Tuesday, June 23, 2020

பத்திரப் பதிவுகள்-1

பத்திரப் பதிவுகள்-1

இந்திய பதிவுச் சட்டம் 1908-ல் உள்ள பிரிவு 17(1)-ல் எந்த எந்தப் பத்திரங்களை “கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்” என்று சொல்லியுள்ளது.

அவை:

1) அசையாச் சொத்துக்களின் தானப் பத்திரம்.

2) அசையாச் சொத்தின் உரிமையை மாற்றிக் கொடுக்கும் எல்லா பத்திரங்களும். கிரயம், அடமானம், செட்டில்மெண்ட், பாகப் பத்திரம், விடுதலைப்பத்திரம், போன்றவைகள். (உயில் அல்லாதவை).

3) ஒரு வருடமோ அதற்கு மேலான காலத்திற்கோ ஏற்படுத்திக் கொண்ட அசையாச் சொத்தின் வாடகை, குத்தகை, லீஸ் பத்திரங்கள்.

4) அசையாச் சொத்தைப் பொறுத்து, கிடைத்த கோர்ட் டிகிரியை வேறு ஒருவருக்கு உரிமை மாற்றிக் கொடுத்த பத்திரம் (Assignment deed of Court Decree).

எவை எவைகள் கட்டாயப் பதிவு செய்யத் தேவையில்லை என்று பிரிவு 17(2)-ல் சொல்லப்பட்டுள்ளது.

அவை:

1) கம்பெனியின் ஷேர்கள், டிபன்சர் மாற்றங்கள்.

2) கோர்ட் டிகிரிகள், ஆர்டர்கள்.

3) அரசாங்கம் கொடுக்கும் கிராண்ட் என்னும் கிரயப் பத்திரங்கள்.

4) ரெவின்யூ அதிகாரி, சொத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் பாகப் பத்திரம்.

5) நிலமேம்பாட்டுச் சட்டம் 1871-ல் எழுதிக் கொடுக்கும் கடன் பத்திரம்.

6) விவசாயக் கடன் சட்டம் 1884-ல் எழுதிக் கொடுக்கும் கடன் பத்திரம்.

7) சாரிட்டபில் என்டோவ்மெண்ட் சட்டம் 1890-ல் ஒரு டிரஸ்டிக்கு சொத்தை ஒப்படைக்க எழுதிக் கொடுக்கும் பத்திரம்.

8) கோர்ட் உத்தரவின்படி பொது ஏலத்தில் விற்பனை செய்த கிரய அத்தாட்சி பத்திரம். (Sale Certificate).

**

கோர்ட்டில் வழக்குப் போட்டு பாகம் செய்து கொண்ட சொத்தின் டிகிரியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உண்டா? தேவையில்லை.

அசையாச் சொத்துக்களை பாகம் பிரித்துக் கொடுக்கும்படி சிவில் கோர்ட்டில் வழக்குப் போட்டால், அந்தச் சொத்தில் பாகம் கேட்பவருக்கு எவ்வளவு பாகம் உண்டு என்று கேட்கிறாரோ அந்தச் சொத்தின் மதிப்புக்கு கோர்ட் பீஸ் கட்டணம் செலுத்த வேண்டும். அதில் முதலில், அவருக்கு பங்கு உள்ளதா என்றும் அப்படி பங்கு உள்ளது என்றால், எவ்வளவு பங்கு உள்ளது என்றும் கோர்ட் வழக்கு நடத்தி ஒரு டிகிரி கொடுக்கும். அதை முதல் டிகிரி (Preliminary Decree) என்று சொல்லப்படும்.

பின்னர், முதல் டிகிரியை தாக்கல் செய்து, அதன்படி சொத்தை தனித்தனி பாகமாக, துண்டுகளாகப் பிரித்து, எல்லையிட்டு கடைசி டிகிரி அல்லது பைனல் டிகிரி கொடுக்கும். அதை Final Decree என்று சொல்வார்கள். இந்த பைனல் டிகிரியை, அந்த மொத்த சொத்து மதிப்புக்கு, அவரவர் பாக ஈவுக்கு ஏற்றாற்போல, பத்திரப்பதிவுக்கு உபயோகிக்கும் முத்திரைதாள் (Non Judicial Stamp paper) வாங்கி கோர்ட்டுக்கு கொடுக்க வேண்டும். அந்த முத்திரைத்தாளில், அந்த பைனல் டிகிரி வாசகங்களை அச்சடித்து பார்ட்டிகளுக்கு அதன் சான்றிட்ட காப்பியை ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்து விடுவார்கள். அசல் பத்திரத்தை கோர்ட்டே தன்வசம் வைத்துக் கொள்ளும். அந்த டிகிரி பத்திரக் காப்பியே பார்ட்டிகளுக்கு போதுமானது. அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், கோர்ட் டிகிரிகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுச் சட்டம் பிரிவு 17-ல் சொல்லவில்லை. பிரிவு 17(2)ன்படி கோர்ட் டிகிரிகள், ஆடர்கள் பதிவு செய்ய அவசியமில்லை (கட்டாயமில்லை) என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

ஒருவேளை, அதை நாம் பதிவு செய்து கொள்ளலாம் என்று விரும்பினால், அதில் ஒரு சட்டச் சிக்கலும் உள்ளது. அது என்னவென்றால், கோர்ட் உத்தரவு (டிகிரி) கொடுத்த தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுச் சட்டம் சொல்கிறது. (பொதுவாக எந்தப் பத்திரம் பதிவு செய்யப் போனாலும், அது எழுதிய தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். ஏதாவது சரியான காரணம் இருந்தால் மேலும் ஒரு நான்கு மாதம்  நீட்டித்துக் கொள்ள மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் கொடுத்துள்ளர்கள்). அவ்வாறு தாமதமாகப் பதிவு செய்யப்படும் பத்திரத்துக்கு இரண்டு மடங்கு  பதிவுக் கட்டணம் வேறு அபராதமாகச் செலுத்த வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கோர்ட் கொடுக்கும் பாகத் தீர்ப்பை, டிகிரியாக ஏற்படுத்திக் கொடுக்க ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விடுகிறது. எனவே கோர்ட் பாக டிகிரியை உடனடியாக பெற முடிவதில்லை. எனவே பொதுவாக யாரும் கோர்ட் பாக டிகிரியை பதிவு செய்வதில்லை. பதிவுச் சட்டப்படியும் அதைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை என்பதாலும் பொதுவாக பாக டிகிரியைப் பதிவு செய்வது வழக்கமில்லை.

**

சொத்து சம்மந்தப்பட்ட கோர்ட் டிகிரியை பதிவு செய்ய வேண்டுமா?

பதிவுச் சட்டம் பிரிவு 17(2)ன்படி எந்த கோர்ட் டிகிரியையும், அதன் ஆர்டரையும் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று பதிவுச் சட்டம் பிரிவு 17(2)ல் சொல்லி உள்ளது. விருப்பப்பட்டால் பதிவு செய்து கொள்ளலாம். சொத்துக்கள் சம்மந்தப்பட்ட டிகிரிகளுக்கும் இது பொருந்தும்.

ஆனால், ஒரு விஷயத்தில் இந்த சலுகை கிடைக்காது. அது: வழக்கில் குறிப்பிட்டுள்ள அசையாச் சொத்து இல்லாமல், வேறு ஏதாவது ஒரு அசையாச் சொத்தை, சமரச உடன்படிக்கையின் பேரிலோ, அல்லது வேறு வகையிலோ டிகிரியாக பெற்று இருந்தால், அப்படிப்பட்ட சொத்தின் டிகிரியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று பிரிவு 17(2)ல் குறிப்பிட்டுள்ளது. ஏனென்றால், அதற்கு கோர்ட் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் இது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், அந்தச் சொத்து அந்த வழக்கு சம்மந்தப்பட்ட சொத்தாக இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எனவே வழக்கில் சம்மந்தப்பட்ட சொத்தாக இருந்தால், அந்த டிகிரியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், அந்த வழக்கில் சம்மந்தப்படாத ஒரு சொத்தைப் பொறுத்து அந்த டிகிரியில் யாருக்காகவது உரிமை கொடுத்து இருந்தால், அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்த டிகிரிப்படி சொத்துரிமை வராது.

**

 


No comments:

Post a Comment