செட்டில்மெண்ட் பத்திரமும், தானப் பத்திரமும்
செட்டில்மெண்ட் பத்திரத்தை (Settlement Deed) “ஒரு குடும்ப
ஏற்பாட்டுப் பத்திரம்” என்கிறார்கள்; இது ஒரு வகையில் “தானப் பத்திரம்தான்” (Gift Deed); ஒருவர் தனக்குச் சொந்தமான சொத்துக்களை இந்த செட்டில்மெண்ட்
பத்திரம் மூலம் தன் குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு பிரித்து கொடுக்கும்
பத்திரம்; ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அவர் வாழ்நாளிலேயே, தன் குடும்பத்தில்
உள்ள மற்ற உறவினர்களுக்கு கொடுப்பதால் செட்டில்மெண்ட் பத்திரம் என்ற பெயரில்
அழைக்கப்படுகிறது; ஆனால், ஒருவர் தன் சொத்துக்களை, தன் வாழ்நாளுக்கு பின்னர் தன்
உறவினர்களுக்குச் சேரும்படி எழுதி வைக்கும் பத்திரத்தை “உயில் பத்திரம்”
என்கிறார்கள்;
தன் வாழ்நாளிலேயே, ஒருவர் தன் சொத்துக்களை, தன் உறவுகளுக்கு
கொடுக்கும் பத்திரமான இந்த செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுக்கும்போது, அந்த
சொத்தைப் பெறுபவர் “குடும்ப உறவினராக” இருக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம்
சொல்கிறது;
குடும்ப உறவினர் என்பவர்கள் யார் யார் என்றும் அதே இந்திய ஸ்டாம்பு
சட்டம் கூறிஉள்ளது; அதன்படி, தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, இவர்கள்
மட்டும்தான் “குடும்ப உறுப்பினர்கள்” என்று அந்த சட்டம் சொல்லி உள்ளது; பின்னர்
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்த “குடும்ப உறுப்பினர்” என்ற உறவுகளை விசாலப்படுத்தி,
“அண்ணன், தம்பி, அக்காள், தங்கை” இவர்களையும் அதில் சேர்த்துக் கொண்டது;
இந்த குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும், ஒருவர் தன்
சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை “தானமாகத் தான்”
(Gift) கொடுக்க முடியும்; மாறாக குடும்ப ஏற்பாடு என்னும் இத்தகைய
செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் கொடுக்க இயலாது;
மேலே சொன்ன குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு நபர்களுக்கு, ஒருவர் தன்
சொத்துக்களை கொடுக்க நினைத்தால், அதை “தானப்பத்திரம்” என்னும் கிப்ட் பத்திரம் (Gift Deed) மூலமே கொடுக்க வேண்டும்;
செட்டில்மெண்ட் பத்திரத்துக்கும், தானப் பத்திரத்துக்கும் பெரிய
வேறுபாடு ஒன்றும் இல்லை; இரண்டுமே ஒருவகையில் “தானம்” தான்; மேற்சொன்ன குடும்ப உறவினர்களுக்குள்
கொடுத்தால் அது செட்டில்மெண்ட் பத்திரம்; அதையே வெளி நபர்களுக்குக் கொடுத்தால்
தானப் பத்திரம் அவ்வளவே; ஆனால், இவ்வாறு கொடுக்கும் பத்திரத்துக்கு அரசுக்கு
செலுத்தும் ஸ்டாம்ப் கட்டணத்தில்தான் வேறுபாடு; குடும்ப உறுப்பினர்களுக்கு
கொடுக்கும் செட்டில்மெண்ட் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்பு
கட்டணம் அல்லது அதிகபட்சமாக ரூ.25,000/- மட்டுமே; (அதாவது ரூ.25 லட்சம் வரை
மதிப்புக்கு உட்பட்ட சொத்துக்களுக்கு 1% கட்டணம்: அதற்கு மேல் எவ்வளவு மதிப்புள்ள
சொத்தாக இருந்தாலும் ரூ.25,000 கட்டணம் மட்டுமே); ஆனால் குடும்ப உறுப்பினர்
அல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானப் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 8%
ஸ்டாம்பு கட்டணம் செலுத்த வேண்டும்;
இந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி வைப்பதற்கு முன், ஒருசில சட்ட
நுணுக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டு எழுதவேண்டும்; பொதுவாக ஒருவர் தன் சொத்தை,
செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தினருக்கு கொடுத்தால், பின்னர் அந்த
பத்திரத்தை ரத்து செய்யவே முடியாது; இது தெரியாமல், ஏதோ ஒரு உந்துதலில் ஒரு
செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி கொடுக்கின்றனர்; பின்னர், ஏதோ ஒரு வருத்தம்
ஏற்பட்டு, அதை ரத்து செய்ய முயற்சி செய்கிறார்கள்; இப்படிச் செய்ய அவர்களுக்கு
அதிகாரம் இல்லை; ஆனாலும், பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் இவ்வாறு ரத்து செய்யும்
பத்திரங்களை ஏற்றுக் கொள்வதால் இவர்களும் அதை ரத்து செய்கிறார்கள்; எனவே இப்போது,
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பின் அடிப்படையில், இப்போதுதான் பத்திரப்
பதிவு அலுவலகங்கள், இவ்வாறான செட்டில்மெண்ட் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என
அறிவுறுத்தி உள்ளது;
ஒரு சொத்தில், தனக்குள்ள உரிமையை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டால்,
அந்த சொத்தில் அவருக்கு இருந்துவந்த உரிமை அத்துடன் முடிவுக்கு வந்து விடுகிறது;
எனவே அவர் அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பின்நாளில் ரத்து செய்ய எந்த அதிகாரமும்
அவருக்கு இல்லை என்பதுதான் சட்டம்; ஆனால், சிலர் நினைத்துக் கொள்கிறார்கள், “என்
சொத்தை, நான் தானமாகத்தானே கொடுத்தேன்; எனக்கு விரும்பம் இல்லை என்பதால், அதை
இப்போது ரத்து செய்கிறேன்” என்று நினைக்கிறார்கள்; விற்ற சொத்தை எப்படி திரும்ப
வாங்க முடியாதோ, அதேபோலத்தான், தானம் கொடுத்த சொத்தையும் திரும்ப வாங்க முடியாது;
இருந்தாலும், ஒருசிலர், இந்த செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி
வைக்கும்போதே, அதை ஒரு உயில் போல எழுதி, அதாவது, தன் வாழ்நாளுக்குப்பின், தன்
குடும்ப உறவினர்களுக்கு அந்த சொத்து, போய் சேர வேண்டும் என எழுதுவார்கள்; அல்லது
அவர் வாழ்நாள் வரை அந்த சொத்தில் உரிமையுடன் வாழ்ந்து வருவதாகவும், அதன் பின் அவர்
யாருக்கு சொத்துக் கொடுக்கிறாரோ அவர் முழு உரிமையுடன் அடைந்து கொள்ளலாம் என்று
எழுதி வைப்பார்கள்; இந்த வகையில் எழுதும் பத்திரங்கள், சில நேரங்களில் சரியாக
அமைவதுண்டு; பல நேரங்களில் இதில் சட்டக் குழப்பங்கள் வந்து, கோர்ட்டுக்கு சென்று
விடுகின்றன; இப்படிப்பட்ட குழப்பமான செட்டில்மெண்ட் பத்திரங்களை எழுதும்போது, அதன்
பிற்கால பிரச்சனைகளையும் யோசித்து தீர்க்கமான முடிவுடன், சட்ட ஆலோசனையும் பெற்றுக்
கொண்டு எழுதி வைப்பது, கோர்ட்டுக்கு போகும் வேலையை மிச்சமாக்கும்;
சிலர், குடும்ப நெருக்கடியில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதுவார்கள்;
பின்னர், அந்த நெருக்கடி தீர்ந்தவுடன், அல்லது வேறு நெருக்கடி, வேறு ரத்த
உறவுகளிடமிருந்து வந்தவுடன், ஏற்கனவே எழுதிய செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து
செய்வார்கள்; இந்த வகை பத்திரங்களும் சட்ட சிக்கலை உண்டாக்கி கோர்ட்டுக்கு அலைய
வைக்கும்;
தீர்மானமான முடிவுகள் எடுக்க முடியாதபோது, சொத்தைப் பொருத்து எந்த
செட்டில்மெண்டும் எழுதாமல் இருப்பதே நல்லது; அல்லது ஒரு உயில் பத்திரம் மட்டும்
எழுதி வைத்துக் கொள்ளலாம்; இது இல்லாமல், செட்டில்மெண்ட்தான் எழுத வைக்க வேண்டும்
என்று முடிவெடுத்து எழுதிவிட்டால், அத்துடன் அதில் தனக்கு இனி உரிமை ஏதும் இல்லை
என்று நினைத்துக் கொள்ள வேண்டும்; வாழ்நாள் வரை அதில் வசிப்பேன் என்று எழுதி
இருக்கும் பத்திரங்களில்கூட, வயதான காலத்தில் அந்த உரிமையை நிலைநாட்ட
கோர்ட்டுக்குத்தான் செல்ல வேண்டும்; எனவே முடிவு என்பது தீர்க்கமாக இருக்க
வேண்டும்! பந்த பாசத்துக்கு அடிமையாகாமல், ரத்த உறவுகளின் மிரட்டலுக்கு
பயப்படாமல், ஏமாறுவதற்கு இடம் கொடுக்காமல் முடிவுகள் தீர்க்கமாக இருக்க வேண்டும்!
ஒருவர் தன் வாரிசுகளுக்கு, ரத்த உறவுகளுக்கு சொத்து வைத்து விட்டுத்தான்
போகவேண்டும், ஆனால் அந்த சொத்தை தன் வாழ்நாளில் அனுபவிக்க முடியாமல், பறிகொடுத்து
தவிக்கும் நிலைக்கு போக இடம் கொடுக்க கூடாது; தனக்கு தெளிவான சிந்தனை, செயல்,
அதிகாரம் இருக்கும் காலத்திலேயே அல்லது வயதிலேயே ஒரு தீர்க்கமாக முடிவை எடுத்து
செயல் படுத்திவிட வேண்டும்; எழுந்து நடக்கவே முடியாத போது, நாம் எடுக்கும்
முடிவும் நடைமுறைக்கு வராது;
**