Tuesday, June 23, 2020

பத்திரப் பதிவுகள்-2

பத்திரப் பதிவுகள்-2

சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்மந்தப் படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுவாக, பத்திரங்களை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள்.

முதல் வகை புத்தகம்-1 பத்திரங்கள்:

சொத்து சம்மந்தப்பட்ட பத்திரங்கள். இவை சொத்தின் உரிமையை மாற்றிக் கொடுக்கும் வகையில் இருக்கும். இந்த மாதிரி சொத்து சம்மந்தப்பட்ட பத்திரங்களை பதிவு அலுவலகத்தில் புத்தகம்-1 (Book-I) பத்திரமாகவே பதிவு செய்வார்கள். உதாரணமாக ஒரு கிரயப் பத்திரத்தை எடுத்துப் பார்த்தால், அதில் பத்திர எண்ணுடன், அது எந்தப் புத்தகத்தில் பதிவாகி உள்ளது என்றும் எழுதி இருக்கும். புத்தகம்-1ல் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை “பொதுப்பத்திரம்” அல்லது Public Documents என்று சொல்வார்கள் பொதுப் பத்திரம் என்பது என்னவென்றால், இந்த வகைப் பத்திரப் பதிவை உலகுக்கு அறிவிப்பது எனப் பொருள்படும். ஒருவர் கிரயம் வாங்கியதை உலகுக்குத் தெரியப்படுத்துவது ஆகும். யார் வேண்டுமானாலும், அதன் காப்பியை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் அந்த பதிவுச் செய்தியானது வில்லங்க புத்தகத்திலும் இடம் பெறும். எனவே யார் வேண்டுமானலும் அதைப் பார்க்கவும், அந்தப் பத்திரத்தின் காப்பியை பெறவும் உரிமை உண்டு.

புத்தகம்-1 பத்திரங்கள் பொதுவெளியில் இருக்கும் பத்திரம் என்று பெயர். உலகுக்கு அந்த விபரத்தை தெரியப் படுத்தி விடும். ஒரு சொத்தை ஒருவர் கிரயம் வாங்கினார் என்பதை எல்லா மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரின் உரிமையை உலகம் அறிந்து கொள்ள முடியும்.

இது எப்படியென்றால், பொதுவாக ஒரு பொருளை கொண்டு வந்து எல்லோரும் கூடியுள்ள சந்தையில் விற்பனை செய்தால், அந்தப் பொருள் விற்பனை ஆகிவிட்டது என்றும், அதை ஒருவர் வாங்கி உள்ளார் என்பதும் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியவரும். இந்தத் தத்துவப்படி, சொத்தின் உரிமை மாறும் பத்திரங்களை புத்தம்-1ல் பதிவு செய்கிறார்கள். புத்தகம்-1 பத்திரங்கள் உலகுக்கு அறிவிக்கும் பத்திரங்கள் வகையைச் சேர்ந்தது.

அடுத்து, புத்தகம்-4 பத்திரங்கள்:

புத்தகம்-1ல் பதிவு செய்யப்படாத பத்திரங்களை புத்தகம்-4-ல் பதிவு செய்யப்படும். இதைத் தனியார் பத்திரங்கள் என்று சொல்வர். Personal Document என்ற வகையைச் சேரும். இதில் சொத்து சம்மந்தப்பட்டு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால்: அசையாச் சொத்தி்ன் உரிமை இந்த மாதிரி பத்திரங்கள் மூலம் மாறி இருக்காது.

உதாரணமாக ஒரு அசையாச் சொத்தை கிரயம் கொடுத்தால், அந்த சொத்தில் அவருக்கு உள்ள உரிமையை மற்றொருவருக்கு (கிரயம் வாங்கியவருக்கு) மாற்றிக் கொடுக்கிறார். எனவே அந்தச் சொத்தின் உரிமை அந்தப் பத்திரம் மூலம் மாறி வேறு ஒருவருக்குப் போகிறது. எனவே அப்படிப்பட்ட பத்திரங்களை புத்தகம்-1ல் பதிவு செய்வார்கள்.

ஆனால், சொத்து சம்மந்தப்பட்டு இருக்கும், ஆனால், அந்த சொத்தின் உரிமை மாறாது. அப்படிப்பட்ட பத்திரங்களை புத்தகம்-4ல் பதிவு செய்வார்கள்.

உதாரணமாக: பவர் பத்திரங்கள், குழந்தையை தத்து எடுக்கும் தத்துப் பத்திரம், சொத்து சம்மந்தப்படாத டிரஸ்ட் பத்திரம், அபிடவிட் எனப்படும் உறுதிமொழிப் பத்திரம், Declaration deed என்னும் அறிவிக்கை பத்திரம் போன்றவை.

இவை அனைத்தும் அதை எழுதிக் கொடுத்தவருக்கும், அதை எழுதி வாங்கிக் கொண்டவருக்கும் மட்டுமே சம்மந்தப்பட்டவை. அல்லது அவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய பத்திரம். அதில் மூன்றாம் நபர்களுக்கோ, பொதுமக்களுக்கோ, உலகுக்கோ அதைத் தெரிந்து கொள்ள எந்த உரிமையும் கிடையாது. இப்படிப்பட்ட தனிநபர் பத்திரங்களை புத்தகம்-4ல் பதிவு செய்வார்கள்.

இந்தப் புத்தகம்-4 பத்திரங்களை, அந்த பத்திரம் சம்மந்தப்பட்ட இரண்டு நபர்களைத் தவிர வேறு யாரும் அதன் காப்பியை பெற்றுக் கொள்ள உரிமை இல்லை. இது பொதுப் பத்திரமும் இல்லை. எனவே அதன் விபரங்களை வில்லங்க சர்டிபிகேட் பதிவேட்டில் குறித்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

மூன்றாவது வகை: புத்தகம்-3 பத்திரம்:

இந்த புத்தகம்-3 பத்திரம் என்பது, 1-வது புத்தகம், 4-வது புத்தகம் இவைகளில் வராத பத்திர வகையைச் சேர்ந்தது. இது ஒரு சிறப்பு வகை. இதில் உயில் பத்திரங்கள் மட்டும் அடங்கும். உயில் என்பது அசையாச் சொத்து சம்மந்தப்பட்டும் இருக்கும் அல்லது சம்மந்தப்படாமலும் இருக்கும். ஆனாலும், உயில் என்பது அதை எழுதி வைத்தவரின் இறப்புக்கு பின்னரே அது நடைமுறைக்கு வருவதால், அதை சிறப்பாக புத்தகம்-3ல் பதிவு செய்து வைப்பார்கள்.

உயிலும் ஒரு தனிப்பட்ட பத்திரமாகும். இது பொதுப் பத்திர வகையை சேராது. எழுதிக் கொடுத்தவர் மட்டுமே அதன் நகலைப் பெற முடியும், வேறு யாரும் அதைப் பெற்றுவிட முடியாது. அவரது இறப்புக்குப் பின்னர் அவரின் வாரிசுகள் அதன் நகலைப் பெறலாம்.

இதில் உயில், மற்றும் உயிலை அடுத்து அதன் பின் இணைப்பு எனச் சொல்லப்படும் “கொடுசில்” (Codicil) ஆகிய இரண்டும் சேரும். கொடுசில் என்றால், ஏற்கனவே எழுதிய உயிலில் ஏதாவது மாறுதல் செய்ய நினைத்தால், அந்த உயிலை அப்படியே இருக்கும் போதே, இந்த மாறுதல் பத்திரத்தை மட்டும் எழுதி அந்த உயிலுக்கு இணைப்பு என்று சொல்லி (Codicil) அதையும் ஒரு தனிப் பத்திரமாகப் பதிவு செய்வது. இதுவும் அதே புத்தகம்-3ல் தான் பதிவு செய்யப்படும்.

மேலும், Open Will என்று சொல்லப்படும் வெளிப்படையாக எழுதி (யாரும் பார்க்கும்படி எழுதி) பதிவு செய்வது ஒரு வகை உயில். மற்றொன்று, அ்ந்த உயிலில் என்ன் எழுதியுள்ளது என்று யாருக்கும் தெரியக் கூடாது. பத்திரப் பதிவாளர் கூட படிக்க முடியாது. இப்படி ஒரு ரகசிய உயிலை எழுதி வைப்பர் சிலர். ஏனென்றால், அந்த உயிலில் யாருக்கு என்ன கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று அந்த உயிலை எழுதி வைத்தவரைத் தவிர யாருமே தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. இதை ரகசிய உயில் அல்லது சீல் செய்யப்பட்ட உயில் (Will in a Sealed Cover) என்று சொல்வர். உயிலை எழுதி, அதை ஒரு கவருக்குள் போட்டு அதை ஒட்டி, சீல் செய்து, அவரின் அரக்கு முத்திரையையும் கூட பதித்து விடுவர். அந்தக் காலத்து மன்னர்கள் இரகசிய உத்திரவு அனுப்புவது போல. அந்தக் கவரை மட்டும் பதிவாளர் வாங்கி, “மூடிய உயில் என்று சொல்லப்பட்ட ஒரு கவரைப் பெற்றுக் கொண்டேன்” என்று சொல்லி அதை மட்டும் பதிவு செய்து கொள்வார். இதுவும் புத்தகம்-3ல் தான் பதிவு செய்யப்படும். இப்படிப்பட்ட மூடிய உறையுடன் கூடிய உயிலை, அவர் இறந்த பின்னர், அவரின் வாரிசுகள், இறந்தவரின் இறப்புச் சான்றிதழுடன் ஒரு மனுக் கொடுத்து, அந்த மூடிய உறையை, இரண்டு சாட்சிகள் முன்னர்  பதிவாளர் திறந்து, அந்த உயிலை வழக்கமாகப் பதிவு செய்வது போலப் புத்தகம்-3-ல் அதற்கு ஒரு வரிசை எண் கொடுத்து பதிவு செய்து கொள்வார்.

பொதுவாக உயில்களைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பதிவுச் சட்டம் சொல்கிறது. மேலும் உயிலை ஒரு முத்திரைத் தாளில் எழுத வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், உயில் என்பது அவசரத்துக்காக எழுதுவது. எனவே நடைமுறையை பின்பற்ற முடியாது. இருந்தாலும், இந்த உயிலை அவர்தான் எழுதினார், அல்லது அதைப்  படித்துப் பார்த்து, அல்லது படிக்கக் கேட்டு, கையெழுத்துச் செய்தார் என்றும், நல்ல மனநிலையில் இருந்தார் என்றும் உறுதி செய்து, இரண்டு தெளிவான சாட்சிகளும் அதில் கையெழுத்துச் செய்து இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உயில் செல்லுபடியாகும்.

**

புத்தகம்-1, புத்தகம்-4, புத்தகம்-3 பத்திரங்களைப் பார்த்து விட்டோம்.

புத்தகம்-2 பற்றி இப்போது:

புத்தகம்-2 என்பது பத்திரங்களைப் பதிவு செய்து வைக்கும் புத்தகம் இல்லை. இந்தப் புத்தகம் பொதுவாக ஏதும் பதிவு செய்யாமல் காலியாகவே இருக்கும்.

நாம் பதிவுக்குக் கொடுக்கும் பத்திரங்கள் சரியாக இருந்தால்தான், பதிவாளர் அதை பதிவு செய்வார். சரியாக இல்லை என்றால், பதிவாளர் பதிவு செய்ய மாட்டார். அப்படி எந்த எந்த காரணங்களுக்கு ஒரு பத்திரத்தின் பதிவை மறுக்கலாம் என்று பதிவுச் சட்டம் பிரிவு 71-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பதிவாளர் பதிவு செய்ய மறுத்தால், அதன் காரணத்தை அந்த பத்திரத்தின் பின் பக்கத்தில் எழுதி பதிவாளர் கையெழுத்துச் செய்ய வேண்டும். அதே காரணத்தை அவர் வைத்துள்ள புத்தகம்-2ல் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் மட்டுமே புத்தகம்-2ல் இருக்கும்.

அவ்வாறு பதிவுக்கு மறுக்கும் காரணங்கள்:

1) அந்த பத்திரத்தில் உள்ள சொத்து அந்த பதிவு அலுவலக எல்லைக்குள் இல்லாமல் இருந்தால், பதிவு செய்ய மறுக்கலாம்.

2) பத்திரத்தை எழுதிக் கொடுத்தாகச் சொல்பவர் (உதாரணமாக கிரயம் கொடுப்பவர்) அவர் அந்தப் பத்திரத்தில் கையெழுத்துச் செய்யவில்லை என்றோ, அதில் உள்ள கையெழுத்து அவரின் கையெழுத்து இல்லை என்றோ சொன்னால், பதிவாளர் அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய மறுக்கலாம்.

3) பதிவாளருக்கு தெரியாத ஒரு மொழியில் பத்திரத்தை எழுதி இருந்தால், அதன் மொழிபெயர்ப்பு அவருக்குத் தெரிந்த அல்லது ஆங்கிலத்தில் இல்லாமல் அந்த பத்திரத்தை பதிவுக்குக் கொடுத்தால், அதைப் பதிவு செய்ய மறுக்கலாம்.

4) அந்த பத்திரத்தில் அதிகமான அடித்தல், திருத்தல், சேர்த்தல், இவை இருந்து, அது பார்ப்பதற்கு படிக்க முடியாத நிலையில் இருந்தால், அதைப் பதிவு செய்ய மறுக்கலாம்.

5) அடித்தல் திருத்தல் இருந்தால் அதில் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் சம்மதித்து கையெழுத்துச் செய்யாமல் அப்படியே பதிவுக்குக் கொடுத்தால் அதை பதிவு செய்ய மறுக்கலாம்.

6) பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்தின் விபரம் சரியாக இல்லாமல், சர்வே எண் இல்லாமல், அல்லது அதற்குறிய தெளிவான வரைபடம் இல்லாமல், (அதாவது சொத்தை சரியாக அடையாளப்படுத்தும் விபரங்கள் இல்லாமல்) இருந்தால், அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய மறுக்கலாம்.

7) ஒரு பத்திரத்தை, அதை எழுதிய அல்லது அந்த பத்திரத்தில் எழுதியதாக குறிப்பிட்டுள்ள தேதியிலிருந்து நான்கு மாதங்கள் கழித்து, அதைப் பதிவு செய்வதற்கு கொண்டு வந்து கொடுத்தால், அதை பதிவு செய்ய மறுக்கலாம். (எந்தப் பத்திரமாக இருந்தாலும் அது எழுதிய தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தவறினால், மாவட்ட பதிவாளருக்கு மனுக் கொடுத்து மேலும் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும்).

8) பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரோ, அல்லது அவரின் ஏஜெண்டோ, பதிவு செய்யும் போது, அதை ஒப்புக் கொள்ள நேரில் வரவில்லை என்றால், அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய மறுக்கலாம்.

9) பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர் அல்லது அவரின் ஏஜெண்ட், இவர்கள்தானா என்பதில் பதிவாளருக்கு சந்தேகம் இருந்தால், பத்திரப் பதிவை மறுக்கலாம்.

10) பத்திரம் எழுதிக் கொடுத்தவர், ஒரு மைனராக இருந்தாலோ, மூளை குழம்பியவராக இருந்தாலோ, அந்த பத்திரத்தின் பதிவை மறுக்கலாம்.

11) பத்திரம் எழுதிக் கையெழுத்தும் செய்து கொடுத்துவிட்டு, பதிவு நடப்பதற்கு முன்னர் அவர் இறந்து விட்டால், அவரின் வாரிசுகள் நேரில் வந்து இறந்தவர் எழுதிக் கொடுத்த பத்திரம்தான் என்று உறுதி சொன்னால், அந்தப் பத்திரத்தை பதிவு செய்யலாம். ஆனால் வாரிசுகள் வந்து, இறந்தவரின் கையெழுத்து இது இல்லை என்று மறுத்து விட்டால், அந்த பத்திரத்தை பதிவுக்கு பதிவாளர் மறுக்கலாம்.

12) பத்திரத்தை பலர் எழுதிக் கொடுத்திருந்து, அதில் ஒருசிலர் மட்டும், தான் அவ்வாறு எழுதிக் கொடுக்கவில்லை என்று பதிவின் போது மறுத்தால், அத்தகைய பத்திரத்தை பதிவுக்கு மறுக்கலாம்.

13) பத்திரம் எழுதிக் கொடுத்தவர் இறந்து விட்டார் என்று சொல்லி அவரின் வாரிசுகள் பதிவுக்கு வந்தால், அப்போது எழுதிக் கொடுத்தவர் இறந்து விட்டார் என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியாத போது, அத்தகைய பத்திரத்தின் பதிவை மறுக்கலாம்.

14) பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகைக்கு உரிய பதிவுக் கட்டணத்தை செலுத்த மறுத்தால், அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய மறுக்கலாம்.

இப்படியாக மறுக்கும் காரணத்தை புத்தகம்-2ல் எழுதிக் கொண்டு, அந்த பத்திரத்தை கொண்டு வந்த பார்ட்டியிடமே திரும்பக் கொடுத்து விடலாம். அவர் அது சரியான காரணமாக இல்லை என்றால், மாவட்டப் பதிவாளருக்கு அப்பீல் மனு அளித்து, மறுத்தது சரியில்லை என்றால், மீண்டும் பதிவுக்கு வருவார்.

**


No comments:

Post a Comment