Sunday, September 27, 2020

இந்து திருமணச் சட்டம் சில விளக்கங்கள்

இந்து திருமணச் சட்டம் சில விளக்கங்கள்

1960-ல் நடந்த வழக்கு:

1957-ல் சவுமியநாராயணன் என்பவர் ஜெயலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவர் ஆண்மை இல்லாதவர் (Impotent) என்று சொல்லி, இந்த திருமணத்தை ரத்து செய்யும்படி இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 12-ல் கோர்ட்டில் மனைவி மனுக் கொடுக்கிறார். கீழ்கோர்ட் அதை ஒப்புக்கொண்டு அந்தத் திருமணத்தை ரத்து (Annulment of marriage; not divorce) செய்து விடுகிறது.

பின்னர், மனைவி, தனக்குச் ஜீவனாம்சம் வேண்டும் என்று அவர் மீது இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 25-ல் வழக்குப் போடுகிறார். ஆனால் கணவனோ, “திருமணமே ரத்து ஆகி விட்டது; கணவன்-மனைவி உறவே இல்லை என்றும்; அப்படி இருக்கும்போது, இந்த ஜீவனாம்ச மனு எப்படி செல்லுபடியாகும்” என்று எதிர்க்கிறார். ஆனாலும் அவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கீழ்கோர்ட் சொல்கிறது.

அதை எதிர்த்து கணவன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அங்கு, இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 25-ன்படி “மனைவி என்ற நிலையை இழந்தவர் (a woman, who has ceased to be a wife) ஜீவனாம்சம் கேட்க முடியாது என்று உள்ளது என்று வாதம் செய்கிறார். 

ஐகோர்ட் விளக்கம்:

டைவர்ஸ் வாங்கிய பின்னரும், அந்தக் கணவன், அவனின் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம். ஆனால், அந்த மனைவி, மறு திருமணம் (Re-marriage) செய்யாமல் இருக்க வேண்டும் என்பது அதன் நிபந்தனை. 

கோர்ட் உத்தரவு மூலம், ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டிருக்கும் மனைவி, கீழ்கண்ட நிலைகளில், அவள் ஜீவனாம்சம் பெற முடியாது. 

“(1) அவள் மறு திருமணம் செய்து கொண்டால் (remarried).

(2) அவள் நடத்தை கெட்டவளாக வாழ்ந்தால் (she has not remained chaste).

எனவே டைவர்ஸ் வாங்கியவரும், திருமணத்தை வேறு காரணங்களுக்காக ரத்து செய்து கொண்டவரும், ஜீவனாம்சம் கேட்கும் உரிமை உள்ளது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. 

மூன்று வகைகளில் ஒரு இந்து திருமணத்தை ரத்து செய்யலாம்:

“(1) இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 11-ன்படி அந்த திருமணம் சட்டப்படி சரியில்லாத காரணங்களில் இருந்தால், அதாவது, பிரிவு 5(1), 5(4) & 5(5) இவைகளில் இருந்தால் அந்த திருமணம் செல்லாது (null and void) என்று கோர்ட் டிகிரி கொடுக்கலாம். 

(2) இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 12-ன்படி அந்த திருமணம் சட்டப்படி இல்லை என்று (annulment of marriage) டிகிரி கொடுக்கலாம். 

(3) இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 13-ல் சொல்லி உள்ள காரணங்களுக்காக டைவர்ஸ் டிகிரி (decree of divorce) கொடுக்கலாம். 

பிரிவு 5(1)-ல் அந்த திருமணம் நடக்கும் போது, அந்த ஆணுக்கோ, அல்லது அந்தப் பெண்ணுக்கோ ஏற்கனவே ஒரு மனைவியோ, கணவணோ உயிருடன் இருக்க கூடாது என்பது கன்டிஷன். அதை மீறினால் அப்படிப்பட்ட திருமணத்தை சட்டப்படி செல்லாது என்று null and void டிகிரியை கோர்ட் கொடுக்கும்.

பிரிவு 5(4)-ல் அந்த ஆணும் பெண்ணும் தடை செய்யப்பட்ட உறவுக்குள் இருக்க கூடாது. அதாவது அவர்கள் இருவரும் நெருங்கிய உறவாக இருக்க கூடாது. (குறிப்பாக தன்னுடைய சகோதரியை திருமணம் செய்ய முடியாது. தன்னுடைய தந்தையின் சகோதரியை (அத்தையை) திருமணம் செய்ய முடியாது). இவர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட திருமண உறவுக்குள் வருவார்கள். அப்படிப்பட்ட திருமணத்தை சட்டப்படி செல்லாது என்று nulll and void டிகிரியை கோர்ட் கொடுக்கும்.

பிரிவு 5(5)-ல் திருமணம் செய்யும் ஆண் பெண் இருவரும் சபிண்டர்களாக இருக்க கூடாது. சபிண்டா உறவு என்பது, ஒரே ரத்த உறவு ஆகும். இது தாய் வழியில் மூன்று தலைமுறைக்கும், தந்தை வழியில் ஐந்து தலைமுறைக்கும் தொடரும். ஒரே மூதாதையர் வழி வந்தவர்கள் இருவருக்கும் நடக்கும் திருமணம் தடைசெய்யபட்ட உறவு அல்லது சபிண்டா உறவு (Spandia relationship or prohibited relationship) ஆகும். (இதன்படி பார்த்தால், அத்தைமகள், மாமன்மகள், அத்தைமகன், மாமன்மகன் இவர்கள் சபிண்டா உறவு என்னும் தடை செய்யப்பட்ட உறவுக்குள் வருவார்கள். ஆனாலும், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அத்தை அல்லது மாமன் மகன் அல்லது மகளைத் திருமணம் செய்வது சமுதாயப் பழக்க வழக்கமாக சில சமுதாயங்களில் தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இதை “தொடர் பழக்க-வழக்கம்” (Custom and Usage) என்பர். இப்படி ஒரு பழக்க-வழக்கம் தொடர்ந்து வெகுகாலம் ஒரு சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தால், அதை இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 3-ல் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அது விதிவிலக்கால் செல்லுபடியாகும் திருமணம் ஆகும்).

பிரிவு 12-ன்படி கணவனோ, மனைவியோ ஆண்மை அல்லது பெண்மை அற்றவராக இருந்தால் (impotent; இந்த திருமணத்தின் போது, அந்தப் பெண் வேறு ஒருவர் மூலம் கருவுற்று இருந்தால்; இருவரில் ஒருவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தால்; அப்படி (இந்த விபரங்கள் தெரியாமல் மறைத்து நடந்த) திருமணத்தை, மற்றவர் மறுத்து விடலாம். இதை Voidable marriage அல்லது அவர் விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம், விரும்பவில்லை என்றால் அந்த திருமணத்தை இதே காரணத்தைச் சொல்லி கோர்ட் மூலம் ரத்து (anullment of marriage) செய்து கொள்ளலாம்.

இந்து திருமணச் சட்டத்தின் முக்கிய பிரிவுகள்:

பிரிவு 5-ல் ஒரு திருமணத்துக்கு என்னென்ன நிபந்தனைகள் இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. அதில், இருவருக்கும் இந்த திருமணம் நடக்கும்போது, ஏற்கனவே அவர்களுக்கு ஒரு கணவனோ மனைவியோ உயிருடன் இருக்க கூடாது; இந்த திருமணத்துக்கு சம்மதம் கொடுக்கும் அளவுக்கு மனநிலை சரியில்லாதவராக இருக்கக் கூடாது; பைத்தியமாக இருக்க கூடாது; ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்க வேண்டும்; இருவருக்கும் தடைசெய்யப்பட்ட ரத்த உறவாக இருக்க கூடாது; இருவரும் சபிண்டா உறவுக்குள் இருக்க கூடாது (இதற்கு விதிவிலக்கும் உண்டு); இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவராக இருக்க கூடாது, அதாவது இருவருமே இந்துக்களாவே இருக்க வேண்டும்.

பிரிவு 11-ல் Void Marriages செல்லவே செல்லாது என்ற திருமணங்களைப் பற்றிச் சொல்கிறது. பிரிவு 5(i), 5(iv), 5(v) இவைகளில் சொல்லி உள்ளதற்கு மாறாக செய்த திருமணங்கள் செல்லவே செல்லாது என்கிறது. 

பிரிவு 5(i)-திருமணத்தின் போது, அவர்களுக்கு வேறு கணவன் மனைவி இருக்க கூடாது. 

பிரிவு 5(iv)- தடைசெய்யப்பட்ட உறவாக இருக்க கூடாது. பிரிவு 5(v)- சபிண்டா உறவுக்குள் இருக்க கூடாது). 

பிரிவு 12-ல் Voidable Marriage (avoid this marriage) வேண்டுமானால் திருமணத்தை வெட்டிக் கொள்ளலாம் என்று சொல்கிறது. இதன்படி, யாராவது ஒருவர் இந்த திருமணம் வேண்டாம் என்று சொன்னால் ரத்து செய்து கொள்ளலாம். இல்லையென்றால், அந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டு வாழலாம் என்று சொல்கிறது. 

அதன்படி, பிரிவு 12(1)-ல் அவர்களில் யாருக்காவது ஆண்மை அல்லது பெண்மை இல்லை என்றால் (impotent), மற்றவர் விரும்பினால் பிரிந்து கொள்ளலாம், அல்லது பரவாயில்லை என்றால் சேர்ந்து வாழலாம். 

பிரிவு 5(ii)-ன்படி திருமணத்துக்கு சம்மதம் கொடுக்கும் மனநிலையில் இல்லாமல் மனநிலை சரியில்லாதவராக இருந்தால் அதை ஏற்றுக் கொண்டும் வாழலாம் அல்லது வேண்டாம் என்றால் பிரிந்து கொள்ளலாம். (ஒருவனை போதை ஏற்றிவிட்டு, அவனிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்திருந்தால், அதை அவன் பின்னர் மறுத்து இந்தப் பிரிவில் திருமண உறவை விலகிக் கொள்ளலாம்).

பிரிவு 12(2)-ல் திருமணத்தின் போது, அந்தப் பெண் வேறு ஒரு ஆணால் கர்ப்பமாகி இருந்தால், இப்போது திருமணம் செய்யும் கணவன் அதை தெரிந்தவுடன் திருமணத்தை மறுத்து விலகலாம், அல்லது ஏற்றுக் கொண்டு வாழலாம். 

ஆனால், இந்தக் காரணத்தைச் சொல்லி திருமணத்தை விலக்கும் போது (avoiding the marriage) அந்த திருமணம் நடந்து ஒரு வருடத்துக்குள் அவ்வாறு செய்ய வேண்டும். அந்த திருமணத்தின் போது, அந்த விபரம் தனக்குத் தெரியவில்லை, மறைத்து விட்டார்கள் என்றும் நிரூபிக்க வேண்டும். அதற்கு மேல் காலம் கடந்து விட்டால், அது சம்மதம் என்றே சட்டம் எடுத்துக் கொள்கிறது. அதற்குமேல் அந்த திருமணத்தை இந்த காரணத்துக்காக ரத்து செய்து விட முடியாது.







No comments:

Post a Comment