Wednesday, June 24, 2020

பத்திரப் பதிவுகள்-5

பத்திரப் பதிவுகள்-5

சாட்சிகள்:

பத்திரங்களை எழுதிக் கொள்ளும்போது, அதற்கு சாட்சிகள் வேண்டும். பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரும், எழுதி வாங்கியவரும் தங்கள் கையெழுத்து இல்லை என்று மறுத்தால், இந்த சாட்சிகளைக் கொண்டுதான் அந்தப் பத்திரத்தை நிரூபிக்க முடியும். எனவே எல்லாப் பத்திரங்களுக்கும் சாட்சிகள் அவசியமாகின்றன.

ஆனால், சட்டத்தில், ஒருசில பத்திரங்களுக்கு மட்டும் சாட்சிகள் கட்டாயம் என்றும், வேறு சில பத்திரங்களுக்கு சாட்சிகள் அவசியம் இல்லை என்றும் சொல்லப் பட்டுள்ளது.

பொதுவாக, பத்திரங்களை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று முடிந்த ஒப்பந்தங்கள் (Executed Contract); மற்றொன்று முடிக்க வேண்டிய ஒப்பந்தங்கள் (Executory Contract).

இது இரண்டுக்கும் வித்தியாசம் என்னவென்றால், முடிந்த ஒப்பந்தங்களில், அதிலுள்ள பார்ட்டிகள் இனிச் செய்யவேண்டிய கடமைகள் ஏதும் இருக்காது. உதாரணமாக கிரயப் பத்திரம் ஒரு முடிந்த ஒப்பந்தம். அதில் பணம் கொடுக்கப்பட்டுவிடும். சொத்தின் சுவாதீனம் கொடுக்கப்பட்டு விடும். Quid pro quo இருக்காது. அதாவது நீ இதைச் செய்தால், நான் இதைச் செய்வேன் என்று எந்த நிபந்தனைகளும் இருக்காது. எல்லாமே முடிந்து விட்டதை உறுதி செய்வதாகவே இருக்கும். கிரயப் பணத்தை பிறகு தருகிறேன் என்று சொல்லி கிரயப் பத்திரம் எழுதி இருந்தாலும், அந்தக் கிரயம் பூர்த்தி ஆகி விடும். பணம் வரவில்லை என்றாலும், எழுதிக் கொடுத்த கிரயம் செல்லும். பணம் பாக்கி என்றுதான் வசூல் செய்ய முடியுமே ஒழிய, எழுதிக் கொடுத்த கிரயத்தை ரத்து செய்து விட முடியாது. ஆக,  முடிந்த ஒப்பந்தங்களி்ல்  (Executed Contract) சாட்சிகள் அவசியம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

மற்றொன்றான, முடிக்க வேண்டிய ஒப்பந்தங்கள் (Executory Contract). இதில் Quid pro quo இருக்கும். பதிலுக்கு பதில் கன்டிஷன்கள் இருக்கும். நீ இதைச் செய்தால் நான் இதைச் செய்வேன் என்ற உடன்பாடுகள் அல்லது நிபந்தனைகள் இருக்கும். எனவே அதில் ஒரு சில வேலைகள் முடிந்து இருந்தாலும், இன்னும் முடிக்க வேண்டிய வேலை அதிகம் இருக்கும். ஒருவேளை அந்த வேலையை ஒருவர் முடித்துக் கொடுக்க மறுத்து விட்டால் அந்த அக்ரிமெண்ட் மூலம் சட்டத்தின்படி அல்லது நியாயத்தின்படி தீர்வைத் தேடிக் கொள்ளலாம். இவருவருக்குமே அவரவர் இனிச் செய்ய வேண்டிய வேலைகள் இருப்பதால், அத்தகைய ஒப்பந்தங்களுக்கு சாட்சிகள் தேவையில்லை.

உதாரணமாக: கிரய அக்ரிமெண்டுக்கு சாட்சிகள் தேவையில்லை. (ஆனாலும் நாம், நடைமுறையில் இரண்டு சாட்சிகளைப் போட்டுக் கொள்கிறோம்). வாடகை அக்ரிமெண்டுக்கு சாட்சிகள் தேவையில்லை. ஹையர் பர்சேஸ் என்று சொல்லும் மாதத் தவனை செலுத்தி பொருள்களை வாங்கும் அக்ரிமெண்டுக்கு சாட்சிகள் தேவையில்லை. இவ்வளவு ஏன், புராமிசரி நோட்டுக்கும் சாட்சிகள் தேவையில்லை. பணம் பெற்றுக் கொண்ட ரசீதுக்கு சாட்சிகள் தேவையில்லை.

மூன்றாவதாக: சில பத்திரங்களுக்கு சாட்சிகள் அவசியம் என்று அந்த அந்த சட்டங்களில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கும். அத்தகைய பத்திரத்திற்கு சாட்சிகள் அவசியம். உதாரணமாக: உயில் பத்திரத்துக்கு இரண்டு சாட்சிகள் கட்டாயம் வேண்டும். உயில் பத்திரம் என்பது எழுதி வைத்தவரின் ஆயுட்காலத்துக்குப் பின்னரே அமலுக்கு வருவதால், அதை நிரூபிக்க இந்த சாட்சிகள் அவசியம். டிரஸ்ட் பத்திரங்களுக்கும் சாட்சிகள் அவசியம் என்று சட்டம் சொல்கிறது.

சாட்சிகளில் சில வகை:

Attesting Witness:

பத்திரம் எழுதியவர் அந்த பத்திரத்தில் கையெழுத்துச் செய்ததை நேரில் பார்த்த சாட்சியை “சான்றிட்ட சாட்சி” (Attesting Witness) என்கிறோம். இந்த சாட்சிதான் மிக முக்கியமானர். இவரை வைத்துத்தான் அந்த பத்திரத்தை நிரூபிக்க முடியும். எனவே கிரயப் பத்திரம் போன்ற பத்திரங்களி்ல், கடைசி பக்கத்தில் இரண்டு சாட்சிகளின் கையெழுத்து வாங்குவோம். அவர்களே சான்றிட்ட சாட்சிகள். பத்திரம் எழுதிக் கொடுத்ததை, பார்த்ததை சான்று செய்த சாட்சி. உயில் பத்திரங்களில் கடைசிப் பக்கத்தில் இந்த இரண்டு சாட்சிகள்தான் கையெழுத்துப் போடுவார்கள். அவர்கள்தான், உயில் எழுதியதையும், அதில் கையெழுத்துப் போட்டவரையும் நேரடியாக பார்த்தவர்கள். அவர்களைக் கொண்டுதான் அந்த உயிலை நிரூபிக்க முடியும்.

Identifying Witness:

மற்றொரு வகை சாட்சி “ஆள் அடையாளம் காட்டும் சாட்சி அல்லது Identifying Witness. இவர், பத்திரம் எழுதியதையோ, அதில் எழுதியவர் கையெழுத்துச் செய்ததையோ பார்த்தே இருக்க மாட்டார். அது வேறு எங்காவது எழுதப் பட்டிருக்கும். அதற்கும் இந்த சாட்சிக்கும் சம்மந்தமே இருக்காது. ஆனால் அந்தப் பத்திரத்தை பதிவு செய்வதற்காக, பதிவாளரிடம் கொடுக்கும் போது, அந்த பத்திரம் எழுதிக் கொடுத்தவரை அடையாளம் காட்ட வேண்டும். அதற்காக இந்த சாட்சி, பதிவாளர் அலுவலகத்துக்கு வருவார். ஆம் இவரை எனக்கு நன்றாகத் தெரியும் என்று பதிவாளரிடம் அடையாளம் காட்டி, பதிவாளர் முன்னிலையில் சாட்சிக் கையெழுத்துப் போடுவார். இந்த மாதிரியான சாட்சியைக் கொண்டு அந்தப் பத்திரத்தை நிரூபிக்க முடியாது. அந்த பத்திரத்தில் உள்ள Attesting Witness-ஐக் கொண்டுதான் அந்தப் பத்திரத்தை நிரூபிக்க முடியும்.

பதிவு அலுவலகங்களில் பெரும்பாலும் சிலர் சுற்றிக் கொண்டிருப்பர். அவர்களைக் கொண்டு இந்த Identifying Witness வேலைகளை முடித்துக் கொள்வார்கள். பதிவாளர் கண்டிப்பானவராக இருந்து, இத்தகைய சாட்சிகளை விசாரித்தால் உண்மை தெரிந்து விடும். மேலும், இந்த சாட்சி முக்கியமில்லை என்பதால் இந்த சாட்சியின் செயலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எப்போது இந்த சாட்சிக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்றால், பத்திரம் எழுதிக் கொடுத்தவர் என்று பதிவுக்கு வரும்போது, அவரை ஆள்மாறாட்டம் (Impersonation) செய்திருந்தால், இந்த சாட்சியை வைத்துத்தான், அவரே தான் அவர் என்று உறுதிப் படுத்த முடியும்.

எனவே பத்திரத்தை எழுதிக் கொடுத்ததை நிரூபிக்க Attesting Witness தேவை. அந்த பத்திரத்தைப் பதிவு செய்யும் போது, அவரை அடையாளம் காட்டுவதற்கு, Identifying Witness தேவை. இரண்டு வகை சாட்சிகளும் வேறு வேறு வேலையைச் செய்கிறார்கள்.

**

புராமிசரி நோட்டும், பாண்ட் பத்திரமும்:

இரண்டுமே கடன் பத்திரங்கள்தான். புராமிசரி நோட் என்பது “நீங்கள் கேட்கும்போது, கடனைத் திருப்பிக் கொடுத்து விடுவதாய் உறுதி அளிக்கிறேன்” என்ற ஒற்றை வாசகம் மட்டுமே இருக்கும். இதற்கு சாட்சிகள் தேவையில்லை. ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய தாளில் எழுதிக் கொடுத்தால் போதும்.

ஆனால், இதே புராமிசரி நோட் வாசகங்களை மாற்றி, இந்தக் கடனை இன்னும் ஆறு மாதங்களில் கொடுத்து விடுகிறேன். இல்லையென்றால், என்மீது நீங்கள் சட்டப்படி கோர்ட் நடவடிக்கை எடுக்கலாம். அல்லது என் சொத்தின்மீது நடவடிக்கை எடுத்து வசூல் செய்யலாம் என்று நிறைய உறுதிமொழிகளை அள்ளிக் கொட்டியிருந்தால், அது பாண்டு பத்திரம் ஆகும். பாண்ட் பத்திர வகையில் வந்தால், அந்தப் பத்திரத்துக்கு அதிக முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டும். வெறும் ரூ.20 ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொண்டால் போதாது. எனவே இப்படிப்பட்ட புராமிசரி நோட்டுகளை எழுதும் போது, அந்த விபரங்களை அறிந்து கொண்டு எழுத வேண்டும். அடமானப் பத்திரம் கூட ஒரு கடன் பத்திரம் தான். அதில் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் என்னென்ன செய்து கொள்ளலாம் என்று எழுதி இருப்பார்கள். எனவே அது பாண்டு பத்திர வகையைச் சேர்ந்தது ஆகிவிடும். ஆகவே சாட்சிகள் கட்டாயமாகிவிடும்.  

இதை எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால்: புரோநோட் எழுதிக் கொடுத்தால், அதற்கு சாட்சிகள் தேவையில்லை. (ஆனாலும் நாம் சாட்சிகளின் கையெழுத்தையும் வாங்கிக் கொள்ளும் பழக்கம் வைத்திருக்கிறோம்). புரோநோட் அல்லாத பாண்டு பத்திர வாசகங்கள் இருந்தால், அதற்கு இரண்டு சாட்சிகள் அவசியம். இல்லையென்றால் அந்த பாண்டு செல்லாது என்று சட்டம் சொல்கிறது. இதுதான் புரோநோட்டுக்கும், பாண்டு பத்திரத்துக்கும் உள்ள வேறுபாடு. எனவேதான், முன்ஜாக்கிரதையாக நினைத்துக் கொண்டு புராமிசரி நோட்டுக்கும் சாட்சிகள் வாங்கிக் கொள்கிறோம்.

**


No comments:

Post a Comment