பூர்வீகச்
சொத்து எது?
தந்தையும்
இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இரண்டு மகன்களின் தாயார் ஏற்கனவே இறந்து விட்டார்.
எனவே தந்தை மற்றொரு திருமணம் செய்து கொண்டார்.
தந்தை,
மகன்களுக்குள் சொத்துப் பிரச்சனை வருகிறது. ஒரு மகன் மொத்த சொத்திலும் பங்கு கேட்டு
வழக்குப் போடுகிறான். மொத்த சொத்துக்களும் கூட்டுக் குடும்பச் சொத்துக்கள் என்று சொல்கிறான்.
ஆனால்
தந்தையோ, இரண்டு சொத்துக்கள் (நிலங்கள்) அவரின் தகப்பனார் அவருக்கு உயில் மூலம் கொடுத்த
சொத்து என்று சொல்கிறார். மற்ற சொத்துக்களை அவரே கிரயம் வாங்கிய சொத்துக்கள் என்று
சொல்கிறார். எனவே இந்த சொத்துக்கள் அனைத்தும் தந்தையின் தனிப்பட்ட சொத்துக்கள் என்றும்,
அதில் மகன்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று கூறுகிறார்.
மகன்களோ,
தந்தையின் தந்தை உயில் மூலம் அவருக்கு கொடுத்திருந்தாலும், அதுவும் பூர்வீகச் சொத்துக்கள்தான்
என்றும், அந்த சொத்துக்களின் வருமானத்திலிருந்து மற்ற சொத்துக்களை வாங்கி இருப்பதால்,
அவைகளும் பூர்வீகச் சொத்துக்கள் தான் என்றும், எனவே தந்தை, இரண்டு மகன்கள் ஆகிய மூவருக்கும்
தலா 1/3 பாகம் உண்டு என்று கோயம்புத்தூர் மாவட்ட கோர்ட்டில் 1949-ல் வழக்குப் போட்டான்.
மாவட்ட
கோர்ட் தனது தீர்ப்பில் மகன் கேட்டபடியே தீர்ப்புக் கொடுத்து விட்டது. அதாவது, தந்தைக்கு
அவரின் தகப்பனார் உயில் மூலம் சொத்துக்களை கொடுத்திருந்தாலும் அதுவும் பூர்வீகச் சொத்துக்கள்தான்
என்றும், தந்தை கிரயம் வாங்கிய சொத்துக்கள், அந்த பூர்வீகச் சொத்துக்களின் வருமானத்திலிருந்து
வாங்கியதால், அதுவும் பொதுக் குடும்பச் சொத்துக்கள்தான் என்று கூறிவிட்டது.
அதை
எதிர்த்து தந்தை சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் வழக்குப் போடுகிறார். சென்னை ஐகோர்ட்டும்,
கீழ்கோர்ட் தீர்ப்பு சரிதான் என்று சொல்லி தந்தையின் அப்பீலை தள்ளுபடி செய்து விட்டது.
எனவே
தந்தை, 1953-ல் சுப்ரீம் கோர்ட்டுக்கு எஸ்எல்பி அப்பீல் போடுகிறார். இந்திய அரசியல்
சாசனம் ஆர்ட்டிகிள் 136-ன்படி சிறப்பு அனுமதி மனு (Special Leave
Petition) மூலம் அப்பீல் செய்கிறார். அங்கு இந்தப் பிரச்சனை பலவாறு அலசப்படுகிறது.
தந்தைக்கு,
அவரின் தகப்பனார் உயில் மூலம் கொடுத்து சொத்து அவரின் தனிச் சொத்தா அல்லது பூர்வீகச்
சொத்தா என்பது கேள்வி. இது தனிச் சொத்து என்றால், அதில் வரும் வருமானங்களைக் கொண்டு
பின்னர் அவர் வாங்கிய சொத்துக்களும் அவரின் தனிச் சொத்தே ஆகும்.
ஆக
ஒருவருக்கு அவரின் தந்தை உயில் மூலம் சொத்துக் கொடுத்திருந்தால், அது அவருக்கு மட்டுமே
சொந்தமான சொத்தாக இருக்குமா? அல்லது அவரும் அவரின் மகன்களும் சேர்ந்த கூட்டுக் குடும்பச்
சொத்தாக இருக்குமா?
சுப்ரீம்
கோர்ட்:
இந்தக் கேள்விக்கு பதில்
பெறுவதற்கு இந்து சாஸ்திர சட்டமான மித்தாக்ஷரா சட்டத்தைப் பார்க்க வேண்டும்.
“ஒருவருக்கு அவரின்
தந்தை மூலம் கிடைத்த சொத்துக்களை (அசையாச் சொத்துக்களை) அவர் மட்டும் தனியே அனுபவிக்க
முடியாது; அவரும் அவரின் மகன்களும், பேரன்களும் சேர்ந்து கூட்டாவே அனுபவிக்க முடியும்.
அந்த சொத்தை அவர் தனியே விற்பனை செய்யவும் முடியாது. மகன்களின் சம்மதம் வேண்டும். தந்தையிடமிருந்து
பெற்ற அசையும் சொத்துக்களை வேண்டுமானல் மகன் தனி உரிமை கொண்டலாம். அசையாச் சொத்துக்களில்
தனி உரிமை கொண்டாடிவிட முடியாது.”
இந்த
மித்தாரக்ஷரா சட்டமானது, மதக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்டவை. எப்படியென்றால்,
இந்து குடும்பங்களில் தந்தை மகன் பேரன் இவர்களுக்குள் சொத்து ஆதரவு இல்லாமல் இருந்துவிடக்
கூடாது என்ற அடிப்படையில் இந்தக் கொள்கை வகுக்கப் பட்டது. எனவே ஒரு இந்துவுக்கு பிறந்த
மகன், பேரன், கொள்ளுப்பேரன், இனி பிறக்கும் ஆ்ண் பிள்ளைகள், தாயின் வயிற்றில் (கருவில்)
இருக்கும் ஆண் பிள்ளைகள் இவர்கள் அனைவருக்கும் பிறப்பால் அசையாச் சொத்துக்களில் பங்கு
உண்டு என்ற சட்டம் வகுக்கப்பட்டது.
ஆனாலும்,
தந்தையின் தனி சொத்துக்களை அவர் தனியே விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் மித்தாக்ஷரா
சட்டம் சொல்கிறது. அப்படியென்றால், ஒருவர் பிறப்பால் உரிமை பெற்ற சொத்தை, அவரும் அவரின்
மகன்களும், பேரன்களும், கொள்ளுப் பேரன்களும், பிறப்பால் பங்கு அடைவார்கள் என்று கருத
வேண்டும்.
அப்படிப்
பார்க்கும்போது, ஒருவர் பிறப்பால் பெற்ற சொத்தில்தான், தன் வாரிசுகளுக்கும் பிறப்பால்
பங்குரிமை உண்டு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல், அவருக்கு வேறு வகையில்
ஒரு சொத்து கிடைத்திருந்தால், அதில் அவரின் வாரிசுகள் பிறப்பால் பங்கு பெற முடியாது
என்பதே சரியாக இருக்க முடியும்.
எனவே
ஒருவருக்கு அவரின் தந்தையின் உயில் மூலம் கிடைத்த சொத்தில் அவருக்கு மட்டுமே உரிமை
கிடைக்கும் என்பதே சரியாகும். பாட்டனிடமிருந்து கிடைத்த சொத்துத்தானே என்று பேரன் உரிமை
கோரி விட முடியாது. ஆனாலும், இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகள் இதில் மாறி மாறி தீர்ப்புகள்
கூறி உள்ளன. கல்கத்தா ஐகோர்ட் 1863-ல் இப்படிப்பட்ட ஒரு வழக்கில், தந்தையிடமிருந்து
உயில் மூலம் கிடைத்த சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டு என்றும், அது பூர்வீகச் சொத்துத்தான்
என்றும் தீர்ப்பு கூறி உள்ளது. இது சரியில்லை.
மதராஸ்
ஐகோர்ட் சற்று வித்தியாசமாக, “தந்தையிடமிருந்து மகனுக்கு உயில் மூலம் கிடைத்த சொத்தை,
மகன் தனிச் சொத்தாக வைத்துக் கொள்ளலாம் என்றும், விரும்பினால், அவர் அதை பொதுச் சொத்தாகக்
கருதி தன் மகன், பேரன்களுடன் பொதுச் சொத்தாக அனுபவித்துக் கொள்ளலாம்” என்று தீர்ப்புக்
கூறியுள்ளது.
பம்பாய்
ஐகோர்ட் இதுபோன்ற ஒரு வழக்கில் “ஒருவர் அவரின் மகனுக்கு தானமாகக் கொடுத்த சொத்தை அவர்
தனிச்சொத்தாக அனுபவித்துக் கொள்ளலாம் என்றும், ஒருவேளை அந்த தானப் பத்திரத்தில் குறிப்பிட்டு,
மகனும் அவனுடைய வாரிசுகளும் பூர்வீகச் சொத்தாக அனுபவிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால்
அது பூர்வீகச்சொத்தாகும்” என்று தெளிவு படுத்தியுள்ளது. இதை அலகாபாத் ஐகோர்ட்டும் ஒப்புக்
கொண்டுள்ளது.
மித்தாக்ஷரா
சட்டப்படி, ஒருவர் தனது தனிப்பட்ட சொத்தை, அவரின் மகன்களின் சம்மதம் இல்லாமல் வெளிநபருக்கு
விற்பனை செய்யலாம்; ஒரு மகனை விட்டு விட்டு, வேறு ஒரு மகனுக்கு மட்டும் தானம் கொடுக்கலாம்;
மகன்களுக்குள் பாகம் பிரித்துக் கொடுக்கும்போது, ஒரு மகனுக்கு அதிகமாகவும், ஒரு மகனுக்கு
குறைவாகவும் பங்கு பிரித்துக் கொடுக்கலாம்.
எனவே
இதுவரை இந்தப் பிரச்சனையில் ஒரு தெளிவான தீர்ப்பு இல்லை என்பதால், ஒருவருக்கு அவரின்
தந்தை தானமாக/ செட்டில்மெண்ட் மூலம் அல்லது உயில் மூலம் கொடுத்த சொத்தில் அவருக்கு
தனி உரிமை உள்ளதா என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே
மித்தாக்ஷரா சட்டத்தில் அதன் பண்டிதரான யஞ்ஞவாக்கியர் கூற்றுப்படி, “பூர்வீகச் சொத்தில்
தந்தையும் மகனும் சம உரிமை பெறுவர் “ என்ற தத்துவத்தின்படியும், இதிலேயே, தனிச் சொத்தாகக்
கிடைத்த சொத்தை அவர் தன் மகன்களுடன் பாகம் செய்து கொள்ள வேண்டியதில்லை என்று தத்துவத்தின்
படியும், ஒருவருக்கு தனியே கிடைத்த சொத்து பூர்வீக அல்லது கூட்டுக் குடும்ப சொத்தாக
ஆகாது என்று தெளிவாகிறது.
The
foundation of the doctrine of father and son in ancestral property is the well
known text of Yagnavalkaya, which saysL “The ownership of father and son is
co-equal in the acquisitions of the grandfather, whether land, corody or chattel.”
ஆனால்,
தந்தையின் சொத்தில், ஒரு மகனுக்கு பிறப்பால், வாரிசு உரிமை மூலம் கிடைத்த சொத்தே, அவருக்கும்
அவரின் மகன்களுக்கும் கூட்டு சொத்தாக இருக்கும். ஆனால், தந்தை, அவரின் மகனுக்கு உயில்
மூலம் கொடுத்த அல்லது தானமாகக் கொடுத்த சொத்தில், அப்படி அவர் பிறப்பால் உரிமை பெறவில்லை
என்பதால், அது பூர்வீகத் தன்மையை இழந்து விடும் என்பதைக் கவனிக்க வேண்டும்.
A
good deal of confusion:
இந்த
வித்தியாசத்தை மனதில் தெளிவுபடுத்திக் கொண்டால், எது பூர்வீகச் சொத்து என்றும் எது
தனிச் சொத்து என்றும் தெளிவு கிடைத்து விடும். மித்தாக்ஷரா சட்டமும் இப்படிப்பட்ட
தனி சொத்துக்களை பற்றிக் குறிப்பிட்டு அவை மகன்களுடன் பாகப் பிரிவினைக்கு உட்படாது
என்று தெளிவு படுத்தியுள்ளது.
Mayne’s
Hindu Law:
“Excepting what is gained
by valour, the wealth of a wife, and what is acquired by science which are
three sorts of property exempt from partition.”
தானே
சம்பாதித்து வாங்கிய சொத்துக்கள், தன் மனைவியிடம் உள்ள சொத்துக்கள், தன்னுடைய விஞ்ஞானத்
திறமையால் (கல்வி மூலம்) பெற்ற சொத்துக்கள் இவைகளை தன் மகனுடன் சேர்த்து பங்கு பிரிக்க
வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறது.
எது
சுய சம்பாத்தியம்? What a Self-Acquisition is?
விஞ்ஞானேஸ்வரா
பண்டிதர் கூற்றுப்படி எது சுய சம்பாத்தியம்: தானே தன் முயற்சியால், எந்த கூட்டுக் குடும்ப
பணமோ, பக்கபலமோ இல்லாமல் பெற்ற எந்தச் சொத்தும் சுய சம்பாத்திய சொத்தே.
The
first placitum of the section defines what a “self-acquisition” is: The definition
is based upon the text of Yagnavalkya that “whatever is acquired by the
coparcener himself without detriment to the father’s estate as present from a
friend or a gift at nuptials, does not appertain to the co-heirs.”
இந்த விளக்கத்தை வைத்துப் பார்த்தால்,
தந்தையின் சொத்தை அடிப்படையாக வைத்தே (உயில் மூலமே) மகனுக்கு அந்த சொத்து கிடைத்தது.
அதாவது தந்தை அதை உயில் மூலம் கொடுத்திருக்கிறார். எனவே தந்தை உதவி செய்து கிடைத்த
சொத்து என்பதால் அது பூர்வீகச் சொத்துதானே என்ற வாதம் வருகிறது.
ஆனால்,
அதே மித்தாக்ஷரா விதிகளின்படி, (Placitum 28)
தந்தை கொடுத்த தானம் தனிச் சொத்தே என்றும், அதை அவர் தன் மகன்களுடன் பாகம் செய்து (பொதுச்
சொத்தாகக் கருதி) கொள்ளத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும்,
Mayne’s
Hindu Law விளக்கத்தின்படி, தந்தையிடமிருத்து பெற்ற தானம் பொது சொத்த
அல்ல என்று தெளிவு படுத்தியுள்ளது.
ஆனால்,
பாட்னா ஐகோர்ட்டின் முழுபெஞ்ச் தீர்ப்பு ஒன்று உள்ளது. அதன்படி, தந்தையிடமிருந்து பெற்ற
சொத்தானது, அவருக்கும், அவரின் சகோதரர்களுக்கும் வேண்டுமானால் தனிச் சொத்தாக இருக்கும்
என்றும் மற்றபடி, அவருக்கும் அவரின் மகன்களுக்கும் அது பொதுச் சொத்தாகவே இருக்கும்
என்று தீர்ப்பு கூறி உள்ளது. இது சுப்ரீம்கோர்ட் எண்ணப்படி சரியான தீர்ப்பு இல்லை என்று
நிராகரித்து விட்டது.
எனவே
இறுதியான (சுப்ரீம் கோர்ட்) தீர்ப்பாக: “தந்தையிடமிருந்து உயில், செட்டில்மெண்ட், தானம்,
இவைகள் மூலம் ஒரு சொத்து மகனுக்கு கிடைத்திருந்தால், அது அவரின் தனிச் சொத்தாகும்.
அதை பொதுச் சொத்தாகவோ அல்லது பூர்வீகச் சொத்தாகவோ கருத தேவையில்லை.“
As
the law is accepted and well settled that a Mitakshara father has complete
powers of disposition over his self-acquired property, it must follow as a
necessary consequence that the father is quite competent to provide expressly,
when he make a gift, either that the donee would take it exclusively for himself
or that the gift would be for the benefit of his branch of the family.
எனவே
தந்தை அவரின் சொத்தை மகனுக்கு தானம் கொடுக்கும் போது, “உனக்கு தனிப்பட்ட சொத்தாக வைத்துக்
கொள் என்று சொல்லி இருந்தால் அப்படியே தனிச் சொத்தா இருக்க வேண்டியது; அப்படியில்லாமல்,
உனக்கும் உன் சந்ததிகளுக்கும் கூட்டாக அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு
சொல்லியிருந்தால், பொது சொத்தாக அனுபவிக்க வேண்டியது” என்பது தெளிவாகிறது.
இந்த
கோயம்புத்தூர் வழக்கில், அவரின் தந்தை அவரின் நிலங்களை, தன் மகனுக்கு என்று 1912-ல் உயில் எழுதிக் கொடுத்துள்ளார். அவர் குடும்பத்துக்கோ,
அவரின் மகன்களுக்கோ (அதாவது உயில் எழுதியவரின் பேரன்களுக்கோ) கொடுக்கவில்லை. எனவே இது
பொதுக் குடும்பச் சொத்து ஆகாது. மகனின் தனிச் சொத்தாகும்.
அந்த
உயிலைப் படித்துப் பார்க்கும்போது, தன் மனைவிக்கு, இந்து சாஸ்திர சட்டப்படி ஒரு பங்கு
(மகனைப் போலவே) கொடுத்திருக்கிறார். நான்கில் ஒரு பங்கு சொத்தை தனது திருமணமாகாத மகளுக்குக்
கொடுத்துள்ளார். அவரின் மகன்களுக்கு கொடுத்து சொத்துக்களை அவர்களுக்கு முழு உரிமையுடன்
தனி உரிமையாகவே கொடுத்துள்ளார். இதில் எங்கும் அவர் மகன்கள் அவர்களுக்கு கிடைத்த சொத்தை
பொது சொத்தாக அவர்களின் மகன்களுடன் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை.
எனவே
முடிவாக, இந்தச் சொத்துக்கள் அவரின் தனிச் சொத்துத்தான் என்றும், அதில் அவரின் மகன்கள்
(பொது சொத்து என்று கருதி) பாகம் கோர முடியாது என்றும் தீர்ப்புக் கூறியுள்ளது.
**
No comments:
Post a Comment