Sunday, September 27, 2020

இந்து சாஸ்திர சட்டம் (Hindu Sastric Law)

இந்து சாஸ்திர சட்டம்

Hindu Sastric Law 


இந்து சாஸ்திர சட்டத்தின் அடிப்படையே ஸ்மிருதி (Smriti) ஆகும். இந்த ஸ்மிருதியை பலவாறு வியாக்கியானம் செய்துள்ளனர். அவ்வாறு செய்தவர்களின் கொள்கைகளை இந்தியா முழுவதுமாக எல்லோரும் ஆதரிக்கவில்லை. ஒரு சில பகுதிகளில் ஒருசிலரின் கொள்கைகள் ஆதரவு பெற்றன. அதில் முக்கியமாக இரண்டு கொள்கைகள் இந்தியாவில் வேரூன்றி இருந்து வந்தன. ஒன்று மித்தாக்சரா  வியாக்கியான சட்டம் (Mitakshara Law). மற்றொன்று தயாபாக வியாக்கியான சட்டம் (Dayabhaga Law).


இதில் மித்தாக்சரா சட்டமானது  இந்தியாவின் பெரும்பகுதிகளில் பின்பற்றப் பட்டது. ஆனால் தயாபாக சட்டம் இந்தியாவில் கிழக்குப் பகுதியான பெங்கால் பகுதியில் (வங்காளப்பகுதியில்) மட்டும் பின்பற்றப்பட்டது. 


மேலும் மித்தாக்சரா வியாக்கியானச் சட்டம் மேலும் நான்கு பிரிவுகளாக ஆனது. பெனாரஸ் முறை, மிதிலா முறை, மகாராஷ்டிரா முறை அல்லது பாம்பாய் முறை, மற்றும் திராவிட முறை அல்லது மெட்ராஸ் முறை.  இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் இந்த மித்தாக்சரா சட்ட முறையானது அந்த அந்த பகுதிக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்.


இப்படி மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், இவை எல்லாம் இந்துக்களின் சொத்துக்களில் பங்குரிமை, திருமணம், மண முறிவு, தத்து எடுப்பது, வாரிசு உரிமை போன்றவற்றைப் பற்றி விளக்கி உள்ளது.


இந்த சட்டங்களைத்தான் பிரிட்டீஸ் அரசு, இந்தியாவை ஆட்சி செய்யும் போது, இந்துக்களின் சட்டமாக கொண்டு வந்தது. 


Mitakshara law


இந்த மித்தாக்சரா இந்து சட்டத்தின்படி, ஒருவருக்கு அவரின் தந்தை, பாட்டன், முப்பாட்டன் வழியில் சொத்துக்கள் வாரிசு முறைப்படி கிடைத்தால், அது அவரின் பூர்வீகச் சொத்து ஆகும். (It is an Ancestral Property or Coparcenary Property). அப்படிக் கிடைத்த பூர்வீகச் சொத்தில், அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் ஆகிய மூன்று தலைமுறையும், அவர்களின் "பிறப்பால்" பங்கு பெறுவர். இதில் பெண்களுக்கு சொத்து உரிமையே கிடைக்காது. ஆண்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுவும், பூர்வீகச் சொத்து வைத்துள்ளவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்ற மூன்று தலைமுறைக்கு மட்டுமே சொத்து கிடைக்கும். இது பிறப்பால் கிடைக்கும் சொத்துரிமை என்பதால் இதை Survivorship என்று சொல்வர். அதாவது, உயிருடன் இருக்கும்போது சொத்துரிமை இருக்கும், இறந்து விட்டால் அந்த உரிமை போய்விடும். வாரிசு முறைப்படி (Succession) அவரின் மகனுக்கு கிடைக்காது.  இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பூர்வீகச் சொத்தை வைத்திருப்பவர், அவரின் மகன், அவரின் பேரன், அவரின் கொள்ளுப்பேரன் என (சொத்து வைத்திருப்பவரையும் சேர்த்துக் கொண்டால்) மொத்தம் நான்கு தலைமுறை ஆண்கள் அந்த பூர்வீகச் சொத்தில் பிறப்பால் தலைக்கு ஒரு பங்கு உரிமை பெறுவர். கிட்டத்தட்ட ஒரு பங்கு நிறுவனத்தில் பார்ட்னர்கள் போலவே இருப்பார்கள். தந்தை, மகன், பேரன் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. எல்லோருக்கும் சம உரிமை உண்டு. இவர்கள், இந்த நான்கு தலைமுறை ஆண்களை கோபார்சனர்கள் (Coparceners) என்று இந்த மித்தாக்சரா இந்து சாஸ்திர சட்டம் சொல்கிறது. 


இந்த ஆண்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால், அவரின் பங்கு, வாரிசு முறையில் யாருக்கும் போகாது. உயிருடன் இருக்கும் மற்ற ஆண்கள் (கோபார்சனர்கள்) அந்த சொத்தை எடுத்துக் கொள்வார்கள். இது ஒரு இந்து கூட்டுக்குடும்பம். கோபார்சனர்கள் உயிருடன் இருக்கும் போது, இந்த சொத்தில், யாருக்கு எவ்வளவு பங்கு என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தந்தை இறந்துவிட்டால், அடுத்த மூன்று தலைமுறை இந்த சொத்தை அனுபவிக்கும். மகன் இறந்து விட்டால், அவரிலிருந்து அதற்கு அடுத்த மூன்று தலைமுறை சொத்தை அனுபவிக்கும். இப்படி இது ஒரு தொடர்கதை மாதிரி போய்க்கொண்டே இருக்கும். இதைத்தான் இந்து கோபார்சனரி சொத்து அல்லது பூர்வீகச் சொத்து (Hindu Coparcenary Property or Hindu Ancestral Property or Hindu Joint Family Property) என்று பலவாறு சொல்லப்படுகிறது. ஆனால் சட்டத்தில் இதன் பெயர் கோபார்சனரி சொத்து என்றே பெயர். 


இந்த கோபார்சனரி சொத்து முறை (அதாவது உயிருடன் இருக்கும் நான்கு தலைமுறை ஆண்கள் சொத்தை அனுபவிக்கும் உரிமை) பல நூறு ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. 1956-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், புதிய சட்டம் கொண்டு வந்தனர். அதன் பெயர் இந்து வாரிசுரிமை சட்டம் 1956 (The Hindu Succession Act 1956). அதில் பெரிய மாற்றங்களை செய்துள்ளனர். அதன்படி, கோபார்சனரி சொத்துக்களின் பழைய முறையான “உயிருடன் இருக்கும் நான்கு தலைமுறை ஆண்கள் என்னும் கோபார்சனர்கள்” உயிருடன் இருப்பதால் சொத்தை அடைவார்கள் என்ற நிலையை மாற்றி, அந்த கோபார்சனரி ஆண் இறந்து விட்டால் அவரின் வாரிசுகள் (மனைவி, மகள், மகன், இறந்த மகனின் மகன்/மகள், இறந்த மகளின் மகன்/மகள்) இவர்களுக்கும் பங்கு, வாரிசு உரிமைப்படி கிடைக்க வகை செய்யப்பட்டது.


பழைய சட்டப்படி, உயிருடன் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பங்கு இருந்தது. இதை Survivorship முறை என்பர் (உயிருடன் இருந்தால் பங்கு உண்டு என்னும் முறை. ஆனால் 1956 புதிய சட்டப்படி, Survivorship முறை ஒழிக்கப்பட்டு, இறந்தவரின் வாரிசுகளுக்கு பங்கு அதாவது Succession முறைப்படி எல்லா வாரிசுகளுக்கும் (ஆண் பெண் உட்பட) உண்டு  என்று கொண்டு வரப்பட்டது. அதனால்தான், இந்த 1956 சட்டத்துக்கு Hindu Succesion Act என்றே பெயரிடப்பட்டது.

** 

No comments:

Post a Comment