Fiduciary person
நம்பகத்தன்மை கொண்டவர்
(சட்டத்தால் நம்பகத் தன்மை கொண்டவராக கருதப்படுபவர்)
இப்படிப்பட்ட நம்பகத்தன்மை கொண்டவரின் செயல், தன்னை நம்பியவரை கைவிடக் கூடாது என்பதே சட்டம்.
Indian Trust Act 1882:
இந்திய டிரஸ்ட் சட்டம் 1882-ன் பிரிவு 88-ல் யார் யார், யார் யாருக்கு, நம்பகத்தன்மை கொண்டவராக (Fiduciary relationship) இருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது.
ஒரு டிரஸ்ட்டி (Trustee), அதன் பயனாளருக்கு (Beneficiary) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
கார்டியனாக இருப்பவர் (Guardian), அவரின் மைனருக்கு (ward) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
ஒரு எக்சிகியூட்டர் (Executor), தனது லிகேட்டிக்கு (Legatee) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். உயிலை நிறைவேற்றுபவர் எக்சிகியூட்டர், அந்த சொத்தை அடைபவர் லிகேட்டி.
ஒரு பார்ட்னர், மற்றொரு பார்ட்னருக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
ஒரு ஏஜெண்ட், தனது பிரின்சிபலுக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
ஒரு கம்பெனியின் டைரக்டர், அந்த கம்பெனியின் ஷேர் ஹோல்டர்களுக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
ஒரு வக்கீல், தனது கட்சிக்காரருக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
உதாரணமாக:
ஒரு உயிலை, அதன் எக்சிகியூட்டர் நிறைவேற்றுவதற்காக, அந்த சொத்தை பெறுபவரிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி விடுகிறார். அது தவறு. அவரை நம்பியதால், அவர் ஏமாற்றி குறைந்த விலைக்கு வாங்கி விட்டார். வித்தியாசப் பணத்தை கொடுக்க வேண்டும்.
ஒரு டிரஸ்ட்டில் உள்ள சொத்தை, ஒரு டிரஸ்ட், தன் சொந்த வியாபாரத்துக்கு பயன்படுத்தி நன்மை அடைகிறார். அதன் பலனை பயனாளிகளுக்கு கொடுக்கவில்லை. அது தவறு. அந்த பணம் பயனாளிக்கு சேர வேண்டும்.
ஒரு டிரஸ்டி, தான் பதவி விலகி விடுவதாகவும், அதற்கு பலனாக, அடுத்து வரும் டிரஸ்டியிடம் பணம் பெற்றுக் கொள்கிறார். இது தவறு. அந்த பணம் டிரஸ்டுக்கு சேர வேண்டும்.
ஒரு பார்ட்னர், பார்ட்னர்ஷிப் வியாபார பணத்தைக் கொண்டு, தன் பெயரில் ஒரு சொத்தை வாங்கி விடுகிறார். இது தவறு. அந்த சொத்து, பார்ட்னர்ஷிப் கம்பெனியின் சொத்து ஆகி விடும்.
இருவர் பார்ட்னர்ஷிப் வியாபாரம் நடத்தி வருகிறார்கள். அதில் ஒருவர் இறந்து விடுகிறார். பார்ட்னர்ஷிப் சட்டப்படி இந்த நிறுவனத்தை கலைத்து விட வேண்டும் (winding up the partnership business). ஆனால் உயிருடன் இருக்கும் பார்ட்னர் மட்டும் அந்த வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இது தவறு. இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அதில் பங்கு உண்டு.
ஒரு பிரின்சிபல் ஒரு சொத்தை வாங்குவதற்காக, தனது ஏஜெண்டை நியமிக்கிறார். ஆனால் அந்த ஏஜெண்ட், அந்த சொத்தை தன் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொள்கிறார். இது தவறு. நம்பகத்தன்மையை மீறி விட்டார். அப்போதும், அந்த சொத்து, பிரின்சிபலுக்கு சேர வேண்டிய சொத்துத்தான். ஏஜெண்ட் அனுபவிக்க முடியாது.
ஒரு கார்டியன், தனது மைனருக்காக அவரின் சொத்தை விற்க நினைக்கிறார். ஆனால், அந்த சொத்தை குறைந்த விலைக்கு தானே தன் பெயரில் வாங்கிக் கொள்கிறார். இது தவறு. மீதி உள்ள பணத்தை அந்த கார்டியன் கொடுக்க வேண்டும்.
ஒரு வக்கீல், தனது கட்சிக்காரரின் சொத்த கோர்ட் ஏலத்துக்கு வரும்போது, அதில் கலந்து கொண்டு, குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து விடுகிறார். இது தவறு. கோர்ட் ஏலத்துக்கு வராமல் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர், அந்த சூழ்நிலையை பயன்படுத்தி, தனக்கு லாபம் தேடுவது தவறு. அப்படி வாங்கியது செல்லாது.