Wednesday, May 24, 2017

பாகப்பிரிவினை வழக்குகளுக்கு காலக்கெடு உண்டா?

பாகப்பிரிவினை வழக்குகளுக்கு காலக்கெடு உண்டா?
சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் இதை அலசி உள்ளது;
Shub Karan Bubna @ Shub Karan Prasad Bubna ----Petitioner
Vs.
Sita Saran Bubna and others --------- Respondents.
1960-ல் தாயும் ஒரு மகனும், மற்ற மகன்கள் மீது, குடும்பச் சொத்துக்களைப் பொறுத்து பாக வழக்கு போட்டார்கள்; நிலங்கள் அல்லாத சில அசையாச் சொத்துக்களையும், வீட்டுப் பொருள்களையும் பாகம் செய்ய வேண்டும் என்பது வழக்கு; கீழ்கோர்ட்டில், வழக்கு நடந்து, 1964-ல் பாகப் பிரிவினை வழக்கில் முதல் தீர்ப்பு வருகிறது; மூன்றில் ஒருபாகம் வாதிகளுக்கு பாக உரிமை உள்ளது என முதல் நிலைத் தீர்ப்பானை வருகிறது; இதை Preliminary Decree என்பர்; முதல் நிலைத் தீர்ப்பில், வழக்குப் போட்டவர்கள் பாகம் பெற உரிமை உள்ளவர்களா என்றும், அப்படியென்றால், அவர்களுக்கு எவ்வளவு பாகம் உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு வரும்; அதன் அடுத்த கட்டமாக பைனல் டிகிரி (Final Decree) க்கு மனுச் செய்ய வேண்டும்; அதில், அவ்வாறு பாகம் கேட்டவரின் பாகத்தை, அளந்து பிரித்து தனியாக கோர்ட் தனி அனுபவத்துக்குக் கொடுக்கும்; இதுவே பொதுவான நடைமுறை;
இந்த வழக்கில், 1964-ல் முதல்நிலை தீர்ப்பானையை கோர்ட் கொடுத்தது; ஆனால் வாதிகள் 1987-ல் (சுமார் 23 வருடங்கள் கழித்து) பைனல் டிகிரி வழங்கும்படி கோர்ட்டை அணுகுகிறார்கள்; எதிர்ப்பாரட்டிகள் “இது காலதாமதமான மனு என்றும், ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு காலக்கட்டம் உள்ளது என சட்டம் சொல்லி உள்ளது என்றும், அவ்வாறு காலக் கட்டம் சொல்லாமல் விட்ட விஷயங்களுக்கு காலக்கெடு சட்டம் 1963-ல் தனியே ஒரு பிரிவு உள்ளது என்றும், அது பிரிவு 137 என்றும், அதன்படி மூன்று ஆண்டுகளுக்குள் பைனல் டிகிரி கேட்டு மனுச் செய்ய வேண்டும் என்றும், ஆனால் இங்கு இந்த வழக்கில் வாதிகள் சுமார் 23 வருடங்கள் கழித்து அந்த பைனல் டிகிரி மனுவைப் போட்டிருக்கிறார்கள் என்பதால் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோர்ட்டில் வேகமாக வாதிடுகிறார்கள்; அதற்கு ஆதாரமாக முன் வழக்கான Sital Prashad vs. Kishori Lal (AIR 1967 SC 1236  என்ற வழக்கையும், பழைய பிரைவி கவுன்சில் வழக்கான Saiyid Jowad Hussain vs. Gendan Singh, AIR 1926 PC 93  என்ற வழக்கையும் முன்தீர்ப்பாக காண்பிக்கிறார்கள்;
இதைப் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் கீழ்கண்டபடி தீர்ப்பை வழங்குகிறது;
பாகப் பிரிவினை என்பது ஏற்கனவே உரிமை உள்ள சொத்தில், பாகங்களை மட்டும் ஒதுக்கிக் கொள்வது; அதில் புதிதாக எந்த உரிமையும் ஏற்படுத்திக் கொள்வதில்லை; பலர் கூட்டாக அனுபவித்து வந்த சொத்தை, தனித்தனியாக அவரவர் பாகமாக ஒதுக்கித் தருவது மட்டுமே பாகப்பிரிவினை என்பது; ஒரு சொத்தில் கூட்டு உரிமை இல்லாதவர், வழக்கில் ஒரு பார்ட்டியாக சேர முடியாது; பாகம் என்றாலே பிரித்துக் கொள்வது என்பதே;
கூட்டுப் பாகஸ்தர்கள் எல்லோரும் தனித்தனியே சொத்தைப் பிரித்துக் கொண்டால் அது பாகப்பிரிவினை; When all the co-owners get separated, it is a partition.  ஆனால், அதில் ஒருவர் அல்லது இருவர் மட்டும் பிரித்துக் கொள்கிறார்கள், மற்றவர்கள் மறுபடியும் சேர்ந்தே சொத்தை அனுபவிக்கிறார்கள் என்றால் அது ஒரு பகுதி பாகப்பிரிவினையாகும்; If only one brother wants to get his share separated and other three  brothers continue to remain joint, there is only a separation of the share of one brother.
இப்படி எந்தப் பாகப்பிரிவினையாக இருந்தாலும் (தனித்தனி பாகங்களாகப் பிரித்தாலும், ஒருவர் மட்டும் தன் பாகத்தைப் பிரித்துக் கொண்டு விலகினாலும்), இதில் கோர்ட் இரண்டு டிகிரிகளை கொடுக்க வேண்டும்; ஒன்று பாக உரிமை உள்ளதா, அப்படியென்றால் எவ்வளவு பாகம் என்று முடிவு செய்வதை Preliminary Decree என்னும் முதல்நிலை தீர்ப்பானை என்றும், அப்படி முடிவு செய்தபின்னர், அதே கோர்ட், அந்தப் பாகங்களை தனித்தனி துண்டுகளாக பிரித்து அவரவர் பாகமாக ஒதுக்கி, அதன் அனுபவத்தை அவரவருக்கு கொடுப்பது Final Decree  என்னும் கடைநிலை தீர்ப்பானை. இத்துடன் பாகப் பிரிவினை வழக்கு முடிவுக்கு வருகிறது;
முதல்நிலை தீர்ப்பானையில், இன்னும் கோர்ட் செய்ய வேண்டிய வேலை உள்ளது என்பதை குறிக்கும்; பைனல் டிகிரியில் வேலை முடிந்து விட்டது என்பதாகும்;
ஆனால், Decree  என்றால் என்ன என்று சிபிசி சொல்கிறது; இரண்டு பார்ட்டிகளுக்கு இடையில் உள்ள பிரச்சனையை அறுதியான முடிவுக்கு கொண்டு வந்தால் அது டிகிரி எனப்படும்; ஆனால், Order  என்பதும் டிகிரி போலவே இருக்கும்; ஆனால், அது டிகிரி அல்ல; இதற்கும் அதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், டிகிரியில் முடிவான முடிவு இருக்கும்; ஆர்டரில், முடிவு இருக்கும் ஆனால் அது மொத்த பிரச்சனையின் முடிவான முடிவாக இருக்காது; ஒரு வழக்கில் எல்லாப் பிரச்சனையையும் முடிவான முடிவுக்கு கொண்டு வந்து தீர்ப்புச் சொன்னால் அது டிகிரி; அந்த வழக்கில் ஒரு பிரச்சனையை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு மட்டும் முடிவு சொன்னால் அது ஆர்டர்; சில ஆர்டர்களின் மீது அப்பீல் போகலாம்; சில ஆர்டர்களின் மீது அப்பீல் போக முடியாது; ஆனால் எல்லா டிகிரியின் மீதும் அப்பீல் போகலாம்; இவ்வளவுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்;
The word Decree is defined in Sec.2(2) of CPC.
The word Preliminary Decree is explained in Order 20 R18(2) of CPC.
விவசாய நிலங்களாக இருந்து அதை பிரித்துக் கொடுக்க நினைத்தால், அதை அந்தக் கோர்ட் ஆர்டர் 20 ரூல் 18(1) மற்றும் பிரிவு 54 மூலம் மாவட்ட கலெக்டருக்கு தகவல் அனுப்பி தனித்தனியே பிரித்துக் கொடுக்கச் சொல்ல வேண்டும்;
விவசாய நிலம் அல்லாத மற்ற அசையாச் சொத்துக்களாக இருந்தால், பிரிவு 54 மற்றும் ஆர்டர் 20 ரூல் 18(2)-ன்படி முதல் நிலை தீர்ப்பானை வழங்கி, பாகத்தை முடிவு செய்து தீர்ப்புக் கொடுக்க வேண்டும்; பின்னர், அந்த பாகத்தை கோர்ட்டே ஒரு வக்கீல்-கமிஷனர் மூலம் தனித்தனியே பிரித்துக் கொடுத்து, அதை உறுதிசெய்து பைனல் டிகிரி வழங்க வேண்டும்; அத்துடன் அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும்;
முதல்நிலை தீர்ப்பின் மீது அப்பீல் போகலாம்; அவ்வாறு அப்பீல் போகாமல் இருந்துவிட்டால், அதைத் தொடர்ந்து வழங்கும் பைனல் டிகிரிமீது அப்பீல் போகமுடியாது; ஆக, முதல் நிலை தீர்ப்பானையே டிகிரி என்ற வரைமுறையில் வரும்; பைனல் டிகிரி என்பது, முதல்நிலை தீர்ப்பானையை தீர்த்துவைக்கும் வேலையே என்பது சரியாகும்;
முதல்நிலை தீர்ப்பானை வழங்கிய பின்னர், எவ்வளவு காலத்துக்குள் பைனல் டிகிரிக்கு மனுச் செய்ய வேண்டும் என்பதில் பல கோர்ட்டுகள் பல தீர்ப்புகள் வழங்கி உள்ளன;
எல்லா வழக்குகளுக்கும் காலக்கெடு உள்ளது; எனவே எல்லா வழக்குகளையும் அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்; காலம் தவறினால், அந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது; அப்படியென்றால், பாக வழக்கில் முதல்நிலை தீர்ப்பானை வழங்கியபின், எவ்வளவு காலத்துக்குள் பைனல் டிகிரிக்கு மனுச் செய்ய வேண்டும்; அப்படி ஏதும் பைனல் டிகிரிக்கு அந்தச்சட்டத்தில் (The Limitation Act, 1963) குறிப்பிட்டுச் சொல்லவில்லை; ஆனாலும், அந்த சட்டத்தில், அவ்வாறு காலக்கெடு ஏதும் சொல்லாத வழக்குகளில் மூன்று ஆண்டுகளுக்குள் மனுச் செய்ய வேண்டும் என்று பொதுவாகச் சொல்லி உள்ளது; எனவே அதை இந்த பைனல் டிகிரிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பல கோர்ட்டுகள் பல வழக்குகளில் முடிவு செய்துள்ளன;
மற்றும், சாதாரணமாக ஒரு வழக்கில் ஒரு டிகிரியை பெற்றால், அதை 12 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்; பணம் கேட்டு போட்ட வழக்கில் கிடைத்த தீர்ப்பை, தீர்ப்பு வழங்கிய நாளில் இருந்து 12 ஆண்டுகளுக்குள் வசூலித்துக் கொள்ள வேண்டும்; அதற்குமேல் அந்த டிகிரியை உபயோகப் படுத்த முடியாது;
ஆனால், பாகப் பிரிவினை வழக்கில் கொடுக்கப்பட்ட முதல்நிலை டிகிரியை எவ்வளவு காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன;
முதல்நிலை தீர்ப்பானைதான் முடிவான தீர்ப்பானை எனலாம்; அதற்குப்பின் அதை நிறைவேற்ற தனியே மனு ஏதும் செய்யத் தேவையில்லை; தீர்ப்பு வழங்கிய கோர்ட்டே தொடர்ந்து அந்த வேலையைச் செய்து பைனல் டிகிரியை கொடுத்து வழக்கை முடிக்க வேண்டும்; முதல் நிலை தீர்ப்பானையின் தொடர்ச்சியே பைனல் டிகிரி ஆகும்; அதை ஒரு டிகிரியை நிறைவேற்றும் மனு என்று தனியே கணிக்கக் கூடாது; தொடர் நிகழ்வே; எனவே அதற்கு காலக்கெடு ஏதும் இல்லை; எப்போது வேண்டுமானாலும், ஒரு பாக வழக்கில் கொடுத்த முதல்நிலை டிகிரியை நிறைவேற்றலாம்; அப்படியென்றால், இப்படிபட்ட வழக்குகள் பல ஆண்டுகள் நிறைவேற்றாமல் இருந்துவிடுமே! எனவே இதற்கு ஒரு முடிவு தெரியவேண்டும் என்பதால், அப்படிப்பட்ட பாக வழக்கில் முதல் நிலை டிகிரி கொடுத்த கோர்ட்டே, அதைத் தொடர்ந்து பார்ட்டிகளுக்கு சம்மன் அனுப்பி, சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்; அதற்கு காலக் கெடு ஏதும் சட்டத்தில் இல்லாத போதிலும், கோர்ட்டே எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: இதில் பார்ட்டிகள் மனுச் செய்தால்தான் கோர்ட் அந்த பைனல் டிகிரி மனுவை எடுத்துக் கொள்ளும் என்று இருந்துவிடக் கூடாது;
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கில் தீர்ப்புக் கொடுத்துள்ளது;
இனி வரும்காலங்களில், பாக வழக்கில் முதல்நிலை தீர்ப்பு வந்தபின்னர், பைனல் டிகிரிக்கு மனுச் செய்தாலும், அதற்கு காலக் கெடு ஏதும் இல்லை என்பதை சுப்ரீம்கோர்ட் உறுதிசெய்துள்ளது.
**



Thursday, May 4, 2017

சிதம்பரம் கோயில் வழக்கு 1890-ல்

சிதம்பரம் கோயில் வழக்கு 1890-ல்
Natesan (Chidambaram) case
Natesa and others Vs Ganapati and others
Citation: (1891) LIR 14 Mad 103
Madras High Court Judgment delivered by Justice Muthusami Ayyar and Justice Shephard in the year 1890.

கணபதி வகையறா இந்த வழக்கைப் போடுகிறார்கள். அதில், நடேசன் வகையறாக்கள் தர்மகர்த்தாக்களாக இருப்பதை நீக்க வேண்டும் என்று போட்ட வழக்கு. நடேசன் வகையறாக்கள், தென்னார்காடு மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் உள்ள சபா நாயகர் கோயிலில் இவர்கள் தர்மகர்த்தாக்களாக இருக்கிறார்கள். வாதிகளும், பிரதிவாதிகளும் தீட்சிதர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். தீட்சிதர் என்றால் ஸ்மார்த்தா பிராமணர்கள் ஆவர். இவர்களே காலங்காலமாக தீட்சிதர்களாக இருந்து வருகிறார்கள். இந்த தீட்சிதர்கள் சுமார் 250 குடும்பங்களாக சிதம்பரத்தில் வசித்து வருகிறார்கள். அந்தக் கோயிலில் வரும் வருமானங்களைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இது பல்லாண்டு காலமாக இருந்துவரும் நடைமுறை. ஒரு தீட்சிதருக்கு திருமணம் ஆகிவிட்டால், அவர் இந்த கோயில் நிர்வாகத்தில் பொறுப்பில் வருவார். அப்படி வரும்போது, அங்குள்ள சிறு தெய்வங்களுக்கு பூஜை செய்யும் உரிமை கிடைக்கும். ஆனாலும் அவருக்கு மூலவருக்கு பூஜை செய்யும் உரிமை கிடைக்காது. அப்படி மூலவருக்கு பூஜை செய்ய வேண்டுமானால், அவருக்கு 25 வயது தாண்டி இருக்க வேண்டும். மேலும் தீட்சை பெற்றிருக்க வேண்டும்.

சிதம்பரத்தில் மொத்தம் ஐந்து தெய்வங்கள் உள்ளன; (1) சித் சபை, (2) கனக சபை, (3) தேவ சபை, (4) அம்மன் கோயில், (5) மூலஸ்தானம். இதில் முதலில் சொன்ன சித் சபையே பிரதானமானது. அங்கு கோயில் கொண்டிருக்கும் கடவுளுக்குப் பெயர் சபா நாயகர் என்னும் நடேசர்; அங்கு ஆகம விதிப்படி முதலில் பூஜை செய்து விட்டுத்தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி;

இந்த கோயில்கள் மராமத்து செய்ய வேண்டிய நிலையில் இருந்தன; எனவே பெரும் பணக்காரர்கள் அதைச் செய்ய முன் வந்தார்கள். அதில் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் சமுகத்தைச் சேர்ந்த பெரும் தனவந்தர்கள் இதை ஒரு தர்ம காரியமாகக் கருதி செய்ய முன்வந்தார்கள். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மதுரை மாவட்டத்தில் வசிப்பவர்கள். இதற்காக, 1877 முதல் 1881 வரையிலான காலங்களில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சேர்ந்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் அளவுக்கு தர்ம நன்கொடைகள் பெற்றுக் கொண்டார்கள்; அவர்களில் முக்கியஸ்தர்கள் சிலர் சிதம்பரம் கோயிலை பார்வையிட்டார்கள்; தீட்சிதர்களுடன் ஒரு உடன்படிக்கையை 1881-ல் ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த உடன்படிக்கைக்குப் பெயர் சமக்கியா. அதன்படி, செட்டியார்கள் இந்த மரமத்து வேலைகளைச் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. செட்டியார்களில் ஒருவரான சிதம்பர செட்டியார் அந்த வேலைகளை கண்காணித்தார். 1882 வரை தீட்சிதர்களுக்கும் செட்டியார்களுக்கும் இது விஷயமாக நல்ல உறவு இருந்தது. அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அதை இடித்து மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. அப்படிச் செய்வதென்றால், அதற்கு ஒருசில சடங்குகள் செய்ய வேண்டுமாம். அதற்குப் பெயர் வாலா ஸ்பந்தனம். அதற்கு ஒரு நாளும் குறித்தனர். அப்படி ஒரு நாளைக் குறிக்கும்போது, தீட்சிதர்களில் மூத்தவரான சபாநடேசனும் அவருடன் சேர்ந்த ஒரு பத்து தீட்சிதர்களும் அந்த நாளுக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். மற்ற பல தீட்சிதர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இங்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதிகமான தீட்சிதர்கள் எடுத்த முடிவு சரியா? அல்லது மூத்த தீட்சிதரும் அவரின் ஆட்களும் சொல்வது சரியா என்ற பிரச்சனையும் கூடவே எழுந்தது. இவர்களுக்குள் தகராறு வந்துவிட்டது. போலீஸ் கூட இதில் தலையிட வேண்டியதாகி விட்டது. அதிலிருந்து தீட்சிதர்களுக்குள் இரண்டு கோஷ்டி ஆகிவிட்டது. மைனாரிட்டி தீட்சிதர்கள் காலப்போக்கில் கூட்டம் சேர்த்துக் கொண்டனர். செட்டியார்கள், மைனாரிட்டி தீட்சிதர்கள் பேச்சை கேட்கவில்லை. இது பெரிய பிரச்சனை ஆகிவிட்டது.

1881-க்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், தீட்சிதர்களுக்குள் ஒரு உடன்பாடு உள்ளது. அதன்படி, கோயில் பக்தர்கள் தரும் காணிக்கைகளை பெற்று அவைகளை பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, 20 நாட்களுக்கு ஒருமுறை அந்த உரிமை ஏலம் போடப்படும் என்று மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அந்த ஏலத்தை கனகசபை கோயில் விளக்குத்தூணுக்கு அருகில் நடத்துவர். அதை ஒரு பண்டாரம் அல்லது பொதுவான ஆள் முன்னிலையில் நடத்துவர். அதன்படி ஏலம் எடுத்தவர், கோயில் வரும்படியைக் கொண்டு, கோயில் நிர்வாகச் செலவைச் செய்தும், வேலையாட்களுக்கு சம்பளம் கொடுத்தும், மராமத்து வேலைகள் செய்தது போக, மீதி உள்ள தொகையை தீட்சிதர் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுப்பர்.

ஆனால், இப்போது, தீட்சிதர்களுக்குள் இரண்டு கோஷ்டி உருவானதால், யார் வசுல் செய்வது என்ற முறைக்காரர் வேலையில் பிரச்சனை ஏற்படுகிறது. யார் சுவாமிக்கு பூஜை செய்கிறாரோ, அவரே தட்சனைகளை எல்லாம் எடுத்துக் கொள்கிறார், பொதுவான வருமானமாகக் கொடுக்கவில்லை. திருவிழாச் செலவுக்கு பணம் கிடைப்பதில்லை. எனவே மறுபடியும் பேச்சு வார்த்தை நடக்கிறது. ஏலத்தை 11 நாட்களுக்கு ஒரு முறை என மாற்றிக் கொள்கின்றனர். முதல் 11 நாட்கள் முடிந்தவுடன், தீட்சிதர்களில் மெஜாரிட்டி கோஷ்டி, மறுபடியும் பழைய முறைக்கே மாறிக் கொள்வோம் என்று கூறுகிறது. மைனர் கோஷ்டி ஆட்சேபிக்கிறது. வழக்கப்படி, பொதுமனிதர் ஒருவர் கனகசபை கோயிலிருந்து விளக்கை கொண்டுவர வேண்டும். அப்போது பிரச்சனை ஏற்பட்டு அடிதடி நடக்கிறது. பலருக்கு காயம். மைனர் கோஷ்டிகள், செட்டியார்கள் செய்யும் மராமத்து வேலையைச் செய்யவிடாமல் தடை செய்கிறது. மாரமத்து ஆகம விதிகளை மீறியது என்று ஆட்சேபம் செய்கிறது. அவர்கள், “இந்த கோயில் இறைவனால் படைக்கப்பட்டது; அதை மீறி அதை ரிப்பேர் செய்யக் கூடாது; அதனால் அதன் அசல் தன்மை பாதித்து விடும்” என்று காரணம் சொல்கிறது.

இப்படியாகப் பிரச்சனை ஏற்பட்டு, வழக்கு மாவட்டக் கோர்ட்டுக்கு செல்கிறது. பல பிரச்சனைகளை கோர்ட்டில் எழுப்புகிறார்கள். சித்த சபை கோயிலின் சாவியை முறைவைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்கிறார்கள். இதுவரை அப்படி பழக்கமில்லை. சுவாமிக்கு அணியும் நகைகளும் பண்ட பாத்திரங்களும் குறைகிறது என்றும், அதை மைனாரிட்டி கோஷ்டிகளின் காலத்தில்தான் குறைந்தது என்றும் குற்றச்சாட்டு; அதனால் மைனாரிட்டி கோஷ்டியில் உள்ளவர்களை தர்மகர்த்தா நிலையில் இருந்து நீக்க வேண்டும் என்றும், மராமத்து வேலைகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கு. அவர்கள் கோயில் நிர்வாகத்தின்போது, ரூ.11,800 அளவுக்கு காணமல் போன பொருள்களின் மதிப்பை ஈடுசெய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

மாவட்ட கோர்ட், கோயில் நிர்வாகிகளில் சிலர் தவறு செய்துள்ளார்கள் என்று தீர்ப்பு வழங்குகிறது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார்கள். மாவட்ட கோர்ட் தீர்ப்பை ஐகோர்ட்டும் உறுதி செய்கிறது.

**

Wednesday, May 3, 2017

வீரன் அம்பலம் வழக்கு - பத்திரப் பதிவில் குளறுபடி

Veeran Ambalam case
வீரன் அம்பலம் வழக்கு
Veeran Ambalam vs Vellaiammal and others
Citation: in the year 1959
வீரன் அம்பலம் Vs. வெள்ளையம்மாள் மற்றும் பலர்.

பிரதிவாதிகளுக்குச் சொந்தமான நிலங்களை 1951-ல் வாதிக்கு ஒத்தி பத்திரம் எழுதிக் கொடுத்த கடன் வாங்குகின்றனர். அதுமுதல் வாதிகள் நிலத்தை அனுபவிக்கிறார். ஆனாலும், பிரதிவாதிகள் பயிர் செய்து மகசூல் கொடுக்க வேண்டும் என்று ஏற்பாடு. பிரதிவாதிகள் ஒழுங்காக மகசூல் கொடுக்கவில்லை. எனவே வாதி, மேலூரில் உள்ள முன்சீப் கோர்ட்டில் 1953-ல் சிவில் வழக்குப் போட்டு, மகசூல் பணத்துக்கு டிகிரி வாங்கி விடுகிறார். பணம் கொடுக்க முடியாத பிரதிவாதிகள், தங்களின் ரூ.2075/- பெறுமானமுள்ள நிலத்தை வாதியே விலைக்கு எடுத்துக் கொள்ளும்படியும், ஒத்திக் கடன், மகசூல் டிகிரி கடன் போக, பாக்கிப் பணத்தைக் தங்களுக்குக் கொடுக்கும்படி வாதியைக் கேட்டுக் கொள்கிறார்கள். வாதி அவர்களுக்கு ரொக்கமாக ரூ.300 கொடுக்கிறார். கிரயப் பத்திரம் எழுதி வாங்கிக் கொள்கிறார். அந்தக் கிரயப் பத்திரத்தில் சாட்சிகளும் வாங்கிக் கொள்கிறார். ஐந்து நாட்கள் கழித்து, வாதி அந்த கிரயப் பத்திரத்தை தாமரைப்பட்டி சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸில் பதிவு செய்வதற்கு கொடுக்கிறார். அந்த பத்திரத்தில் நிறைய அடித்தல், திருத்தல்கள் இருப்பதாகவும், வேறு புதிய ஸ்டாம்ப் பேப்பரில் புதிய பத்திரத்தை எழுதிக் கொண்டு வரும்படி, ரிஜிஸ்டிரார் அவர்களைத் திரும்ப அனுப்பி விடுகிறார். மாவட்ட பதிவாளரிடம் அதே பத்திரத்தை கொடுத்து பதிவு செய்யலாம் என்று நினைத்துப் போகும்போது, பிரதிவாதிகளின் ஆட்கள், அப்படிச் செய்ய வேண்டாம் எனத் தடுத்து விடுகின்றனர். எனவே பிரதிவாதிகள் திரும்ப வந்துவிடுகின்றனர். அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று வாதி கேட்டபோது, பிரதிவாதிகள் சாக்குப் போக்கு சொல்லி, பதிவுக்கு காலதாமதம் செய்கிறார்கள். எனவே வாதி, அந்தக் கிரயப் பத்திரத்தை பதிவு செய்ய முடியாமல் போகிறது.

இதற்கிடையில், பிரதிவாதிகள், வாதியை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து, பழைய தேதி (1954ம் வருட முன்தேதியிட்ட) பத்திரப் பேப்பர்களை வாங்கி, அதை ஒரு கிரயப் பத்திரமாக எழுதி, அவரின் உறவினருக்கு (உறவினர் 3-ம் பிரதிவாதி ஆவார்) விற்பனை செய்ததுபோல, எழுதிக் கொள்கின்றனர். எனென்றால், வாதி, இந்தச் சொத்தைக் கிரயம் எழுதி வாங்குவதற்கு முன்பே, பிரதிவாதிகள்-1,2 பேரும், 3-ம் பிரதிவாதிக்கு ஏற்கனவே கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்ததுபோல இருக்கட்டும் என்று நினைத்து அவர்களின் ஆட்கள் சொன்ன யோசனையின்படி இந்தச் செயலைச் செய்து கொள்கிறார்கள்.

இங்கு, 3-ம் பிரதிவாதி உண்மையில் இந்த சொத்தை வாங்கியவர் இல்லை. பேருக்காக ஒரு கிரயப் பத்திரம் எழுதி வாங்கியதுபோல செய்து கொண்டார். இது வாதியை ஏமாற்றுவதற்காகச் செய்தது.

எனவே, பிரதிவாதிகள் 1-2 நபர்கள் இருவரும் வந்து வாதிக்கு கிரயப்பத்திரம் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்குப் போடுகிறார்.

கோர்ட்டில் பிரதிவாதிகளின் வாதம் என்னவென்றால், வாதி கோர்ட்டில் இந்த வழக்குப் போட முடியாது. ஏற்கனவே எழுதிக் கையெழுத்து செய்த கொடுத்த பத்திரமாக இருப்பதால், பத்திரப் பதிவாளரிடம் கட்டாயப் பதிவுக்குத்தான் முறையிட வேண்டும். அதைவிடுத்து, பிரதிவாதிகள் வந்து பதிவு செய்து தர வேண்டும் என்று கோர்ட்டில் வழக்குப்போட முடியாது (Specific performance suit) என்று வாதம் செய்கிறார்கள்.

இரண்டு கீழ்கோர்ட்டுகளும் பிரதிவாதிகளின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு வாதியின் வழக்கைத் தள்ளுபடி செய்கின்றன. வழக்கு ஐகோர்ட்டுக்கு வருகிறது.

ஒரு பத்திரத்தை எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டு, பின்னர் பதிவு அலுவலகத்துக்கு வராமல் தப்பித்துக் கொண்டு வருகிறார். அப்படி வராமல் போனால், அவருக்கு பதிவாளர் நோட்டீஸ் கொடுத்து, அவரை பதிவு அலுவலகத்துக்கு வந்து, அவர் எழுதிக் கொடுத்த பத்திரத்தை ஒப்புக்கொண்டு பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று பதிவுச்சட்ட விதிகள் உள்ளன. ஆனால், இங்கு வாதி, அந்த முறையைப் பின்பற்றாமல், நேராக கோர்ட்டுக்கு வந்து, பிரதிவாதிகளை பதிவு அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்து தரும்படி டிகிரி கேட்கிறார். இதில் எந்த முறை சரி என்பதே இங்குள்ள பிரச்சனை.

இந்த வழக்கில், வாதிக்கு, பிரதிவாதிகள் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்து அதில் கையெழுத்தும் செய்துள்ளார்கள். பத்திர அலுவலகத்துக்கு சென்று பதிவு செய்து கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால், பிரதிவாதிகள் 1,2 நபர்கள், வாதியின் கிரயப் பத்திரத்துக்கு முன் தேதியிட்ட ஸ்டாம்ப் பேப்பர்களை வாங்கி, ஏற்கனவே கிரயம் செய்து கொடுத்ததுபோல, ஒரு பத்திரத்தை எழுதி, அதை பதிவு செய்து 3-ம் பிரதிவாதிக்குக் கொடுத்துள்ளார்கள். உண்மையில் 3-ம் பிரதிவாதி, பணம் கொடுத்துத்தான், நேர்மையாக இந்த கிரயத்தை வாங்கினாரா என்பதும் தெரியாது.

ஒருவேளை, வாதியின் கிரயப் பத்திரத்தை, பதிவு அதிகாரி, பிரதிவாதிகள் 1,2 நபர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, அவர்கள் வராமல் போய், அதன் அடிப்படையில் அந்த பத்திரத்தை வாதிக்கு பதிவு செய்து கொடுத்திருந்தாலும், அதற்கு முன்னரே அந்த சொத்தை பிரதிவாதிகள் 1,2 நபர்கள், 3-ம் பிரதிவாதிக்கு விற்பனை செய்துள்ளதாக பத்திரம் உள்ளது. எனவே எது செல்லுபடியாகும் என்ற பிரச்சனையும் வருகிறது.

பதிவுச் சட்டப்படி, ஒரு பத்திரம் எழுதிய நான்கு மாதங்களுக்குள் அந்த பத்திரம் பதிவு செய்யப்படவேண்டும். அதற்குமேல் பதிவு செய்ய முடியாது. எனவே இரண்டு பதிவு செய்யப்பட்ட பத்திரங்களில் எது முந்திச் செய்யப்பட்ட கிரயம் என்று பார்க்க வேண்டும். எந்தக் கிரயப் பத்திரமாக இருந்தாலும், கிரயப் பத்திரத்தில் உள்ள கிரய தேதிதான் கணக்கு; அந்தப் பத்திரம் எந்தத் தேதியில் பதிவு செய்யப்பட்டது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை. உதாரணமாக 1-ம் தேதி எழுதிக் கையெழுத்துச் செய்யபட்ட பத்திரம் மூன்று மாதம் கழித்து பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 5-ம் தேதி எழுதி அன்றே பதிவு செய்யப்பட்ட பத்திரம் செல்லாது என்பதே பதிவுச் சட்டத்தின் விதி.  (ஆனால், தற்போதுகூட, சில பத்திர எழுத்தர்கள், கிரயப் பத்திரத்தில் முதல் வரியில் உள்ள கிரய தேதியை கிரய தேதியாக கணக்கிட மறுக்கிறார்கள். அந்தப் பத்திரம் பதிவான தேதியே பத்திரத்தின் தேதி என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; நாம் எடுத்துச் சொன்னாலும், அவர்களால் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை).

ஆக இந்த வழக்கில், வாதி, அவரின் பதிவாகாத பத்திரத்தை பதிவாளர் முன் சமர்பித்து, எழுதிக் கொடுத்தவர் இல்லாமல் கட்டாயப் பதிவை செய்ய நேரிட்டாலும், அது செல்லாத தன்மையை அடையும். எனவே அவர் கோர்ட்டை அணுகி, 3-ம் பிரதிவாதிக்கு எழுதிக் கொடுத்த (முன்தேதியிட்ட பத்திரம் வாங்கி எழுதிக் கொடுத்த) கிரயப் பத்திரம் செல்லாது என்று கோர்ட் அறிவிக்கும்படியும், அது செல்லாது போனால், வாதியான தனக்கு அவரின் கிரயப் பத்திரத்தை பதிவு செய்து கொடுக்கும்படியும் டிகிரி கேட்பது சரியானதே;

மற்றொரு வாதத்தையும் ஏற்கலாம் என்றது ஐகோர்ட். ஒரு பத்திரம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, பதிவுக்கு போகமால் இருக்கிறது. இதற்கிடையில், அந்தப் பத்திரம் காணாமல் போகிறது, அல்லது நெருப்பில் விழுந்து விடுகிறது. அல்லது உபயோகிக்க முடியாமல் கசங்கிப் போகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில், கிரயம் வாங்கியவர், கிரயம் கொடுத்தவரை வேறு ஒரு பத்திரம் எழுதிக் கொடுக்கும்படி கேட்க முடியும். அதற்காக, அவர் அந்த கிழந்த பத்திரத்தையே பதிவுக்கு கொடுக்க முடியாது.

இந்த வழக்கில் மற்றொரு வாதமானது – ஏற்கனவே பிரதிவாதிகள் 1,2 நபர்கள் வாதிக்கு எழுதிக் கொடுத்த பத்திரம் பதிவு செய்யாத பத்திரம் என்பதால், அதை கோர்ட்டில் ஒரு சாட்சியமாக ஏற்க முடியாது என்பது. ஆனாலும், அந்த வாதம் உண்மை என்றாலும், பதிவாகாத பத்திரத்தை Specific performance என்னும் அந்த உறுதிமொழியை நிறைவேற்றித்தரும்படி கேட்டு வழக்குப் போடவும், அதில் அந்த பதிவாகாத கிரயப் பத்திரத்தை ஒரு சாட்சியமாக கோர்ட்டில் கொடுக்கலாம் என்றும் சட்டம் அனுமதிக்கிறது என்று ஐகோர்ட் முடிவு செய்கிறது.

(இப்போதுள்ள நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக, தமிழ்நாட்டில், இந்த சட்ட நிலையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது எல்லாக் கிரய அக்ரிமெண்டுகளும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும் என்றும், அப்படிப் பதிவு செய்யாவிட்டால், அதை கோர்ட்டில் ஒரு சாட்சியமாக தாக்கல் செய்ய முடியாது என்றும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிலை, Specific performance வழக்குக்கு பொருந்தும் என்றும் சொல்லப்பட்டுள்ளது).

ஆக இந்த வழக்கில், வாதி, கேட்கும் பரிகாரத்தை பெற தகுதி உடையவரே என்று மதராஸ் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
**


Tuesday, May 2, 2017

சந்திரரேகா வழக்கு 1891-ல்

Chandrareka case
Chandrareka vs Secretary of State for India
Citation: (1891) ILR 14 Mad 163

சந்திரரேகா வழக்கு 1891-ல்;

நாட்டியம் ஆடும் குடும்பத்தில் ஒரு தாய்; அவள் இறந்து விடுகிறாள்; அவளுக்கு ஒரு பெண்ணும் ஒரு மகனும் உள்ளனர்; அவர்களில், அந்தப் பெண் ஒரு பெரிய வசதி படைத்தவருக்கு வைப்பாட்டி போல இருந்து வருகிறாள்; அவளுக்கும் அவளின் தொழிலுக்கும் துணையாக அவளின் சகோதரன் இருக்கிறான்; அவள், அந்தத் தொழிலில் பெரும்பணம் சம்பாதித்து விடுகிறாள்; ஆனால் சகோதரனுக்கோ ஒரு சில நூறுகளே கிடைக்கிறது;

தாயார் இறந்தவுடன், சகோதரன் வழக்குப் போடுகிறான்; இந்தச் சொத்துக்கள் எல்லாம், தாயாரின் சொத்துக்கள் என்றும், எனவே அவனுக்கும் சரிசமமாகப் பங்கு வேண்டும் என்று கேட்கிறான்; ஆனால் கோர்ட் பீஸ் கட்ட பணம் இல்லை; எனவே பாப்பர் என்னும் “நான் ஏழை; கோர்ட் கட்டணம் கட்ட முடியவில்லை” என்று வழக்குப் போடுகிறான்;

வழக்கில், சகோதரி, “இந்தச் சொத்துக்கள் எல்லாம் நான் என் கற்பை விற்றுச் சம்பாதித்தவைகள் ஆகும்; எனவே இது எனது தனிச் சொத்துக்கள்; என் தாயார் சொத்துக்கள் ஏதும் இல்லை; அவளின் சொத்துக்கள் ஒரு ரூ.200 தேறும்; எனவே என் சகோதரனுக்கு பங்கு கொடுக்க முடியாது என்று சொல்கிறாள்;

கீழ்கோர்ட் தீர்ப்பு – அவள் முறையற்ற தொழில் செய்து சம்பாதித்த சொத்துக்கள் என்பது உண்மையே! எனவே சகோதரனுக்கு அந்தச் சொத்தில் ஏதும் பங்கு இல்லை; தாயாரின் ரூ.200 சொத்தில் ரூ.100 பங்கு உண்டு: எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது; ஆனாலும், அவன் கோர்ட் கட்டணம் செலுத்தாமல் இந்த வழக்கை ஏழை என்று தாக்கல் செய்துள்ளான்; அவன் இறந்து விட்டான்; எனவே அவன் கட்டவேண்டிய கோர்ட் கட்டணத்தை அவனின் சகோதரியே அரசாங்கத்துக்கு கட்ட வேண்டும் என்று தீர்ப்பு;

இந்த தீர்ப்பை எதிர்த்து அவள் மதராஸ் ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறாள்;

அதில் என் தாயார் ஒரு கோயில் நாட்டியக்காரி; வறுமையில் இறந்து விட்டாள்; அவளுக்கு தனியே சொத்துக்கள் கிடையாது; அவளின் மகளான நான், என் குலவழக்கப்படி, பணக்காரர்களிடம் விபசாரம் செய்து அதில் நிறைய சம்பாதித்துள்ளேன்; இதில் எனது சகோதரனுக்கு எந்தப் பங்கும் இல்லை; எனவே கீழ்கோர்ட் தீர்ப்பு சரிதான்; மொத்த சொத்தும் எனக்குச் சொந்தம் என்று சொல்லியுள்ளது; என் சகோதரன் இறந்து விட்டான்; அவன் இந்த வழக்கை பாப்பர் என்று (ஏழை) கோர்ட் கட்டணம் செலுத்தாமல் தாக்கல் செய்தான்; அவனுக்கு சொத்து ஏதும் தீர்ப்பில் வழங்கவில்லை; ஆனாலும், கீழ்கோர்ட், அவன் அரசுக்கு கட்டவேண்டிய கோர்ட் கட்டணத்தை நான் செலுத்த வேண்டும் என்று சொல்வதில் நியாயம் இல்லை; என்று முறையிடுகிறாள்;

ஐகோர்ட் தீர்ப்பு: யார் கோர்ட் கட்டணம் செலுத்த வேண்டுமோ அவர் அந்த வழக்கை வென்றால், அதிலிருந்து கோர்ட் கட்டணம் செலுத்த வேண்டும்; இங்கு அவன் வழக்கில் தோற்று விட்டான்; அவனும் இறந்து விட்டான்; அவனிடம் ஒன்றுமில்லை; எனவே அவனின் கட்டணத்தை அவனின் சகோதரி செலுத்த வேண்டும் என்பதில் நியாமில்லை; எனவே அவள் கோர்ட் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியது.
**



லஷ்மணம்மாள் வழக்கு

Lakshmanammal case
Lakshmanmmal and another vs Tiruvengada Mudali
Citation: (1882) ILR 5 Mad 241
லஷ்மணம்மாள் வழக்கு
இந்த வழக்கு 1882-ல் நடந்த வழக்கு.

சபாபதி முதலி என்பவர் சொத்தின் கடைசி உரிமையாளர். அவர் 1846-ல் இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு மனைவியும், தாயாரும், மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவர்களில், அவரின் மனைவி 1861-ல் இறந்து விடுகிறார். அவரின் தாயார் 1871-ல் இறந்து விடுகிறார். தாயார் இறந்தவுடன், சகோதரிகளுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சகோதரியின் மகன் வழக்கை போடுகிறார். சகோதரியின் மகன், மற்ற சகோதரிகளை முந்தி பங்கு பெற உரிமை உண்டா என்பதே பிரச்சனை.

மதராஸ் மாகாணத்திலும், இந்தியாவின் வடக்கிலும், மித்தாச்சரா இந்து முறையே அமலில் இருக்கிறது. சகோதரியின் மகன் பந்து என்ற உறவில் சொத்தில் பங்கு கேட்க முடியுமா என்பதே சட்டப் பிரச்சனை. சகோதரியின் மகன் என்பதால், அவன் “பின்ன கோத்ர சப்பிந்தா” உறவு உள்ளவன். ஆனால், மித்தாச்சரா சட்ட முறையில், சகோதரியின் மகன் பந்து என்ற உறவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தகப்பனின் தாய் மாமன்களை பந்துக்கள் என்று கல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு வழக்கில் முழு பெஞ்ச் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால், சகோதரியின் மகனும் பந்து உறவு தானே என்று இந்த வழக்கு.

ஒரு பர்மா வழக்கில் – ஆண் நேர்வழி உறவுகள் இல்லாதபோது, சகோதரியின் மகன் பந்துக்கள் என்ற முறையில் வாரிசுகளில் முந்திக் கொள்வான் என்றும் அவன் பங்குரிமை பெற முடியும் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

மாதவைய்யா என்ற ஆசிரியரின் கூற்றுப்படி – மனைவி, சகோதரன், தாயார், இவர்கள் இல்லாதபோது, சகோதரி பங்கு பெறுவாள் என்று கூறுகிறார்.

ஆண்வாரிசுகள் இல்லாதபோது, நெருங்கிய சபிந்தா உறவுகள் பங்கு பெறலாம் என்கிறார்கள்.

ஆனால் தென்னிந்தியாவில், சகோதரி கோத்ரச சபிந்தா உறவில் வரமாட்டார்; எனவே அவர் பந்து என்ற உறவில் இல்லை; ஏனென்றால், அவள் இறந்தவருக்கு பிண்டம் கொடுக்கும் உறவில் இல்லை; எனவே மித்தாச்சரா முறைப்படி சகோதரி பந்துக்கள் உறவில் வரமாட்டாள் என்ற பழக்க வழக்கம் இருக்கிறது.

மித்தாச்சரா முறையை விஞ்ஞானேஸ்வரா முனிவர் விளக்கி உள்ளார். இரத்த உறவுகள் வாரிசு ஆகலாம். ரத்த உறவில் நேர் வாரிசுகள் கன்சான்குனிட்டி உறவுகள் அதாவது ஒரே முதாதையர் வழி வந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் ஒரே கோத்திரமாக இருந்தாலும், ஒரே கோத்திரமாக இல்லாமல் போனாலும், வாரிசுகள் ஆவார்கள்.

உறவுகளில் இரண்டு வகை உண்டு; ஒன்று சமனகோத்ரம் மற்றொன்று பின்னகோத்ரம்; சமனகோத்ரம் என்பதை சகோதரகோத்ரம் என்பர்.

சகோதரி என்பவள் சபிந்தா உறவு உள்ளவள். எனவே அவளை சகோதரகோத்ரத்தில் உள்ளவள் எனக் கருதலாம். ஆனாலும், அவள் பிறந்த வீட்டில் உள்ளவரை தகப்பனின் கோத்திரத்தில் இருப்பாள்; அவளின் திருமணத்துக்குப் பின்னர், புகுந்த வீட்டினரின் கோத்திரத்தில் மாறிவிடுவாள்; எனவே அவளை பின்னகோத்ரத்தில் சேர்க்கலாம்; (சகோதரகோத்ரத்தில் வரமாட்டாள்);

யார் யார் இறந்தவருக்கு காரியம் செய்ய உரிமையுடையவர்கள் என்றால் – “மகன், மகனின் மகன், அந்தப் பேரனின் மகன், அதேபோல சகோதரன், அந்தச் சகோதரின் மகன்கள், மற்றும் சபிந்தா உறவுகள்” இவர்களில் யாருமே இல்லாதபோது, இறந்தவரின் தாயார் வழி உறவுகள்; ஆண்வாரிசுகளே இல்லாதபோது, மகள்களும் அவர்களின் வாரிசுகளும் செய்யலாம்;

தீர்ப்பு;
இந்த வழக்கில் சகோதரியின் மகன் வாரிசு உரிமை பெறுவானா என்பதே! இங்கு ஆண்களுக்கு முன்னுரிமை; பெண்களுக்கு முன்னுரிமை இல்லை என்பதன் அடிப்படையில் ஏற்பட்டது; எனவே சகோதரியின் மகனும் பந்து என்ற உறவே என்பதால், அவன் மற்ற சகோதரிகளை முந்தி பங்கு பெற உரிமை உள்ளவன் ஆகிறான் – என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
**



பஞ்சாங்கம் வெங்டாச்சார்யுலு வழக்கு

Panchangam Venkatacharyulu case
பஞ்சாங்கம் வெங்டாச்சார்யுலு வழக்கு
Panchangam Venkatacharyulu vs Gudimella Tirumala
Citation: (1896) 6 MLJ 91

1884-ம் வருடம்; வெங்கடரங்கம்மா என்ற சிறுமிக்கு அப்போது 9 வயது. இந்த சிறுமியின் தாயார், இவளை 1884-ல் பஞ்சாங்கம் வெங்கடாச்சார்யுலுவுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். திருமணம் மங்களகிரியில் உள்ள நரசிம்மசுவாமி கோயிலில் நடக்கிறது. அந்தத் திருமணத்தின்போது, அந்தச் சிறுமியின் தகப்பனார் அங்கு இல்லை. இந்தத் திருமணத்துக்கு, தகப்பனின் அனுமதியை அவளின் தாயாருக்கு கொடுத்திருந்தாரா என்று தெரியாது. (கணவர் அனுமதியுடன்தான், மனைவி, அவளின் மகளுக்கு திருமணம் செய்ய முடியும் என்பது அப்போதைய வழக்கம்).

இந்தச் சிறுமியின் தகப்பனார் ஸ்ரீரங்கபுரத்தில் வசிக்கிறார். அவர் தனது சிஷ்யனைப் பார்ப்பதற்காக வெளியூர் சென்றுள்ளார். அப்போது, அவரின் மனைவி (சிறுமியின் தாயார்) அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு மங்களகிரிக்கு வருகிறார். அங்கு தானே, தன் மகளுக்குத் திருமணத்தை நடத்தி விடுகிறார். ஏனென்றால், அந்த சிறுமிக்கு, வேறு ஒரு கணவரை, அந்தச் சிறுமியின் தகப்பனின் தாயார் ஏற்பாடு செய்திருந்தாராம். (மாமியர் பார்த்த பையனுக்கு தன் மகளைக் கொடுக்க தாய்க்கு விருப்பமில்லை).
எனவே பிரச்சனை ஏற்படுகிறது. இந்தத் திருமணம் தகப்பனின் சம்மதமில்லாமல் நடந்திருக்கிறது எனவும், தகப்பனுக்குத் தெரியாமல் ஏமாற்றி நடத்திய திருமணம் எனவும், எனவே இந்தத் திருமணம் செல்லாது எனவும் வழக்கு;

இந்து முறைப்படி நடக்கும் திருமணம் எல்லாமே மதச் சடங்குகளின்படி நடக்கும் திருமணமே; இந்துமதக் கோட்பாடுகளின் படி இது “சம்ஸ்காரம்” என்னும் மதநிகழ்வே; இந்த மதசடங்கின்படி, மணப்பெண்ணின் ஆத்மா சுத்திகரிக்கப் படுகிறது என்கிறார்கள் முன்னோர்கள். இந்த நிகழ்வின் போது, ஓமகுண்டம் வளர்த்து எல்லாக் கடவுள்களையும் அழைத்து அவர்களின் முன்னிலையில் அந்த ஓமகுண்டத்தை ஏழு-அடி வலம் வர வேண்டும் என்பது இந்து திருமண சடங்கின் நியதி. இந்த ஏழு-அடி எடுத்து நடப்பதை “சப்தபதி” என்பர். சப்த என்றால் ஏழு என்ற எண்ணிக்கை. இப்படி ஏழு அடி எடுத்து வைத்து கணவனைக் கைப்பிடித்தால் அதுவே அவள் கணவருடன் சேர்ந்து வாழ ஏற்படுத்திக் கொண்ட சம்ஸ்காரம்; அதை அவள் இனி எப்போதும் பிரிக்க முடியாது.

இங்கு இந்த வழக்கில் நடந்த திருமணமானது செல்லுபடியாகும் திருமணமே. ஏனென்றால், பெண்ணின் தகப்பனோ, அல்லது அவனின் சம்மதத்துடன், அவன் சார்ந்த கார்டியனோ, உடனிருந்து இந்த திருமணத்தை செய்திருந்தால், அந்த திருமணம் இந்து மத வழக்கப்படி செல்லுபடியாகும் திருமணமே.

ஆனால், இங்கு வேறு ஒரு பிரச்சனை வருகிறது. இந்து மத வழக்கப்படி இந்த திருமணம் நடந்ததா என்றே கேள்வி இந்த கோர்ட்டில் பேசப்படுகிறது.

மனு தர்ம சாஸ்திரப்படி: “ஏழு அடி எடுத்து வைத்தாலே திருமணம் நடந்ததாகவே பொருள்” என்று மனு சொல்கிறார்.
வசிஷ்டர் தர்ம சாஸ்திரப்படி: “மணமகனுக்கும் மணமகளுக்கும் சம்மதம் பெற்று, அவளின் கையை அவன் பிடித்துக் கொண்டு நடந்தாலே திருமணம் கைகூடியதாக பொருள்” என்கிறார்.

யமா தர்ம சாஸ்திரப்படி: “ மந்திர நீர் தெளிப்பதாலோ, பரிசுப் பணம் அளிப்பதாலோ கணவன் மனைவி உறவை ஏற்படுத்தி விட முடியாது; மாறாக, மணமகன், மணமகளின் கையைப் பிடித்துக் கொண்டு ஏழு அடிகள் எடுத்து வைத்து முடித்தால் மட்டுமே திருமணம் என்பது நிறைவுபெறும்” என்கிறார்.

ப்ரம்ம விவாகம் என்பது, பெண்ணின் தகப்பன், ஒரு பரிசுப் பொருளை மணமகனிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதற்காக, தன் மகளை விவாகம் செய்து கொடுப்பது.

சப்தபதி திருமணத்தில் – மூன்று கட்டங்கள் உள்ளன; (1) வக்த-னாம்; இது நான் என் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாக வாக்கு அளிக்கிறேன் என்பது; (2) மணமகளை, அவளின் தகப்பன் பரிசாக மணமகனுக்குக் கொடுப்பது; இதைத்தான் “கன்னிகாதானம்” என்பர். (3) மூன்றாவதாக, மணமகன், மணமகளின் கையைப் பிடித்துக் கொண்டு ஏழு அடி எடுத்து நடப்பது. கையைப் பிடித்துக் கொண்டு நடப்பதை “பனிக்கிரகனம்” என்பர்; அந்த ஏழாவது அடி முடிவில் திருமணம் முடியும். ஏழு அடிகள் எடுத்து வைப்பதை “சப்தபதி” என்பர்.

இந்த வழக்கில், பெண் பெற்றவரோ அல்லது அந்தச் சிறுமியின் பாதுகாவலரோ, இந்து தர்மப்படி திருமணம் செய்து கொடுத்திருந்தால், அந்த திருமணத்தை ரத்து செய்யமுடியாது. ஆனால், ஒரு பெண்ணை கடத்தி வந்து, மோசடியாக திருமணம் செய்து வைத்திருந்தால், அந்தத் திருமணம் “கன்னியா தானத் திருமணமாக” கருத முடியாது.

பெங்காலிப் பகுதியில் நடந்த மற்றொரு வழக்கில் – அந்தச் சிறுமி, அவளின் மூத்த சகோதரி வீட்டுக்குப் போயிருந்தபோது, மூத்த சகோதரியின் கணவன், அந்தச் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்கிறான். இதில், அந்தச் சிறுமியின் தாயின் சம்மதம் இல்லை; கன்னியா தானம் இல்லை. இது ஒரு குற்ற நடவடிக்கை. எனவே குற்ற நடவடிக்கையை அனுமதியாக ஏற்க முடியாது – என்று தீர்ப்பு உள்ளது.
ஆனால், இந்த வழக்கில், இந்தச் சிறுமியின் தாயாரே, அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்திருக்கிறாள். இது ஏற்கக் கூடிய திருமணமே!

மற்றொரு வழக்கில், சிறுமியின் தாய், சிறுமியின் தகப்பனின் சம்மதம் இல்லாமல், இந்து முறைப்படி திருமணத்தை நடத்தி வைக்கிறாள். அந்த திருமணத்தை ரத்து செய்ய முடியாது என்றே தீர்ப்பு வழங்கி உள்ளது.
மற்றொரு வழக்கான 1885-ல் நடந்த கல்கத்தா வழக்கில் – சிறுமியின் சித்தப்பா பாதுகாவலராக இருந்து அவளின் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அதில், சிறுமியின் தாயாரின் சம்மதம் இருக்கிறது. இதுவும் சரியான திருமணமே – என்ற தீர்ப்பு உள்ளது.

மற்றொரு வழக்கான 1886-ல் நடந்த பாம்பே ஐகோர்ட் வழக்கில் – தகப்பனின் சம்மதம் இல்லாமல், தாயார் நடத்தி வைத்த திருமணம். இந்த திருமணம் செல்லாது என தகப்பன் வழக்குப் போடுகிறான். ஆனால், தகப்பன், அவன் மனைவியுடன் சேர்ந்து வாழாமல் பிரிந்து வாழ்கிறான். எனவே தகப்பனுக்கு, பழிவாங்கும் எண்ணமே தவிர, மகளின் வாழ்வைப் பற்றிய அக்கறை இல்லை – எனத் தீர்ப்பு.

மற்றொரு வழக்கான 1889-ல் நடந்த மதராஸ் ஐகோர்ட் வழக்கில் – இதே சூழ்நிலையில், ஒரு திருமணம் நடந்து முடிந்து விட்டால், அதை ரத்து செய்ய முடியாது எனத் தீர்ப்பு உள்ளது. இதில் சிறுமியின் தாயார் ரூ.400 பரிசுப் பணமாகப் பெற்றுக் கொண்டு கன்னியா தானம் கொடுத்திருக்கிறார். ஆனால் சிறுமியின் தகப்பனோ, ரூ.600 பரிசுப் பணம் வேண்டும் என்று பிரச்சனை செய்திருக்கிறான். அதனால் அவனின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடந்தது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்குப் போட்டிருக்கிறான். ஆனாலும், தாயாரின் செயல் நியாயமானதே என்றும் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் எனவே திருமணம் செல்லும் என்றும் தீர்ப்பு கூறியது.

ஸ்மிருதியை வியாக்கியனம் செய்த பல பண்டிதர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் – “ஒரு சிறுமி, அவள் வயசுக்கு வருவதற்கு முன்பே, அவளின் தகப்பன், அவளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது “கடமை” என்றும், அது “அவனுக்கு உரிய உரிமை இல்லை” என்றும் விளக்கி உள்ளனர். அவ்வாறு செய்யாமல் விட்டு, அவள் வயசுக்கு வந்துவிட்டால் என்றால் அது அவன் செய்த பாவம் என்றும் கூறிகிறார்கள். மேலும், நாராதா மற்றும் யக்ஞவால்கியர் ஆகிய முனிவர்கள், இப்படிப்பட்ட செயல்கள் அந்தச் சிறுமியை கொலை செய்வதற்குச் சமம் என்கிறார்கள்.

நாரத முனிவரின் கூற்றுப்படி – “ஒரு பாகப்பிரிவினை நடந்து விட்டாலும், ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட்டாலும், அவைகளை திரும்பப் பெற முடியாது” என்கிறார்.

ஸ்மிருதி சந்திரிகா என்ற நூலில் – “இரண்டாவது சம்ஸ்கார அல்லது இரண்டாவது திருமணம் என்பது தடை செய்யப் பட்டதே” என்கிறது.
கலியுக கிருஷ்ணசாமி ஐயரின் புத்தகத்தில் – “மந்திரம் சொல்லி செய்யப்பட்டவைகளை நிரந்தரமானவை” என்கிறார், ஒரு சிறுவன் பூணுநூல் போட்டு வேதமந்திரம் சொல்லி, அவனின் தகப்பனாரின் கோத்திரத்தை ஏற்றுக் கொண்டவன் என்றால், அவன் வேறு கோத்திரத்தில் தத்து புத்திரன் எடுக்க முடியாது என்கிறார்.

தத்தக மீமாச்ச ஆசிரியர் சொல்கிறார் – ஒரு சிறுவனை மொட்டை போட்டு சடங்கு செய்து தத்துக் கொடுத்து விட்டால், அவனின் பெற்ற தகப்பனுக்கு எல்லா உரிமையும் போய் விடுகிறது – என்கிறார்.

ஒரு திருமணத்தில், பெற்றோர் இருவரும் (அவர்கள் இல்லாவிட்டால் அவர்களின் தாயாதிகள் என்னும் பங்காளிகள்) நீர் வார்த்து அந்தப் பெண்ணை திருமணம் செய்யும் ஆணுக்கு தாரை வார்த்துக் கொடுப்பர். இதில் தாய்க்கும் சம பங்கு உண்டு. ஆனாலும் அந்த உரிமை, தகப்பன் வழி ஆட்களுக்குப் பின்னர் வரும்.

தீர்ப்பு: -- எனவே இந்த வழக்கில் தாயின் செயல், அந்தச் சிறுமியின் நல்லெண்ணத்தின் பால் பட்டதே. எனவே இந்தத் திருமணம் செல்லும் என்று தீர்ப்பு.
**



Monday, May 1, 2017

சாத்தப்பையர் மடம் வழக்கு

மதராஸ் ஐகோர்ட்டின் நீதிபதி ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரின் தீர்ப்பு
Citation: Sathappayar v. Periasami (1891) ILR 14 Mad 1
இந்த வழக்கு 1890-ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. மதராஸ் மாகாணத்தில், மதுரை ஜில்லாவில் உள்ள சிவகங்கை என்ற ஊரில் சாத்தப்பையர் மடம்என்ற ஒரு மடத்தை ஒரு பரதேசி நடத்தி வந்தார். அது ஒரு, சமயம் சார்ந்த மடம் ஆகும். அப்போது சிவகங்கையை பெரியசாமி என்ற ஜமின்தார் ஆண்டு வந்தார். 1883-ல் அந்த ஜமின்தாரின் தகப்பனாரான பெரிய ஜமின்தார் இறந்து விட்டதால், அவரின் மகன் சின்ன ஜமின்தாரான பெரியசாமி நிர்வாகம் செய்து வந்தார்.

அந்த மடத்தை, அந்தப் பரதேசியான சாத்தப்பையர் நடத்தக் கூடாது என்றும், அவர் அதை ஜமின்தாரின் நிர்வாகத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லது ஒரு சரியான சாமியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று வழக்கு போடுகிறார்.

ஜமின்தார் சொல்லும் காரணங்கள் என்னவென்றால், இந்த பரதேசிக்கு கல்யாணம் ஆகி விட்டது. ஒன்று அல்ல இரண்டு திருமணங்கள். எனவே சாத்தப்பையர் மடத்தை நிர்வாகம் செய்யத் தகுதி இல்லை என்கிறார். குடும்ப வாழ்க்கை இல்லாத சாமியார்கள் மட்டுமே மடத்தை நிர்வாகம் செய்ய தகுதி உடையவர்கள் என்கிறார். இந்த மடத்தை தற்போது நிர்வாகம் செய்யும் பரதேசிக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாலும், அவர் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வதாலும் அவருக்கு இந்த மடத்தை நிர்வாகம் செய்யும் தகுதி இல்லை என்று வழக்குப் போடுகிறார்.

இந்த மடமானது 1734-ல் உருவாக்கப்படுகிறது. அப்போது ஒரு சாரிட்டி பத்திரம் மூலம் சிவகங்கையின் முதலாம் ஜமின்தார் உருவாக்கி வைத்தார். ஜமின்தாரின் குருவின் நினைவாக இது உருவாக்கப்பட்டதாம். அந்த குருவின் பெயர் தான் சாத்தப்பையர். எனவே இது குரு-சிஷ்ய பாரம்பரியம் கொண்ட மடம். இந்த மடம் காலம் காலமாக, சூரியன் சந்திரன் இருக்கும் காலம் வரை இயங்கிவர வேண்டும் என்று செப்பு பட்டயத்தில் எழுதப்பட்டுள்ளதாம். இந்த மடத்தின் செலவுக்காக, ஜமின்தாரின் மருதவாயல் ஊரில் உள்ள தனக்குச் சொந்தமான அதிகமான நிலங்களை எழுதிக் கொடுத்துள்ளார். இந்த மடத்தில், ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், அதில் பரம்பரை பரம்பரையாக மடத்தின் தலைவர் இருந்து வர வேண்டும் என்றும், அந்த மடத்தின் தலைவருக்கு பரதேசிஎன்ற பட்டம் கொடுக்க வேண்டும் என்றும் உள்ளதாம். அந்த கட்டிடத்தில், “சிவயோக நிஷ்டைநடத்தப்பட வேண்டும் என்றும், குருவின் நினைவாக வருடாவருடம் குருபூஜையும் தெகபூஜையும் நடத்தி வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாம்.

சிவயோக நிஷ்டை என்பது கடவுள் சிவன் ஐந்தெழுத்து மந்திரமும், எட்டு எழுத்து மந்திரமும் ஆகும். இந்த மந்திரத்தை காலையில் ஒரு வேளையும், மலையில் ஒரு வேளையும் கடைப்பிடித்து வர வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தை பஞ்சாச்சரம் என்பர். எட்டெழுத்து மந்திரத்தை அஷ்டாச்சரம்என்பர். இதை சொல்லும்போது இறைவனை நினைத்து தியானம் செய்வதால், அவனை நெருங்க முடியும் என்பது ஐதீகம்.

குருபூஜை என்பது குருவுக்காக அவரின் நினைவு நாளில் பூஜை செய்வது. இங்கு சிவகங்கை பழைய ஜமின்தாரின் ஆன்மீக குருவாக இருந்த சாத்தப்பையர் நினைவாக அவரின் திதி நாளன்று பூஜைகள் செய்து அவரின் அருளைப் பெறுவது.

தெகபூஜை என்பது அறவழியில் வாழ்பவரையும் மதவழியில் வாழ்பவரையும் ஆதரிப்பது.
மேலும், இந்த மடத்தின் மற்றொரு கைங்கரியமாக, கோடைகாலத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்குவது.

இந்த மடம் ஆரம்பித்த காலத்திலிருந்து ஆறு மடாதிபதிகள் (இங்கு இவர்களை பரதேசிகள் என்பர்) இருந்துள்ளனர். முதல் மூன்று பரதேசிகள் திருமணம் செய்யாமல், சன்னியாச வாழ்க்கை மேற்கொண்டவர்கள். நான்காவது பரதேசிக்கு திருமணம் ஆனது. அவர் இறக்கும்போது அவரின் விதவை மனைவி இருந்துள்ளார். இப்போது உள்ள ஆறாவது பரதேசிக்கு இரண்டு மனைவிகள்.

இந்த மடத்தின் பழக்க வழக்கப்படி, ஒரு பரதேசி, தன் வாழ்நாளில் தன் சிஷ்யனை அடுத்த பரதேசியாக தயார் செய்து தன் வாரிசாக நியமிக்க வேண்டுமாம்.  ஆனால், மூன்றாவது பரதேசி அவ்வாறு தனக்கு அடுத்து யார் இந்த மடத்துக்கு பரதேசியாக வரவேண்டும் என்று நியமிக்கவில்லையாம். எனவே சிவகங்கை பழைய ஜமின்தாரே ஒருவரை அடுத்த பரதேசியாக நியமித்துள்ளார்.

பழைய ஜமின்தாரின் மகன் இப்போதுள்ள ஜமின்தார், இந்த வழக்கை இப்போதுள்ள பரதேசி மீது தொடுத்துள்ளார். இந்த பரதேசிக்கு இரண்டு மனைவிகள். எனவே இவர் இந்த மடத்துக்கு பரதேசியாக இருக்க முடியாது என்றும், இந்த பரதேசி இந்த மடத்தை ஒழுங்காக நிர்வாகம் செய்யவில்லை என்றும், வந்த வருமானத்தைக் கொண்டு தன்னுடைய வசதிக்கு வீடு கட்டிக் கொண்டு இரண்டு மனைவிகளுடன் குடும்ப வாழ்க்கை வாழ்கிறார் என்றும், மடத்தில் பஞ்சாடசரம், அஷ்டாச்சரம் மந்திரங்களை அனுஷ்டிக்காமல், அதற்குறிய முற்றம் என்னும் கட்டிடத்தை கட்டாமல் இருக்கிறார் என்றும், மடத்தின் எந்த காரியங்களையும் சரியாக செய்வதில்லை என்றும், எனவே இவரை நீக்கிவிட்டு, வேறு ஒருவரை பரதேசியாக நியமிக்க வேண்டும் என்றும் வழக்குப் போடுகிறார்.

இந்த வழக்கின் ஐகோர்ட் தீர்ப்பு:
மடத்தின் தலைவராக இருப்பவரான பரதேசிஒரு சன்னியாசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; மதராஸ் மாகாணத்தில் உள்ள பல மடங்களில் இவ்வாறான நிலை உள்ளது. மேலும் இந்த மடத்தின் முன்னாள் மடத்தலைவரும் திருமணம் செய்துள்ளார். எனவே இப்போதுள்ள பரதேசிக்கு இரண்டு மனைவிகள் இருந்தபோதும், அதற்காக அவரை மடத்தின் தலைவர் பதவியான பரதேசி பதவியில் இருந்து நீக்கிவிட முடியாது.

ஆனாலும், மடத்தின் வருமானங்களைக் கொண்டு இவர் தனக்குச் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டுள்ளார். ஜமின்தார் கூறுவதுபோல இவர் மடத்தின் காரியங்களை ஒழுங்காகச் செய்யவில்லை என்றே தெரிகிறது.

எனவே அவரை பரதேசி பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடுகிறோம். வேறு ஒரு பரதேசியை நியமித்துக் கொள்ள ஜமின்தார் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது.
(இந்த தீர்ப்பானது 1890-ல் மதராஸ் ஐகோர்ட்டில் நீதிபதிகளான ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரும், ஜஸ்டிஸ் பெஸ்ட் ஆகிய இருவரின் பெஞ்ச் வழங்கியது.
**