Thursday, December 27, 2018

சிறப்புத் திருமணச் சட்டம் 1954


சிறப்புத் திருமணச் சட்டம் 1954
The Special Marriage Act, 1954
இது ஏற்கனவே இதே போல இருந்த சட்டமான சிறப்புத் திருமணச் சட்டம் 1872-ஐ ரத்து செய்து, புதிதாக 1954-ல் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
1954-ன் சிறப்பு திருமணச் சட்டத்தில் மொத்தம் 51 பிரிவுகள் உள்ளன.
பொதுவாக, மதம் சார்ந்த திருமணங்கள்தான் நடக்கும். அதாவது ஒரு இந்து ஆணும் இந்து பெண்ணும் திருமணம் செய்து கொள்வர். அது இந்து முறைப் படியான திருமணம் ஆகும். அதற்கு இந்து முறைப்படியான சட்டமான “இந்து திருமணச் சட்டம் 1955”-ல் உள்ளபடி செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல ஒரு கிறிஸ்தவ ஆணும், ஒரு கிறிஸ்தவ பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அது கிறிஸ்தவ முறைப்படியான திருமணம்.  அதற்குறிய சட்டப்படி அதைச் செய்து கொள்ள வேண்டும். இது The Indian Christian Marriage Act, 1872. இது கொச்சின், மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர் தவிர மற்ற இந்தியாவின் பகுதிகளுக்குச் செல்லுபடியாகும்.
அதேபோல, ஒரு முஸ்லீம் ஆணும், ஒரு முஸ்லீம் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அது முஸ்லீம் மதச் சட்டப்படியே நடக்கும். அது ஷரியத் சட்டம் 1937-ன்படி செல்லுபடியாகும். The Muslim Personal Law (Shariat) Application Act, 1937.
ஆனால் – இங்கு ஒரு மதத்தைச் சேர்ந்த ஆணும், வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள நினைத்தால், அவர்களுக்கு என்று வேறு ஒரு சட்டத்தில் திருமணம் செய்ய வேண்டுமே தவிர, அவரவர் மதச் சட்டப்படி திருமணம் செய்ய முடியாது. இதை கலப்பு மதத் திருமணம் எனலாம். இந்தச் சட்டத்துக்குப் பெயர் The Special Marriage Act, 1954.
இந்த சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ன்படி கலப்புத் திருமணம் செய்து கொள்ள நினைத்தால் கீழ்காணும் நிபந்தனைகள் இருக்க வேண்டும்.
1)     இருவருக்கும் ஏற்கனவே கணவனோ, மனைவியோ இருக்க கூடாது.
2)     இருவரும் சம்மதம் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும்; மனநிலை பிறழ் நோய் இருக்க கூடாது.
3)     ஆணாக இருந்தால் 21 வயது முடிந்திருக்க வேண்டும்; பெண்ணாக இருந்தால் 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
4)     இருவரும் தடை செய்யப்பட்ட உறவுக்குள் இருக்க கூடாது. (தடை செய்யப்பட்ட உறவு என்பது இருவரின் தாய்-தகப்பன் அவர்களின் மூதாதையர் ஒரே வழியில் இருக்க கூடாது; அதாவது தாய் மாமன் மகள் தடை செய்யப்பட்ட உறவு. அத்தை மகன் தடை செய்யப்பட்ட உறவு; ஆனாலும் ஒரு பகுதியில் இப்படியான உறவுகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தால், அவர்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு; குறிப்பாக தமிழ்நாட்டில், அத்தைமகன், மாமன் மகள் இவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கும் உள்ளது; இது இந்தச் சட்டப்படி தடை செய்யப்பட்ட உறவுதான்; ஆனாலும், இது காலம் காலமாக நடைமுறையில் இருப்பதால், இந்தச் சட்டத்திலிருந்து இதற்கு விதிவிலக்காக எடுத்துக் கொள்ளலாம். எனவே இப்படிப்பட்ட திருமணமும் சட்டப்படி செல்லும்).
ஏதாவது ஒரு இடத்தில் இவர்கள் இந்தச் சட்டப்படி திருமண நிகழ்ச்சியை நடத்தி இருந்தாலும், இந்தச் சட்டப்படி, அதை பதிவு செய்யும் அதிகாரி முன்பு (பொதுவான பத்திரம் பதிவு செய்யும் அதிகாரியே இதற்கும் அதிகாரி), மனுக் கொடுத்து, 30 நாட்கள் காத்திருந்து, ஆட்சேபனை ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து, 30 நாள் முடிவில், இவர்கள் இருவரும் பதிவாளர் முன் ஆஜராகி, ஒருவரை ஒருவர் கணவர்-மனைவியாக ஏற்றுக் கொள்ளுகிறோம் என்று மூன்று சாட்சிகள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்து, அதன் பின்னர் அந்தத் திருமணத்தை பதிவு செய்து கொண்டால் மட்டுமே, இந்த திருமணம் செல்லும்.
இந்த திருமணத்தின் படி பதிவு செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு, அவரவர் மதம் சார்ந்த சட்டம் வராது. குழந்தைகளை வளர்ப்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களின் காலத்துக்குப் பின்னர், அவர்களின் சொத்துக்கள், அவரவரின் மதம் சார்ந்த சட்டத்தின்படி போகாது. இப்படித் திருமணம் செய்து கொண்டவர்களின் சொத்துக்களில், அவர்களின் வாரிசுகள், இந்தியன் சக்சஷன் சட்டம் 1925 The Indian Succession Act, 1925 சட்டத்தின் படியே வாரிசுகளுக்கு சொத்து போய் சேரும். இந்தியன் சக்சஷன் சட்டம் 1925 என்பது குறிப்பாக கிறிஸ்தவர்களுக்காக ஏற்பட்ட சட்டம். அதன்படியே தான் சொத்தின் வாரிசு உரிமை அமையும். அவரவர் சார்ந்த மத சட்டப்படி அமையாது.
இந்து கூட்டுக் குடும்பத்தில் ஒரு கோபார்சனராகவோ, அல்லது குடும்ப உறுப்பினராகவோ இருந்தவர், இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி வேறு ஒரு மதத்தின் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால், அன்றுடன், அந்த நபர், இந்து கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர் என்ற உறவை இழப்பார். இந்து கூட்டுக் குடும்பத்தில் உள்ள உரிமைகள் கிடைக்காது. ஆனாலும், அவருக்கு இந்த குடும்பத்தில் இருந்து கிடைக்கும் சொத்துரிமை கிடைக்கும். அது தடை ஆகாது. (The right of succession to any property as a person to whom the Caste Disabilities Removal Act, 1850 applies).
மேலும் ஒரு சிறப்பு திட்டமாக – ஒரு இந்து ஆணும், ஒரு இந்து பெண்ணும், இந்து திருமணச் சட்டம் 1955-ன்படி திருமணம் செய்யாமல் – இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின் படி திருமணம் செய்து கொண்டால், (அதாவது ஒரு இந்து ஆணும் ஒரு இந்து பெண்ணும் சிறப்பு திருமண சட்டத்தில் திருமணம் செய்து கொண்டால்) அவர்களுக்கு சலுகையாக அவர்கள் இருவரின் இந்து வாரிசு உரிமை சட்டமே செல்லும் என்று சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்தச் சட்டத்தில் சொல்லி உள்ள “இந்தியன் சக்சஷன் சட்டம் 1925” ன்படி வாரிசுகளுக்கு சொத்து பிரிக்க தேவையில்லை. இந்து சட்டப்படியே சொத்துக்களை பிரித்துக் கொள்ளலாம்.
இந்த சிறப்புத் திருமணச் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியர், ஒருவருடன் ஒருவர் வாழாமல் விலகினால், சேர்ந்து வாழும்படி கோர்ட்டில் மனு கொடுத்து சேர்ந்து வாழலாம். நிரந்தரமாக பிரிந்து வாழ நினைத்தால் (டைவர்ஸ் வாங்காமல்) அதற்கும் கோர்ட்டில் மனுச் செய்து பிரிந்தும் வாழலாம். ஆனால் அதற்கு டைவர்ஸ் வாங்குவதற்கு உரிய சட்ட காரணங்கள் இருக்க வேண்டும். பிரிந்து வாழும் காலத்தில் இருவரும் உடலுறவுக்கு அவசியம் இல்லாமல் போகிறது. அவ்வளவே. ஒருவரை ஒருவர் கட்டாயப் படுத்த முடியாது.
மற்றபடி, எல்லாத் திருமணச் சட்டங்களிலும் உள்ளபடியே இதற்கும் டைவர்ஸ் வாங்குவதற்கு காரணங்கள் கூறி டைவர்ஸ் வாங்கிக் கொள்ளவும் முடியும்.
பொதுவாக, இருவர் திருமணம் செய்து கொள்ளும் போது, வயது, சம்மதம், தீராத நோய் இல்லாமல் இருப்பது, மனநிலை பாதிக்காமல் இருப்பது, உடலுறவுக்கு தகுதி இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால், இந்த திருமணத்தை செல்லாது என கோர்ட் அறிவிக்க இயலும். இதில் சில காரணங்களால் திருமணமே செல்லாது Void marriage எனலாம். சில காரணங்களால் ஒருவர் மட்டும் திருமணத்தை ஏற்கவில்லை voidable marriage எனலாம்.
இப்படியான ஒரு சூழ்நிலையில், Void marriage மூலம் ஏற்கனவே அவர்களுக்கு குழந்தை பிறந்தால், திருமணமே செல்லாது என்பதால், அதில் பிறந்த குழந்தையும் சட்டபூர்வ குழந்தையாக இருக்காது. எனவே அவர்களுக்கு யார் தகப்பன், யார் தாய் என்ற ஒரு கேள்விக்குறி ஏற்படும். அதைத் தடுக்க, இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தில் பிரிவு 26-ஐ சிறப்பாகச் சேர்த்திருக்கிறார்கள். அதன்படி, திருமணம் செல்லாது போனாலும், அதில் பிறக்கும் குழந்தைகள் சட்டபூர்வமான குழந்தைகளே என்றும், அவர்களுக்கும் சட்டப்படியான எல்லா உரிமைகளும் அவர்களின் பெற்றோரிடமிருந்து கிடைக்க வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. இல்லையென்றால், அவர்களை அனாதை குழந்தைகள் ஆகி விடுவார்கள் என்று சட்ட வல்லுநர்கள் கருதுவதால் இந்த ஏற்பாடு.
இதை ஒரு சட்டம் மூலமாகவே அங்கீகரித்துள்ளனர். அந்தச் சட்டம் The Marriage Laws (Amendment) Act, 1976 என்பதாகும். இது எல்லா மதம் சார்ந்த திருமணத்தின் மூலம் இப்படிப்பட்ட நிலை ஏற்படும்போது, இந்த சட்டம் அப்படிப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்க செய்யப்பட்ட ஒரு சிறப்பு ஏற்பாடாகும். 1976-ல்தான் இது கொண்டு வரப்பட்டது.
இந்த சிறப்புத் திருமணச் சட்டத்திலும், (இந்து திருமணச் சட்டத்தில் உள்ளது போலவே) இருவரின் சம்மதத்துடன் டைவர்ஸ் வாங்கிக் கொள்ள வழி உண்டு. அது பிரிவு 28-ல் சொல்லப்பட்டுள்ளது. (இந்து திருமணச் சட்டத்தில் அது பிரிவு 13பி-ஆகச் சொல்லப்பட்டுள்ளது). இதற்கும் திருமணம் முடிந்து ஒருவருடம் ஆகி இருக்க வேண்டும். அப்போதுதான் மனு போட முடியும். மனு தாக்கல் செய்து, ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். பின்னர்தான் Divorce by mutual consent வாங்க முடியும்.
இங்கும், மற்ற மதச் சட்டங்களில் உள்ளது போலவே ஜீவனாம்ச உரிமையும் பெறலாம். குழந்தைகளின் வளர்க்கும் பொறுப்பையும் Custody of children பெறலாம்.
**

புரோ நோட்டு சட்டம்



புரோ நோட்டு சட்டம்
புரோ நோட்டு என்பதை புராமிசரி நோட்டு (Promissory Note) என்பர்.
இதை I Promise to pay you.   I owe you” (or) “I O U” என்பர்.
“நான் உங்களுக்கு பணம் கொடுக்க உறுதி அளிக்கிறேன்” என்பதே புராமிசரி நோட்டு.
ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்து அவசரத்துக்கு கடன் வாங்குவதை ஊக்குவிக்க இந்த முறையை உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பின்பற்றுகின்றனர். இது வியாபார கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்போது உதவியாக இருந்தது.
இரண்டு அறிமுகமான வியாபாரிகள் ஒருவருக்கு ஒருவர், “வரும் நபரிடம் பணம் கொடுக்கும்படி” எழுதிக் கொடுக்கும் சீட்டுக்கு “உண்டி” என்று பெயர்.
ஒரு நம்பிக்கைக்கு உரிய வாடிக்கையாளர், தனது பாங்குக்கு “எனது சீட்டைக் கொண்டு வரும் நபரிடம் பணம் கொடுக்கவும்” என்று எழுதிக் கொடுப்பதை பில் அல்லது பில் ஆப் எக்சேன்ஸ் Bill of Exchange என்பர். இது இரண்டு வியாபாரிகளுக்கு உள்ளும் நடக்கும்.
“என் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து, இந்த சீட்டில் குறிப்பிட்டு இருக்கும் தொகையை, இதைக் கொண்டு வரும் நபரிடம் கொடுக்கவும்” என்று எழுதிக் கொடுப்பதை செக் என்னும் காசோலை Cheque என்பர்.
ஆக இது எல்லாமே பணம் கொடுக்கச் சொல்லும் அதிகாரச் சீட்டுகள். அதேபோல், புரோ நோட்டடும், “நான் உங்களுக்கு பணம் கொடுக்கிறேன்” என்று எழுதிக் கொடுத்த உறுதிச் சீட்டுதான்.
இவை எல்லாமே ஒரு அவசர தேவைக்கோ, வியாபார வசதிக்கோ, கொடுக்கல் வாங்கலில் பண பறிமாற்றத்துக்கோ, அன்றாட நடைமுறையில் இருந்து வரும் உறுதிச் சீட்டுக்கள்.
அரசும், ரிசர்வ் வங்கியும் கொடுத்திருக்கும் நாம் அன்றாடம் உபயோகிக்கும் கரென்சி நோட்டும் ஒருவகையில் உறுதிச் சீட்டுத்தான். (RBI வங்கியின் கவர்னர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த உறுதிச் சீட்டு; அதாவது இந்த சீட்டைக் கொண்டுவரும் நபருக்கு, அதில் குறிப்பிட்டுள்ள தொகைக்கு மாற்றுப் பொருள் கொடுக்கலாம் என்று எழுதிக் கொடுத்த உறுதிச் சீட்டு).
இவை எல்லாவற்றையும் சட்டத்தில் ஒழுங்கு படுத்தி, அதற்கான சட்டமாக The Negotiable Instruments Act, 1881 என்று பெயர். 1881லிலேயே இந்தியாவில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. இந்தச் சட்டத்தில் 17 அத்தியாயங்களில் 148 பிரிவுகள் (148 Sections in 17 Chapters) உள்ளன.
1)     Preliminary (Sec.1 to 3)
2)     Notes, Bills, Cheques (Sec.4 to 25)
3)     Parties to Notes, Bills, Cheques (Sec.26 to 45A)
4)     Negotiation (Sec.46 to 60)
5)     Presentment (Sec.61 to 77)
6)     Payment and Interest (Sec.78 to 81)
7)     Discharge from Liability on Notes, Bills, and Cheques (Sec.82 to 90)
8)     Notice of Dishonour (Sec.91 to 98)
9)     Noting and protest (Sec.99 to 104A)
10)  Reasonable time (Sec.105 to 107)
11)  Acceptance and payment (Sec.108 to 116)
12)  Compensation (Sec.117)
13)  Special Rules of evidence (Sec.118 to 122)
14)  Crossed Cheques (Sec.123 to 131A)
15)  Bills in sets (Sec.132 and 133)
16)  International Law (Sec.134 to 137)
17)  Penalties in case of dishonour (Sec.138 to 148)
முதலில், மக்களிடம் பண்ட மாற்றுமுறை இருந்தது. பின்னர் அரசர்கள், தங்கள் முத்திரையுடன் கூடிய தங்கம், வெள்ளி, பித்தளை, தோல், இவற்றின் அடையாள வில்லைகளை உறுதிச் சீட்டாக கொடுத்தார்கள். இது பொதுவாக எல்லா மக்களிடமும் புழக்கத்தில் இருந்தது. வியாபாரிகள் தங்களுக்கு வசதியாக உண்டி என்னும் சீட்டுக்களை அவர்களுக்கு மட்டுமே உபயோகித்துக் கொண்டார்கள். காலம் மாற மாற வேறு வேறு முறைகள் வந்து விட்டன. உண்டி, புரோநோட், பில், கரென்சி நோட்டு இவைகள் புழக்கத்தில் வந்த காலத்தில், அவைகளின் நடைமுறையை ஒழுங்குபடுத்த, இந்த Negotiable Instrument Act 1881 வந்தது. இதை சாதாரண மொழியில் சொன்னால், கொடுக்கல்-வாங்கல் சீட்டுக்களின் சட்டம் எனலாம்.
Promissory Note என்பது ஒருவர், மற்றவருக்கு பணம் கொடுப்பது உறுதி செய்து எழுதிக் கொடுத்த சீட்டு. (எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுப்பதாக).
Bill of Exchange என்பது இந்த சீட்டை கொண்டுவரும் நபரிடம் இந்த தொகையை கொடுக்கும்படி, ஒரு குறிப்பிட்ட நபருக்கு எழுதிக் கொடுக்கும் சீட்டு.
Cheque என்பது இதுவும் ஒரு பில் ஆப் எக்சேன்ஸ் போலவே இருக்கும். ஆனால், ஒரு வங்கிக்கு, இந்த சீட்டைக் கொண்டுவரும் நபரிடம் பணம் கொடுக்கும்படி எழுதிக் கொடுக்கும் சீட்டு.
மேலே சொன்ன இந்தச் சீட்டுக்களில், அதை வைத்திருப்பவர் மேல் எழுத்துச் செய்து வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி பணம் கொடுக்கச் சொல்லலாம். ஆகையால்தான் இவை எல்லாமே Negotiable Instrument மாற்றிக் கொள்ளும் சீட்டு என்ற இந்த சட்டத்தில் வருகிறது.
புராமிசரி நோட்டு:
புரோ நோட்டு அல்லது புராமிசரி நோட்டு என்பதை ஒரு சாதாரண பேப்பரில் “நான் உங்களுக்கு பணம் கொடுக்கிறேன்” என்று மட்டுமே எழுதிக் கொடுக்க வேண்டும். வட்டியுடன் கொடுக்கிறேன் என்றும் எழுதிக் கொள்ளலாம். வேறு எந்த நிபந்தனைகளும் அதில் எழுதி இருக்கக் கூடாது. நிபந்தனை, அக்ரிமெண்ட் ஏதும் இல்லாமல் எழுதிக் கொடுத்தால்தான் அது புரோ நோட்டு. “நான் பணம் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் எனது சொத்தை எடுத்துக் கொள்ளலாம்” என்பது போன்ற வார்த்தைகள் அதில் வரக்கூடாது. அப்படி ஏதாவது இருந்தால் அதை பாண்டு Bond என்பர். அதாவது அக்ரிமெண்ட் என்னும் உடன்படிக்கைகள் இருந்தால் அது பாண்டு. அதை புரோ நோட்டு வகையில் சேர்க்க முடியாது. புரோ நோட்டுக்கு எந்த நிபந்தனையும் இருக்க கூடாது. Unconditional undertaking to pay.
ஒரு உறுதிச் சீட்டை, அது புராமிசரி நோட்டா, இல்லை அது பாண்டு வகையைச் சேர்ந்ததா என்பதை அதில் எழுதி இருக்கும் வாசகங்களைக் கொண்டுதான் முடிவுக்கு வர முடியும். எனவே நான் இதைச் செய்கிறேன், நீங்கள் அதைச் செய்யவேண்டும் என்று எழுதியதை பாண்டு என்ற வகையில் கொள்ள வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லாமல், “நான் பணம் தருகிறேன்” என்ற வார்த்தைகள் மட்டும் இருந்தால் மட்டுமே அது புரோ நோட்டு.
புரோநோட்டு என்பது அவசரத் தேவைக்கு பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதால், அதற்கு பத்திரம் என்னும் ஸ்டாம்பு பேப்பரில் எழுதத் தேவையில்லை. ஆனால் பாண்டு என்பது அக்ரிமெண்ட் போல, எனவே அதற்கு பத்திரம் என்னும் ஸ்டாம்பு பேப்பரில் எழுத வேண்டும். மேலும், புரோ நோட்டுக்கு, ரெவின்யூ ஸ்டாம்பு ஒன்று (25 பைசா மதிப்புக்கு மட்டும்) ஒட்டி அதில் கையெழுத்துப் போட்டால் போதும். எவ்வளவு பணமாக இருந்தாலும் 25 பைசா ரெவின்யூ ஸ்டாம்பு போதும். இப்போது 25 பைசா ரெவின்யூ ஸ்டாம்பு புழக்கத்தில் இல்லை என்பதால் ரு.1-க்கு உள்ள ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், பாண்டு என்பதற்கு பத்திரம் வாங்கி அதில் எழுத வேண்டும். அதில் குறிப்பிடும் பண மதிப்புக்கு 4% ஸ்டாம்ப் அளவுக்கு வாங்கி எழுத வேண்டும். எனவேதான், புரோ நோட் எழுதும் போது, அதற்குறிய வார்த்தைகள் தவிர வேறு வார்த்தைகளை உபயோகப் படுத்தக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. மேலும், புரோ நோட் என்பது, அதை எழுதி வாங்கியவர் (பணம் கொடுத்தவர்) அதை வேறு ஒருவருக்கு மாற்று முடியும். அவ்வாறு மாற்ற முடியும் தன்மை கொண்டதே புரோ நோட்டு. ஆனால், பாண்டு அவ்வாறு வேறு ஒருவருக்கு அதன் உரிமையை மாற்ற முடியாது.
புரோ நோட்டின் தன்மைகளும் அதன் சட்டங்களும்:
1)     புரோ நோட்டை சாதாண பேப்பரில் எழுதினால் போதும், அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் 25பைசாவுக்கு ஒட்டினால் போதும். எவ்வளவு பணமாக இருந்தாலும் 25 பைசா ரெவின்யூ ஸ்டாம்பே போதும்.
2)     ஸ்டாம்பின் மீது, கடன் வாங்கியவரின் கையெழுத்து இருக்க வேண்டும்.
3)     அசலையும் வட்டியையும் திருப்பிக் கொடுப்பதாக உறுதி செய்து எழுதினால் போதும். வேறு உறுதிமொழி வாசகங்கள் அல்லது உடன்படிக்கைகள் இருக்க கூடாது.
4)     தேதி இருக்க வேண்டும். எழுதிக்கொடுப்பவர் பெயர் விலாசம், கடன் கொடுத்தவர் பெயர் விலாசம், கடன் தொகை, வட்டி, இவை இருந்தால் போதும்.
5)     புரோநோட்டை எழுதும்போது தவறு இல்லாமல் எழுத வேண்டும். தவறு ஏற்பட்டால், அதற்கு பக்கத்திலும் கையெழுத்துச் செய்து அதை உறுதிப் படுத்த வேண்டும்.
6)     புரோ நோட்டுக்கு சாட்சிகள் தேவையில்லை. (எப்படி செக்குக்கு சாட்சிகள் போட மாட்டோமோ அப்படியே புரோ நோட்டுக்கும்; ஆனாலும், பழக்கத்தில் எல்லோரும் புரோ நோட்டில் சாட்சிகளின் கையெழுத்தையும் வாங்குகிறோம். அது அவசியம் இல்லை என்று சட்டம் சொல்கிறது).
7)     புரோ நோட்டின் பேரில் கடன் கொடுத்தவர், அந்த புரோ நோட்டில் பணத்தை வசூலித்துக் கொள்ள, அதை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியும். அதை made-over மேடோவர் அல்லது மேல்எழுத்து என்பர். அவ்வாறு வேறு ஒருவர் பெயருக்கு மாற்றினால், அதை கடன் வாங்கியவருக்கு தெரியப் படுத்தினால் போதும். மாற்றி வாங்கிக் கொண்டவர், அந்த புரோநோட்டுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை, கடன் வாங்கியவரிடமிருந்து வசூல் செய்து கொள்ளலாம். இதனால்தான் இது Negotiable Instrument என்று சொல்லப்படுகிறது.
8)     புரோநோட்டில் 25 பைசாவுக்கு குறைவான ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டி இருந்தால் அந்த புரோ நோட்டு சட்டப்படி செல்லாது. அதை அபராத ஸ்டாம்பு கட்டணம் கட்டினால், சரி செய்ய முடியாது (இது புரோ நோட்டுக்கு மட்டுமே இருக்கும் குறை; மற்ற பத்திரங்களில் குறைவான ஸ்டாம்பு செலுத்தி இருந்தால், அதை 10% அபராதம் கட்டி சரி செய்து கொள்ளலாம்). புரோ நோட்டில் அப்படி செய்ய முடியாது.
9)     புரோநோட்டை எழுதிக் கொடுத்த தேதியில் இருந்து மூன்று வருட காலத்துக்குள் அந்த பணத்தை வசூல் செய்ய கோர்ட்டில் வழக்குப் போடலாம். அதைத் தாண்டி விட்டால் வழக்கே போட முடியாது.
10)  புரோநோட்டின் தேதி மூன்று வருடம் என்பதால், அதற்கு முன்னர், அதில் ஏதாவது ஒரு பணத்துக்கு (அசலுக்கோ, வட்டிக்கோ) வரவு எழுதி, அந்த புரோ நோட்டை எழுதிக் கொடுத்தவரே கையெழுத்தும் செய்திருந்தால், மேலும் மூன்று ஆண்டுகளுக்குச் செல்லும். இப்படியாக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் கடன் வாங்கியவர் அதை அவ்வாறு எழுதிக் கொடுக்க வேண்டும்.
11)  புரோநோட்டின் கையெழுத்து என்னுடையதுதான் என்று கடன் வாங்கியவர் ஒப்புக் கொண்டால், அதில் பணம் கொடுத்ததை தனியே நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த புரோ நோட்டில் பணம் கொடுக்கபட்டுள்ளது என்று கோர்ட் கருத வேண்டும் என இந்தச் சட்டம் சொல்கிறது.
12)  புரோ நோட்டில் பணம் கொடுத்ததை, அவ்வாறு பணம் கொடுத்தவர் நிரூபிக்க வேண்டும். ஆனால் கடன் வாங்கியவர், புரோ நோட்டில் உள்ளது என் கையெழுத்துத்தான் என்று ஒப்புக் கொண்டால், அவ்வாறு பணம் கொடுத்ததை நிரூபிக்கத் தேவையில்லை. ஆனாலும், கடன் வாங்கியவர், “இது என் கையெழுத்து இல்லை என்றாலோ, நான் பணமே வாங்கவில்லை என்று சொன்னாலோ” பணம் கொடுத்தவர், அப்படி பணமாகக் கொடுத்ததாகவும், அவரின் கையெழுத்துத் தான் என்று நிரூபிக்கும் பொறுப்பு கடன் கொடுத்தவருக்கு உண்டு.
13)  புரோ நோட்டில் என்ன வட்டி கொடுப்பதாக ஒப்புக் கொண்டாறோ அதே வட்டியை அவர் கொடுக்க வேண்டும். ஆனால் வழக்கில் இருக்கும் புரோ நோட்டுக்கு, வழக்கு நடக்கும் காலத்தில் கோர்ட் ஒரு வட்டியை நிர்ணயம் செய்யும். அதேபோல, வழக்கு முடிந்தபின்னர் எவ்வளவு வட்டி என்பதையும் கோர்டே முடிவு செய்யும். வழக்கு முடிந்த பின்னர் உள்ள வட்டி 6% வருட வட்டி என சிபிசி சட்டம் உறுதி செய்து விட்டது. அதற்கு மேல் கேட்க முடியாது.
14)  புரோ நோட்டை On demand என்னும் கேட்கும்போது பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொள்ள வேண்டும். இன்னும் 6 மாதம் கழித்துக் கொடுக்கிறேன், ஒரு வருடம் கழித்துக் கொடுக்கிறேன் என்று எழுதி இருந்தால், அது ஆண்டிமாண்ட் புரோ நோட் வகையில் வராது. அதில் அக்ரிமெண்ட் வாசகம் வந்து விட்டதால், Otherwise than On Demand என்று வரும். அது பாண்டு ஆகிவிடும்.  அதற்கு ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டிய புரோ நோட்டு பொருந்தாது. மேலும் ஸ்டாம்ப் கட்டணம் செலுத்த வேண்டும். தவறி இருந்தால் 10% அபராத ஸ்டாம்பு கட்டணமும் சேர்த்தே கட்ட வேண்டும். அதற்கு சாட்சிகளும் அவசியம் இருக்க வேண்டும். எனவே தான், புரோ நோட்டு எழுதும் போது, காலக் கெடுவை “கேட்கும்போது” On demand என்று முதல் வரியிலேயே ஆரம்பித்து எழுத வேண்டும்.
15)  சிலர் புரோ நோட்டை ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல், ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்வார்கள். இது சட்டப்படி தவறு. ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி இருந்தாலும், அதற்கு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால்தான் அது சட்டப்படி செல்லும். கிராமங்களில், புரோ நோட்டை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்வது வழக்கமாக உள்ளது. அப்படி ஸ்டாம்ப் பேப்பரில் எழுதினால், பாதுகாப்பாக இருக்கும் என நினைக்கிறார்கள். அது தவறு. புரோ நோட்டை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதவே கூடாது. அப்படியே ஸ்டாம்ப் பேப்பரில் எழுதினாலும் அது ஒரு வெற்றுக் காகிதம் என நினைத்து, அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியே கையெழுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை கோர்ட்டில் வழக்காக தாக்கல் செய்ய முடியும். (பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டால் பிரச்சனை இல்லை; வழக்குக்கு வரும்போதுதான் அது செல்லாதது ஆகிவிடுகிறது).
**

ஜீவனாம்ச உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது


ஜீவனாம்ச உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது:
The Bombay High Court has held that even when a wife enters into an agreement with her husband waiving off her right to maintenance, the statutory right to maintenance cannot be bartered, done away with or negatived by the husband by setting up an agreement to the contrary.
Sec.125 of the Criminal Procedure Code, 1973.
கிரிமினல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 125-ன்படி, ஒருவரின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் இவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பண வசதி இல்லை என்றால், அவர்களின் மகன், கணவன், தகப்பன் என்ற முறையில் அவர்களின் வாழ்க்கை வசதிக்கு ஏற்ப ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது.
(a)    மனைவி ஜீவனாம்சம் கணவனிடம் கேட்கலாம்.
(b)   மைனர் குழந்தைகள் ஜீவனாம்சம் தகப்பனிடம் கேட்கலாம். (சட்டபூர்வ குழந்தையாக இருந்தாலும், சட்டபூர்வமற்ற குழந்தையாக இருந்தாலும்).
(c)    உடல் ஊனமுற்ற அல்லது மனநிலை பாதிப்பில் உள்ள மகன்/ மகள் ஜீவனாம்சம் கேட்கலாம் (மேஜர் வயதை அடைந்திருந்திருந்தாலும் பரவாயில்லை).
(d)   பெற்றோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தால் அவர்களும் மகனிடம் ஜீவனாம்சம் கேட்கலாம்.
இந்த ஜீவனாம்ச மனுவை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மாதம் தலைக்கு ரூ.500 வரை அவர் உத்திரவு கொடுக்கலாம். மனு கொடுத்த தேதியில் இருந்து அல்லது அவர் உத்திரவு கொடுக்கும் தேதியில் இருந்து இதை கொடுக்கும்படி உத்திரவு கொடுக்கலாம். இந்த உத்தரவை மீறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் உண்டு.
மனைவியை தன்னுடன் வந்து வாழும்படி கணவன் கேட்கலாம். ஆனால் சரியான காரணம் இல்லாமல் அவள் மறுத்தால் ஜீவனாம்சம் கிடையாது. ஆனால் அவள் கூறும் காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால், ஜீவனாம்சம் கொடுத்தே ஆக வேண்டும். அவன் வேறு ஒருத்தியுடன் வாழ்ந்தால், மனைவி வந்து வாழ மறுப்பது ஒரு சரியான காரணமே.
மனைவி, வேறு ஒருவருடன் கள்ள உறவில் இருந்தால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க அவசியம் இல்லை. கணவனும் மனைவியும் ஒப்புக் கொண்டு பிரிந்து வாழ்ந்தால் ஜீவனாம்சம் கேட்க முடியாது. ஜீவனாம்சம் வாங்கிக் கொண்டிருக்கும்போது இதுபோல நடந்தால், மாஜிஸ்டிரேட் ஏற்கனவே கொடுத்த ஜீவனாம்ச உத்தரவை ரத்தும் செய்யலாம்.
**
Sec.25 of the Hindu Marriage Act, 1955 (Permanent Alimony)
இது இல்லாமல், இந்து திருமணச் சட்டம் 1955-ல் பிரிவு 25-ல் மனைவி நிரந்தர ஜீவனாம்ச உரிமை கேட்கவும் முடியும்.
இதில் டைவர்ஸ் டிகிரி வாங்கும் போது, சிவில் கோர்ட்டில் இந்த ஜீவனாம்ச மனுவை தாக்கல் செய்யலாம். அதில் மாத ஜீவனாம்சம், அல்லது வாழ்நாள் முழுவதற்குமான மொத்த ஜீவனாம்சம் முடிவு செய்து கொடுக்கப்படும். அந்த பணத்துக்கு சொத்தினை ஒரு பொறுப்பாகவும் கொடுக்க முடியும். இதில் கொடுக்கும் உத்தரவை அவ்வப்போது நடக்கும் நிலைமையைப் பொறுத்து மாற்றி உத்தரவும் பெற முடியும்.
இந்த உத்தரவுக்குப் பின்னர், மனைவி மறுமணம் செய்து கொண்டால், ஜீவனாம்சம் வாங்க முடியாது.
Sec.24 of the Hindu Marriage Act, 1955 (Maintenance pending litigation)
கோர்ட் செலவுகளுக்கும், வழக்கு நடக்கும்போது வாழ்க்கை ஜீவனத்துக்கும் ஜீவனாம்சம் கேட்கலாம். தனக்கு தனிப்பட்ட வருமானம் ஏதும் இல்லை என்று சொல்லி இதை கேட்க வேண்டும். இப்படி வரும் மனுவை 60 நாட்களுக்குள் முடிவு எடுத்து உத்தரவு கொடுக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில், Ramesh Chander v. Veena Kaushal, AIR 1978 SC 1807, mere divorce does not end the right to maintenance. அதாவது டைவர்ஸ் டிகிரி வாங்கி விட்டதால், அவள் என் மனைவி இல்லை என்று ஜீவனாம்ச உரிமையை மறுக்க முடியாது. டைவர்ஸ் ஆன மனைவியும் ஜீவனாம்ச உரிமை பெற உரிமை உள்ளவரே. டைவர்ஸ் ஆன மனைவி, அவள் இறக்கும் வரை (அவள் மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்தால்) அவள் மனைவி என்ற சட்ட உறவு இருக்கவே செய்யும்.
**
மும்பாய் ஐகோர்ட் தற்போது நடந்த ஒரு வழக்கில் இப்படி முடிவு எடுத்துகள்ளது:
கணவனும் மனைவியும் கோர்ட் மூலம் ஒப்புதல் டைவர்ஸ் (consent divorce) செய்து கொண்டனர். அதில் மனைவி, தனக்கு ஜீவனாம்ச உரிமை ஏதும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டார்.
பொதுவாக இரண்டு பேர் ஒப்புதலுடன் ஒரு வழக்கை முடித்துக் கொண்டால், அந்த தீர்ப்பின் மீது அப்பீல் போக முடியாது என்பது சட்ட விதி.
ஆனால், இங்கு, மனைவி, தான் அப்படி ஜீவனாம்சம் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கவில்லை என்றும், தன்னை ஏமாற்றி வாங்கிய சம்மத தீர்ப்பு என்றும், எனவே அதை ரத்து செய்யும்படியும் கோர்ட்டில் மனு செய்கிறார். அதை கீழ்கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் ரிட்மனு தாக்கல் செய்கிறார். அதில் –
“ஜீவனாம்சம் வேண்டாம் என்று மனைவி சொன்னாலும், எழுதிக் கொடுத்திருந்தாலும், அல்லது அப்படி ஒரு தீர்ப்பை கோர்ட் கொடுத்திருந்தாலும், இவை அனைத்துமே செல்லாது என்றும்; மனைவிக்கு கிடைக்க வேண்டிய ஜீவனாம்ச தொகையை வேண்டாம் என்று முடிவு செய்ய பார்ட்டிகளால் சட்டப்படி முடியாது என்றும்; அப்படியே எழுதிக் கொடுத்திருந்தாலும் அதுவும் செல்லாது என்றும்; எப்போது வேண்டுமானாலும், மனைவி, தனக்கு கிடைக்க வேண்டிய ஜீவனாம்ச தொகையைப் பெற சட்டப்படி உரிமை பெற்றவர் என்றும்” மும்பாய் ஐகோர்ட் தனது தீர்ப்பில் சமீபத்தில் கூறி உள்ளது.
The consent decrees made by the courts are in effect of nothing but contracts with the seal of the court super-added to them. Accordingly, if the term of the contract is itself opposed to public policy then, such term, is void and unenforceable. If the term is severable then, perhaps, the entire contract may fall.
**


ஆந்திராவுக்கு புதிய ஐகோர்ட் புது வருடத்தில்


ஆந்திராவுக்கு புதிய ஐகோர்ட் புது வருடத்தில்
ஆந்திராவுக்கு புதிய ஐகோர்ட் புது வருடத்தில் வருகிறது. 2019 ஜனவரி 1-முதல் பிரிந்த ஆந்திர மாநிலத்துக்கு புதிய ஐகோர்ட் வருகிறது.
பழைய ஆந்திரப் பிரதேசம் என்ற பெரிய மாநிலத்தை, 2014 ஜூன் 2-ம் தேதி அன்று இரண்டு மாநிலங்களாகப் பிரித்தார்கள். ஒன்று, ஆந்திரா, மற்றொன்று தெலுங்கானா. ஐதராபாத் என்று நகரம் ஏற்கனவே பழைய ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக இயங்கி வந்தது. தற்போது, பிரிந்த ஆந்திராவுக்கு அமராவதி என்ற புதிய தலைநகரை, ஆந்திராவின் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு ஏற்படுத்தி உள்ளார். அங்கு தனியே ஐகோர்ட்டையும் ஏற்படுத்தி உள்ளார்.
இதுவரை பழைய ஆந்திர பிரதேசத்துக்கு ஐகோர்ட்டாக ஐதராபாத்தில் உள்ள ஐகோர்ட்டே இருந்து வந்தது. இப்போது, பிரிந்த ஆந்திராவுக்கு தனியே ஐகோர்ட் கட்டிடத்தை அமராவதி நகரில் கட்டி உள்ளதால், 2019 ஜனவரி 1-முதல் அங்கு ஆந்திராவின் புதிய ஐகோர்ட் இயங்கும் என இந்திய ஜனாதிபதி புது வருடத்தில் அறிவிப்பார் என்று சொல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டும் ஒப்புதல் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்த புதிய ஐகோர்ட்டின் பெயர் “ஆந்திர பிரதேஷ் ஐகோர்ட்” என வழங்கப்படும். ஏற்கனவே ஐதராபாத்தில் உள்ள பழைய ஐகோர்ட்டான The High Court of Judicature at Hyderabad இனி தெலுங்கானா மாநிலத்தின் ஐகோர்ட்டாக இயங்கும்.
புதிய ஆந்திரா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக, இப்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஜஸ்டிஸ் ரமேஷ் ரங்கதாதன் அவர்கள் இருப்பார். இவரே புதிய ஆந்திரா ஐகோர்ட்டின் முதல் தலைமை நீதிபதி. இவருடன் மேலும் 15 நீதிபதிகள் இருப்பார்கள். ஏற்கனவே ஐதராபாத் ஐகோர்ட்டில் இருக்கும் 10 நீதிபதிகள் இதில் அடங்குவர்.
புது வருடத்தில் இயங்க ஆரம்பிக்கும் ஆந்திராவின் புதிய ஐகோர்ட்டுக்கு வாழ்த்துக்கள்.
Latest notification on 28.12.2018:
For the Andhra Pradesh High Court, the Government notification issued today intimates the appointment of Justice Chagari Praveen Kumar, the senior-most judge of the High Court as its Acting Chief Justice starting from January 1, next year. 
**

1905-ல் நடந்த திருப்பதி கோயில் வழக்கு


திருப்பதி கோயில் ஸ்கீம் வழக்கு
1905-ல் நடந்த திருப்பதி கோயில் வழக்கு
Prayag Doss Ji Varu, Mahant v. Srirangacharlu varu and another, on 10th Feb 1905.
Citation: (1905 10 MLJ 144 
சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
மெட்ராஸ் பிரசிடென்சியில் வட ஆற்காடு மாவட்டத்தின் எல்லைக்குள் இருக்கும் திருப்பதி அல்லது திருமலையில் கோயில் கொண்டிருக்கும் ஶ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோயில் ஒரு பழைமையான இந்து கோயில் ஆகும். இங்கு இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள். இந்த கோயிலின் வருட வருமானம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை இருக்கும். பிரிட்டீஸ் அரசு இந்த கோயில் நிர்வாகத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்னர், இந்தக் கோயில், மன்னர்களின் நேரடி நிர்வாகத்தில் இருந்து வந்தது. பிரிட்டீஸ் ஆட்சி ஏற்பட்ட பின்னர், இந்த கோயில் நிர்வாகம், பிரிட்டீஸாரின் கிழக்கு இந்திய கம்பெனி கைக்குப் போனது. பின்னர், பிரிட்டீஸ் அரசு, ரெகுலேஷன் சட்டம் 7/1817 என்ற சட்டம் கொண்டு வந்தது. அதன்படி இந்தக் கோயில் நிர்வாகம் “போர்டு ஆப் ரெவின்யூ”-வின் மாவட்ட கலெக்டரின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
பின்னர், 1841-ல், பிரிட்டீஸ் அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தது. அதன்படி, இந்தியாவில் உள்ள உள்ளூர் கோயில் நிர்வாகங்களிலும், அதன் சமய வழிபாடு முறைகளிலும், அரசு தலையிடுவதில்லை என்ற நிலையை எடுத்தது.
அதன்படி, திருப்பதி கோயில் நிர்வாகத்தை, 1843-ல் அந்தக் கோயிலில் அப்போது ஹாத்திராம்ஜி மடம் என்ற மடத்தின் தலைவர் சேவா தாஸ் என்பவர் கோயில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த மடம், திருப்பதி நகர் என்று மலையின் அடிவாரத்தில் இருந்தது.  அதன்படி, பிரிட்டீஸ் அரசு அந்த மடத்துக்கு சன்னத் என்னும் பட்டயம் வழங்கப்பட்டது. அதில், இந்த மடத்தின் தலைவரான சேவா தாஸ் காலத்துக்குப் பின்னர், அவரைத் தொடர்ந்து மடத்தின் தலைவராக வருபவர்கள் இந்த திருப்பதி கோயில் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள உரிமை வழங்கி இருந்தது. சேவா தாஸ் 1864-ல் காலமாகி விட்டார். அவருக்குப் பின்னர் தர்மா தாஸ் என்ற மடத் தலைவர் பதவிக்கு வந்தார். அவரும் 1880-ல் காலமாகி விட்டார். அவருக்குப் பின்னர், பகவான் தாஸ் என்பவர் வந்து, அவரும் 1890 வரை இருந்தார். அவருக்குப் பின்னர், 1890-ல் மகாவீர் தாஸ் என்பவரின் நிர்வாகத்தில் இருந்தது. பின்ன் 1895 முதல் 1900 வரை (இந்த வழக்கு வரும்வரை) இந்த வழக்கில் பிரதிவாதிகளாய் உள்ள ராமகிஷோர் தாஸ் என்பவரின் நிர்வாகத்தில் இருக்கிறது. இந்த இரண்டு வழக்குகளான ஓஎஸ் 31/1898 மற்றும் ஓஸ்.10/1890 வட ஆற்காடு மாவட்ட கோர்ட்டில்  நிலுவையில் இருக்கும்போதே, வழக்கின் பிரதிவாதியான மேற்சொன்ன ராமகிஷோர் தாஸ் இறந்து விட்டார். அவரைத் தொடர்ந்து, தற்போதுள்ள மடாதிபதியை பிரதிவாதியாக கோர்ட் சேர்த்துக் கொண்டது.
இப்போது, வழக்கு என்னவென்றால், 1843 வரை சேவா தாஸ் மடாதிபதி நிர்வாகத்தில் இருக்கும் வரை ஒரு குழப்பமும் கோயில் நிர்வாகத்தில் இல்லை; ஆனால் அவருக்குப் பின்னர் கோயில் நிர்வாகத்திலும், கோயில் பணத்தை பாதுகாப்பதிலும் சரியான வழிமுறை இல்லாமல் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தர்மா தாஸ் மடாதிபதி மீது மால்வர்சேஷன் என்னும் பொறுப்பில் இருக்கும்போது ஊழல் செய்வது என்ற குற்றம் சொல்லி வழக்கும் போடப்பட்டுள்ளது. கீழ் கோர்ட்டும், மதராஸ் ஐகோர்ட்டும் அதை ஒப்புக் கொண்டு டிகிரியும் கொடுத்துள்ளது. ஆனால் மதராஸ் ஐகோர்ட் தனது தீர்ப்பில் இதைப் பெரிய விஷயமாகப் பொருட்படுத்தாமல், மடாதிபதி தர்மா தாஸ் செயல்கள் தவறாக இருந்த போதிலும் கண்டிக்கத் தக்க அளவுக்கான தவறுகள் இல்லை என்று சொல்லி விட்டது. எனவே மதராஸ் ஐகோர்ட் அவரை மடாதிபதி பதவியில் இருந்து நீக்கவில்லை. எதற்காக என்றால், அவரை நீக்கி விட்டால், அடுத்த அவரின் வாரிசாக வரும் அடுத்த மடாதிபதிக்கு அவ்வளவு அனுபவம் போதாது என மதராஸ் ஐகோர்ட் கருதியது. (இந்த வழக்கு, சின்ன ஜீயன் காருல வாரு -எ- தர்மா தாஸ் ஜி, 5 மெட்ராஸ் ஜர்னல் 214 என்பதில் காணலாம்).
மேலும், மூன்றாவது நிர்வாகியான பகவான் தாஸ் நடவடிக்கைகள் ஊழல் நிறைந்ததாகவே இருந்தது, சீராக இல்லை. வழக்குகள் வந்தது. அவர்மீது, கோயில் நகைகள் ரூ.2 லட்சம் அளவுக்கு கையாடல் செய்ததாக குற்ற வழக்கும் வந்தது. வெகுகாலம் அந்த வழக்கு வட ஆற்காடு செசன்ஸ் கோர்ட்டில் நடந்து, கடைசியாக 18 மாதம் சிறை தண்டனை கொடுப்பட்டது. அப்படி அவர் சிறையில் இருந்த போதே, அவரின் அனுமதியின் பேரில், மகாவீர் என்றவரை கோயில் நிர்வாத்துக்கு அவரே நியமிக்கிறார். ஆனால், மகாவீர் மீதும் மால்வர்சேஷன் என்னும் பதவியில் இருக்கும்போது பண ஊழல் செய்த வழக்கு இருந்தது என்பது குறிப்படத் தக்கது. ஆனால், பின்னர் அவர் இறந்து விட்டதால், அவர்மீது வழக்கு முடிவுக்கு வந்து விட்டது.
தற்போது, போடப்பட்டுள்ள சிவில் வழக்குகள் ஆன ஓ.எஸ் 31/1898 மற்றும் 10/1899 ஆகிய இரண்டு வழக்குகளும், தற்போதைய நிர்வாகிகளான ராம்கிஷோர் மீது போடப்பட்டுள்ளவை. இதில், வட ஆற்காடு மாவட்ட கோர்ட் தனது தீர்ப்பை வழங்கி உள்ளது. அதில், ராம் கிஷோர் ரூ்50,000 வரை ஊழல் செய்திருக்கிறார் என்று தெளிவாகத் தெரிவதாகச் சொல்லி இருக்கிறார். மதராஸ் ஐகோர்ட் ஆகிய எங்களுக்கு அவர், ஒரு சொத்தை லீஸ்-க்கு விட்டதில் இந்த ஊழல் செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த வழக்கு நிலைவயில் உள்ள போதே ராம் கிஷோர் கொலை செய்யப்பட்டு இறக்கிறார். எனவே இங்குள்ள இரண்டு வழக்குகளில் ஒன்றான ஓ.எஸ்.10/1889 (ராம் கிஷோரை டிரஸ்டிஷிப் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்ற கேட்ட வழக்கை) இனி தொடர முடியாது என்பதால் அதை இன்பிரக்சுவஸ் வழக்காக முடித்து வைக்கப்பட்டது. மற்றொரு வழக்கான ஓ.எஸ்.31/1898 வழக்கு, இந்த திருப்பதி கோயில் நிர்வாகம் செய்வதை ஒரு ஸ்கீம் ஏற்படுத்தி தரும்படி கேட்ட வழக்கு. எனவே அது தொடர்ந்து நடந்து, ஸ்கீம் டிகிரியை வட ஆற்காடு மாவட்ட கோர்ட் கொடுக்கிறது.
அதை எதிர்த்து, மதராஸ் ஐகோர்ட்டில் அப்பீல் வழக்குகளான 236/1901 மற்றும் 38/1902 என இரண்டு அப்பீல்கள் உள்ளன. (இந்த இரண்டு அப்பீல் வழக்குளில்தான், மதராஸ் ஐகோர்ட் இந்த தீர்ப்பை வழங்கியது).
மஹண்ட் என்பவர்களும் பைராகிகள் என்பவர்களும் சேர்ந்து இந்த ஹாத்திராம் ஜி மட் என்னும் மடத்தை உருவாக்குகிறார்கள். (இதுவே திருப்பதியில் உள்ள ஶ்ரீவெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தை நிர்வகித்து வந்தது). இந்த மஹண்ட் என்பவர்களு்ம பைராகி என்பவர்களும் இந்த மதராஸ் மாகாண நிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள். இந்த மஹண்ட் என்பவர்கள், பொதுவாக எந்த கல்வி அறிவும் பெறாதவர்கள் என்பதும், பிரம்மச்சாரிகளாக வாழ்பவர்கள் என்பதும், இந்த உலக வாழ்க்கையை துறந்தவர்கள் என்பதும் இந்த வழக்கை படிக்கும்போது தெரியவருகிறது.
தற்போதுதிருப்பதி கோயிலுக்கு மஹண்ட் (மடாதிபதி) ஆக உள்ளவர், 1900-ல் தான், இங்கு வந்தவர். அதுவும், இவருக்கு முந்தைய மஹண்ட் இறந்து விட்டதால், அவரை வட இந்தியாவில் இருந்து வர வழைத்துள்ளனர். இந்த மஹண்ட்-க்கு இப்போது 18 வயதுதான் ஆகிறது. இங்குள்ள மொழிகள் கூட அவருக்கு தெரியவில்லை. எனவே இந்த மடாதிபதி என்னும் மஹண்ட், அங்குள்ள பைராகிகளையே கோயில் நிர்வாகத்துக்கு நம்ப வேண்டி உள்ளது. (பைராகிகள் என்பவர்கள் சாலிகிராம பூஜை செய்து கொண்டு பஜனைப் பாடல்கள் பாடி விஷ்ணுவை வணங்கி வரும் பக்தர்கள்). இந்த பைராகிகளுக்கு கோயில் நிர்வாகம் தெரியவில்லை. மேலும் ஊழலும் செய்துள்ளனர். அப்படி இவர்களை நிர்வாகத்திற்குள் விட்டால், அவர்கள் செய்யும் எம்பசெல்மெண்ட் என்னும் நிர்வாக ஊழல் பணத்தை அவர்களிடமிருந்து வசூல் செய்யும் அளவுக்கு அவர்களிடம் எந்த சொத்தும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். மஹண்ட் என்னும் மடாதிபதிகளிடம் நிர்வாகம் இருக்கும்போது, அவர்கள் இதில் வரும் வருமானங்களை முறையாகச் செலவு செய்திடவேண்டும். இல்லையென்றால், அவர்கள் அதற்கு பொறுப்பு ஆவார்கள். ஆனால், இவர்கள் தவறு செய்து, அந்தப் பணத்தை கோர்ட் உத்தரவின் பேரில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கும்போது, இவர்களிடம் பணம் ஏதும் இருப்பதில்லை.
எனவே ஏற்கனவே பிரிட்டீஸ் அரசு 1843-ல் இந்த கோயில் நிர்வாகத்தை, மஹண்ட் என்ற மடாதிபதிகளிடம் கொடுத்ததில், நிர்வாகக் குழப்பம்தான் மிஞ்சியது. எனவே கோயில் நிர்வாகத்தை சீர்படுத்த முறையான நிர்வாக அதிகாரிகள் தேவைப்படுகிறது என்பது தெரிய வருகிறது. எனவே வட ஆற்காடு மாவட்ட கோர்ட்டும் இந்த வழக்கில் ஒரு ஸ்கீம் (ஏற்பாடு) செய்து டிகிரி கொடுத்துள்ளது. அப்படிடி ஒரு ஸ்கீம் தேவை என்பதை மதாரஸ் ஐகோர்ட் ஆகிய இந்தக் கோர்ட்டும் ஒப்புக் கொள்கிறது. 
சர் வி. பாஷ்யம் அய்யங்கார் வக்கீல் மஹண்ட்களுக்காக மாவட்ட கோர்ட்டிலும், இந்த ஐகோர்ட்டிலும் வழக்கு நடத்துகிறார். அவரும் இதை ஒப்புக் கொள்கிறார். ஆனாலும், அந்த ஸ்கீம்-படி ஒரு நிர்வாகக் குழு ஏற்படுத்துவதில் ஐந்து கமிட்டி உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதில் மட்டும் குழப்பம் உள்ளதாகச் சொல்கிறார். அது இந்த கோர்ட் வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டது. ஏற்கனவே உள்ள டிரஸ்டிகளை விட்டு விட்டு வேறு டிரஸ்டிகளை நியமிப்பது; அல்லது அவர்களுடம் புதிய பல டிரஸ்டிகளை நியமிப்பது என்பது கோர்ட் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று வாதம். அதை இந்த கோர்ட் (மதராஸ் ஐகோர்ட்) ஏற்கவில்லை. சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 538-ன்படி புதிய டிரஸ்டிகளை நியமிப்பது பற்றிச் சொல்கிறது. எனவே பழைய டிரஸ்டிகளையும் உள்ளடக்கிய ஸ்கீம் மட்டுமே இந்தச் சட்டத்தில் செய்ய முடியும் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால், புதிய வேறு டிரஸ்டிகளை நியமிக்கும் அதிகாரம் கோர்ட் ஆப் சான்சரி-க்கு உண்டு என தெளிவாக்கப் பட்டுள்ளதாக, “சாரிட்டீஸ்” என்ற புத்தகத்தில் டியூடரின் வரிகளை காண்பிக்கிறார் வாதியின் வக்கீல். அதில், ஏற்கனவே டிரஸ்ட் வரைமுறைகள் இருந்தாலும், அதையும் தாண்டி, புதிய வேறு நிர்வாகிகளை நுழைத்து நிர்வாகத்தை கொண்டு வர கோர்ட்டுக்கு அதிகாரம் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், எக்ஸ்பார்ட்டி பாட்டம் ஸ்கூல், 2 பிரவுன் 662 என்ற வழக்கில், பார்லிமெண்ட்டின் ஏற்படுத்திய டிரஸ்ட் சட்டத்தை மாற்றி அமைக்க, கோர்ட்டுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி உள்ளதையும் கவனிக்க வேண்டும் என்று வாதம். அப்படி புதிய டிரஸ்டிகளை கோர்ட்டே உருவாக்க முடியாது என்று இருந்திருந்தால், அந்த சிவில் கோடு சட்டத்தில், அதைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பார்கள். அப்படி ஏதும் சொல்லவில்லை. மேலும், பொது சாரிட்டிகள், பொது வழிபாட்டுத் தலங்கள், இவகைளில் இந்தியாவில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளும், ஐகோர்ட்டுகளும் பரந்த அதிகாரம் கொண்டவைகளாகவே உள்ளன. எப்படி இங்கிலாந்தில் கோர்ட் ஆப் சான்சரி அதிகாரம் உடையதோ அதே போன்ற அதிகாரங்கள் இந்தியக் கோர்ட்டுகளுக்கும் உண்டு. அதை சின்னமான் பஜாஜி தேவ -எ- ஓண்டோ கணேஷ் தேவ, ஐ.எல்.ஆர் 15 பி.612 என்ற வழக்கிலும், மற்றும் அண்ணாஜி -எ- நாராயன், ஐ.எல்.ஆர். 21 பி.556 என்ற வழக்கிலும் சொல்லப்பட்டு உள்ளதாக வாதியின் வக்கீல் வாதம் செய்கிறார்.
ஆனாலும், இந்த விஷயத்தைப் பொறுத்து அதிகமாக குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. எனென்றால், இந்த திருப்பதி கோயில் நிர்வாக முறையானது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்த வந்து, பின்னர், மஹந்துகளுக்கு (மடாதிபதிகளுக்கு) நிர்வாக உரிமை பிரிட்டீஸ் அரசால் வழங்கப்பட்டது. (இதில் டிரஸ்ட் பத்திரம் ஏதும் இல்லை. டிரஸ்ட் ஏற்படுத்திய விபரமும் இல்லை. எப்படி டிரஸ்டிகள் நியமிக்க வேண்டும் என்ற விபரமும் இல்லை). இந்த திருப்பதி நிர்வாகம் 1843 வரை மன்னர்கள் நிர்வாகத்தில் இருந்து வந்தது. பிரிட்டீஸ் அரசு, 1843-ல் போர்டு ஆப் ரெவின்யூ என்ற அமைப்புக்கு இப்படிப்பட்ட கோயில் நிர்வாகங்கள் மாற்றி விடப்பட்டன. அது, ரெகுலேஷன் சட்டம் 1817-ல் உருவாக்கப்பட்ட போர்டு ஆப் ரெவின்யூ ஆகும்.
எனவே இப்போதுள்ள மஹண்த்தை (மடாதிபதியை) ஒரு டிரஸ்டி என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே உள்ள ஏற்பாடு என்பது, இப்போதைய சட்டங்களின் அடிப்படையில் ஏற்பட்டவை அல்ல. சர் வி.பாஷ்யம் ஐயங்கார் வக்கீலும், இதை எதிர்வாதம் செய்யவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பாம்பே ஐகோர்ட்டுகளும் இப்படியான தீர்ப்பை கொடுத்துள்ளது. (பீ பிரவுனி ஆஸ்பிட்டல் -எ- ஸ்டாம்போர்டு, 60 லா டைம்ஸ், பக்கம் 288).
எனவே இந்த வழக்கில், வட ஆற்காடு மாவட்ட கோர்ட் நீதிபதி கொடுத்த ஸ்கீம் டிகிரிப்படி டிரஸ்டிகளை நியமிக்க ஒரு கமிட்டியை அமைக்கும்படி சொல்லி இருப்பது, சரியான நிர்வாகத்தைக் கொடுக்கும் என்ற நினைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் சரியான நபரைத் தேர்வு செய்வது என்பதும், அதை அடுத்தடுத்து செய்வதும் அதை சரிபார்ப்பதும் இயலாது. மஹண்ட் என்னும் மடாதிபதியின் செயல்களை ஐந்து பேர் கொண்ட கமிட்டி (சம்பளம் இல்லாத கமிட்டி) மேற்பார்வையிடுவது என்றும், அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் ஓட்டுப் போட்டு, மடாதிபதியின் அன்றாட செயல்களை அனுமதி அளிப்பது என்று மாவட்ட கோர்ட் தெரிவித்துள்ள ஸ்கீம் டிகிரியில் உள்ளது.
அதற்குப்பதிலாக, இருக்கிற டிரஸ்டிகளில் மேலும் சிலரை டிரஸ்டிகளாகப் போட்டு, மடாதிபதியின் நிர்வாகத்திலேயே சேர்ந்து இருக்கும்படி செய்யலாம் என்பது ஐகோர்ட் ஆகிய எங்களின் கருத்து. அப்படி நியமிக்கும் டிரஸ்டிகள், போதுமான படிப்பு உள்ளவர்களாகவும், பொறுப்பு உள்ளவர்களாகவும், அதற்குறிய பயிற்சி எடுத்தவர்களாகவும் இருப்பது அவசியம் எனக் கருதுகிறோம். அவர்களுக்கு மாதம் ரூ.400 அல்லது ரூ.500 சம்பளமும் கொடுத்துவிடலாம். வட ஆற்காடு மாவட்ட கோர்ட்டே அவர்களை நியமித்துக் கொள்ளும் அதிகாரத்தையும் கொடுத்து விடலாம். அப்படி நியமிக்கப்படுபவர் ஒரு இந்து ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலமான 5 வருடங்களுக்கு அந்த பதவியில் இருப்பது போல செய்யலாம். அவரை மறுபடியும் நியமிக்கவும் செய்யலாம். இந்த டிரஸ்டிகளுக்குள் பிணக்கு ஏற்பட்டால், அதை பெரிய ஜீயங்கர் முடிவுக்கு விட்டுவிடலாம். அப்படி நியமிக்கப்படும் டிரஸ்டிகளை மாவட்ட கோர்ட்டே நீக்கும் அதிகாரத்தையும் கொடுத்து விடலாம். மாவட்ட நீதிபதியின் முடிவை மறுபரிசீலனை செய்வதை ஐகோர்ட்டுக்கு கொடுக்கலாம்.  மேலும், அந்த கோயிலில் கிடைக்கும் அபரிமிதமான வருமானத்தை நல்ல வழிகளில் சேமிப்பு செய்யவும், செலவு செய்யவும், ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த கோயிலில் அன்றாட சுவாமி காரியங்கள் சரியாக நடப்பதாகவே சொல்கிறார்கள். அதில் குறை ஒன்றும் இல்லை. ஆனால், கிடைக்கும் வருமானத்தை மடாதிபதி கையிலேயே வைத்துக் கொள்கிறார். இது ஊழலுக்கு வழி வகுக்கும். இப்படி மேல் வருமானம் வருடத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.
சீ-பிரி (Cy-pres) என்பது டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒரு கொள்கை. அதாவது ஆரம்ப டிரஸ்டை ஏற்படுத்தியவர் சொல்லிவற்றை அப்படியே செய்ய முடியாமல் போனால், முடிந்தவரை அதை ஒட்டி அவற்றை செய்ய வேண்டும் என்பதே சீ-பிரி கொள்கை.
அப்படி சீ-பிரி கொள்கையை எடுத்துக் கொண்டால், மேலே சொல்லி எல்லாமே சரி என இரண்டு பக்கமும் உள்ள வக்கீல்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
அதன்படி –
1) கீழ் திருப்பதியில் ஒரு காலேஜ் ஆரம்பிக்க வேண்டும். அது இந்துக்கள் கல்வி அறிவு பெறுவதற்காக இருக்க வேண்டும். அந்தக் கல்லூரிக்கு “ஶ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா” என்ற பெயரிட வேண்டும். அதில் ஒரு லைப்ரரி, ஆஸ்டல், எல்லாம் ஏற்படுத்தி அதற்குறிய வருடச் செலவுகளாக தற்போதைக்கு ரூ.24,000 வரை செலவு செய்து  நிர்வாகம் செய்ய வேண்டும்.
2) நன்றாகப் படிப்பவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும். இந்து சாஸ்திரங்களைப் படிப்பவர்களுக்கு அவ்வாறான உதவிகள் வழங்க வேண்டும். இதை மாவட்ட கோர்ட்டின் ஒப்பதலுடன் டிரஸ்டிகள் செய்து வர வேண்டும்.
3) ஒரு ஆஸ்பத்திரி கட்டி (திருப்பதி மலையிலேயே) அங்கு வரும் பக்தர்களுக்கு அது உயோகமாக இருக்க வேண்டும்.
4) திருப்பதி மலையிலேயே தங்கும் விடுதிகள் கட்டி, அங்கு வரும் எல்லாப் பக்தர்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
5) திருப்பதி மலையில், நல்ல குடிநீர் கிடைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
6) திருப்பதி மலைக்குச் செல்வதற்கு உரிய நல்ல பாதை, ரோடு வசதிகளைச் செய்ய வேண்டும்.
7) இது இல்லாமல், அங்கு சுவாமிக்கு கிடைக்கும் நகைகளை, சொத்துக்களை, பணம் முதலியவற்றை, அரசு சார்ந்த துறைகளில் வைப்பீடு செய்து அதில் வருமானத்தைப் பெறுக்க வேண்டும். அன்றாடச் செலவுக்கு தேவைப்படும் பணம் போக, மீதியை உடனே வங்கியில் செலுத்த வேண்டும்.
பக்தர்கள் கொடுக்கும் தர்ம பொருள்களுக்கு அப்போதே ரசீது வழங்கி, நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் முறையான கணக்கு வழக்கு வைத்துக் கொண்டு, அதை முறையாக ஆடிட்டர் வைத்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவருட முடிவில் வரவு செலவு கணக்கை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
மடம் தனி, கோயில் தனி. எனவே மடத்துக்கும் கோயிலுக்கும் இடையிலோ, அங்கு வேலை செய்யும் நபர்களுக்கு இடையிலோ மடமோ, கோயிலோ எந்தவித வியாபார ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது.
பாம்பே ஐகோர்ட் வழக்கான, தாமோதர் பட் -எ- போகிலால், ஐ.எல்.ஆர்.24 பி.45 என்ற வழக்கில் கூறி உள்ளதைப் போல, இந்த ஸ்கீம் செயல்பாடுகளை  மாவட்ட கோர்ட், அவ்வப்போது, இதில் அக்கறை உள்ளவர்கள் கொடுக்கும் மனு மீது முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த திருப்பதி கோயில் ஸ்கீம், 1906-ம் வருடம், ஜனவரி மாதம், 1-ம் தேதி முதல் அமல் படுத்த வேண்டும்.
இரண்டு பார்ட்டிகளின் கோர்ட் செலவுகளை, கோயில் பணத்திலிருந்து கொடுக்க வேண்டும்.
(இப்படி இந்த தீர்ப்பை மதராஸ் ஐகோர்ட் 10.2.1905-ல் கொடுத்துள்ளது).
*