Sunday, June 21, 2020

தற்கொலை முயற்சி குற்றமா?

தற்கொலை முயற்சி குற்றமா?

இந்திய தண்டனைச் சட்டம் 1860 என்பது பழைய பிரிட்டீஸ் இந்தியா முழுமைக்கும் அமலில் இருந்த தண்டனைச் சட்டமாகும். இப்போதும் இதுவே தண்டனைச் சட்டமாக உள்ளது.

இதில், செக்சன் 309 என்பது தற்கொலைக்கு முயற்சி செய்வது தண்டனைக்கு உரிய குற்றமாகச் சொல்கிறது. அதன்படி, அவ்வாறு முயற்சி செய்தவருக்கு ஒரு வருட சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் உண்டு.

இந்த சட்டத்தை 1860-ல் கொண்டு வந்தபோது, இதை ஒரு சமுதாயக் குற்றமாகவே பார்த்தது அரசாங்கம். எவரும் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ள முடியாது. அவரவர் மதங்களும் அவ்வாறு சொல்லவில்லை என்று கருதி இதை ஒரு தண்டனை பெறும் குற்றமாக சட்டம் கருதுகிறது.

ஆனால் கால ஓட்டத்தில், இது தண்டனை பெறும் குற்றமா என்ற கேள்வி எழுப்பப் பட்டுக் கொண்டே வந்தது. ஒருவர் தான் வாழ முடியாத மன இறுக்கத்தில் இந்த முடிவை எடுக்கிறார். அவர் அதில் வெற்றி கொண்டால் அவருக்கு விடுதலை, அதில் அவர் தோற்றுவிட்டடால் அவர் மீது சட்டம் பாய்ந்து தண்டனை கொடுக்கும்.

ஆக, மனம் சார்ந்த பிரச்சனையாக இது இருக்கிறது. மன உளைச்சலில் ஒருவர் இந்த முடிவுக்குப் போனால், அரசுதான் அதற்கான மருத்துவ உதவிகளைச் செய்து அவரின் மன நிலையை மாற்றவேண்டுமே தவிர அவருக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்று பலரின் கருத்து.

எனவே இதைக் கருத்தில் கொண்டு, The Mental Healthcare Act (MHCA) 2017 என்ற புதிய சட்டத்தை கொண்டு வருகிறது. இது 2018 ஜூலை மாதத்திலிருந்து அமலுக்கு வந்தது. அதன்படி, ஒருவர் தற்கொலை முயற்சி செய்தால், அவர் மன உளைச்சலில் செய்திருந்ததாக கருதினால், அவரை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 309-ன்படி தண்டிக்கக் கூடாது என்றும், அவருக்கு தகுந்த மன-உடல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது. எனவே அப்படிப்பட்டவருக்கு தண்டனை கொடுக்க முடியாது.

ஆனாலும், இன்னும் இந்த செக்சன் 309 தண்டனைச் சட்டத்திலேயே இருந்து வருகிறதே? ஏன் அதை தண்டனை சட்டத்திலிருந்து எடுத்து விடலாமே என்ற கேள்வியும் கூடவே வருகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309 இன்னும் அப்படியேதான் இருக்கிறது. தற்கொலை முயற்சி என்றால் ஒரு வருடம் தண்டனை உண்டுதான். ஆனால், அந்த தற்கொலை முயற்சியானது, மன உளைச்சலில் செய்திருந்தால், அவருக்கு மென்டல் ஹெல்த் சட்டம் 2017-ன்படி IPC தண்டனை இல்லை என்றும், அவருக்கு உரிய சிகிச்சை மட்டும் அளிக்க வேண்டும் என்று அந்தச் சட்டத்தில் சொல்வதால், ஐபிசி இங்கு வராது.

ஆனாலும், வேறு சிலர், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பிளாக் மெயில் செய்வார்கள், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார்கள், காரியம் ஆகவில்லை என்றால் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என்று மிரட்டுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இன்னும் ஐபிசி செக்சன் 309 நடைமுறையில் தான் இருக்கிறது என்பதை அவர்கள் கவனிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனையோ, அபராதமோ, இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.

ஐபிசி செக்சன் 309-ஐ தண்டனை சட்டத்திலிருந்து எடுத்து விட்டால், இப்படிப்பட்டவர்களை தண்டிக்க முடியாமல் போய்விடும். எனவே ஐபிசி சட்டத்தில் செக்சன் 309 இருப்பது அவசியம் என்பது தெளிவாகிறது.

**


No comments:

Post a Comment