ஜமின் சொத்துக்களில் ரயத்துவாரி
பட்டா முறை:
சென்னை ஐகோர்ட்,
வெள்ளையன் செட்டி v. திருவக்கோன் மற்றும்
பலர்.
(1882) ILR 5 Mad 76 – Full Bench
Decision
1882 காலக்கட்டத்தில், தெற்கு
தஞ்சை பகுதியில் கலைக்கோட்டை ஜமீன் இருந்தது. கலைக்கோட்டை ஜமின்தார் தனக்குச் சொந்தமான
சொத்துக்களில் ஏழு ஊர்களை அடமானம் வைத்து வெள்ளையன் செட்டியிடம் ரூ.50,000 கடன் வாங்கி
இருந்தார். அதற்கு வட்டியாக 10 ½ % கொடுக்க ஒப்புக் கொண்டார். இந்த ஏழு ஊர்களின் நிலங்களுக்கும் அரசுக்கு வரியாக
ரூ.6,000 வருடத்துக்கு கொடுக்க வேண்டும். அந்த அடமானப் பத்திரத்தில், சொத்தை அடமானம்
கொடுத்தது மட்டும் இல்லாமல், அதை விவசாயம் செய்பவர்களிடம் பயிர் வரும்படியையும் அனுபவித்துக்
கொள்ளவும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அப்போதைய சட்டமான ரெகுலேஷன் சட்டம்
VIII 1865 சட்டப்படி, இப்படியான அடமானக் கடன்களில்,
சொத்தின் உரிமையாளரான ஜமின்தார், அந்த சொத்தின் பட்டாவை, பணம் கொடுத்தவருக்கு மாற்றிக்
கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர், அந்த நிலத்தில் பயிர் செய்பவர்களிடம் பயிர் வரும்படிகளை
வசூலிக்க முடியும், அதைக் கொண்டு அரசுக்கு வரி செலுத்த முடியும். (இப்போது உள்ள பட்டா முறையுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அதுவேறு, இது வேறு).
ஜமின்தாருக்கு அடமானக்கடன் கொடுத்தவர்,
அப்படிப்பட்ட பட்டா இல்லாமல் பயிர் வரும்படியை வசூல் செய்யப் போகிறார். அதை விவசாயிகள்
எதிர்க்கிறார்கள். எனவே அடமானக் கடன் கொடுத்தவர் கோர்ட்டுக்குப் போகிறார். கீழ் கோர்ட்
இவருக்கு சாதகமாக தீர்ப்பு கொடுக்கிறது. அதை எதிர்த்து பயிர் செய்பவர்கள் அப்பீல் போகிறார்கள்.
அப்பீல் வழக்கு அடமானக் கடன் கொடுத்தவருக்கு எதிராக தீர்ப்பாகிறது. அதை எதிர்த்து அவர்
ஐகோர்ட்டுக்கு போனார். அது மேற்படி வழக்கை திருப்பி அனுப்பி சில சட்ட விஷயங்களையும்,
சாட்சியங்களையும் மறு விசாரனை செய்ய உத்தரவு இடுகிறது.
**
மதராஸ் பிரசிடென்சியில் முதன்
முதலாக இப்படியான பட்டா கொடுக்கும் சட்டமான Regulation
XXX of 1802 ரெகுலேசன் சட்டம் 1802 அமலுக்கு வருகிறது. இதன்படி நிலங்களை
நிரந்தர அசெஸ்மெண்ட் செய்யப்பட்டு அதற்குறிய பட்டா பெற வேண்டும். அப்போதுதான் அதன்
மூலம் அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமானத் தொகை எவ்வளவு என்று தெரியவரும்.
(இப்போது அந்த முறை இல்லை; நிலங்களுக்கு
வரி Tax மட்டுமே
விதிக்கப்படுகிறது; ஆனால் அப்போது, அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு (சுமார் ஆறில்
ஒரு பங்கு) வருமானத் தொகை (இதை Rent என்பர்) அரசுக்கு கொடுக்க
வேண்டும். Rent என்பது வரி (Tax) அல்ல,
அது வருமானத்தில் பங்கு. வருமானத்தில் பங்கு என்பது Rent Assessment. இது ஒரு பெரிய தொகை. இப்போது Rent-ஐ நீக்கி விட்டு வரி
Tax மட்டும் போடுகிறார்கள். எனவே அதை Quit-Rent என்கிறார்கள். அதை Tax Assessment என்பர்).
இந்த ரெகுலேசன் சட்டத்தை எதற்கு
கொண்டு வந்தார்கள் என்றால்: அப்போது இருந்த நில உரிமையாளர்கள், நிலங்களை, அதில் பயிர்
செய்யும் விவசாயிகளுக்கு “வருமானத்தில் பங்கு” என்ற அடிப்படையில் கொடுப்பர். விவசாயிகளை
கஷ்டப்படுத்தி அதிக பங்கு வாங்கிக் கொள்வர். ஆனால் அரசாங்கத்துக்கு குறைந்த மகசூல்
வருவாயை மட்டும் கொடுப்பார்கள். இதை தடுக்கும் பொருட்டே இந்த ரெகுலேஷன் சட்டம் வந்தது.
அதன்படி, பயிர் செய்யும் விவசாயிக்கு ஒரு பட்டா கொடுக்க வேண்டும் என்றும், அதில் வருமானப்
பங்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நிர்ணயித்து இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதை மீறி, பட்டா கொடுக்காமல், ஒரு நிலத்தை விவசாயிக்கு கொடுத்தால், அந்த விவசாயிடம்
இருந்து மகசூல் வருமானத்தை பெற நில உரிமையாளருக்கு அதிகாரம் இல்லை. ஜில்லா கோர்ட்டுக்கும்
போக முடியாது. அதாவது ஒரு நிலத்தை, அதன் உரிமையாளர், விவசாயிக்கு பட்டா கொடுக்காமல்,
பயிர் செய்ய விட முடியாது.
எனவேதான், 1802-ல் முதன் முதலாக
ஜமின்தார்கள், நிலபிரபுக்கள் இவர்களின் நிலங்களை விவசாயத்துக்கு கொடுக்க வேண்டும் என்றால்,
முதலில் பயிர் செய்பவருக்கு பட்டா கொடுத்து, அதில் எவ்வளவு மகசூல் வருவாய் பங்கு கொடுக்க
வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்ற சட்டக் கட்டாயத்தை அரசு கொண்டு
வருகிறது. விவசாயிகளை அந்தச் சட்டம் ரையத் என்று குறிப்பிடுகிறது. ரையத் என்றால் பயிர்
செய்பவர் அல்லது விவசாயி.
இந்த ரெகுலேசன் சட்டமானது, 1802
வருடத்தில் இருந்து சிறு சிறு மாறுதல்களுடன் புதிய ரெகுலேசன் சட்டங்களாக வருகிறது.
நில பிரபுக்களுக்கும், விவசாயி ஆன ரையத்-க்கும் இதில் பிரச்சனை ஏற்பட்டால், கலெக்டரிடம்
முறையிட்டு தீர்த்துக் கொள்ள வேண்டி ரெகுலேசன் சட்டம் XXV of 1802 வந்தது. பின்னர்,
ரெகுலேசன் சட்டம் XXVII of1802 வந்தது.
பல சொத்துக்கள், இப்படியாக, ஜமின்தார்கள்,
நில பிரபுக்கள் உரிமையாளர்களாக இருந்தார்கள். சில சொத்துக்கள், அப்படி அவர்களின் கைப்பிடியில்
இல்லாமல் அரசிடம் இருக்கிறது. அதை நேரடியாக விவசாயியே (ரையத்) பட்டா பெற்று விவசாயம்
செய்து வருமானப் பங்கை அரசுக்கு கொடுப்பார். இப்படி அரசாங்கத்தின் சொத்தை நேரடியாகவே,
ஒரு விவசாயிக்குப் பட்டா கொடுத்தால், அதை “அயன் பட்டா” என்றும் அந்த நிலத்தை அயன் நஞ்சை/
அயன் புஞ்சை என்றும் சொல்வர். அயன் என்ற வார்த்தைக்கு, அரசு-விவசாயி என நேரடியாக உள்ள
உறவு என்று பொருள். இடையில் ஜமின்தார் அல்லது நிலபிரபு என்ற ஏஜெண்ட் இங்கு இல்லை. அரசாங்கமும்-விவசாயியும்,
மகசூல் பங்கு செலுத்துவதிலும், அதை வாங்குவதிலும் நேரடி உறவில் இருக்கிறார்கள். தமிழில்
அயன் என்ற சொல்லுக்கு “பிரம்மன்” என்ற பொருள் உண்டு. பிரம்மா என்றால் மனிதர்கள் மூலம்
பிறக்காதவன்; அல்லது முதன்முதலில் தோன்றியவன் (பிறந்தவன்) என்ற பொருள். அதுபோலவே, அரசின்
நிலத்தை நேரடியாக விவசாயி பெற்று பயிர் செய்து, அதன் மகசூலில் ஒரு பங்கு வருமானத்தை
அரசுக்கு நேரடியாகச் செலுத்தும் வகையில் உள்ள நிலங்களை “அயன் நஞ்சை அல்லது அயன் புஞ்சை”
என்று சொல்கிறார்கள் என்பது எனது கருத்து. (சிறிது மாறுபாடுகள் இருக்கலாம்). அயன் என்றால்
அரசு நிலம் என்று பொதுவாகச் சொல்லிக் கொள்வார்கள்.
பல சொத்துக்களை அரசு, நேரடி நிர்வாகம்
பார்க்க முடியாது என்பதால், ஜமின்தார்கள், நிலபிரபுக்கள், இவர்களிடம் ஏற்கனவே ஒப்படைத்து
விட்டது. அவர்கள், நேரடியாக அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மகசூல் வருமானமாகச் செலுத்தி
விடுவார்கள். ஆனால், விவசாயிகளிடம் (ரயத்துகளிடம்) அதிக மகசூல் வருவாய் பெற்றுக் கொள்வார்கள்.
இதில் நிறைய அடாவடித்தனங்களும் நடக்கும். அப்படி அதிகாரம் செலுத்தி வகையில் தான், ஜமின்தாரர்களின்
மீது பயமும், மரியாதையும் ஏற்பட்டது என்றால் உண்மைதான். அடியாட்களை வைத்து, மகசூல்
வருவாய் வசூல் செய்வது சர்வ சாதாரணம். விவசாயிகளுக்கு சாட்டை அடி கிடைத்ததும் உண்டு.
இந்தக் கொடுமைகளை பெருமளவு கட்டுப்படுத்தவே
இந்த ரெகுலேசன் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
கடைசியாக லெகுலேஷன் சட்டம் XXX of 1802 கொண்டு வரப்பட்டது.
அதில் பழைய பிரச்சனைகளை சீர்திருத்தி புதிய வழிமுறைகளைச் சொல்லி உள்ளது. அதன்படி, நிலங்களை
இரண்டு வகையாகப் பிரித்துக் கொண்டது. முதல் வகையில், அரசாங்கத்தின் பல கிராமங்கள் அடங்கிய
நிலங்களை ஜமின்தாரரிடம் அல்லது நிலபிரபுக்களிடம் அல்லது அதை ஏலம் எடுப்பவர்களிடம்,
வருடத்துக்கு ஒரு தொகையை பேசிக் கொண்டு, ஒப்படைத்து விடும். அதை அந்த ஜமின்தார், விவசாயிகளிடம்
விட்டு, அதில் வரும் வரும்படியை பெற்றுக் கொள்வார்கள். அப்போது, ஜமின்தார் ஒரு பட்டாவை
இந்த விவசாயிக்குக் கொடுப்பார். அதில், நிலத்தின் விபரத்துடன், வருடத்துக்கு ஒரு மகசூலில்
எவ்வளவு பங்கு கொடுக்க வேண்டும் என்று எழுதி இருக்கும். அதன்படி விவசாயி, அந்த ஜமின்தாரருக்கு
கொடுத்து விடுவார். ஆனால், ஜமின்தாரர், மிகக் குறைந்த தொகையையே அரசாங்கத்துக்கு கட்டி
விடுவார். இது ஒரு முறை.
மற்றொருன்று, அரசிடம் விவசாய
நிலங்கள் இருக்கும். அதை நேரடியாக, ஒரு பட்டா போட்டுக் கொடுத்து, வருடத்துக்கு ஒரு
மகசூலுக்கு இவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று எழுதி இருக்கும். இந்த நிலத்தைத்தான்
அயன் நிலம் என்பர். இதில் குறைந்த மகசூல் பங்கே செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த இரண்டு விஷயத்திலும், விவசாயி
பங்கு கொடுக்கவில்லை என்றால், நிலச்சுவான்தார் ஜில்லா கோர்ட்டில் வழக்குப் போட்டு அவரை
காலி செய்வார். வசூல் ஆகாத பணத்துக்கு அவருக்கு சிறை தண்டனையும் பெற்றுத் தருவார்.
இப்படிப்பட்ட பட்டாவை விவசாயிக்கு
கொடுக்காத ஜமின்தார்கள் அல்லது நிலபிரபுக்கள் இருந்தால், அவர்கள் கோர்ட்டுக்குப் போக
முடியாது என்று இந்த ரெகுலேஷன் சட்டங்கள் சொல்கின்றன. அது குற்றமும் ஆகும்.
ஒருவேளை, நிலத்தை வைத்திருப்பவர்
(ஜமின்தார் என்று வைத்துக் கொள்வோம்), அந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தால்,
அவர் பெயருக்கு நிலத்தின் மகசூல் வசூலித்துக் கொள்ளும் உரிமையையும் மாற்றி கொடுத்து
இருக்க வேண்டும். அந்த ஆதாரத்தின் பேரில், கடன் கொடுத்தவர், விவசாயிடம் மகசூல் வருமானத்தின்
பங்கை வசூல் செய்து கொள்ளும் உரிமையைப் பெறுவார்.
**
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த
வழக்கில், தஞ்சாவூர் கலைக்கோட்டை ஜமின்தார், தனக்குச் சொந்தமான ஏழு ஊர்களின் நிலங்களை,
வெள்ளையன் செட்டிக்கு அடமானம் எழுதிக் கொடுத்து இருக்கிறார். ஆனால் அவருக்கு மகசூல்
வருமானங்களை வசூல் செய்யும் உரிமையைக் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது என்று மதராஸ்
ஐகோர்ட் முழு பெஞ்ச் விசாரனையில் தெரிவிக்கிறது. எனவே கீழ்கோர்ட்டும், அதை அடுத்த அப்பீல்
கோர்ட்டும், இந்த விஷயங்களைப் பொறுத்து சரியான சாட்சியங்களை வைத்து விசாரனை நடத்தவில்லை
என்பதால், இந்த அப்பீல் வழக்கை மறுபடியும் கீழ் அப்பீல் கோர்ட்டுக்கு ரிமாண்ட் செய்து
மீண்டும் சரியான பாதையில் விசாரனையை மேற்கொள்ளும்படி தீர்ப்பு கூறிவிட்டது.
**
No comments:
Post a Comment