Wednesday, December 26, 2018

காணாமல் போனவரின் சட்ட நிலை


காணாமல் போனவரின் சட்ட நிலை
காணாமல் போனவர் இறந்து விட்டார் என்று கருத வேண்டும் என்று இந்திய சாட்சியச் சட்டம் சொல்கிறது.
ஒருவர் வீட்டை விட்டு காணாமல் போனால் அவர் அவ்வாறு காணாமல் போன தேதியில் இருந்து 7 வருடங்களின் முடிவில் அவர் இறந்திருப்பார் என சட்டம் கருதுகிறது.
இதற்கு, அவர் காணாமல் போன பின்னர், அவ்வாறு காணவில்லை என்றோ வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்றோ ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தால், அது ஒரு சாட்சியமாக அமையும். அது அவரைத் தேடுவதற்கும் உதவியாக இருக்கும். பின்னர், அவர் எங்கெல்லாம் சென்று இருப்பாரோ அந்த இடத்திற்கு எல்லாம் போய் அவரைத் தேடிவர வேண்டும். இது எதிலும் அவர் கிடைக்கவில்லை என்றால், அதிலிருந்து 7 வருடங்களின் முடிவில் அவர் இறந்திருப்பார் என நினைத்துக் கொள்ள வேண்டும். சட்டமும் அவ்வாறே அவர் இறந்து விட்டதாகவே கருதுகிறது.
இதை இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 108 சொல்கிறது. ஒருவர் காணாமல் போய் ஏழு வருடங்கள் ஆகி விட்டால், அவரை இறந்ததாக கருதலாம் என்று இந்தச் சட்டப் பிரிவு சொல்கிறது. வழக்குகளில் இந்தப் பிரிவை உபயோகித்துக் கொள்ளலாம்.
ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதை அதைச் சொல்பவரே நிரூபிக்க வேண்டும். இறந்து விட்டார் என்பதை இறப்புச் சான்றிதழ் கொண்டு நிரூபிக்கலாம். அல்லது அவர் காணாமல் போய் விட்டார் என்று நிரூபித்தால், அதிலிருந்து 7 வருட முடிவில் அவர் இறந்ததாக சட்டம் கருதுகிறது.
சொத்துக்களை விட்டுவிட்டு காணாமல் போயிருப்பார். வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, வேலையை விட்டுவிட்டு காணாமல் போய் இருப்பார்.  இளம் வயதில் குடும்பத்தை விட்டு விட்டு ஓடி இருப்பார். இவர்கள் இவ்வாறு காணாமல் போன பின்னர் இருப்பவர்களுக்கு, அவரின் சொத்தில் பிரச்சனை வரலாம். வேலையில் பணம் வர வேண்டி இருக்கும். திருமண உறவில், மனைவி எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியது என்ற பிரச்சனை இருக்கும். அவர் இருக்கிறாரா அல்லது இல்லையா என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும்.
இதற்கான சட்டப்பிரிவுதான் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 108. இந்தப் பிரிவின் கீழ் வழக்கு போட்டு, அவர் இறந்து விட்டதாக தீர்ப்பு வாங்கலாம். அவருக்கு வரவேண்டிய பணங்களை இந்த தீர்ப்பைக் கொண்டு வசூல் செய்யலாம். அவரின் சொத்துக்களை விற்பனை செய்யலாம். திருமண உறவில் மனைவி மறு திருமணமும் செய்து கொள்ளலாம்.
சாட்சியச் சட்டம் பிரிவு 108 என்பது, ஒருவர் காணாமல் போய், ஏழு வருடங்கள் ஆகி விட்டால், அவர் எங்கும் உயிருடன் இருப்பதாக எவருக்கும் தெரியவில்லை என்றால், கோர்ட்டில் வழக்குப் போட்டு, அவர் சட்டப்படி இறந்து விட்டார் என்ற தீர்ப்பை வாங்க வேண்டும். இந்த பிரிவு 108 என்பது அவர் இறந்து விட்டார் என்று மட்டுமே கருதிக் கொள்ளும். ஆனால் எந்த தேதியில் அவர் இறந்தார் என்று சொல்ல முடியாது. எனவே அவர் இறந்த தேதி என்பது அவர் எந்த சூழ்நிலையில் காணாமல் போனார் என்பதைப் பொறுத்து கோர்ட் முடிவு செய்யலாம் என்று பல தீர்ப்புகளில் கூறி உள்ளது.
உதாரணமாக: ஒருவர் கப்பலில் பிரயாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது புயல் காற்றில் சிக்கி மூழ்கிவிட்டது. இப்போது அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்ற கேள்வி எழும். ஏழு வருட முடிவில் அவர் வரவில்லை என்றால், அவர் இறந்து விட்டார் என்று சட்டம் கருதுகிறது. ஆனால் எந்த தேதியில் இறந்தார் என்று தெரியவில்லை. இப்படியான சூழ்நிலையில், கப்பல் மூழ்கும்போது இறந்திருக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், அவர் கப்பல் மூழ்கும் நாளில் இறந்ததாக கோர்ட் கருதலாம்.
ஆனால், ஒருவர் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார். காணவில்லை. எங்கிருக்கிறார் என்றும் தெரியாது. அவர் திரும்பி வரவில்லை என்றால், ஏழு வருடம் முடிவில் அவர் இறந்திருப்பார் என்று சட்டம் கருதுகிறது. ஆனால், அவர் எந்த தேதியில் இறந்தார் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. இப்படியான சூழ்நிலையில், அவர் ஏழு வருடம் முடிந்த தேதியில் இறந்திருப்பார் என்று கருத வேண்டும் என்று கோர்ட்டின் தீர்ப்புகள் உள்ளன.
எனவே காணாமல் போனவர் இறந்து விட்டார் என கோர்ட் வழக்குக்குப் போகும்போது, பொதுவாக கோர்ட், ஏழு வருட முடிவில் அவர் இறந்திருப்பார் என்று தீர்ப்பு கொடுக்கும். அல்லது அவர் ஒரு தேதியில் அல்லது காலக்கட்டத்தில் இறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக சாட்சியம் அளித்தால், ஒரு குறிப்பிட்ட தேதியில் இறந்திருப்பார் என்று தீர்ப்பு கொடுக்கும். அதை கோர்ட்டே தகுந்த சாட்சியத்தை வைத்து முடிவு எடுக்கும்.
வழக்கை ஏழு வருடம் கழித்துத்தான் போட முடியும். காணாமல் போய், ஏழு வருடத்திற்கு ஒரு நாள் குறைந்தால் கூட, வழக்குப் போட முடியாது.
இராணுவத்தில் வேலை செய்பவர், திடீரென்று அங்கிருந்து ஓடி விடுவார். அவரை, வேலைக்கு திரும்பவில்லை என்று கூறி, அவரை வேலையில் இருந்து நீக்கி விடுவர். அவருக்கு எந்த பணமும் கிடைக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் காணாமல் போன ஏழு வருட முடிவில் தான், அவரின் உறவினர் வழக்குப் போட்டு அவர் சட்டப்படி இறந்து விட்டார் என தீர்ப்பு வாங்க வேண்டும். காணாமல் போன அன்றே இறந்து விட்டிருப்பார் என்று சொல்ல முடியாது என்று கோர்ட் தீர்ப்புகள் உள்ளன.
காணாமல் போனவரை சட்டப்படி இறந்தவராக கருதி தீர்ப்பு வழங்க கோர்ட்டை அணுகினால், இந்திய சாட்சியச் சட்டம் பிரிவுகள் 107 மற்றும் 108 ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வழக்குப் போட வேண்டும். ஒருவர் கடந்த 30 வருட காலத்திற்குள் உயிருடன் இருந்தவர், கடந்த 7 வருடங்களாக காணவில்லை என்றும் அவர் சட்டப்படி இறந்து விட்டதாக கருதி தீர்ப்பு பெற வேண்டும். 30 வருடத்திற்கு முன்னர் ஒருவர் காணாமல் போயிருந்தால் அவருக்கு இப்படியான சாட்சியம் தேவையில்லை. அவர் இறந்ததாகவே கருத வேண்டும். கடந்த 30 வருடத்திற்குள் காணாமல் போனவர், 7 வருடம் வரை அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றாலும், அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்றாலும், அவர் சட்டப்படி இறந்ததாக கோர்ட் தீர்ப்பை, இந்த சாட்சியச் சட்டம் பிரிவு 108-ன் படி பெறலாம். அதுவே அவரின் சொத்துக்களை மற்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் வழி.
இந்த காணாமல் போகிறவர் பிரச்சனை வெகு காலமாகவே இருந்திருக்கிறது. இந்த சட்டத்தை பிரிட்டீஸ் ஆட்சியில் இந்தியாவில் சாட்சிய சட்டத்தின் மூலம் அமல் படுத்தி உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ளவர்கள் அதிகம் கடல் பிரயாணம் செய்தவர்கள். அவர்கள் கப்பலில் போகும்போது, அவை மூழ்கிவிட்டால், அவர் திரும்பி வருவதற்காக ஏழு வருடங்கள் காத்திருப்பர். அப்படி திரும்பி வரவில்லை என்றால், அவர் சட்டப்படி இறந்து விட்டார் என கருதி, அவரின் மனைவி மறுமணம் செய்து கொள்வர். அந்த காலத்துக்கு முந்தியே மறுமணம் செய்து கொண்டால் அது அங்குள்ள The English Bigamy Act 1603 சட்டப்படி குற்றமாகும். திரும்பி வந்தவர் மனைவி மீது, இருதார மணம் என்ற கிரிமினல் வழக்குப் போட வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவில் இதுபோன்ற சட்டம் உள்ளது. அங்கும் இதேபோல ஏழு வருடங்கள் காணாமல் போனவரை இறந்துவிட்டதாக கோர்ட் சொல்லும். இந்தியாவில் 7 வருட முடிவில் இறந்ததாக சொல்வர். அங்கு எந்த தேதியில் இறந்தார் என்று சாட்சியம் அளித்து தேதியைக் குறிப்பிட்டு தீர்ப்பு வழங்குவர்.
இந்தியாவிலும் பழங்காலத்தில் இத்தகைய முறைகள் இருந்துள்ளன. பழைய சாஸ்திரங்களில், கணவர் கடல் கடந்து சென்றிருந்தால், அவர் திரும்பி வர ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு காலக்கெடு வைத்திருந்தார்கள். பிராமணப் பெண்ணாக இருந்தால், அவள் 8 வருடம் காத்திருக்க வேண்டும். அதுவும் அவள் குழந்தை இல்லாமல் இருந்தால், 4 வருடங்கள் காத்திருந்தாள் போதும். சத்திரியப் பெண்ணாக இருந்தால், அவள் 6 வருடம் காத்திருக்க வேண்டும். அவளுக்கு குழந்தை ஏதும் இல்லாமல் இருந்தால், 4 வருடம் காத்திருந்தாள் போதும். வைசியப் பெண்ணாக இருந்தால், அவள் 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அவளுக்கு குழந்தை இல்லை என்றால், 2 வருடம் காத்திருந்தாள் போதும். சூத்திரப் பெண்ணுக்கு காலக்கெடு ஏதும் ஒதுக்கவில்லை. ஆனாலும் அவள் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதற்குப் பின்னர் அவள் வேறு திருமணம் செய்து கொள்ளலாம். அது சாஸ்திரப்படி பாவம் இல்லையாம். இதில், அவன் எங்காவது இருக்கிறான் என்ற தகவல் இவளுக்குத் தெரிய வந்தால், அந்த காலக்கட்டத்தைத் தாண்டி அவள் காத்திருக்க வேண்டுமாம்.
மனுதர்ம நீதியில், அவன் ஏதாவது கடமையாக கடல் கடந்து சென்றால், அவனின் மனைவி அவனுக்காக 8 வருடம் காத்திருக்க வேண்டுமாம். அவன் கல்வி கற்கச் சென்றிருந்தால், அவள் 6 வருடம் காத்திருக்க வேண்டும். அவன் ஏதாவது சுற்றுலா சென்று இருந்தால், அவள் 3 வருடம் காத்திருக்க வேண்டுமாம்.
அமெரிக்காவில் ஒரு வித்தியாசமான வழக்கு வந்தது. அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் ஒருவர் 1986-ல் காணாமல் போகிறார். அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். எனவே அவரின் மனைவி சக்சஷன் கோர்ட்டில் 1994-ல் வழக்குப் போடுகிறார்.  காணாமல் போன அவர் கணவர் சட்டப்படி இறந்து விட்டதாக தீர்ப்பு கேட்கிறார். நான்கு முறை பேப்பரில் விளம்பரம் கொடுத்து தீர்ப்பு கொடுக்கப் பட்டது. ஆச்சரியமான வகையில், 19 வருடங்கள் கழித்து, காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர், அவருக்கு டிரைவிங் லைசென்ஸ் வேண்டும் என்று கேட்டு மனு கொடுக்கிறார். இறந்தவருக்கு எப்படி லைசென்ஸ் கொடுக்க முடியும் என்று அவரின் மனு நிராகரிக்கப் படுகிறது. எனவே அவர் மனைவி வாங்கிய கோர்ட் தீர்ப்பை ரத்து செய்யும்படி அதே கோர்ட்டில் மனு போடுகிறார். இது கால தாமதமான மனு என்று நிராகரிக்கப் படுகிறது. அவர் தீர்ப்பு வந்த மூன்று வருடத்திற்குள் அதை எதிர்த்து மனு செய்ய வேண்டுமாம். இறந்ததாக சட்டப்படி கருதப்பட்டவர் இறந்தவரே.
**




Tuesday, December 25, 2018

கோபார்சனரி என்னும் பூர்வீகச் சொத்துக்கள்


இந்து மதத்தில் “கோபார்சனரி சொத்துக்கள்” (பூர்வீகச் சொத்துக்கள்):
(இது பூர்வீகச் சொத்தா, அல்லது தனிச் சொத்தா, அல்லது வேறு வகைச் சொத்தா, ஆணின் சொத்தா, பெண்ணின் சொத்தா, எனக்கு இதில் சட்டப்படி எவ்வளவு பங்கு கிடைக்கும் என்பது போன்ற சந்தேகங்களுக்கு):
1956 வரை இந்துக்களின் சொத்தின் நிலை:
1956 வரை இந்துகளின் சொத்துக்களில் ஒரு பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. பழைய இந்து சாஸ்திர முறைப்படியே இந்து சொத்துக்களும் அவற்றின் வாரிசு உரிமைகளும் இருந்து வந்துள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1956-ல் தான் இந்த பழைய இந்து சாஸ்திர முறையை மாற்றி, தனியே ஒரு புதிய வாரிசு உரிமை சட்டத்தை இந்திய அரசு கொண்டு வருகிறது. அதன் பெயர் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956. The Hindu Succession Act, 1956.
Survivorship and Succession:
பழைய இந்து சாஸ்திர சட்டத்தில் Succession முறையில் சொத்து வருவது இல்லை. அதில் Survivorship முறையில் மட்டுமே சொத்துக்கள் கிடைக்கும். சர்வைவர்ஷிப் என்பது, உயிருடன் மீதி இருப்பவர்கள் சொத்தை அடையலாம் என்று பொருள். பழைய இந்து சாஸ்திர சட்டப்படி, ஆண்களுக்கு மட்டுமே சொத்துரிமை என்று புரிந்து கொள்ள வேண்டும். (இங்கு பெண்களுக்கு சொத்துரிமை ஏதும் இல்லை. அவர்களை Chattel என்னும் ஒரு பொருளாகவே பார்த்து வந்திருக்கிறார்கள்). இது 1956-க்கு முந்தைய நிலை. அப்போது எல்லா இந்து குடும்பங்களுமே கூட்டுக் குடும்பமாகவே இருந்திருந்தார்கள். விவசாய காரணங்களுக்காக அல்லது வியாபார காரணங்களுக்காக ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்து அதில் உள்ள ஆண்கள் எல்லோரும் உழைத்திருக்கிறார்கள். எனவே அந்த கூட்டுக் குடும்பம் சம்பாதிக்கும் சொத்தில் அந்த குடும்பத்தில் உள்ள எல்லா ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெண்களுக்கு சொத்தில் பங்கு இல்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கை வசதிகளை ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மகள்களை வேறு வீட்டுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுவதால், அவர்கள் இந்த குடும்பத்து உறுப்பினர்கள் இல்லை. வேறு வீட்டிலிருந்து இந்த வீட்டுக்கு வரும் மருமகள்கள் இந்த குடும்பத்து உறுப்பினர்கள் அவ்வளவே.
இப்படியாக ஆண்கள் மட்டுமே கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்குதாரார். எனவே கூட்டுக் குடும்பச் சொத்தில் அந்த ஆண்களுக்கு யாருக்கு எவ்வளவு பங்கு என்று குறிப்பிட்டச் சொல்ல முடியாது. ஆண்கள் எல்லோருக்கும் சம பங்கு உண்டு என்பது மட்டும் தெளிவு. இந்த குடும்பத்தில் ஒரு மகன் பிறந்தால், அவனுக்கு பிறந்த உடனேயே ஒரு பங்கு வந்துவிடும். இது ஒரு Partnership என்னும் பங்குதாரர் நிறுவனம் போல. உயிரோடு இருக்கும் ஆணுக்கு ஒரு பங்கு உண்டு. அவர் தாத்தாவாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், மகனாக இருந்தாலும், பேரனாக இருந்தாலும், கொள்ளுப் பேரனாக இருந்தாலும். ஆளுக்கு ஒரு பங்கு உண்டு. இதில் யார் பெரிய ஆள் இல்லை, சிறிய ஆளும் இல்லை. இந்த கூட்டுக் குடும்பத்தில் ஒரு ஆண் இறந்து விட்டால் அவருக்கு பங்கு இல்லை. அதாவது அவரின் பங்கு மற்ற ஆண்களுக்குப் போய் சேர்ந்து விடும். எனவே இது ஒரு முடிவே இல்லாத தொடர் மாதிரி. இதைத்தான் இந்து கூட்டுக் குடும்பம் என்கிறார்கள். இதை Coparcenary என்பர். அதாவது ஒரு வித்தியாசமான கூட்டு உரிமை கொண்டாடும் குடும்பம் என்று சொல்லாம். ஏனென்றால், இங்கிலாந்து நாட்டில், இப்படியான ஒரு கூட்டுக் குடும்ப முறை இருந்தது. அது கிட்டத்தட்ட இதுபோலவே இருக்கும். அது Joint ownership முறை. இரண்டு பேர் கூட்டாக ஒரு சொத்தை வாங்கினால், அவர்கள் இருவரும் இந்த ஜாய்ண்ட் ஓனர்ஷிப் முறையில் அனுபவிக்கலாம். ஒருவர் இறந்து விட்டால், மற்றவர் மொத்த சொத்துக்கும் உரிமையாளர் ஆகி விடுவார். இதை அங்கு Joint-Tenancy என்ற ஆங்கில வார்த்தையில் சொல்வர். (Tenant என்பதை இங்குள்ள ‘வாடகைதாரர்’ என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளக் கூடாது; மாறாக சொத்தை அனுபவிப்பவர் என்று பொருள்).
ஆங்கிலேய சொத்து முறையான Joint-Tenancy முறையை ஒத்ததுதான் இந்தியாவில் உள்ள Hindu Joint Family or Hindu Undivided Family or HUF என்பர். ஆனாலும் இந்து கூட்டுக் குடும்ப முறையில், இங்கிலாந்து முறையைக் காட்டிலும் வேறு சில மாற்றங்களும் உண்டு.
இந்து கூட்டுக் குடும்பம்:
இதில் ஆண்கள் மட்டுமே பங்குதாரர்க்ள். அந்த வீட்டில் உள்ள பெண்கள் உறுப்பினர்கள் மட்டுமே. பெண்களுக்கு பங்கு இல்லை. எனவே ‘உறுப்பினர்கள்’ ‘சொத்தில் பங்குதாரர்கள்’ இவர்களை வித்தியாசப் படுத்தி சொல்ல வேண்டியது அவசியம். எனவே பெண் உறுப்பினர்களும் சேர்ந்து இருந்தால் அந்தக் குடும்பத்தை ‘இந்து கூட்டுக் குடும்பம்’ என்று சொல்லலாம்.  ஆண்கள் மட்டும் பங்குதாரர்கள் என்பதால், அவர்களை மட்டும் ‘கோபார்சனர்கள்’ Coparceners என்று சொல்ல வேண்டும். எனவே கூட்டுக் குடும்பம் என்பது பெண்களையும் உள்ளடக்கிய குடும்பம். கோபார்சனரி என்பது ஆண்களை மட்டுமே குறிக்கும் சொல்.
யார் யார் கோபார்சனர்கள்?
பொதுவாக ஒரு இந்து ஆண் இருந்தால் அவர் ஒரு சொத்து வாங்கினால், அவர் மட்டும் உரிமையாளர் இல்லை. (இது 1956-க்கு முன்னர் இந்து குடும்பத்தின் சட்ட நிலை). அவருக்கு ஒரு மகன் பிறந்தால் அவரும் கோபார்சனர் ஆகி விடுவார். அதாவது அந்த சொத்தில் ஒரு பங்குதாரர் ஆகி விடும். மகன் பிறந்தவுடனேயே பங்குதாரர் ஆகிவிடுவார். (இப்போது தந்தை இறந்தால்தான் அவரின் சொத்தில் பங்கு வரும்). அதுபோல, அந்த மகனுக்கு ஒரு மகன் பிறந்தால் அவனும் பிறந்த உடனேயே பங்குதாரர் ஆகி விடுவான். அந்தப் பேரனுக்கு ஒரு மகன் பிறந்தால், அந்த கொள்ளுப் பேரனும் ஒரு பங்குதாரர் ஆகிவிடுவான். ஆக, தந்தை, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்ற நான்கு தலைமுறை ஆண்கள் கோபார்சனர்கள் ஆவார்கள். அதற்கு மேல் கோபார்சனர் உரிமை நீடிக்காது. எப்போது மேலும் நீடிக்கும் என்றால், முதன் முதலில் சொத்தை வாங்கியவர் இறந்து விட்டால், மீதி உள்ள நான்கு தலைமுறையை கணக்கில் கொள்ள வேண்டும். முன் இருப்பவர் இறக்க, இறக்க, அதற்கு அடுத்த நான்கு தலைமுறைக்கு கோபார்சனரி கூட்டு உரிமை நீடிக்கும். இவர்கள்தான் கோபார்சனர்கள்.
கோபார்சனர்களுக்குள் பிரிவு:
என்னதான் கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், ஒரு நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவும் தவிர்க்க முடியாததுதான். எனவே ஏதாவது ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்பட்டடால், அப்போதுதான் கூட்டுக் குடும்பச் சொத்துக்களை (எல்லாச் சொத்துக்களுமே கூட்டுக் குடும்பச் சொத்துக்கள்தான்) பாகம் பிரித்துக் கொள்வார்கள். உயிருடன் இருக்கம் கோபார்சனர்கள் எல்லோருக்கும் தலைக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்வார்கள். அதாவது தந்தைக்கும் ஒரு பங்கு, மகனுக்கும் ஒரு பங்கு, பேரனுக்கும் ஒருபங்கு, கொள்ளுப் பேரனுக்கும் ஒரு பங்கு. பல மகன்கள் இருந்தாலும், பல பேரன்கள் இருந்தாலும், எல்லோருக்குமே ஒரு பங்குதான். (அதாவது தலைக்கு ஒரு பங்கு; ஒரு கூட்டத்துக்கு ஒரு பங்கு என்ற முறை இல்லை). Per head, not per stripes. Per head is called as per capita. Capita என்ற வார்த்தை லத்தீன் வார்த்தை. லத்தீன் மொழியில் கேப்பிட்டா ‘தலைக்கு’. அதாவது ஆள் எண்ணிக்கை கணக்கில்.
தொடரும் கூட்டுக் குடும்பம்:
இப்போது, அவ்வாறு தலைக்கு ஒரு பங்கு என்று, அப்போது உயிருடன் இருக்கும் ஆண்கள் எல்லோரும் பிரித்துக் கொள்வர். அத்துடன் கூட்டுக் குடும்பம் சிதறி விட்டது. ஆனாலும்,  அவ்வாறு பிரித்துக் கொண்ட ஒரு ஆண், அவரும் அவரின் மகனும், பேரனும், கொள்ளுப்பேரனும் மறுபடியும் ஒரு கூட்டுக் குடும்பமாக இயங்கி வருவார்கள். இதில் எப்போதுமே தனியாக இயங்க முடியாது. தனிச் சொத்துரிமையும் வராது. இது ஒரு தொடர்கதைதான். இது தான் “இந்து கூட்டுக் குடும்பத்தின் சிறப்பு” என்று ஆங்கிலேயர்களும் ஆச்சரியம் அடைந்தார்களாம்.
கூட்டுக் குடும்ப கடன்கள்:
கூட்டுக் குடும்பத்தில் கடன்கள் வாங்குவார்கள். அதை தந்தை செய்வார். அவர் வாங்கிய கடனை, (அவர் மட்டுமே கையெழுத்துப் போட்டு வாங்கிய கடனை) அவரும், அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களும் சேர்ந்தே கொடுக்க வேண்டும். அது என் அப்பா வாங்கிய கடன், நான் ஏன் கொடுக்க வேண்டும் என்று சட்டம் பேச முடியாது. அப்பா இறந்து விட்டாலும், இவர்கள் அதை கொடுத்துத்தான் ஆக வேண்டும். இது இந்த கூட்டுக் குடும்பத்தின் கடன் என்றே கருத வேண்டும். தந்தை வாங்கிய கடனை, மகனோ, பேரனோ, கொள்ளுப் பேரனோ கொடுக்க வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை என்று நினைத்தாலும், இந்து தர்ம ஞாயத்தின் படி அதை கொடுத்தே ஆக வேண்டும். எனவே இந்த தர்ம நியாயத்தை Moral Obligation என்று பழைய இந்து சாஸ்திர சட்டம் சொல்கிறது. ஆனாலும், ஒரு தந்தை, அவரின் கெட்ட நடவடிக்கைக்காக, எங்காவது கடன் வாங்கி இருந்தால், அதை மகன்களோ, பேரன்களோ, கொள்ளுப் பேரன்களோ கொடுக்கவேண்டிய தர்ம நியாயம் இல்லை என்றும் அதே சாஸ்திர சட்டம் சொல்கிறது. (ரேஸ் போன்ற சூது விளையாட கடன் வாங்கி இருந்தால், அதை மற்ற கோபார்சனர்கள் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை). இப்படிப்பட்ட கெட்ட காரணங்களுக்காக வாங்கிய கடனை, இந்து சாஸ்திரமானது “அவயவகரிகா கடன்” Avyavaharika debts or immoral debts என்று சொல்கிறது. இந்த கெட்ட கடனை, கூட்டுக் குடும்பம் கொடுக்கத் தேவையில்லை, ஆனால், கடன் வாங்கியவர் அவரின் பங்கில் இருந்து கொடுக்க வேண்டும் என்பதே அதன் பொருள். (நல்ல நோக்கத்துக்கு வாங்கிய கடனை இந்து சாஸ்திரம் வயவகரிகா கடன் vyavaharika debt என்கிறது. (வயவ-கரிகா என்பதை ‘அ’ சேர்த்து எதிர் பொருளில் அ-வயவ-கரிகா என்கிறார்கள்]. இந்து சாஸ்திரத்தில், ஒரு இந்து, தன் கடனை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவருக்கு மோட்சம் கிடைக்காது என்கிறது. எனவே அவருக்கு பிண்டம் கொடுக்கும் மகனோ, பேரனோ, கொள்ளுப்பேரனோ, அவரின் கடனை அடைத்து, அவரை மோட்சத்துக்கு அனுப்ப உதவ வேண்டும் என்பது சாஸ்திர விதி.
வயிற்றுக்குள் இருக்கும் ஆண் குழந்தைக்கும் பங்கு:
இந்த கூட்டுக் குடும்பத் தொடர்கதையில், பிரிந்து பிரிந்து ஒவ்வொரு கூட்டுக் குடும்பமாக இயங்கி வரும். ஆண்கள் கூட்டாக கோபார்சனர்கள் என்ற பெயரில் சொத்தின் உரிமையில் இருப்பார்கள். இறந்தவருக்கு பங்கு இல்லை. இருப்பவர்கள் அனைவருக்கும் தலைக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் பங்கு உண்டு. ஆனால் அது கணக்குக்கு மட்டும். தனியே பிரித்துப் பார்க்க முடியாது. பாகம் பிரிக்கும்போதுதான் கணக்கிட்டு பிரிக்க முடியம். யாராவது ஒரு மகனோ, பேரனோ, “நான் இந்த கூட்டுக் குடும்பத்தை விட்டு விலகி விடுகிறேன், என் பங்கைப் பிரித்துக் கொடு” என்று கேட்டால், அவனுக்கு அப்போது என்ன பங்கு வரமோ, அதைக் கொடுத்து விட்டு, எழுதி வாங்கிக் கொண்டு, மற்ற கோபார்சனர்கள் தொடர்ந்து கூட்டுக் குடும்பமாக, கோபார்சனர்களாக இயங்குவார்கள். பிரிந்து சென்றவர், அவரின் பங்கை அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரனுடன் மற்றொரு கூட்டுக் குடும்பமாக இயங்கி வருவார். ஒருவேளை அவருக்கு அப்போது மகன் பிறக்கவில்லை என்றால், அவர் மட்டுமே அப்போதைக்கு உரிமையாளர். அந்த நேரத்தில் அவர் அந்தப் பங்கை விற்பனை செய்யும் உரிமையும் அதிகாரமும் உண்டு. விற்பனை செய்த பின்னர், அவருக்கு ஒரு மகன் பிறந்தால் அவன் அதை கேட்க முடியாது. ஆனாலும், அவர் அப்படி விற்பனை செய்யும் நாளில், அவரின் மனைவி கர்ப்பமாக இருந்து, அந்தக் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறந்தால், அவன் பிறந்தவுடன், அந்த விற்பனை செய்த சொத்தில் அவனுக்கு சரிபாதி பங்கு உரிமை இருப்பதால், அவன் அந்த பங்கை கேட்டு வாங்க முடியும்.
ஒருவேளை, ஒரு கூட்டுக் குடும்பச் சொத்தை, தந்தையும் மகனும் பாகம் பிரித்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவருக்கும் தலைக்கு ஒரு பங்கு பிரித்து, பாகப் பிரிவினைப் பத்திரம் எழுதிக் கொண்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் பாகம் பிரித்துக் கொள்ளும் நாளில், மகனின் மனைவி கர்ப்பமாக இருந்தால், அது ஆண் குழந்தையாகப் பிறந்தால், பாகம் பிரிக்கும் நாளில், மொத்தம் மூன்று கோபார்சனர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது தந்தை, மகன், பேரன் (கருவில் இருந்தவன்) என மூன்று பேர். ஆக கருவும் ஒரு உயிருடன் இருக்கும் குழந்தைதான் என்று சாஸ்திரம் சொல்கிறது. இப்போதுள்ள சட்டமும் அதையே சொல்கிறது. எனவே தந்தை, மகன், பின்னர் பிறந்த பேரன் மூவரும் சேர்ந்து மறுபடியும் புதிய பாகப் பிரிவினையைச் செய்து கொள்ள வேண்டும். “நாங்கள் பாகம் பிரித்துக் கொள்ளும் நாளில், நீ பிறக்கவில்லை” என்று சொல்ல முடியாது.
ஆக இப்படியான இந்து கூட்டுக் குடும்பத்தில், கோபாசனர்கள் என்பவர்கள் ஆண்கள் மட்டுமே என்றும், அவர்களும் நான்கு தலைமுறைக்குத்தான் அவர்களுக்குள் கோபார்சனரி உறவுமுறை இருக்கும் என்றும், கோபார்சனர்களுக்கு தனி பங்கு என்று எதுவும் கிடையாது என்றும், கூட்டுச் சொத்தில் தலைக்கு ஒரு பங்கு கணக்கில் உண்டு என்றும், அவர் கூட்டு குடும்பத்தை விட்டு பிரிய விரும்பினால், அவரின் அப்போதைய பங்கை பிரித்துக் கொண்டு செல்லலாம் என்றும், கருவில் இருக்கும் ஆண் குழந்தையும் ஒரு கோபார்சனரே என்றும், ஒரு கோபார்சனர் வாங்கிய கடனை மற்ற கோபார்சனர்களும் கொடுக்க வேண்டிய கட்டாயம் உண்டு என்றும் இதுவரை பார்த்தோம்.
கர்த்தா:
கர்த்தா என்றால் காப்பவர் என்று பொருள். கூட்டுக் குடும்பத்தில் உள்ள மூத்த ஆண் கோபார்சனரே கர்த்தா எனப்படுபவர். இவரே அந்தக் கூட்டுக் குடும்பத்தின் முடிவுகளை எடுப்பார். இவரே மேனேஜர். அது அனைவரையும் கட்டுப்படுத்தும். அதை மற்ற கோபார்சனர்கள் கேள்வி கேட்க முடியாது. யோசனை தெரிவிக்கலாம். பிடிக்கவில்லை என்றால், அந்த கூட்டில் இருந்து பிரிந்து செல்லலாம், அவ்வளவே. எனவே கர்த்தா மட்டுமே மற்ற கோபார்சனர்களுக்காக, சொத்தை வாங்குவார், இந்த குடும்பத்து சொத்தை விற்பார், கடன் வாங்குவார், தான-தர்மம் செய்வார். சொத்தை வாங்கும்போது, கர்த்தா பெயரில் வாங்கினாலும், அதுவும் கூட்டுக் குடும்ப சொத்தே. சொத்தை விற்றாலும், அப்போது மேஜராக உள்ள மற்ற கோபார்சனர்கள் (ஆண்கள்) கிரயப் பத்திரத்தில் கையெழுத்துச் செய்ய வேண்டும். மைனராக இருக்கும் கோபாரசனரான ஆணுக்குப் பதிலாக மூத்த கோபார்சனரான கர்த்தாவே கார்டியனாக கையெழுத்துப் போடுவார். (மைனரின் தந்தை கார்டியனாக கையெழுத்துச் செய்ய அவசியம் இல்லை). ஒருவேளை கர்த்தா மட்டுமே கையெழுத்துப் போட்ட விற்ற சொத்தை, மற்ற கோபார்சனர்கள் கேள்வியும் கேட்க முடியாது. அந்த கிரயம் செல்லும்.
மித்தாச்சரா கூட்டுக் குடும்பம்:
இந்த கோபார்சனரி கூட்டுக் குடும்ப முறை இந்தியா முழுமைக்கும் இருந்து வந்துள்ளது. இதில் இரண்டு விதமான அல்லது இரண்டு வகையான இந்து கூட்டுக் குடும்ப முறை உள்ளது. ஒன்று மித்தாச்சரா கூட்டுக் குடும்ப முறை. மற்றொன்று தயாபாக கூட்டுக் குடும்ப முறை. தயாபாக முறையானது இந்தியாவில் வட-கிழக்குப் பகுதியான பெங்கால் மற்றும் அஸ்ஸாம் பகுதியில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், மித்தாச்சரா கூட்டுக் குடும்ப முறைதான் பழைய இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் பரவலாக இருந்து வந்த முறை.
இந்த இரண்டு வகையான முறைகளும் இரண்டு School of thoughts ல் இருந்து வந்த கொள்கைகள். மித்தாச்சரா இந்து முறையை விஞ்ஞானேஸ்வரா என்ற இந்து சாஸ்திர பண்டிதர் கொண்டு வந்தார். தயாபாக இந்து முறையை ஜிமுதவாகனா என்ற இந்து சாஸ்திர பண்டிதர் கொண்டு வந்தார்.
இந்த இரண்டு பண்டிதர்களும், இந்து சாஸ்திரத்தை வியாக்கியானம் செய்யும்போது, வித்தியாசமாக அவரவர் கருத்தைச் சொல்லி விட்டார்கள். அவர்களின் கருத்துப்படி அவரின் School of thought இருந்தது. அவரை எற்றுக் கொண்டவர்கள் அந்த முறையே சரி என்று பின்பற்றினார்கள். இரண்டுமே கோபார்சனரி முறைதான் சொல்கிறது ஆனால் சிறிய அளவில் இரண்டுக்கும் வித்தியாசம்.
(நான் தெரிந்து கொண்ட வரையில் இதுதான் வித்தியாசம் என நினைக்கிறேன்). ஒரு இந்து இறந்து விட்டால், அவரின் ஆன்மா, சொர்க்கம் செல்ல வேண்டும். அதற்கு அவரின் தாயாதிகள் என்னும் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்கள் பிண்டம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஆன்மா சொர்க்கம் சேராது என்றும், நடுவழியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் என்று இந்துமதம் கூறுகிறதாம். இந்த அடிப்படையில்தான், எந்த ஒரு இந்து ஆணும், ஒரு திருமணம் செய்து, தன் மனைவி மூலம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்று, மனைவியின் துணையுடன் இந்த உலகில் தான தர்மம் செய்து, இறக்க வேண்டும். அப்போது அந்த மகன், இறந்தவருக்கு காரியங்கள் செய்து பிண்டம் கொடுத்து, இறந்தவரின் ஆன்மாவை சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதே காரணத்துக்காகத்தான் ஆண் மகன் வேண்டும் என்கிறது இந்து மதம். அதற்காகவேதான் ஆண் மகன் பிறக்காதவர், ஒரு தத்துக் குழந்தையை (ஆண் குழந்தையை) தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறது. வேறு மதங்களில் தத்து எடுப்பது மதம் சார்ந்து இல்லை. விருப்பத்தின் பேரில் நடக்கிறது. ஒருவேளை, ஆண் மகன் பிறக்காமலேயே ஒரு இந்து ஆண் இறந்து விட்டால், அவரின் மனைவி அந்தக் கடமையைச் செய்து, கணவருக்காக ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்து, அந்த பிண்டம் கொடுக்கும் காரியத்தை செய்து, தன் கணவனை சொர்க்கம் சேர்க்க வேண்டும்.
 மித்தாச்சரா வியாக்கியான ஆசிரியர் விஞ்ஞானேஸ்வரா அவர்கள், மேலே சொன்ன சாஸ்திர தத்துவத்தை வியாக்கியானம் செய்யும்போது, பிண்டம் கொடுக்கும் கடமை, இறந்தவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரனுக்கு உண்டு என்பதால், அவர்களை தாயாதிகள் (கோபார்சனர்கள்) என்று சொல்லி விட்டார். எனவே ஒரு இந்து ஆணுக்கு, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என மூன்று தலைமுறை மட்டுமே கோபார்சனர்கள் ஆகி விட்டார்கள். மேலும், இவர்கள் எல்லோருக்கும் பிறப்பிலேயே சொத்தில் (யார் சொத்தாக இருந்தாலும்) உரிமை உண்டு என்றார்.
ஆனால், தயாபாக வியாக்கியான ஆசிரியர் ஜிமுத்தவாகனா அவர்கள், பிண்டம் என்பது மூத்த மகன் மட்டுமே கொடுப்பது என்று வியாக்கியானம் செய்து விட்டார். எனவே ஒரு இந்து ஆணின் சொத்தில், அவர் உயிருடன் இருக்கும் போது, அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் இவர்களுக்கு பிறப்பால் எந்த உரிமையும் கிடைக்காது. அவர்கள் வெறும் கோபார்சனர்களாக இருக்கலாம். பங்கு கேட்க முடியாது. ஆனால், தந்தை இறந்து விட்டால், அவரின் சொத்தில், மகன்கள் கோபார்சனர்களாக இருப்பார்கள்.
ஆக மித்தாச்சரா முறையில், ஒருவரின் சொத்தில், அவர் உயிருடன் இருக்கும்போதே, அவரின் மூன்று தலைமுறை வாரிசுகளுக்கு பிறப்பாலேயே பங்கு உண்டு. ஆனால், தயாபாக முறையில், ஒருவரின் சொத்தில், அவர் இறந்துவிட்டால்தான், அவரின் மகன்கள் மட்டும் பங்கு பிரித்துக் கொள்வர். அதில் ஒவ்வொரு மகனின் பங்கும், அவரின் மகன்களுடன் கோபார்சனரி முறைப்படி இருக்கும்.
இதை ஒரு எழுத்தாளர் இப்படிச் சொல்கிறார், “To put it simply, “Mitakshara was based on the ‘principle of ownership by birth, and Dayabagha on principle of ownership by death’.”
மற்றொரு விதமாகவும் இதன் இரண்டு முறைகளையும் சொல்கிறார்கள். பிந்தா, பிண்டா, பிண்டம், பந்து (பந்தம்), என்ற வார்த்தைகளின் குழப்பம்தான் இந்த வேறுபாடு. பந்துக்களுக்கு பங்கு என்றும், பிண்டம் கொடுப்பவனுக்கு பங்கு என்றும் இந்து சாஸ்திர வியாக்கியானம் செய்தவர்கள் புரிந்து கொண்டார்கள் என்றும் அதனால் இந்த வேறுபாடு என்றும் சொல்கிறார்கள்.
நாம் தென் இந்தியாவில் இருப்பதால், நமக்கு மித்தாச்சரா முறையே அமலில் இருந்தது. அதுவே பெரும்பாலான இந்தியாவின் முறையாவும் இருந்தது.
எனவே நமக்கு மித்தாக்சரா இந்து கோபார்சனரி முறையே செயல்படும் என்பதால் அதைப்பற்றி மட்டுமே இங்கு அலசப்பட்டது.
இந்து விதவை மறுமணம்:
இந்த மித்தாச்சரா இந்து கூட்டுக் குடும்பம் ஒரு கோபார்சனரி குடும்பம் ஆகும். அதில் ஒரு இந்து ஆணுக்கு, அவரின் மூன்று தலைமுறைகளான மகன், பேரன், கொள்ளுப்பேரன் (ஆக மொத்தம் நான்கு தலைமுறை ஆண்கள்) கோபார்சனர்கள் ஆவார்கள். அவர்களின் மனைவிகள் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டும். அவர்களை பராமரிக்கும் பொறுப்பு அந்த கூட்டுக் குடும்பத்துக்கு உண்டு. அந்த ஆண்களின் மகள்களை திருமண வயதுவரை பாதுகாத்து, திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் வேறு வீட்டுக்கு வாழப் போகிறவர்கள். அதேபோல் இந்தக் குடும்பத்துக்கு, வேறு வீட்டிலிருந்து வரும் மருமகள்களையும் இந்த கோபார்சனர்கள் பாதுகாத்து வர வேண்டும். யாருடைய கணவனாவது இறக்க நேரிட்டால், அந்த விதவையை அவள் வாழ்நாள்வரை பாதுகாத்து வர வேண்டிய கடமையும் இந்த கோபார்சனர்களுக்கு உண்டு. அதனால்தான், கோபார்சனர்கள் மட்டுமே சொத்தை எடுத்துக் கொள்கிறார்கள். பெண்களை “ஒரு பொருளாகவே” பார்த்து வந்திருக்கிறது இந்து சமயம். இது தவறுதான்.
இந்து விதவைகள், கோபார்சனரி குடும்பத்தில் உறுப்பினராக இருப்பார்கள். சில பகுதிகளில் அல்லது சில ஜாதிகளில், கணவர் இறந்தவுடன் அவளும் அதே சிதையில் தீக்குளிப்பாள். கொடுமை. இதை பிரிட்டீஸ் அரசு ஒரு சட்டமாக இயற்றி, அதை தடுத்து, விதவைகள் மறுமணம் செய்து கொள்ளமால் என்று ஒரு சட்டத்தை 1856-ல் கொண்டு வந்தது. அதன் பெயர் The Hindu Widow’s Remarriage Act, 1856.
விதவைகளுக்கும் கோபார்சனி சொத்தில் பாதுகாப்பு உரிமை:
ஒரு இந்து பெண், மகளாக பிறந்த வீட்டில் இருக்கிறாள். பின்னர் திருமணம் ஆகி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்கிறாள். எனவே எப்போதும் ஒரு பெண், புகுந்த வீட்டில்தான் வாழ்கிறாள். அவள் விதவை ஆனால், அவளுக்கு ஒரு சட்டப் பாதுகாப்பும் இல்லை. அவள், அவளின் வாழ்நாள்வரை, தாயாதிகள் என்னும் அந்த வீட்டின் கோபார்சனரி ஆண்களை நம்பியே வாழ வேண்டி உள்ளது. இது ஒரு மிகப்பெரிய குறை.
இந்தக் குறையை நீக்கும் பொருட்டு, 1937-ல் ஒரு சட்டம் வருகிறது. அதன் பெயர் The Hindu Women’s Rights to Property Act, 1937. இது இந்து விதவைகளுக்கு பெரிய பாதுகாப்பாக அப்போது இருந்தது. இந்தச் சட்டத்தில் மொத்தமே நான்கு செக்சன்கள் என்னும் பிரிவுகள் மட்டுமே கொண்டுள்ள மிகச் சிறிய சட்டம். இதன்படி பழைய முறை ஒழிக்கப்பட்டு, இந்த கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒரு கோபார்சனர் இறந்து விட்டால், அவர் இறப்பதற்கு முன்னர், அவருக்கும் (இறந்தவருக்கும்) அவரின் மற்ற கோபார்சனர்களுக்கும் (மகன், பேரன், கொள்ளுப் பேரன்) ஒரு கற்பனை பாகப்பிரிவினையை நடத்திக் கொள்ள வேண்டும். அதன்படி யார் யார் கோபார்சனர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் தலைக்கு ஒரு பங்கு என்று கற்பனையாக ஒதுக்கிக் கொள்ள வேண்டும். உண்மையில் பாகப் பிரிவினை செய்யத் தேவையில்லை. அப்படி பாகப் பிரித்தால், அந்த இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கு கிடைக்கும். அந்தப் பங்கை, அவரின் விதவை மனைவி, அவள் வாழ்நாள் வரை வைத்து அனுபவித்துக் கொள்ளலாம் என்று அந்த சட்டம் சொல்கிறது. இது அந்த விதவை மனைவிக்கு பெரிய பாதுகாப்பு என்று அந்த சட்டம் கருதியது. ஆனால் அவள் தன் வாழ்நாளில் அந்தச் சொத்தை அனுபவிக்கலாம். மற்றபடி விற்பனை செய்ய முடியாது. அப்படியே யாருக்காவது விற்றாலும் அந்தக் கிரயம், அவளின் வாழ்நாள் வரை மட்டுமே செல்லும். அந்த விதவை இறந்த பின்னர், அவளுக்குக் கொடுத்த பங்கானது, அந்த குடும்பத்தின் மற்ற தாயாதிகள் என்னும் கோபார்சனர்களுக்கே திரும்ப வந்துவிடும். It is a reversion right. எனவே அந்த விதவை மனைவிக்கு அந்த சொத்தில் முழு உரிமை இல்லை. வாழ்நாள் பாதுகாப்பு மட்டுமே. கணவர் இல்லாததால், அவருக்குச் சேர வேண்டிய பங்கை, அவள் அனுபவித்து வருவாள். அவ்வளவே. இதை அளந்து கொடுத்த உரிமை என்பர். It is only a limited right or limited estate.
இப்படியாக, 1956 வரை இந்துக்களின் கோபார்சனரி சொத்து உரிமை இருந்து வந்தது.
இனிமேல் 1956-ல் புதிய இந்து வாரிசு உரிமை எப்படி வந்தது. பெண்களின் சொத்துக்கள் எவை என்று பின்னர் பார்க்கலாம்.
**




கோபார்சனரி சொத்தும் 2005 திருத்தல் சட்டமும்


கோபார்சனரி சொத்து (Coparcenary) என்றால் எது?
6) கோபார்சனரி என்னும் பூர்வீகச் சொத்துக்களில் வாரிசு உரிமை:
1956 சட்டத்தின் பிரிவு 6-ஐ 2005ல் திருத்தி விட்டார்கள். (இந்த திருத்தல் சட்டத்தின்படி மகன்களைப் போலவே மகள்களுக்கும் சரி சம பங்கு உண்டு என்று திருத்தப்பட்டுள்ளது).
2005 திருத்தல் சட்டத்தின் படி புதிய பிரிவு 6:
(1) இந்து மித்தாக்சரா கூட்டு குடும்பத்தில், 2005 திருத்தல் சட்டம் வந்த பின்னர், மகனைப் போலவே மகளுக்கு பிறப்பால் சம பங்கு உண்டு.
இந்த 2005 சட்டத்துக்குப் பின்னர், இந்து மித்தாச்சரா கூட்டுக் குடும்பம் என்பது மகனையும், மகளையும் சேர்த்தே குறிக்கும்.
ஆனால், 20.12.2004 தேதிக்கு முன்னர், அந்த கூட்டுக் குடும்பச் சொத்தை அப்போது உள்ள கோபார்சனர்கள் பாகம் செய்து கொண்டிருந்தாலும், விற்பனை செய்து இருந்தாலும், மகள் அதில் பங்கு கேட்க முடியாது.
(2) அவ்வாறு மகளுக்கு கூட்டுக் குடும்பச் சொத்தில் உள்ள அவளின் பாகத்தை, அவள் தன் வாழ்நாளில் உயில் போன்றவைகள் மூலம் எழுதி வைக்கும் அதிகாரம் அவளுக்கு உண்டு.
(3) 2005 திருத்தல் சட்டம் வந்த பின்னர், ஒரு இந்து ஆண் தனது கூட்டுக் குடும்ப சொத்தை விட்டு விட்டு இறந்திருந்தால், அதில் இறந்த அவருக்கு உள்ள பங்கு மட்டும், அவரின் வாரிசுகளுக்கு இன்டஸ்டேட் அல்லது டெஸ்டமெண்டரி வழி மூலம் கிடைக்கும். (அவரின் பங்கு, மீதி இருக்கும் கோபார்சனர்களுக்கு போய் சேராது).
கூட்டுக் குடும்பச் சொத்தில் இறந்த கோபார்சனரின் பங்கு எது?
இந்த கோபார்சனர் இறந்த விட்ட நிலையில், அங்கு ஒரு கற்பனை பாகம் நடத்தி, அந்த பாகப்பிரிவினையில், இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கும், உயிருடன் இருக்கும் மற்ற கோபார்சனர்களுக்கு தலைக்கு ஒரு பங்கும் பிரித்துக் கொள்ள வேண்டும். இறந்த கோபார்சனரின் பங்கு மட்டும், அவரின் வாரிசுகளுக்கு இன்டஸ்டேட் அல்லது டெஸ்டமெண்டரி முறையில் கிடைக்கும். அதாவது இறந்தவரின் கோபார்சனரி பங்கு, மற்ற கோபார்சனர்களுக்கு போகாது; 1956-க்கு முன்னர் இறந்தவரின் கோபார்சனரி பங்கு, உயிருடன் இருக்கும் மற்ற கோபார்சனர்களுக்கே போய் சேரும், மாறாக இறந்தவரின் வாரிசுகளுக்குப் போகாது என்ற நிலை இருந்தது).
எனவே 2005 திருத்தல் சட்டத்துக்குப் பின்னர், ஒரு கோபார்சனர் இறந்து விட்டால், கற்பனை பாகப்பிரிவினையில், இறந்த கோபார்சனருக்கும், அவரின் மகன்கள், மகள்கள் எல்லாரும் தலைக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்வர். 1956 சட்டப்படி, இறந்த கோபார்சனரும், அவரின் மகன்களும் மட்டுமே எடுத்துக் கொண்டனர். 2005 திருத்தல் சட்டப்படி, அதில் மகளையும் இப்போது சேர்த்துக் கொண்டனர்)
எனவே, மகனைப் போலவே மகளும் ஒரு கோபார்சனர் பங்குதாரர் ஆகி விட்டார்.
இறந்தவருக்கு மகனோ, மகளோ ஏற்கனவே இறந்து விட்டால், அவரின் பிள்ளைகள், கோபார்சனரி முறைப்படி அந்த தகப்பனின்/தாயின் பங்கை பெற்றுக் கொள்வார்கள்.
இதேபோல், இறந்தவரின் மகன்/மகள் இறந்து, அவரின் பிள்ளைகள் இருந்தால், அவர்களும், அதேபோல கோபார்சனரி முறைப்படி அந்த பாட்டன்/பாட்டி பங்கைப் பெறுவார்கள்.
(4) 2005 திருத்தல் சட்டத்துக்குப் பின்னர், பாயஸ் ஆப்ளிகேஷன் Pious Obligation என்ற முறை ஒழிக்கப்பட்டது. அதாவது, தந்தையின்/ பாட்டனின்/ பூட்டனின் கடனை, அவரின் மகன்/ பேரன்/ கொள்ளுப் பேரன் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. 2005க்கு பின்னர் ஏற்பட்ட இந்த வகையான கடனை, அவரின் மகன்/ பேரன்/ கொள்ளுப்பேரன் கொடுக்க வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை.
ஆனாலும், 2005 சட்டம் வருவதற்கு முன்னர் ஏற்பட்ட கடனை, கொடுத்தாக வேண்டும்.
(5) 2005 சட்டம் வருவதற்கு முன்னர், அதாவது 20.12.2004 தேதிக்கு முன்னர், ஒரு கோபார்சனர் இறந்து விட்டிருந்தால், அப்போது ஒரு கற்பனை பாகப் பிரிவினை நடந்து, அவரின் மகன், பேரன் இவர்களுக்கு கோபார்சனரி சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படி பாகம் நடந்து இருந்தால், அந்த சொத்தில் மகளுக்கு பங்கு என்ற இந்த திருத்தல் சட்டம் செல்லாது.
பாகப்பிரிவினை என்று இங்கு சொல்வது – பதிவு செய்யப்பட்ட பாகப் பிரிவினைப் பத்திரங்கள் மட்டுமே. (வாய்மொழி பாகப் பிரிவினை செல்லாது; கூர்சீட்டு முறையில் பாகம் பிரித்துக் கொண்டாலும் செல்லாது; கோர்ட்டில் பாக வழக்குப் போட்டிருந்தாலும் செல்லாது; கோர்ட் வழக்கில் பைனல் டிகிரி கொடுத்திருந்தால் மட்டுமே அந்த பாகம் செல்லும்).
2005 மத்திய சட்டம் வருவதற்கு முன்னர் மாநிலங்களில் இந்த சட்டத்தில் திருத்தல் செய்தது:
குறிப்பு: இந்த 2005 திருத்தல் சட்டம் வருவதற்கு முன்பே, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு இவைகள் ஒரு திருத்தல் சட்டம் கொண்டு வந்து, அதன்படி மகள்களுக்கும் கோபார்சனரி கூட்டுக் குடும்பச் சொத்தில் சம பங்கு கொடுத்து விட்டது.
அதன்படி தமிழ்நாடு திருத்தல் சட்டம் 1989ல் கொண்டு வந்தது. அதன்படி, ஒரு ஆண் கோபார்சனர் (தகப்பன் என்று வைத்துக் கொள்வோம்) இறந்து விட்டால், அவர் இறக்கும் போது, மகனை மட்டும் கோபார்சனர் என்று நினைக்காமல், மகளையும் ஒரு கோபார்சனர் என்று நினைத்து, அவளுக்கும் ஒரு கோபார்சனரி பங்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு திருத்தல் சட்டம் சொல்கிறது. அதில், 1989-க்கு முன்னர் திருமணம் நடந்து கணவர் வீடு சென்ற பெண்ணை கோபார்சனர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை; திருமணம் ஆகமால் பிறந்த வீட்டிலேயே இருக்கும் பெண்ணை மட்டுமே கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டது; இதை ஒட்டியேதான் 2005 மத்திய அரசின் திருத்தல் சட்டம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).
கோபார்சனரி சொத்தும், மகளின் உரிமையும் – ஒரு விளக்கம்:
1956-க்கு முன்னர், பழைய இந்து தர்ம சட்டமே இருந்து வந்தது. அதன்படி பெண்களுக்கு சொத்தில் எந்த உரிமையும் கொடுக்கவில்லை. அதாவது, வாரிசு முறைப்படி ஒரு பெண்ணுக்கு சொத்தே கிடைக்காது. அவளாகவே தன் சேமிப்பைக் கொண்டு சொத்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். யாராவது உறவினர் அவளின் திருமணத்தின் போதோ, பின்னரோ, ஒரு சொத்தை அவளுக்கு சீதனமாக Sridhana (செட்டில்மெண்டாக) கொடுக்கலாம். அதை சீதனச் சொத்து என்பர். அதன்படி, 1956-க்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு அவள் கிரயம் வாங்கிய சொத்தும், சீதனமாகக் கிடைத்த சொத்தும் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அவளின் தகப்பன், தாய், பாட்டன், பாட்டி சொத்துக்கள் எப்போதும் வாரிசு முறைப்படி கிடைக்காது. இதுதான் 1956-க்கு முன்னர் இருந்த நிலை.
ஒரு ஆணின் சொத்தை அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் மட்டுமே சர்வைவர்ஷிப் Survivorship என்ற முறையில் அடைந்து கொள்வர். (அதாவது உயிருடன் இருப்பவர் சொத்தை அடைவதை சர்வைவர்ஷிப் என்பர்). இதைத்தான் கோபார்சனரி சொத்து என்பர். இதில் அந்த ஆண்களின் மனைவி, மகள் போன்ற எந்தப் பெண்ணுக்கும் பங்கு கொடுக்க மாட்டார்கள். அதாவது சர்வைவர்ஷிப் முறைபடி பங்கு கொடுக்க மாட்டார்கள். அப்படி இறந்த ஒரு கோபார்சனரின் விதவை மனைவியை மற்ற கோபார்சனர்கள் பாதுகாத்து (உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து) வர வேண்டும். அது அவர்களின் சட்டக் கடமை. இப்படி இருந்த நிலையில், ஒரு கோபார்சனர் இறந்து விட்டால், அவரின் விதவை மனைவி, மற்ற கோபார்சனர்களை (பங்காளிகளை) நம்பியே இருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. 1937-ல் இதை மாற்ற நினைத்து ஒரு புது சட்டத்தை கொண்டு வருகிறார்கள். அது கோபார்சனரி சொத்துக்களில் விதவையின் பங்கு உரிமைச் சட்டம் 1937 என்று கொண்டு வந்தார்கள். அதன்படி, ஒரு கோபார்சனரி ஆண் இறந்து விட்டால், அவரின் விதவை மனைவி, அந்த இறந்த கணவரின் கோபார்சனரி பங்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதை அவள், அவளின் வாழ் நாள் வரை ஆண்டு அனுபவித்து வரலாம் என்றும், ஆனாலும் அவள் அந்தப் பங்கை விற்பனை செய்ய முடியாது என்றும், (அப்படியே விற்பனை செய்தாலும், அது அவளின் வாழ்நாள் வரைதான் செல்லும் என்றும்), அவள் வாழ்நாளுக்குப் பின்னர், அந்தப் பங்கு சொத்தானது, அவளின் இறந்த கணவனின் மற்ற தாயாதிகள் என்னும் பங்காளிகளுக்குப் போய் சேரும் என்றும் சொல்லப் பட்டுள்ளது. இப்படியாக, விதவைகளை மட்டும் ஓரளவு பாதுகாத்தார்கள். முழுவதுமாக சொத்து உரிமை கொடுக்கவில்லை.
1956-க்கு பின்னர் இந்து சட்ட மாற்றம்
பின்னர், 1956-ல் பழைய இந்து சட்டத்தையே மாற்றி, பழைய பழக்க வழக்கங்களையும் மாற்றி, புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன்படி, 1956-க்கு பின்னர் ஒரு ஆண் சம்பாதித்த சொத்தில், அவரின் இறப்புக்குப் பின்னர், அவரின் எல்லா வாரிசுகளுக்கும் (மகன், மகள் உட்பட, மனைவி, தாய் இவர்களுக்கும்) சம பங்கு கொடுத்து விட்டார்கள். பெண் சம்பாதித்த சொத்தில், அவள் இறப்புக்குப்பின்னர், அவளின் கணவர், மகன், மகள் இவர்களுக்கு சம பங்கு கொடுத்து விட்டார்கள்).   ஆனால், பூர்வீக சொத்து என்று சொல்லும் கோபார்சனரி சொத்துக்களில் ஒரளவு சீர்திருத்தம் செய்தார்கள். அதை முழுமையாகச் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். 1956 இந்து வாரிசு உரிமை சட்டம், பிரிவு 6 இப்படியான கோபார்சனரி சொத்துக்களைப் பற்றிச் சொல்கிறது.
1956 சட்டத்தின் “பழைய பிரிவு 6”-ல் கோபார்சனரி சொத்துக்கள்:
1956 சட்டம் வருவதற்கு முன்னர், ஒரு ஆணின் கையில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் கோபார்சனரி சொத்துக்களே. ஒரு ஆண் 1956-க்கு முன்னர் இறந்து விட்டால், அது அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு மட்டுமே கோபார்சனர்கள் என்ற முறையில் பிறப்பால் பங்கு உரிமை அவர்களுக்கே போய் சேர்ந்து விடும். அதில் பெண்களுக்கு (மனைவிகள், மகள்கள், தாய்கள்) இவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது. இந்த நிலையை 1956 சட்டம் பிரிவு 6 ஒரளவு மாற்றியது. அதன்படி, ஒரு கோபார்சனர் ஆண் இறந்து விட்டால், அப்போது இறந்தவருக்கும் அவரின் மகன், பேரன் இவர்களுக்குள் ஒரு கற்பனை பாகப் பிரிவினை செய்து கொள்ளவேண்டும் என்றும், அதில் இறந்த கோபார்சனருக்கு ஒரு பங்கு கிடைக்கும். அந்தப் பங்கை அவரின் தனிச் சொத்தாகக் கருதி, அவரின் மனைவி, மகள், மகன், இறந்த மகன், மகள் இவர்களின் குழந்தைகள் இவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது. இதில் இறந்த கோபார்சனரி ஆணின் பங்கு மட்டுமே அவரின் மனைவி, மகள் இவர்களுக்குக் கிடைக்கும். அது ஒரு சிறு பங்குதான். ஆனால் மற்ற கோபார்சனர்கள் என்று சொல்லும் இறந்தவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் இவர்களுக்கு பெரிய பங்கு கிடைத்துவிடும் நிலை இருந்தது.
இதை மாற்றி, ஆந்திரா மாநிலம் 1987-ல் மகளையும் ஒரு கோபார்சனர் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண் என்ற காரணத்துக்காக  அவளை ஒதுக்கி விடக்கூடாது என்று 1956 சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. இது சரியான அணுகுமுறை என்று நினைத்த தமிழ்நாடு அரசும் அதையே அப்படியே ஏற்றுக் கொண்டு 1989-ல் தமிழ்நாடு திருத்தல் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, மகளையும் கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டு அவளுக்கும் கோபார்சனரி என்னும் பூர்வீகச் சொத்தில், மகனைப் போலவே சரி சம பங்கு கொடுத்தது. ஆனாலும், திருமணம் ஆகி கணவர் வீட்டுக்குச் சென்றவரை எப்படி கோபார்சனர் என்று ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற தர்க்கவாதம் காரணமாக, திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டில் இருக்கும் பெண்ணையே கோபார்சனர் என்று ஏற்றுக் கொண்டு, அவளுக்கும் மகனைப் போலவே சரிசம பங்கு கொடுத்தது.
இதற்குப்பின்னர், இந்த சில மாநில திருத்தல் சட்டங்கள், பூர்வீகச் சொத்தில் ஆணுக்கும் பெண்ணும் (மகனுக்கும் மகளுக்கும்) சரி சம பங்கு கொடுக்க வேண்டும் என்றுதிருத்தி இருப்பது  சரியாகவே இருப்பதால், அதையே மத்திய அரசும் 2005-ல் திருத்தி அதை இந்தியா முழுமைக்கும் அமல் படுத்த விட்டது. இது 20.12.2004 முதல் அமலுக்கு வந்தது.
**

இந்து வாரிசு சட்டத்தின்படி இந்துக்கள் யார்?


இந்து வாரிசு சட்டத்தில் இந்துக்கள் யார்?
இந்த சட்டத்தின் பெயர்:
1) இந்து சக்சஷன் சட்டம் 1956. The Hindu Succession Act 1956 as amended in 2005.
இந்தச் சட்டம் யார் யாருக்குப் பொருந்தும்:
2) (1) இந்தச் சட்டம் இந்துக்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இந்து என்பது வீரசைவர், லிங்காயத்துக்கள், பிரமோ, பிரார்த்தனா, ஆர்ய சமாஜ் பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் குறிக்கும்.
புத்த, ஜைன, சீக்கிய, மதத்தினரும் இந்துக்களே.
முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி, யூதர் அல்லாதவரும் இந்துக்களே (அவர்கள் இந்து மத பழக்க வழக்கங்களை கொண்டிருந்தால்).
பெற்றோர் இருவரும் இந்துக்களாக இருந்தால், அவர்களின் சட்டபூர்வ குழந்தைகள், சட்டபூர்வமற்ற குழந்தைகள் இந்துக்களே.
பெற்றோர் இருவரில் ஒருவர் இந்துவாக இருந்தால், அவரின் சட்டபூர்வ குழந்தைகள், சட்டபூர்வமற்ற குழந்தைகள் இந்துக்களே. (ஆனால் அவர்களை இந்துக்களின் குழந்தைகளாக வளர்க்கப்பட்டு இருக்க வேண்டும்).
வேறு மதத்தில் இருந்து, இந்து மதத்துக்கு மாறியவர்களும் இந்துக்களே.
(2) ஷெட்யூல் டிரைப்புகள் Scheduled Tribes என்னும் ஆதிவாசி பழங்குடிகள் பொதுவாக இந்துக்கள் இல்லை. (அரசியல் சாசன சட்டம் ஆர்ட்டிகிள் 366 உள் பிரிவு 25-ன்படி). அரசு அவர்களை இந்துக்கள் என்று அரசிதழில் வெளியிட்டு இருக்க வேண்டும்.
(3) இந்த சட்டப்படி இந்துக்கள் என்று இதில் குறிப்பிடுவது, மேலே சொன்னவர்களைத்தான் குறிக்கும்.
(பாண்டிச்சேரியில் 1.10.1963 முதல் பிரான்ஸ் குடியுரிமையில் இருந்து விலகி வந்தவர்களும் இந்துக்கள் என்றே கருதப்படுவர்).
இந்தச் சட்டத்தில் உள்ள சில வார்த்தைகளின் விளக்கம்:
3) பொருள் விளக்கங்கள்:
ஆக்னேட்  உறவு என்றால் Agnate – ஒரே ஆண்வழியில் வந்தவர்களுக்கு இடையே உள்ள உறவு.
அலியசந்தான சட்டம் என்பது Aliyasanthana Law – இந்தச் சட்டம் வரவில்லை என்றால், அவர்களுக்கு மதராஸ் அலியசந்தான சட்டம் 1949 யார் யாருக்குப் பொருந்துமோ அவர்கள்.
காக்னேட் உறவு என்றால் Cognate – ஒரே ஆண் வழியில் வராத உறவுகள்.
பழக்க வழக்கம் என்பது Custom and Usage – தொடர்ந்து பல காலமாக, ஒரே மாதிரி, ஒரு கூட்டத்துக்கு மக்களுக்குள், அல்லது ஒரு குடும்பத்துக்குள் இருந்து வரும் தொடர் பழக்க வழக்கம். (ஆனால் அப்படியான பழக்க வழக்கம், பொது நீதிக்கு எதிரானதாக இருக்கக் கூடாது).
முழு ரத்த உறவு என்பது Full blood – ஒருவருக்கு அவரின் ஒரே மனைவி மூலம் பிறந்த குழந்தைகளுக்குள் உள்ள உறவு.
அரை ரத்த உறவு என்பது Half blood – ஒருவருக்கு அவரின் வேறு வேறு மனைவிகள் மூலம் பிறந்த குழந்தைகளுக்குள் உள்ள உறவு.
கர்ப்ப உறவு என்பது Uterine blood – ஒரு பெண்ணின் பல கணவர்களின் பிள்ளைகளுக்கு இடையே உள்ள உறவு.
வாரிசு என்பது Heir – இறந்தவரின் சொத்துக்களில் உரிமை பெறக்கூடிய உரிமை உள்ளவர்கள்.
இன்டஸ்டேட் என்பது Intestate – ஒருவர் உயில் ஏதும் எழுதிவைக்காமல், தன் சொத்தை விட்டு விட்டு இறந்தவர்.
மருமக்கள் தாயம் சட்டம் என்றால் Marumakkthayam – இந்த சட்டம் வராமல் இருந்திருந்தால், அவர்களுக்கு மதராஸ் மருமக்கதாயம் சட்டம் 1932 மற்றும் திருவாங்கூர் நாயர் சட்டம்  போன்றவை அமலில் இருக்கும் நபர்கள்.
நம்பூதிரி சட்டம் என்பது Nambudiri Law – மதராஸ் நம்பூதிரி சட்டம் 1932 அமலில் இருக்கும் நபர்கள்.
இந்த சட்டத்தில் ஆண் Male என்று சொல்லும் இடங்களில் எல்லாம் பெண் Female என்றும் பொருள் கொள்ள வேண்டும். (குறிப்பிட்டுச் சொல்லாதவரை).
4) இந்தச் சட்டம் எவைகளைப் பாதிக்கும், எவைகளை பாதிக்காது
(1) பழைய இந்து சட்டத்தில் உள்ள பழைய பழக்க வழக்கங்களை இந்த சட்டம் செல்லாது என அறிவிக்கிறது.
(2) பழைய இந்து சட்டத்தில் எவை எவை எல்லாம், இந்த சட்டத்துக்கு எதிராக உள்ளதோ அவைகளும் இந்த சட்டப்படி செல்லாது.
5) சில குறிப்பிட்ட சொத்துக்களுக்கு இந்த சட்டம் செல்லாது:
(1) இந்தியன் சக்சஷன் சட்டம் 1925 The Indian Succession Act, 1925 -த்தில், பிரிவு 21-ல் சிறப்பு திருமணச் சட்டம் 1954-ல் சொல்லப்பட்டவை இந்த சட்டத்துக்கு பொருந்தாது. (அதாவது, இந்துக்களாக இருந்தும், அவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தில் திருமணம் செய்திருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு, வாரிசு சொத்துப் பிரச்சனையில், இந்த இந்து சக்சஷன் சட்டம் 1956 பொருந்தாது).
(2) ஏற்கனவே மன்னர்களாக இருந்தவர்களின் சொத்துக்கள் அவர்களின் மூத்த மகனுக்கே வாரிசுப்படி செல்லும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு அதை இந்திய அரசும் அனுமதித்து இருக்கும் பட்சத்தில், அந்தச் சொத்துக்களுக்கு, இந்த இந்து சக்சஷன் சட்டம் 1956 பொருந்தாது.
(3) கேரளாவில் உள்ள வள்ளியம்மா தம்பிரான் கோயிலகம் எஸ்டேட் சொத்துக்களுக்கு, இந்தச் சட்டம் பொருந்தாது.
**

Monday, December 24, 2018

நடுக் கடலில் நடக்கும் குற்றம்


Babu Daldi v. The Queen
Madras High Court Judgment on 26 February, 1882
Judgment by Justice Innes and Justice Muthusamy Iyer.
பாபு தல்தி என்பவர் மங்களூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவரிடம் அரிசி மூட்டைகளை படகில் ஏற்றி அதை கோலிக்கோட்டில் உள்ள ஒரு கம்பெனியில் ஒப்படைக்கும்படி அவரின் முதலாளி கூறுகிறார். அவர் அரசி மூட்டைகளை படகில் ஏற்றிக் கொண்டு அரபிக்கடலில் பிரயாணம் செய்கிறார். இது நடந்தது 1869-ல். அப்படியே படகை கடல் வழியாகவே கோவாவுக்குக் கொண்டு சென்று, அங்கு அந்த அரிசி மூட்டைகளை இறக்கி, விற்றுவிடுகிறார்.
எடுத்துச் சென்ற சரக்கை கள்ளத்தனமாக விற்று ஆதாயம் பார்த்து நம்பிக்கை துரோகம் செய்ததால், அவர் மீது ஐசிபி செக்சன் 407-ன்படி வழக்குப் போட்டு, அதில் அவருக்கு நான்கரை ஆண்டுகள் கடும்காவல் சிறையும், ரூ.500 அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 15 மாதங்கள் கடுங்காவல் சிறையும் விதித்து 1869-ல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் நடக்கிறது. அதில் கோவாவில் இந்த அரிசியை விற்பனை செய்துள்ளதால், அங்குதான் குற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்பதாலும், அந்த கோவா பகுதி பிரிட்டீஸ் சாம்ராஜ்ஜிய எல்லைக்கு வெளியே இருப்பதாலும், வழக்கு விசாரனையை மறுவிசாரனை செய்து தீர்ப்பு வழங்கும்படி ஐகோர்ட் சொல்லி விட்டது.
இந்த அப்பீல் நிலுவையில் இருக்கும்போது, ஜெயிலில் இருந்து அவர் தப்பி ஓடி விட்டார். சில காலம் கழித்தே அகப்படுகிறார்.
முதல் அப்பீல் வழக்கை விசாரனை செய்த மதராஸ் ஐகோர்ட், “மங்களூர் செசன்ஸ் கோர்ட் இந்த வழக்கை எடுத்து நடத்தி இருக்கிறது. அவர் மங்களூர் தாண்டியவுடன், கடலில் சரக்குப் படகை திசை திருப்பி கோவா கொண்டு சென்று, அங்கு சரக்கை பிரித்து அரிசியை விற்பனை செய்து இருக்கிறார் என்றும், படகை மங்களூர் கடல் பகுதியில் கோவா நோக்கித் திருப்பும் போதே அவரின் கள்ளத்தனம் வெளியாகி விட்டது. சரக்கைத் திருட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் அவர் படகின் திசையை கடலில் மாற்றுகிறார். அங்கு கடலில் அவர் குற்றம் புரிந்தவர் ஆகிறார். எனவே ஐபிசி சென்ஷன்படி இவர் மங்களூர் செசன்ஸ் கோர்ட்டுக்கு விசாரனை வரம்பு உள்ளது என்றும் சொல்லி உள்ளது. இது இந்திய தண்டனைச் சட்டத்துக்கு ஏற்புடையதாக இருந்தாலும், ஆங்கிலேய சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஆங்கிலேயச் சட்டப்படி, சரக்கை ஒரு படகில் களவாடிக் கொண்டு செல்லும்போது (larceny by a carrier), எப்போது குற்றம் என்று சொல்ல முடியும் என்றால், அந்த சரக்கை பிரித்து விற்பனை செய்யும்போது மட்டுமே அது குற்றம் ஆகும். வழி மாற்றிக் கொண்டு செல்வது எல்லாம் ஆங்கிலேய சட்டப்படி குற்றம் ஆகாது.
மேலும், அந்த ஆங்கிலேய சட்டப்படி பார்த்தால், சரக்கை கோவா-வில் இறக்கி, பிரித்து விற்பனை செய்து உள்ளார். எனவே கோவா-வில் தான் குற்றம் நிகழ்கிறது. கோவா பகுதி பிரிட்டீஸ் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி இல்லை (அது போர்ச்சுகீச அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி). எனவே இந்திய தண்டனைச் சட்டத்தை வெளி ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த குற்றத்துக்கு விசாரிக்க முடியாது. ஆனால், மங்களூர் செசன்ஸ் நீதிபதி, Act 1 of 1849-ஐ கணக்கில் எடுத்துக் கொண்டு, தனக்கு விசாரனை வரம்பு உள்ளது எனக் கருதிக் கொண்டு, அவரை குற்றவாளி என்று தீர்ப்பை வழங்கி உள்ளார்.  அது தவறு. எனவே ஐகோர்ட் மறு விசாரனைக்கு வழக்கை அவருக்கே திருப்பி அனுப்பியது. அந்த மறுவிசாரனை, குற்றவாளி தப்பி விட்டதால் தாமதம் ஆகி விட்டது. மறு விசாரனையில், செசன்ஸ் நீதிபதி, Section 671 Criminal Procedure Code, (Old Code)-ன்படி தனக்கு அதிகாரம் இருப்பதாகச் சொல்லி உள்ளார். ஆனால் அந்த சட்டம் Act I of 1849-ன்படி ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது. இருந்தாலும், மறுபடியும் இந்த எல்லைப் பிரச்சனைக்காக, இதே வழக்கு திரும்ப மறுவிசாரனைக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில், வழக்கை சாட்சிகளுடன் விசாரித்து ஒரு முழு தீர்ப்பை வழங்கி உள்ளதாக சொல்லி உள்ளார்.
குற்றம் கோவா-வில்தான் நிகழ்ந்து உள்ளது என்று கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்கி இருக்க வேண்டும். செசன்ஸ் நீதிபதி சொல்வது போல Section 67 of the Procedure Code cannot give jurisdiction as supposed by the Sessions Judge. That section is part of a Code of Procedure for the trial of offences committed in British India.  அதாவது, பிரிட்டீஸ் ஆட்சிக்கு உட்பட்ட எந்த பகுதிக்கும் அது பொருந்தும் என்று சொல்லி உள்ளதே தவிர, பிரிட்டீஸ் ஆட்சி எல்லைக்கு வெளியே இருக்கும் பகுதிக்கும் செல்லும் என்று சொல்லப்படவில்லை என்பதை செசன்ஸ் நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். அந்த சட்டத்தில் the words “journey or voyage என்று சொல்லப்பட்டுள்ள வார்த்தையானது do not include a voyage on the high seas or in foreign territory. செக்சன் 67 பிரிட்டீஸ் இந்திய எல்லைக்குள் நடக்கும் குற்றங்களை மட்டும் சொல்கிறது. பின்னர் வந்த சட்டம் கூட, “பிரிட்டீஸ் இந்திய பிரஜை ஒருவர் குற்றம் செய்து விட்டு, வெளி பகுதிக்கு ஓடி விட்டால், அந்த பகுதியின் பொலிட்டிகல் ஏஜெண்ட் அனுமதி பெற்றுத் தான், அந்த இந்திய பிரஜையை விசாரிக்கு முடியும்” என்று சொல்லி உள்ளது.
இந்த வழக்கில், அந்த குற்றவாளி, high seas என்னும் உள் கடலில் பிரயாணம் செய்து இருக்கிறார். அவர் இந்திய எல்லைக்குள் பிரயாணம் செய்ததாகவோ, இந்திய எல்லைக்குள் அவர் இந்த சரக்கை களவாட வேண்டும் என்று எண்ணியதாகவோ முடிவை எடுக்க முடியாது. அவர் கோவா கரை ஒதுங்கும் போதுதான், அந்த பகுதியில் அந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் என்று கருத வேண்டும். ஏனென்றால், ஆங்கிலேய சட்டப்படி, ஒருவர் நடுக்கடலில் இருக்கும் போது, அவர் எந்த நாட்டு எல்லைப் பகுதியில் தவறு செய்தார் என்று சொல்ல முடியாது.
எனவே மங்களூர் செசன்ஸ் நீதிபதி எடுத்த முடிவு தவறானதாகும். ஆகவே, இந்தக் குற்றவாளியை விடுதலை செய்வதாக மதராஸ் ஐகோர்ட் தீர்ப்பு கூறியது.
**
குறிப்பு:
இப்போது இந்த மாதிரியான சட்டம் மாறி விட்டது. நடுக்கடலில் கப்பலில் ஒரு குற்றம் நடந்தால், அது எந்த நாட்டுக் கப்பலோ, அல்லது எந்த நாட்டில் அந்தக் கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நாட்டின் சட்டப்படி அந்த நாட்டில் உள்ள கோர்ட் விசாரிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.
**


ஜமின் சொத்துக்களில் ரயத்துவாரி பட்டா முறை


ஜமின் சொத்துக்களில் ரயத்துவாரி பட்டா முறை:
சென்னை ஐகோர்ட்,
வெள்ளையன் செட்டி v. திருவக்கோன் மற்றும் பலர்.
(1882) ILR 5 Mad 76 – Full Bench Decision
1882 காலக்கட்டத்தில், தெற்கு தஞ்சை பகுதியில் கலைக்கோட்டை ஜமீன் இருந்தது. கலைக்கோட்டை ஜமின்தார் தனக்குச் சொந்தமான சொத்துக்களில் ஏழு ஊர்களை அடமானம் வைத்து வெள்ளையன் செட்டியிடம் ரூ.50,000 கடன் வாங்கி இருந்தார். அதற்கு வட்டியாக 10 ½ % கொடுக்க ஒப்புக் கொண்டார். இந்த ஏழு ஊர்களின் நிலங்களுக்கும் அரசுக்கு வரியாக ரூ.6,000 வருடத்துக்கு கொடுக்க வேண்டும். அந்த அடமானப் பத்திரத்தில், சொத்தை அடமானம் கொடுத்தது மட்டும் இல்லாமல், அதை விவசாயம் செய்பவர்களிடம் பயிர் வரும்படியையும் அனுபவித்துக் கொள்ளவும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அப்போதைய சட்டமான ரெகுலேஷன் சட்டம் VIII 1865  சட்டப்படி, இப்படியான அடமானக் கடன்களில், சொத்தின் உரிமையாளரான ஜமின்தார், அந்த சொத்தின் பட்டாவை, பணம் கொடுத்தவருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர், அந்த நிலத்தில் பயிர் செய்பவர்களிடம் பயிர் வரும்படிகளை வசூலிக்க முடியும், அதைக் கொண்டு அரசுக்கு வரி செலுத்த முடியும்.  (இப்போது உள்ள பட்டா முறையுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். அதுவேறு, இது வேறு).
ஜமின்தாருக்கு அடமானக்கடன் கொடுத்தவர், அப்படிப்பட்ட பட்டா இல்லாமல் பயிர் வரும்படியை வசூல் செய்யப் போகிறார். அதை விவசாயிகள் எதிர்க்கிறார்கள். எனவே அடமானக் கடன் கொடுத்தவர் கோர்ட்டுக்குப் போகிறார். கீழ் கோர்ட் இவருக்கு சாதகமாக தீர்ப்பு கொடுக்கிறது. அதை எதிர்த்து பயிர் செய்பவர்கள் அப்பீல் போகிறார்கள். அப்பீல் வழக்கு அடமானக் கடன் கொடுத்தவருக்கு எதிராக தீர்ப்பாகிறது. அதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டுக்கு போனார். அது மேற்படி வழக்கை திருப்பி அனுப்பி சில சட்ட விஷயங்களையும், சாட்சியங்களையும் மறு விசாரனை செய்ய உத்தரவு இடுகிறது.
**
மதராஸ் பிரசிடென்சியில் முதன் முதலாக இப்படியான பட்டா கொடுக்கும் சட்டமான Regulation XXX of 1802 ரெகுலேசன் சட்டம் 1802 அமலுக்கு வருகிறது. இதன்படி நிலங்களை நிரந்தர அசெஸ்மெண்ட் செய்யப்பட்டு அதற்குறிய பட்டா பெற வேண்டும். அப்போதுதான் அதன் மூலம் அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமானத் தொகை எவ்வளவு என்று தெரியவரும்.
(இப்போது அந்த முறை இல்லை; நிலங்களுக்கு வரி Tax மட்டுமே விதிக்கப்படுகிறது; ஆனால் அப்போது, அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு (சுமார் ஆறில் ஒரு பங்கு) வருமானத் தொகை (இதை Rent என்பர்) அரசுக்கு கொடுக்க வேண்டும். Rent என்பது வரி (Tax) அல்ல, அது வருமானத்தில் பங்கு. வருமானத்தில் பங்கு என்பது Rent Assessment. இது ஒரு பெரிய தொகை. இப்போது Rent-ஐ நீக்கி விட்டு வரி Tax மட்டும் போடுகிறார்கள். எனவே அதை Quit-Rent என்கிறார்கள். அதை Tax Assessment என்பர்).
இந்த ரெகுலேசன் சட்டத்தை எதற்கு கொண்டு வந்தார்கள் என்றால்: அப்போது இருந்த நில உரிமையாளர்கள், நிலங்களை, அதில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு “வருமானத்தில் பங்கு” என்ற அடிப்படையில் கொடுப்பர். விவசாயிகளை கஷ்டப்படுத்தி அதிக பங்கு வாங்கிக் கொள்வர். ஆனால் அரசாங்கத்துக்கு குறைந்த மகசூல் வருவாயை மட்டும் கொடுப்பார்கள். இதை தடுக்கும் பொருட்டே இந்த ரெகுலேஷன் சட்டம் வந்தது. அதன்படி, பயிர் செய்யும் விவசாயிக்கு ஒரு பட்டா கொடுக்க வேண்டும் என்றும், அதில் வருமானப் பங்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நிர்ணயித்து இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதை மீறி, பட்டா கொடுக்காமல், ஒரு நிலத்தை விவசாயிக்கு கொடுத்தால், அந்த விவசாயிடம் இருந்து மகசூல் வருமானத்தை பெற நில உரிமையாளருக்கு அதிகாரம் இல்லை. ஜில்லா கோர்ட்டுக்கும் போக முடியாது. அதாவது ஒரு நிலத்தை, அதன் உரிமையாளர், விவசாயிக்கு பட்டா கொடுக்காமல், பயிர் செய்ய விட முடியாது.
எனவேதான், 1802-ல் முதன் முதலாக ஜமின்தார்கள், நிலபிரபுக்கள் இவர்களின் நிலங்களை விவசாயத்துக்கு கொடுக்க வேண்டும் என்றால், முதலில் பயிர் செய்பவருக்கு பட்டா கொடுத்து, அதில் எவ்வளவு மகசூல் வருவாய் பங்கு கொடுக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்ற சட்டக் கட்டாயத்தை அரசு கொண்டு வருகிறது. விவசாயிகளை அந்தச் சட்டம் ரையத் என்று குறிப்பிடுகிறது. ரையத் என்றால் பயிர் செய்பவர் அல்லது விவசாயி.
இந்த ரெகுலேசன் சட்டமானது, 1802 வருடத்தில் இருந்து சிறு சிறு மாறுதல்களுடன் புதிய ரெகுலேசன் சட்டங்களாக வருகிறது. நில பிரபுக்களுக்கும், விவசாயி ஆன ரையத்-க்கும் இதில் பிரச்சனை ஏற்பட்டால், கலெக்டரிடம் முறையிட்டு தீர்த்துக் கொள்ள வேண்டி ரெகுலேசன் சட்டம் XXV of 1802 வந்தது. பின்னர், ரெகுலேசன் சட்டம் XXVII of1802 வந்தது.
பல சொத்துக்கள், இப்படியாக, ஜமின்தார்கள், நில பிரபுக்கள் உரிமையாளர்களாக இருந்தார்கள். சில சொத்துக்கள், அப்படி அவர்களின் கைப்பிடியில் இல்லாமல் அரசிடம் இருக்கிறது. அதை நேரடியாக விவசாயியே (ரையத்) பட்டா பெற்று விவசாயம் செய்து வருமானப் பங்கை அரசுக்கு கொடுப்பார். இப்படி அரசாங்கத்தின் சொத்தை நேரடியாகவே, ஒரு விவசாயிக்குப் பட்டா கொடுத்தால், அதை “அயன் பட்டா” என்றும் அந்த நிலத்தை அயன் நஞ்சை/ அயன் புஞ்சை என்றும் சொல்வர். அயன் என்ற வார்த்தைக்கு, அரசு-விவசாயி என நேரடியாக உள்ள உறவு என்று பொருள். இடையில் ஜமின்தார் அல்லது நிலபிரபு என்ற ஏஜெண்ட் இங்கு இல்லை. அரசாங்கமும்-விவசாயியும், மகசூல் பங்கு செலுத்துவதிலும், அதை வாங்குவதிலும் நேரடி உறவில் இருக்கிறார்கள். தமிழில் அயன் என்ற சொல்லுக்கு “பிரம்மன்” என்ற பொருள் உண்டு. பிரம்மா என்றால் மனிதர்கள் மூலம் பிறக்காதவன்; அல்லது முதன்முதலில் தோன்றியவன் (பிறந்தவன்) என்ற பொருள். அதுபோலவே, அரசின் நிலத்தை நேரடியாக விவசாயி பெற்று பயிர் செய்து, அதன் மகசூலில் ஒரு பங்கு வருமானத்தை அரசுக்கு நேரடியாகச் செலுத்தும் வகையில் உள்ள நிலங்களை “அயன் நஞ்சை அல்லது அயன் புஞ்சை” என்று சொல்கிறார்கள் என்பது எனது கருத்து. (சிறிது மாறுபாடுகள் இருக்கலாம்). அயன் என்றால் அரசு நிலம் என்று பொதுவாகச் சொல்லிக் கொள்வார்கள்.
பல சொத்துக்களை அரசு, நேரடி நிர்வாகம் பார்க்க முடியாது என்பதால், ஜமின்தார்கள், நிலபிரபுக்கள், இவர்களிடம் ஏற்கனவே ஒப்படைத்து விட்டது. அவர்கள், நேரடியாக அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மகசூல் வருமானமாகச் செலுத்தி விடுவார்கள். ஆனால், விவசாயிகளிடம் (ரயத்துகளிடம்) அதிக மகசூல் வருவாய் பெற்றுக் கொள்வார்கள். இதில் நிறைய அடாவடித்தனங்களும் நடக்கும். அப்படி அதிகாரம் செலுத்தி வகையில் தான், ஜமின்தாரர்களின் மீது பயமும், மரியாதையும் ஏற்பட்டது என்றால் உண்மைதான். அடியாட்களை வைத்து, மகசூல் வருவாய் வசூல் செய்வது சர்வ சாதாரணம். விவசாயிகளுக்கு சாட்டை அடி கிடைத்ததும் உண்டு.
இந்தக் கொடுமைகளை பெருமளவு கட்டுப்படுத்தவே இந்த ரெகுலேசன் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
கடைசியாக லெகுலேஷன் சட்டம் XXX of 1802 கொண்டு வரப்பட்டது. அதில் பழைய பிரச்சனைகளை சீர்திருத்தி புதிய வழிமுறைகளைச் சொல்லி உள்ளது. அதன்படி, நிலங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கொண்டது. முதல் வகையில், அரசாங்கத்தின் பல கிராமங்கள் அடங்கிய நிலங்களை ஜமின்தாரரிடம் அல்லது நிலபிரபுக்களிடம் அல்லது அதை ஏலம் எடுப்பவர்களிடம், வருடத்துக்கு ஒரு தொகையை பேசிக் கொண்டு, ஒப்படைத்து விடும். அதை அந்த ஜமின்தார், விவசாயிகளிடம் விட்டு, அதில் வரும் வரும்படியை பெற்றுக் கொள்வார்கள். அப்போது, ஜமின்தார் ஒரு பட்டாவை இந்த விவசாயிக்குக் கொடுப்பார். அதில், நிலத்தின் விபரத்துடன், வருடத்துக்கு ஒரு மகசூலில் எவ்வளவு பங்கு கொடுக்க வேண்டும் என்று எழுதி இருக்கும். அதன்படி விவசாயி, அந்த ஜமின்தாரருக்கு கொடுத்து விடுவார். ஆனால், ஜமின்தாரர், மிகக் குறைந்த தொகையையே அரசாங்கத்துக்கு கட்டி விடுவார். இது ஒரு முறை.
மற்றொருன்று, அரசிடம் விவசாய நிலங்கள் இருக்கும். அதை நேரடியாக, ஒரு பட்டா போட்டுக் கொடுத்து, வருடத்துக்கு ஒரு மகசூலுக்கு இவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று எழுதி இருக்கும். இந்த நிலத்தைத்தான் அயன் நிலம் என்பர். இதில் குறைந்த மகசூல் பங்கே செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த இரண்டு விஷயத்திலும், விவசாயி பங்கு கொடுக்கவில்லை என்றால், நிலச்சுவான்தார் ஜில்லா கோர்ட்டில் வழக்குப் போட்டு அவரை காலி செய்வார். வசூல் ஆகாத பணத்துக்கு அவருக்கு சிறை தண்டனையும் பெற்றுத் தருவார்.
இப்படிப்பட்ட பட்டாவை விவசாயிக்கு கொடுக்காத ஜமின்தார்கள் அல்லது நிலபிரபுக்கள் இருந்தால், அவர்கள் கோர்ட்டுக்குப் போக முடியாது என்று இந்த ரெகுலேஷன் சட்டங்கள் சொல்கின்றன. அது குற்றமும் ஆகும்.
ஒருவேளை, நிலத்தை வைத்திருப்பவர் (ஜமின்தார் என்று வைத்துக் கொள்வோம்), அந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தால், அவர் பெயருக்கு நிலத்தின் மகசூல் வசூலித்துக் கொள்ளும் உரிமையையும் மாற்றி கொடுத்து இருக்க வேண்டும். அந்த ஆதாரத்தின் பேரில், கடன் கொடுத்தவர், விவசாயிடம் மகசூல் வருமானத்தின் பங்கை வசூல் செய்து கொள்ளும் உரிமையைப் பெறுவார்.
**
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த வழக்கில், தஞ்சாவூர் கலைக்கோட்டை ஜமின்தார், தனக்குச் சொந்தமான ஏழு ஊர்களின் நிலங்களை, வெள்ளையன் செட்டிக்கு அடமானம் எழுதிக் கொடுத்து இருக்கிறார். ஆனால் அவருக்கு மகசூல் வருமானங்களை வசூல் செய்யும் உரிமையைக் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது என்று மதராஸ் ஐகோர்ட் முழு பெஞ்ச் விசாரனையில் தெரிவிக்கிறது. எனவே கீழ்கோர்ட்டும், அதை அடுத்த அப்பீல் கோர்ட்டும், இந்த விஷயங்களைப் பொறுத்து சரியான சாட்சியங்களை வைத்து விசாரனை நடத்தவில்லை என்பதால், இந்த அப்பீல் வழக்கை மறுபடியும் கீழ் அப்பீல் கோர்ட்டுக்கு ரிமாண்ட் செய்து மீண்டும் சரியான பாதையில் விசாரனையை மேற்கொள்ளும்படி தீர்ப்பு கூறிவிட்டது.
**