Fiduciary person
ஒருவர் மற்றவருக்காக ஒரு வேலையை செய்யும் நிலையில் இருந்தால், அவரை பிடுசியரி என்று சொல்வர். அதாவது ஒருவருக்காக மற்றவர் டிரஸ்டியாக இருப்பார் என்று பொருள்.
அவ்வாறு ஒருவருக்காக மற்றவர் ஒரு வேலையைச் செய்யும்போது, அதில் ஏதாவது பணம் கிடைத்தால், அல்லது அதில் கிடைக்கும் பணத்தை அவரே வைத்துக் கொண்டால், அந்த பணத்தில் இவருக்கு உரிமை இல்லை. அந்த முதலாம் நபருக்காக, டிரஸ்டியாக இவர் வைத்துள்ளார் என்றே கருதப்படும்.
இதை இந்தியன் டிரஸ்ட் ஆக்ட் பிரிவு 88-ல் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு டிரஸ்டி, அவர் நிர்வகித்து வரும் டிரஸ்ட் சொத்தை, தன் சொந்த தொழிலுக்கு உபயோகப்படுத்தி அதனால் லாபம் சம்பாதித்தார் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு அவர் பெற்ற லாபம் அனைத்தும் அந்த டிரஸ்டுக்குத் தான் சொந்தம் (அந்த டிரஸ்டிக்கு இல்லை) என்று இந்தியன் டிரஸ்ட் ஆக்ட் பிரிவு 88 சொல்கிறது.
மற்றொரு உதாரணமாக, ஒரு பார்ட்னர், அவர் இருக்கும் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தின் பணத்தைக் கொண்டு, அந்த பார்ட்னர் பெயரில் ஒரு சொத்தை வாங்கி தனக்காக வைத்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வைத்திருக்கும் சொத்து, பார்ட்னர்ஷிப் கம்பெனிக்கே சொந்தம் என்று இந்தியன் டிரஸ்ட் ஆக்ட் பிரிவு 88 சொல்கிறது.
மற்றொரு உதாரணமாக, ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனத்தில் ஏ-யும் பி-யும் பார்ட்னர்களாக இருக்கிறார்கள். அதில் ஏ-பார்ட்னர் இறந்து விடுகிறார். ஒருவர் இறந்துவிட்டால், பார்ட்னர்ஷிப் நிறுவனம் கலைந்துவிடும். ஆனால், பி-பார்ட்னர் அதை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார். நிறுவனத்தின் எல்லா பணத்தையும், சொத்துக்களையும் அவரே வைத்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இறந்த ஏ-பார்ட்னரின் வாரிசுகளுக்காக பிடுசியரி நிலையில் (in fiduciary capacity) அவர் அதை வைத்துள்ளார் என்றே இந்தியன் டிரஸ்ட் சட்டம் பிரிவு 88 சொல்கிறது. எனவே அவர் எவ்வளவு லாபம் சம்பாதித்து, அவர் பெயரிலேயே வைத்துக் கொண்டாலும், இறந்த பார்ட்னரின் வாரிசுகளுக்காகவும் அவர் அதை வைத்துள்ளார் என்று சட்டம் கருதுகிறது.
ஒரு மைனரின் சொத்தை, அவரின் கார்டியன் அடமானம் வைத்து, அதில் கிடைக்கும் தொகையை கார்டியனே சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொண்டுள்ளார் என வைத்துக் கொள்வோம். அந்த பணத்தைக் கொண்டு அவர் என்ன செய்தாலும் அதில் கிடைக்கும் லாபம் அந்த மைனருக்குத் தான் கிடைக்கும். ஏனென்றால் அந்த கார்டியன், மைனருக்காக பிடுசியரி நிலையில் இந்த வேலைகளைச் செய்கிறார்.
மற்றொரு உதாரணமாக, பவர் ஆப் அட்டானியாக செயல் படும் நபர், சொத்துக்காரருக்கு ஒரு சிறு தொகையை கொடுத்து விட்டு, மற்ற லாபத்தை அவர் அடைந்து கொண்டார் என வைத்துக் கொள்வோம். அந்த லாபம் முழுக்கு சொத்துக்காரருக்குத்தான் கிடைக்கும். பவர் ஏஜெண்ட் பிடுசியரி நிலையில் சொத்துக்காரருக்காக வேலை செய்பவர். வேலைக்கு கூலி மட்டுமே உண்டு. அடுத்தவர் சொத்தில் கிடைக்கும் லாபத்தை அடைய முடியாது என்று இந்தியன் டிரஸ்ட் சட்டம் பிரிவு 88 சொல்கிறது.
ஆக, மற்றவருக்காக ஒரு வேலையைச் செய்யும்போது, அதன் பலனை இவர் எடுத்துக் கொள்ள முடியாது. அப்படியே எடுத்துக் கொண்டாலும், அது அந்த உரிமையாளருக்கே போய் சேர வேண்டும் என்று இந்த டிரஸ்ட் சட்டம் சொல்கிறது. அதாவது, அவருக்காக இவர் வேலை செய்கிறார் அவ்வளவே.
ஸ்ரீகிருஷ்ணன், “நீ உன் கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என்று சொல்வதும், இந்த இந்தியன் டிரஸ்ட் ஆக்ட் பிரிவு 88-ஐ தான் குறிப்பிடுகிறார் போலும்.
**
No comments:
Post a Comment