என்கிறது.
கலியுக
கிருஷ்ணசாமி ஐயரின் புத்தகத்தில் – “மந்திரம் சொல்லி செய்யப்பட்டவைகளை
நிரந்தரமானவை” என்கிறார், ஒரு சிறுவன் பூணுநூல் போட்டு வேதமந்திரம் சொல்லி, அவனின்
தகப்பனாரின் கோத்திரத்தை ஏற்றுக் கொண்டவன் என்றால், அவன் வேறு கோத்திரத்தில் தத்து
புத்திரன் எடுக்க முடியாது என்கிறார்.
தத்தக மீமாச்ச
ஆசிரியர் சொல்கிறார் – ஒரு சிறுவனை மொட்டை போட்டு சடங்கு செய்து தத்துக் கொடுத்து
விட்டால், அவனின் பெற்ற தகப்பனுக்கு எல்லா உரிமையும் போய் விடுகிறது – என்கிறார்.
ஒரு திருமணத்தில்,
பெற்றோர் இருவரும் (அவர்கள் இல்லாவிட்டால் அவர்களின் தாயாதிகள் என்னும்
பங்காளிகள்) நீர் வார்த்து அந்தப் பெண்ணை திருமணம் செய்யும் ஆணுக்கு தாரை
வார்த்துக் கொடுப்பர். இதில் தாய்க்கும் சம பங்கு உண்டு. ஆனாலும் அந்த உரிமை,
தகப்பன் வழி ஆட்களுக்குப் பின்னர் வரும்.
தீர்ப்பு: -- எனவே
இந்த வழக்கில் தாயின் செயல், அந்தச் சிறுமியின் நல்லெண்ணத்தின் பால் பட்டதே. எனவே
இந்தத் திருமணம் செல்லும் என்று தீர்ப்பு.
**
No comments:
Post a Comment