பாகப்பிரிவினை-4
சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளும்போது, யார்
விட்டுக் கொடுக்க வேண்டும். மூத்தவரா, இல்லை இளையவரா? விட்டுக் கொடுப்பது என்பது
பொதுவானது. இதில் மூத்தவர், இளையவர் என்ற வித்தியாசம் இல்லை. இவர் விட்டுக்
கொடுத்தால், அவரும் விட்டுக் கொடுப்பார். இவர் இறுக்கிப்பிடித்தால், அவரும்
இறுக்கிப்பிடிப்பார். ஆனாலும், ஒன்று கோழி முந்தி இருக்க வேண்டும் அல்லது முட்டை முந்தி
இருக்க வேண்டும். ஒன்றை ஒன்று முந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான
விட்டுக் கொடுப்பது நிகழும். அது ஆள்மனதிலிருந்து வருவது.
இதில், வலுத்தவன் விட்டுக் கொடுக்கலாம்
என்பது பெரியோர்களின் யோசனை. இளைத்தவன் விட்டுக் கொடுப்பது நியாமில்லைதான். யார்
வலுத்தவன், யார் இளைத்தவன் என்பது பணத்தை வைத்து முடிவு செய்யும் காலம் இது. ஆனால்
முன் காலங்களில், இதை “மூத்தவன் வலுத்தவனாகவும், இளையவன் இளைத்தவனாகவும்” கருதி
இருந்தனர். இந்த நியாயத்தின் அடிப்படையில்தான் சொத்துக்களை பங்கு பிரித்துக்
கொடுத்தனர்.
ஒரு சொத்தை (நிலத்தை) இரண்டு முறையில்
துண்டுகளாக பங்கு பிரிக்கலாம். ஒன்று கிழக்கிலிருந்து மேற்காக ஒவ்வொரு பங்காக பிரித்துக்
கொடுக்கலாம்; அல்லது வடக்கிலிருந்து தெற்காக ஒவ்வொரு பங்காக பிரித்துக் கொடுக்கலாம்.
இந்த இரண்டு வழிமுறைதவிர, சொத்தை துண்டுகளாக பிரிக்க வேறு வழிமுறைகளே இல்லை. அவ்வாறு
முடியாது என்றால், மொத்த சொத்தையும் விற்று, பணத்தை பிரித்துக் கொள்ளலாம். அதுவே கடைசி வழி.
இவ்வாறு சொத்தை ஒரு பக்கத்திலிருந்து மறு
பக்கமாக பிரித்துக் கொண்டு வரும்போது, எந்தப்பங்கை யாருக்கு கொடுப்பது என்பதில்
குழப்பம் வரலாம் என்பதாலேயே, நம் முன்னோர்கள் ஒரு சரியான யோசனையையும் சொல்லி
இருக்கிறார்கள். அதன்படி பிரித்துக் கொடுப்பது மிக மிக எளிது. அதில் சண்டை வராது.
எனக்கு இந்தப் பக்கத்து சொத்துத்தான் வேண்டும் என்ற அடாவடித்தனமும் இருக்காது.
ஏனென்றால் இதுவே உலக நியதி என்று எல்லா மக்களும் ஒப்புக்கொண்ட வழிமுறை இது. மிக
அதிகமானவர்கள் இந்த வழிமுறைப் பற்றி இதுநாள்வரை தெரியாமல் வேண்டுமானால் இருந்திருக்கலாம், ஆனால், இதை
மீறி ஒரு புதுவழிமுறையை ஏற்படுத்தவே முடியாது. அதற்கும் ஒரு தடை ஏற்படுத்தி
வைத்துள்ளார்கள் நம் முன்னோர். அதாவது, இந்த வழிமுறைக்கு மாறாக சொத்தின் பங்கை
மாற்றி எடுத்துக் கொண்டால், அது சாஸ்திரப்படி மகா தவறு என்றும், அந்த சொத்தை
நிம்மதியாக அனுபவிக்கவே முடியாது என்றும், காலம் காலமாக ஒரு சாபக்கேடும் உண்டு என்றும்
சொல்லிச் சென்றுள்ளனர். அது உண்மைதான் என்றும் அதை நடைமுறையில் கண்டுள்ளதாகவும்
இப்போதும் சொல்லிக் கொள்கிறார்கள்.
அப்படி என்ன வழிமுறை?
ஒரு சொத்தை, பல பங்குகளாக, கிழக்கிலிருந்து
மேற்காக பிரித்துக் கொண்டால், கிழக்கு ஓரத்தில் இருக்கும் பங்கை கடைசித் தம்பியோ,
தங்கையோ, அதாவது கடைக்குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தவர், அதை
அடுத்த பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால், மேற்கு
கடைசி சொத்தை மூத்தபிள்ளை எடுத்துக் கொள்வார். இதை “இளையவர் கிழக்கிலும், மூத்தவர்
மேற்கிலும் பெறுக” என்ற பொன்மொழிக்கு ஏற்ப பங்கு பிரிக்கப்பட்டுவிடும்.
அதேபோல், ஒரு சொத்தை, பல பங்குகளாக, வடக்கிலிருந்து
தெற்காக பிரித்துக் கொண்டால், வடக்கு ஓரத்தில் இருக்கும் பங்கை கடைசித் தம்பியோ,
தங்கையோ, அதாவது கடைக்குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தவர், அதை
அடுத்த பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால், தெற்கு
கடைசி சொத்தை மூத்தபிள்ளை எடுத்துக் கொள்வார். இதை “இளையவர் வடக்கிலும், மூத்தவர் தெற்கிலும்
பெறுக” என்ற பொன்மொழிக்கு ஏற்ப பங்கு பிரிக்கப்பட்டுவிடும்.
இந்தியா என்னும் நாடு வடக்கில் உயரமான
மலைகளைக் கொண்டும், தெற்கில் பள்ளமான பகுதியை கொண்டும் உள்ளது. எனவே உயரமான பகுதி
இளையவருக்கு போய் சேரட்டும் என்றும் வலுத்தவனான மூத்தவன் பள்ளமான பகுதியான தகுதி
குறைவான பகுதியை அடையட்டும் என்று ஏற்பாடாம்.
அதேபோல உலகில் கிழக்கில் சூரியன்
உதிக்கிறான், அவன் காலையில் எழும் கிழக்கு திசை வளர்ச்சியை நோக்கி மேலே எழும்பும்
திசை. மாலையில் மேற்கில் மறையும் திசையானது கீழே சாயும் திசை. எனவே இளையவனே,
சூரியன் உதிக்கும், அல்லது வளரும் அல்லது மேலெழும் திசையில் உள்ள சொத்தை
அடையட்டும் என்றும், வலுத்தவனான மூத்தவன் மறையும் திசையான மேற்கை அடையட்டும் என்று
வகுத்து வைத்துள்ளனர்.
இளையவனே சலுகைக்கு உரியவன் என்பதே
கோட்பாடு. மூத்தவன் விட்டுக் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும். இளையவன் பெறும்
நிலையில் இருக்க வேண்டும். ஆனாலும், இளையவன் இந்த தத்துவத்தின் நோக்கத்தை புரிந்து
கொண்டு, “நான் சலுகையைப் பெற்றவன்” என்று நினைத்து எப்போதும் நன்றியுள்ளவனாகவும்
இருக்க வேண்டுமாம்.
நூறை மூன்றாக பிரித்தால் 33.33 வரும்;
அதிலும் ஒரு பைசா மிச்சமிருக்கும். இந்த மிச்சத்தையும் சேர்த்துப் பெறுபவனே இந்த
இளையவன். ஏனென்றால், அவனே மூத்தவர்களின் வாழ்நாள் பாதுகாவலன். \
அதற்காகத்தான், இராமன் நிழலாக லஷ்மணன்
இருந்திருக்கிறான். மூத்தவனின் நிழலாக இளையவன் இருப்பானாக!!!