Saturday, August 2, 2014

புரோ நோட்

புராமிசரி நோட் அல்லது புரோ நோட்

அவசரத்துக்கு கடன் வாங்குவதற்கு இந்த புரோ-நோட்டைத் தான் எழுதிக் கொடுக்க வேண்டும். Promise செய்து எழுதிக் கொடுத்த நோட்டை Promissory Note என்று சொல்வர்.

பழைய காலத்தில், "IOU" (or) 'I owe you'  அல்லது "நான்  உனக்கு கடன் பட்டிருக்கிறேன்" என்று சுருக்கமாக எழுதிக் கொடுப்பார்களாம். இன்றும் கிட்டத்தட்ட அதே நடைமுறைதான்  பின்பற்றப்படுகிறது.

அதாவது, "On Demand, I (name) promise to pay Mr. (name) Rs…  with interest" என்று எழுதப்பட்டிருக்கும். இது அச்சிடப்பட்ட காகிதமாக கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒருரூபாய்க்கு  ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்துச் செய்து கொடுத்து கடன் வாங்கிக் கொள்வார்கள். அவசரத்துக்கு கடன் வாங்கிக் கொள்ள உதவுவதால், இதை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்ளத் தேவையில்லை என்பதால், வெள்ளை பேப்பரில் எழுதி அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் மட்டுமே ஒட்டிக் கொண்டால் போதும் என்ற சட்டம் உள்ளது. ஸ்டாம்ப் பேப்பரில் எழுதக் கூடாது. ஆனாலும், பலர் இதை ஸ்டாம்பு பேப்பரில் எழுதினால், நல்லது என்றும், மதிப்பு அதிகம் இருக்கும் என்றும் நினைத்து எழுதுகிறார்கள். இது தவறு.

இந்த புராமிசரி நோட்டில் மேற்சொன்ன உறுதிமொழியைத் தவிர வேறு வாசகங்கள் இடம்பெறக் கூடாது. அப்போதும் இந்த புராமிசரி நோட்டு சட்டப்படி செல்லாததாகிவிடும். வேறுசிலர், 'இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், சொத்தின்மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும், காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் 'என்றும் மிரட்டல்போல எழுதி வாங்கிக் கொள்வார்கள். அப்படி எழுதி இருந்தாலும் அது செல்லாது.

புரோநோட் கடனில், பணத்தை வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், அவர்மீது சிவில் கோர்ட்டில் மட்டுமே வழக்குப் போடமுடியும். காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்க முடியாது. ஆனாலும் சிலர் போலீஸில் புகார் கொடுத்தால் சுலபமாக வசூல் செய்துவிடலாம் என்று கருதி புகார் கொடுக்கிறார்கள். அந்த புகாரை போலீஸ் விசாரிக்கவே அதிகாரம் கிடையாது.

இந்த புராமிசரி நோட்டில் உள்ள முதல் வாசகம் "On Demand" என்று இருக்கும். அதற்கு 'கேட்கும்போது' திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அர்த்தம். எனவே அந்த புராமிசரி நோட்டில் 3 மாதத்தில் அல்லது 6 மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் பணத்தை திருப்பித் தருகிறேன் என்றெல்லாம் எழுதக் கூடாது. ஆண்டிமாண்ட் என்ற வார்த்தையே போதுமானது.

ஒரு புராமிசரி நோட்டுக்கு அதிலுள்ள தேதியிலிருந்து மூன்று வருடத்திற்கு மட்டுமே மதிப்பு இருக்கும். அதற்குப்பின் அதுவே காலாவதி ஆகிவிடும். காலாவதியான புராமிசரி நோட்டை ஒன்றும் செய்ய முடியாது. அதைக் கொண்டு பணம் வசூல் செய்யவும் முடியாது. அதற்கு உயிர் உண்டாக்க வேண்டும் என்றால், பணம் வாங்கியவரே அதில் மறுபடியும் கையெழுத்துச் செய்து கொடுக்க வேண்டும்.

புராமிசரி நோட்டில் ஒருரூபாய்க்கான ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினாலே போதும். அதில் எவ்வளவு பணத்துக்கு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். பணத்துக்கு ஏற்ப ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. எல்லா பணத்துக்கும் ஒரே ஒருரூபாய் ரெவின்யூ ஸ்டாம்புதான்.

புராமிசரி நோட்டுக்கு சாட்சி யாரும் தேவையில்லை. இருந்த போதிலும், அதில் சாட்சியும் வாங்கிக் கொள்கின்றனர். தவறில்லை. சாட்சிகள் அவசியம் இல்லை என அந்த சட்டம் கூறுகிறது.

திருப்பிக் கொடுக்கும் சக்தி இருப்பவருக்கு மட்டும் கடன் கொடுத்தால் திருப்பி வசூல் செய்து கொள்ளலாம். அந்த வசதி இல்லாதவருக்குக் கொடுத்தால், எந்த கோர்ட்டுக்குப் போனாலும் வசூல் செய்ய முடியாது. பணம் இருப்பவரிடம்தான் கோர்ட்டும் வசூலித்துக் கொடுக்கும். சொத்தோ, பணமோ இல்லாதவரிடம் எதை வசூலிப்பது? எனவே கடன் கொடுப்பவர்களும் இதை கருத்தில் கொள்ளவேண்டும்.

.

No comments:

Post a Comment