Tuesday, June 23, 2020

பத்திரப் பதிவுகள்-4

பத்திரப்பதிவுகள்-4

பவர் பத்திரங்களை பதிவு செய்வது அவசியமா?

இந்திய பதிவுச் சட்டம் பிரிவு 33-ல் இதைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.

அதன்படி கீழ்கண்ட முறைப்படி எழுதிய பவர் பத்திரங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.

1) பவர் பத்திரத்தை எழுதிக் கொடுப்பவர் இந்தியாவில் இருந்தால் (வசித்து வந்தால்) அவர் இருக்கும் இடத்தில் உள்ள பதிவாளரிடம் சென்று பவர் பத்திரம் எழுதிப் பதிவு செய்து இருக்க வேண்டும்.

2) பவர் பத்திரத்தை எழுதிக் கொடுப்பவர் இந்தியாவில் இருந்து (வசித்து வந்தால்), அவ்வாறு அவர் இருக்கும் இடத்தில் இந்திய பதிவுச் சட்டம் நடைமுறையில் இல்லாமல் இருந்தால், அங்குள்ள மாஜிஸ்டிரேட்டிடம் சென்று பவர் பத்திரம் எழுதிப் பதிவு செய்து இருக்க வேண்டும்.

3) பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பவர் இந்தியாவில் வசிக்காமல், வெளிநாடுகளில் வசித்தால், அந்த நாட்டில் உள்ள நோட்டிரி பப்ளிக் வக்கீலிடமோ, அல்லது அங்குள்ள இந்திய குடியுரிமை அதிகாரியான கான்சல் அதிகாரியிடமோ சென்று அங்கு பவர் பத்திரத்தை எழுதி அதை அவரின் கையெழுத்துப் பெற்று உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக: வெளிநாடுகளில், சில நாடுகள் பழைய காமன்வெல்த் நாடுகளாக அல்லது பிரிட்டீஸ் பழைய காலனி நாடுகளாக இருக்கும். அதாவது, அவைகள் ஏற்கனவே பிரிட்டீஸ் அரசாட்சியில் இருந்து பின்னர் சுதந்திரம் பெற்ற நாடுகளாக இருக்கும். இங்கெல்லாம், பிரிட்டீஸ் சட்டமான Common Law சட்டமே அமலில் இருக்கும். Common Law என்றால்  சட்டத்தின்படி ஆட்சிமுறை என்று பொருள். அப்படிப்பட்ட நாடுகளில் நோட்டரி பப்ளிக் வக்கீல் முறை இருக்கும். அப்படிப்பட்ட வெளிநாட்டு வக்கீலுக்கு அந்த பவர் பத்திரத்தையோ, அபிடவிட்டுகளையோ, அத்தாட்சி செய்யும் அதிகாரம் உண்டு. அப்படிப்பட்ட நாடுகள்: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஜப்பான், பங்காளதேம், புருனே, போன்றவை.

மற்ற நாடுகளில் இந்த நோட்டரி வக்கீல் முறை இருக்காது. அந்த நாடுகளில் வேறு மாதிரியான சட்ட நடைமுறை இருக்கும். அல்லது மன்னர் ஆட்சி இருக்கும். இந்த நாடுகளில் இந்தியக் குடியுறவு அதிகாரிகள் (கான்சல் அதிகாரிகள்-Consul) இருப்பர். பவர் எழுதிக் கொடுக்கும் இந்தியர் அவரிடம் சென்று தன் பவர் பத்திரத்தை அத்தாட்சி செய்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நாடுகள்: பொதுவாக எல்லா அரேபிய நாடுகளும், மற்றும் மன்னர் ஆட்சி செய்யும் நாடுகள்.

4) பொதுவாக பவர் பத்திரம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயப் பத்திரம் இல்லை. பவர் எழுதிக் கொடுத்தவர் கையெழுத்துச் செய்தால் போதும். அதையும் அவர் வெளிநாட்டில் வசித்தால், ஒரு அதிகாரி முன்பு, அந்த கையெழுத்தை செய்திருந்தாக உறுதி செய்தால் போதும். 

இந்தியாவில் வசித்துக் கொண்டு இருப்பவர், பதிவு அதிகாரியிடம் சென்று அவரின் பவர் பத்திரத்தை உறுதி செய்ய முடியாமல் இருந்தால், அதாவது அவரால் எழுந்து நடக்க முடியாமல் நோய்வாய்பட்டு இருந்தால், அவர் பவர் பத்திரம் எழுதிக் கொடுக்க பதிவாளரிடம் நேரில் செல்லத் தேவையில்லை.

5) பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பவர் ஜெயிலில் இருந்தால், அவர் பதிவாளரிடம், பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பதற்காக நேரில் செல்லத் தேவையில்லை.

6) ஒரு அரசு அதிகாரி, பதிவாளரிடம் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று சட்டம் இருந்தால், அவரும் பத்திரம் பதிவு செய்து கொடுக்க நேரில் செல்லத் தேவையில்லை.

அப்படி அவர்களால் நேரில் சென்று பவர் பதிவு செய்து கொடுக்க முடியாதவர்கள், பதிவு செய்யாத பவர் பத்திரத்தை, பதிவாளர் சரியான பவர் பத்திரம்தான் என்று திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டும். அல்லது விசாரித்து ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பதிவுச் சட்டம் பிரிவு 33-ல் சொல்லப்பட்டுள்ளது.

ஒருவேளை, அவர் திருப்திப்படவில்லை என்றால், பதிவாளரே நேரில் சென்று அவரை விசாரித்து திருப்தியடைய வேண்டும். ஜெயிலில் இருப்பவரை நேரில் சென்றும் விசாரித்துக் கொள்ளலாம். அல்லது அதற்கான கமிஷன் நபரை நியமித்தும் திருப்திபட்டுக் கொள்ளலாம்.

பவர் பத்திரம் சரிதானா என்பதை பதிவாளர் ஒப்புக் கொள்தல்:

ஒரு பவர் பத்திரம் மேலே சொன்னபடி, எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த அசல் பவர் பத்திரத்தை வேறு ஒரு பதிவாளரிடம் கொடுக்கும் போது, அதை அவர் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த பவர் பத்திரத்துக்கு மேலும் தகுந்த சாட்சியம் வேண்டும் என்று கட்டாயப் படுத்தக் கூடாது என்று பிரிவு 33 சொல்கிறது.

இந்திய சாட்சியச் சட்டத்தின்படி: (1) ஒரு விஷயத்தை, ஒரு கோர்ட்டுக்கோ, அதிகாரிக்கோ, நாம் நிரூபிக்க வேண்டும்.  (2) ஒரு விஷயத்தை, வேறு மாற்று சாட்சியம் இல்லாதபோது, அது இருப்பதாக கோர்ட்டோ, அதிகாரியோ நம்ப வேண்டும். (3) ஒரு விஷயத்தை சட்டமே இருப்பதாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி இருந்தால், கோர்ட்டோ, அதிகாரியோ, வேறு மாற்றுக் கருத்தே இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த மூன்றாவது  வகையில் சொல்லப்பட்டபடி, ஒரு பவர் பத்திரத்தை (முறையாக எழுதிப் பதிவு செய்ததை) மாற்றுக் கருத்து இல்லாமல் பதிவாளர் அதை ஒப்புக் கொண்டு, அடுத்த நடவடிக்கைக்கு செல்ல வேண்டும்.

**

 


No comments:

Post a Comment