Sunday, May 29, 2016

பவர் ஆப் அட்டார்னி-6

பவர் ஆப் அட்டார்னி-6
இது இல்லாமல், பவர் பத்திரத்திலேயே, பணம் வாங்கிக் கொண்டேன் என்றும் எழுதிக் கொள்ளலாம்; அத்தகைய பவர் பத்திரங்களை “பணம் கொடுத்து வாங்கிய பவர்” என்றே சட்டமும் ஏற்றுக் கொள்கிறது: அத்தகைய பத்திரங்களுக்கு, அதில் குறிப்பிட்டுள்ள தொகைக்கு 4% மதிப்புள்ள முத்திரைதாளில் எழுதி இருக்க வேண்டும்; அந்த தொகைக்கு 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; இத்தகைய பவர் பத்திரங்கள் மட்டுமே, பணத்துக்காக கொடுக்கும் பவர் பத்திரம் என்றும், இத்தகைய பத்திரங்களை மட்டுமே சில காரணங்களுக்காக ரத்து செய்வது சிரமம் என்றும் சட்டம் வரையறை செய்துள்ளது;
இவ்வளவு செலவு செய்து பணம் வாங்கியதை ஒப்புக்கொள்ளும் பவர் பத்திரம் தேவையா என்று பலர் கருதிக் கொண்டே, பணம் வாங்காத பவர் பத்திரம் போலவே பலரும் எழுதிக் கொள்கிறார்கள்; இது அரசாங்கத்துக்கு வருமானத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால், தமிழக அரசு ஒரு சட்டம் மூலம், பணம் வாங்காத பவர் பத்திரமாக இருந்தால், அது அசையாச் சொத்தின் விற்பனை தொடர்பான பவர் பத்திரமாக இருந்தால், குடும்ப உறுப்பினர்களுக்குள் இல்லாத பவர் பத்திரமாக இருந்தால், ரூ.10,000 பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என 2013 டிசம்பர் மாதம் ஒரு சட்டம் மூலம் கொண்டு வந்து, இன்றுவரை அது அமலில் இருந்து வருகிறது; மேலும், சொத்தின் கிரயம் சம்மந்தப்பட்ட பவர் பத்திரமாக இருந்தால், அது வில்லங்க சான்றிதழில் பதிவாகிவிடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது; அதிலிருந்து ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் இத்தகைய பவர் பத்திரத்தை பெறுவதை குறைத்துக் கொண்டனர்; கடந்த இரண்டு வருடமாக, ரியல் எஸ்டேட் வியாபாரமும் மந்தமாகி விட்டதற்கு இதுவும் மிகப் பெரிய காரணம் என்ற சொல்கிறார்கள்;
மேலும், அத்தகைய பவர் பத்திரங்களுக்கு ஒரே ஒரு மாதம் மட்டுமே மதிப்பு இருக்கும் என்றும், அதற்கு மேல் கால தாமதம் ஆனால், அந்த பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் உயிருடன்தான் இன்றுவரை உள்ளார் என்பதற்கு ஒரு அரசு மருத்துவமனையில் பணியில் உள்ள டாக்டர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் அதற்கு “லைப் சர்டிபிகேட்” என்று பெயரிட்டு அதையும் கட்டாயமாக்கி விட்டனர்; எனவே ரியல் எஸ்டேட் வியாபாரிகள் இத்தகைய பவர் பத்திரங்களைப் பெறுவது என்பது வியாபார ரீதியாக மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால், அவர்கள் இத்தகைய எளிய வழி பவர் மூலம் செய்யும் வியாபாரங்களை இப்போது செய்ய முடியவில்லை; தமிழக அரசின் நோக்கமும் அதுவேதான்; இத்தகைய வியாபார நோக்கம் கொண்ட பவர் பத்திரங்களை ஒழித்துவிட வேண்டும் என்று அரசும் நினைத்தது; பொன் முட்டை இடும் வாத்தை அறுத்த கதையாகி விட்டது;

 Contd...7

பவர் ஆப் அட்டார்னி-5

பவர் ஆப் அட்டார்னி-5
பொதுவாக, சொத்தை வாங்குபவர், கிரயப் பத்திரத்துக்குப் பதிலாக, பவர் பத்திரமாக எழுதிக் கேட்டால், அவ்வாறு பவர் கொடுக்கக் கூடாது; அதனால் பல சிக்கல்கள் பின்நாளில் வர வாய்ப்பு உண்டு; பவர் பத்திரம் எழுதி வாங்குபவர் எல்லாருமே யோக்கியர்கள் இல்லை; வியாபாரிகளாகவே இருப்பதால், அவர்கள் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு, நம்பி பவர் எழுதிக் கொடுத்தவர்களை நட்றாற்றில் விட்டுவிட்டவர்கள் ஏராளம்! எனவே சொத்தை வாங்குபவர் பவர் பத்திரம் கேட்டால், கண்டிப்பாக ஒரு சட்ட ஆலோசனையை தெளிவாகப் பெற்று, பின்னர்தான் பவர் பத்திரம் எழுதிக் கொடுக்கவேண்டும்; அத்தகைய பவர் பத்திரத்தில் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுக்கும் பவர் மட்டுமே இருக்க வேண்டும்; கடன் வாங்கவோ, வீடு கட்டவோ, சிறு சிறு பகுதிகளாக விற்கவோ எழுதி இருந்தால், அதற்கு ஒப்புக் கொள்ளக்கூடாது; சொத்தை வாங்கியவர், இப்படி பவர் வாங்கிக் கொண்டு, நம் பெயரிலேயே எல்லா வியாபாரமும் செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை அவர் எடுத்துக் கொள்வார்; ஆனால் அதற்குறிய இன்கம்டாக்ஸ் பிரச்சனையை நாம் தான் சமாளிக்க வேண்டி வரும்; காலி மனையாக பவர் வாங்கிக் கொண்டு, அதில் வீடு கட்டி விற்பவர்கள் இத்தகைய செயல்களை செய்துள்ளார்கள்; அவ்வாறு வீடு கட்டி விற்கும்போது பிரச்சனை ஏற்பட்டு கோர்ட்டுக்கு போனால், அங்கு பவர் கொடுத்த உங்கள் பெயரில்தான் வழக்கே நடந்துவரும்; எனவே இத்தகைய பவர் பத்திரங்களில் ஜாக்கிரதையாக இயங்க வேண்டும்;

பவர் பத்திரங்களில் வாசகங்கள் எழுதும்போது, இந்த பவர் பத்திரம் மூலம், எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவரிடமிருந்து எந்தப் பணமும் வாங்கவில்லை என்று ஒரு உறுதிமொழியும் எழுதி இருக்க வேண்டும்; பணம் வாங்கிக் கொண்டு பவர் பத்திரம் எழுதிக் கொடுக்க முடியாது; பணம் வாங்காமல் எழுதிக் கொடுக்கும் பவர் பத்திரங்களை மட்டுமே ரு.100 மதிப்புள்ள முத்திரைதாளில் எழுதிக் கொள்ள முடியும். எனவே பணம் வாங்கவில்லை என்று ஒரு பொய்யையாவது அதில் சொல்லி இருக்க வேண்டும்; பணம் கொடுத்ததை வேறு ஒரு ரசீது பத்திரம் மூலம் எழுதிக் கொள்வர்; இரண்டும் ஒரே நாளில் நடந்திருந்தால் அந்த இரண்டு பத்திரங்களும் சேர்ந்து அதை கிரயம் என்றே கருத வேண்டும்; பவர் எழுதிக் கொடுத்தபின்னர், மறுநாளில் பணம் வாங்கி இருந்தால், பவர் கொடுத்தவருக்குச் சேரவேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்றே சட்டம் கருதுகிறது; அத்தகைய பணம் பெற்ற பவர் பத்திரத்தை பின்நாளில் ரத்து செய்ய முடியாது; ஏன் என்றால், அதில் அவர் என்ன நோக்கத்துக்கு பவர் கொடுத்தாரோ அந்த நோக்கத்தில் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று சட்டம் கருதுகிறது; எனவே பவர் கொடுத்தபின்னர் பணம் பெற்றிருந்தால் அத்தகைய பவர் பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரம் குறைவாகவே உள்ளது என கோர்ட் தீர்ப்புகளில் சொல்லப்பட்டுள்ளது;
contd...6

பவர் ஆப் அட்டார்னி-4

பவர் ஆப் அட்டார்னி-4
பொதுவாக இப்போதெல்லாம், இதுபோன்ற பவர் பத்திரங்கள் குறைவாகவே உள்ளன; அதற்குப் பதிலாக, வியாபார ரீதியில் இந்த பவர் பத்திரங்கள் நடைமுறையில் உள்ளது; ரியல் எஸ்டேட் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சொத்தைக் கிரயம் வாங்குபவரே அல்லது வாங்கி விற்பவரே, தன் பெயரிலோ அல்லது தனது நாமினி அல்லது பினாமி பெயரிலோ பவர் பத்திரத்தை வாங்கிக் கொண்டு விடுகிறார்; சொத்தின் கிரயத் தொகை முழுவதையும் கொடுத்துவிட்டு, அதற்கு ஒரு ரசீதும் பெற்றுக் கொள்கிறார்; இப்படியான பவர் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என்று ஒரு விதி இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டு இதை செய்து வருகிறார்கள்; இதைக் கட்டுப்படுத்தவே இப்போது தமிழ்நாட்டில் ஒரு புதிய பவர் சட்ட நடைமுறை வந்துவிட்டது; அதாவது வெளி நபர்கள் பெற்றுக் கொள்ளும் பவர் பத்திரங்களுக்கு ரூ.10,000 பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ரூ.100 மதிப்புள்ள முத்திரை தாளில் அந்த பவர் பத்திரம் எழுதிக் கொள்ள வேண்டும் என்றும் நடைமுறை வந்து வெகுகாலம் ஆகி விட்டது; இது இல்லாமல், உண்மையில் குடும்ப உறுப்பினர்களுக்கு எழுதிக் கொடுக்கும் பவர் பத்திரமாக இருந்தால், அந்த பவர் பத்திரத்தை, ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதிக் கொண்டு, அதை பதிவு செய்ய ரூ.1,000 பதிவுக் கட்டணம் செலுத்தினால் போதும் என்று புதிய முத்திரைச் சட்டத்தில் பவர் பத்திர விபரம் சொல்கிறது;

சொத்தின் விற்பனை அல்லாத மற்ற பவர் பத்திரங்களாக இருந்தால், அத்தகைய பவர் பத்திரங்களை ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதி, ரூ.150 பதிவுக் கட்டணமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்; ஆக எந்தப் பவர் பத்திரமாக இருந்தாலும் (பொது பவர்) அதற்கு ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளே போதும்; ஆனால் பதிவு அலுவலகத்தில் பதிவுக் கட்ட்ணம் மட்டுமே வேறுபடும்; 
contd...5

பவர் ஆப் அட்டார்னி-3

பவர் ஆப் அட்டார்னி-3
ஒரே ஏஜெண்ட் நியமிக்கும் பவர் பத்திரங்களில் ஒரு குழப்புமும் இல்லை; இரண்டு ஏஜெண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஏஜெண்டுகளை நியமித்தால், சிறிது குழப்பமாகவே இருக்கும்; எல்லா ஏஜெண்டுகளும் ஒரே நேரத்தில் இருந்து கையெழுத்துச் செய்து அந்த வேலையை முடிக்க வேண்டுமா அல்லது யாராவது ஒருவர் அல்லது இருவர் மட்டும் இருந்து ஒரு வேலையைச் செய்து கொள்ளலாமா என்பதை எல்லாம் தெளிவாக அந்தப் பவர் பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்; அதைப்பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்றால், எல்லா ஏஜெண்டுகளும் நேரில் ஒரே நேரத்தில் இருந்து கையெழுத்துச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் உண்டு;
ஏஜெண்ட் என்பதே நம்பிக்கையின்பால் பட்டது; எனவே, எப்போது ஏஜெண்டுகளை நியமித்தாலும், தனக்கு நம்பிக்கையான நபர்களையே நியமித்துக் கொள்ள வேண்டும்; என்னதான் ஏஜெண்ட் செய்த தவறுகளுக்கு அவர் பொறுப்பானவர் என்றாலும், தவறு செய்தபின்னர், அவர் பின்னல் அலைவது சாத்தியமில்லாதது. ஏஜெண்டுகள் தகுதியான நபராகவும் இருக்க வேண்டும்; எனவேதான், ஏஜெண்டுகளை, அவரவர் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், இவர்களிலிருந்தே நியமித்துக் கொள்வர்;

ஒருவரை ஏஜெண்டாக நியமித்து விட்டால், அவரை நீக்கம் செய்யும் வரை, அவர் செய்து வந்த செயல்கள் (வேலைகள்) எல்லாம் சட்டபடி செய்யப்பட்டதாகவே கருத வேண்டும்; உதாரணமாக – ஒரு சொத்தை விற்பதற்கு ஏஜெண்ட் நியமித்து விட்டோம்; அந்த ஏஜெண்ட், ஒரு கிரய அக்ரிமெண்ட் செய்து கொண்டு, அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டார் என்று வைத்துக் கொள்வோம்; அந்த கிரய அக்ரிமெண்ட் செல்லும்; அதற்குப் பின் அந்த ஏஜெண்டை நீக்கி விட்டாலும், அந்த அக்ரிமெண்ட்டின்படி சொத்தை வாங்க வந்தவருக்கு நாம் பதில் சொல்ல வேண்டும்; வாங்கிய அட்வான்ஸ் தொகைக்கும் பதில் சொல்ல வேண்டும்; ஏஜெண்டே அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு ஓடி விட்டாலும், பவர் கொடுத்தவர் அந்த பணத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்; உங்கள் அதிகாரம் பெற்ற ஏஜெண்டிடம்தானே நான் பணம் கொடுத்தேன்; நீங்கள்தானே அவரை இந்த வேலைக்கு நியமித்தீர்கள்; அப்படி இருக்கும்போது, இப்போது, அந்த ஏஜெண்ட் ஏமாற்றுக்காரன் என்று எனக்குத் தெரியவில்லை என்று சொல்ல உங்களுக்கு உரிமையில்லை; ஏஜென்சி சட்டப்படி, ஒரு ஏஜெண்டை நியமித்து விட்டால், அவரை நீக்கும்வரை, அந்த ஏஜெண்ட் செய்த எல்லா வேலைகளும், பவர் கொடுத்தவரை கட்டுப்படுத்திவிடும்; இதுதான் ஏஜென்சி சட்டவிதி;
contd...4

பொது அதிகாரப் பத்திரம்-2

பொது அதிகாரப் பத்திரம்-2
பொது அதிகாரப் பத்திரம் என்னும் ஜெனரல் பவர் பத்திரத்தில், ஒரு வேலைக்குப் பதிலாக, பல வேலைகளோ அல்லது அந்த ஒரு வேலையைத் தொடர்புடைய பல தொடர் வேலைகளையோ செய்யவதற்காக எழுதிக் கொள்ளலாம்; உதாரணமாக ஒரு சொத்தை நிர்வகித்து வரவும், வரி செலுத்தி வரவும், அடமானம் வைத்துக் கொள்ளவும், அடமானப் பத்திரம் எழுதிக் கொடுக்கவும், கிரய விற்பனை செய்யவும், கிரயப் பத்திரம் எழுதிக் கொடுக்கவும், லீஸ் என்னும் வாடகைக்கு விடவும், கட்டிடம் கட்டவும், அப்ரூவல் வாங்கவும், வாடகை வசூல் செய்யவும், வாடகைதாரரை காலி செய்யவும், கோர்ட்டில் வழக்கு தொடரவும், வக்கீல் நியமித்துக் கொள்ளவும், இப்படி பல வேலைகளைக் குறிப்பிட்டு ஒரே பவர் பத்திரத்தில் எழுதிக் கொள்ளலாம்; அல்லது, கிரயம் செய்ய மட்டுமே பவர் பத்திரம் எழுதிக் கொள்ளலாம்; கிரய செய்து கொள்ள மட்டும் என்று எழுதி இருந்தாலும், அது ஒரே ஒரு வேலை என்று சட்டம் கருதவில்லை; அதை பல வேலைகள் கொண்டதாகவே சட்டம் கருதுகிறது; அதாவது, கிரயப் பத்திரத்தை எழுதிக் கொடுப்பது ஒரு தனி வேலை; அதை ஒப்புக் கொண்டு பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து கொடுப்பது வேறு ஒரு தனி வேலை; சொத்தின் சுவாதீனத்தைக் கொடுப்பது தனி வேலை; இப்படி பல வேலைகள் இருப்பதால், அதை பொது அதிகாரப் பத்திரம் அல்லது ஜெனரல் பவர் பத்திரம் என்ற வகையில்தான் எழுதிக் கொடுக்க முடியும்;
பொது அதிகாரப் பத்திரத்தை ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதிக் கொள்ள வேண்டும்; பல வேலைகள் அதில் இருந்தாலும், அதையும் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; நோட்டரி வக்கீல் சான்று பெற்றுக் கொண்டாலே போதும்; ஆனால், அசையாச் சொத்தினை விற்பனை செய்வதற்காக எழுதிக் கொள்ளும் பொது அதிகாரப் பத்திரமாக இருந்தால் மட்டும் அதைக் கண்டிப்பாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது;
பொதுவாக ஒரு பொது அதிகாரப் பத்திரத்தில் ஒரே ஒரு ஏஜெண்டை மட்டும் நியமிப்பது பொதுவான பழக்கம்; ஆனால் அதற்கு மேலும் ஏஜெண்டுகளை நியமித்துக் கொள்ள தடை ஏதும் இல்லை; ரூ.100 முத்திரை தாளில் எழுதிக் கொள்ளும் பொது பவர் பத்திரத்தில் மிக அதிகபட்சமாக ஐந்து ஏஜெண்டுகளை ஒரே நேரத்தில் நியமித்துக் கொள்ளலாம்; அதற்கு மேல் ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும் என்றால் ரூ.175 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதிக் கொள்ள வேண்டும்;

 Contd...3

பவர் ஆப் அட்டார்னி-1

பவர் ஆப் அட்டார்னி-1
 தன் வேலையை வேறு ஒருவரைக் கொண்டு செய்வது; பவர் ஆப் அட்டார்னி என்பது அதிகாரப் பத்திரம்; தனக்கு ஒரு ஏஜெண்டை வைத்து, அந்த வேலையைச் செய்து கொள்வது; தனக்கு வேறு வேலை இருந்தாலும், அல்லது தன்னால் அந்த வேலைக்காக தனியே அலைய முடியாதபோது, இப்படி ஏஜெண்ட் மூலம் அந்த வேலைச் செய்து கொள்வதே பவர் ஆப் அட்டார்னி;
தனக்கு நம்பிக்கையான ஆட்களைக் கொண்டு தன் வேலையை இந்த பவர் ஆப் அட்டார்னி பத்திரம் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்; ஆனால், இப்போது இது வியாபார ரீதியில் போய் விட்டது; வயதானவர், தன்னால் அலைய முடியாது என்பதற்காக, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு, (மகனுக்கு, மகளுக்கு, மனைவிக்கு, கணவருக்கு) பவர் பத்திரம் எழுதிக் கொடுத்து அந்த வேலையைச் செய்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த பவர் பத்திர முறையை பிரிட்டீசார் ஏற்படுத்தி இருந்தனர்;
பவர் பத்திரங்களில் இரண்டு வகை உண்டு; ஒன்று – ஸ்பெஷல் பவர் பத்திரம்; மற்றொன்று – பொது பவர் பத்திரம்; ஸ்பெஷல் பவர் பத்திரம் என்பது ஓரே ஒரு வேலையை மட்டும் செய்வதற்காக கொடுக்கும் பவர் பத்திரம்; பொதுப் பவர் பத்திரம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வேலையை செய்வதற்கு கொடுக்கும் பவர் பத்திரம்;
கோர்ட்டில் ஒரு வழக்கு போடவேண்டும் என்றால், அதற்காக கொடுக்கும் பவர் பத்திரம் ஸ்பெஷல் பவர் பத்திரம்; ஏன் என்றால், அது அந்த வழக்கை மட்டும் நடத்துவதற்காக ஒரே ஒரு வேலைக்காக கொடுக்கும் பவர் ஆகும்; அந்த வழக்கு தொடர்பாக உள்ள தொடர் வேலைகளைச் செய்தாலும், அது ஓரே ஒரு வேலை என்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது; இப்படியான ஸ்பெஷல் பவர் பத்திரத்தை ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாளில் எழுதிக் கொள்ளலாம்; அதை நோட்டரி வக்கீல் மூலம் சான்று பெற்றுக் கொண்டால் போதுமானது; அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; அத்தகைய ஸ்பெஷல் பவர் பத்திரத்தின் அதிகாரத்தைக் கொண்டு, வழக்கறிஞரை நியமித்து, ஏஜெண்டாகவே வக்காலத்து கையெழுத்துச் செய்து கொள்ளலாம்; வழக்குக்குத் தேவைப்படும் வழக்குறைகள், பதில் மனுக்கள், அப்பீல், மற்றும் அது தொடர்பான எல்லா வேலைகளையும் அந்த ஸ்பெஷல் பவர் பத்திரத்தைக் கொண்டே செய்து கொள்ளலாம்;

 contd...2

Tuesday, May 24, 2016

கணவரின் சொத்தில் மனைவியின் பங்கு

பழைய இந்து சட்டப்படி, ஒரு இந்து, அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அந்த சொத்தில் அவரின் மனைவிக்கு பங்கு ஏதும் இல்லை என்ற நிலை இருந்தது. இறந்தவரின் ஆண் வாரிசுகள் மட்டுமே, பூர்வீக சொத்து என்ற நிலையில் அந்த சொத்தை பங்குபோட்டுக் கொள்வார்கள். இறத்தவருக்கு மகள் இருந்தாலும், அவருக்கு எந்தப் பங்கும் கிடைக்காது. அவர் வேறு வீட்டுக்கு திருமணம் ஆகிப் போனவர் என்று கருதி, சொத்தில் பங்கு கொடுக்க மாட்டார்கள். அந்த பெண், திருமணம் ஆகாமல், பிறந்த வீட்டிலேயே இருந்து வந்தால், அவரின் திருமணச் செலவை, அவரின் தகப்பனாரோ, அவர் உயிருடன் இல்லை என்றால், அவரின் மகன்களோ (அந்தப் பெண்ணின் சகோதரன்களோ) நடத்தி வைக்கவேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது.
இறந்தவரின் மனைவி நிலையும் அதுவே; அவர் உயிருடன் இருக்கும்வரை அவரின் மகன்கள் அவரை பராமரித்து வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிலை 1937ல் மாறிவிட்டது. அப்போது கணவர் சொத்தில் பெண்களின் உரிமை என்ற சட்டம் வந்தது. அதன்படி, கணவர் இறந்து விட்டால், அவருக்கும் அவரின் மகன்களுக்கும் சொத்தைப் பிரித்துக் கொள்வதுபோல நினைத்துக் கொள்ள வேண்டுமாம். அதாவது, இறந்த தகப்பனும், உயிருடன் இருக்கும் மகன்களும் பங்கு பிரித்துக் கொள்வார்கள். இறந்த தகப்பன், உயிருடன் இருக்கும் கடைசி மூச்சு நேரத்தில் இந்த பாகப் பிரிவினை நடப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டுமாம். 

அவ்வாறு நடக்கும் கற்பனை பாகப் பிரிவினையில், இறந்தவருக்கு ஒரு பங்கும், ஒவ்வொரு மகனுக்கு ஒவ்வொரு பங்கும் கிடைக்கும். இறந்த தகப்பன், அவர் இறப்பதற்கு ஒரு நிமிடம் முன்னர் கிடைத்த (கற்பனையாக நடந்த பாகப் பிரிவினையில் கிடைத்த) தன் ஒரு பங்கை விட்டுவிட்டு அடுத்த நொடி அவர் இறந்துவிடுகிறார் எனச் சட்டம் கருதுகிறது. அந்த பங்குதான், அவரின் மனைவியான விதவையின் பங்காக கிடைக்கிறது. அவ்வாறு மனைவிக்கு ஒரு பங்கு கிடைத்தாலும், அந்த விதவை மனைவி, அந்தப் பங்கை அனுபவிக்கலாமே தவிர, அவர் அதை விற்க முடியாது என்று சட்டம் சொல்கிறது. ஒருவேளை, அவருக்கு பணத் தேவை ஏற்பட்டு அந்த பங்கு சொத்தை விற்பனை செய்தாலும், அந்தக் கிரயமானது, அவர் உயிருடன் இருக்கும்வரைதான் அது செல்லுபடியாகும். அவர் இறந்தவுடன், அந்தக் கிரயம் செல்லாதது ஆகி, அவரின் வாரிசுகளுக்கே அந்த சொத்து திரும்ப வந்துவிடும். இவ்வாறு “திரும்ப வருவதை” ரிவர்ஷன் ரூல் என்றும் ரிவர்ஷனரி உரிமை” என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது.
இத்தகைய ஒரு இறுக்கமான சட்டம்தான் பெண்களுக்கு அன்றைய நாளில் இருந்து வந்தது. இதை மாற்ற நினைத்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர், 1956ல் இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது இந்த மாதிரியான விதவை மனைவிகளின் சொத்துரிமையை மாற்றியாது. அதாவது, இந்த சட்டம் 1956ல் வரும் நாளில் இருந்து, விதவை மனைவிக்கு கிடைக்கும் பங்கு “ஆயுட்கால உரிமை மட்டும்” என்று இல்லாமல், “முழுஉரிமையான சொத்து” என்று தானே மாறிவிடும். அத்தகைய மனைவி இப்படி அவருக்கு கணவரின் பங்காக சொத்தை சொத்தை, அந்த மனைவி, தன் சொத்தாகவே முழு உரிமையுடன் அனுபவித்துக் கொள்ளலாம், விற்றுக் கொள்ளலாம். அது ரிவர்ஷன் ரூல் படி திரும்பவும் அவரின் வாரிசுகளுக்குப் போய்ச் சேராது என்று அந்த சட்டம் தெளிவு படுத்தி உள்ளது.

ஆனாலும் அதிலும் ஒரு சிறு குழப்பம் ஏற்படுகிறது. ஒரு பத்திரம் மூலம் ஒரு பெண்ணுக்கு அவரின் ஆயுட்காலம் வரை அனுபவித்து வரும் உரிமையைக் கொடுத்த எழுதிய பத்திரமும் இவ்வாறே முழு உரிமையுடன் அவரைச் சேர்ந்துவிடுமா என்ற கேள்வி எழுகிறது. அப்படி முழு உரிமை போய்ச் சேராது என்கிறது அந்தச் சட்டம்.
அதாவது, கணவரின் சொத்தில் மனைவிக்கு ஜீவனாம்ச உரிமை உண்டு என்பது பொதுவான இந்து சட்டம். மனைவி உயிருடன் இருக்கும்வரை அவளின் கணவன் அவளை காப்பாற்ற வேண்டும். கணவன் இறந்துவிட்டால், கோபார்சனர்கள் என்னும் மகன்கள் காப்பாற்ற வேண்டும்.
எனவே, இறந்த கணவரின் சொத்தில் அவளின் ஜீவனாம்சத்துக்காக கிடைத்த பங்குதான் அவள் ஆயுட்காலம் வரை அனுபவித்து வரலாம் என்று 1937 சட்டம் சொல்லி இருக்கிறது. எனவே 1956 ல் புதிய சட்டம் வரும்போது, இப்படியான ஜீவனாம்ச உரிமை உள்ள மனைவியின் (பெண்களின்) சொத்தில் முழு உரிமை அடைந்து கொள்ளலாம் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, யாராவது ஒருவர், அவரின் சொத்தை ஒரு பெண்ணுக்கு ஆயுட்காலம் வரை அனுபவித்து வரட்டும் என்ற உரிமையுடன் எழுதிக் கொடுத்த தானம், செட்டில்மெண்ட், உயில் பத்திரங்கள் அப்படியே செல்லும் என்றும், அதில் அந்த பெண்கள் “எங்களுக்கு முழு உரிமை உண்டு” என்று உரிமை ஏதும் கோர முடியாது என்றும் அந்த சட்டம் விளக்கி உள்ளது.
Sec.14 Property of a female Hindu to her absolute property:
(1)         Any property possessed by a female Hindu, shall be held by her as full owner thereof and not as a limited owner.
(Property includes both movable and immovable acquired by a female Hindu by inheritance or device, or at a partition, or in lieu of maintenance etc. and also any such property held by her as ‘Stridhana’ immediately before the commencement of this Act.)
(2)   Nothing contained in sub-section (1) shall apply to any property acquired by way of gift or under a will or any other instrument or under a decree, where the terms of the gift, etc prescribe a restricted estate in such property.
**


Fraudulent Transfers

Fraudulent Transfers
கடன் கொடுத்தவர்களை ஏமாற்றுவதற்காக சொத்தை விற்றதுபோல கடன் வாங்கியவர் பத்திரத்தை ஏற்படுத்திக் கொள்வதை Fraudulent transfer என்று சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882ல் பிரிவு 53ல் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறு கடன் கொடுத்தவரை ஏமாற்றி, கடன் வாங்கியவர் அவரின் சொத்தை வேறு பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்ட பத்திரம் செல்லாது என்றும், அந்த ஏமாற்றும் பத்திரத்தை, கடன் கொடுத்தவர் ரத்து செய்ய கோர்ட்டை நாடலாம் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.
ஆனாலும், அந்த சொத்தை வாங்கியவர் ஒரு உண்மையான நபராக இருந்து, உண்மையில் பணம் கொடுத்து  அந்த சொத்தை வாங்கி இருந்தால், அந்தப் பத்திரத்தை மேற்சொன்னபடி ரத்து செய்ய முடியாது என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது.
எனவே, கடன் வாங்கியவர், அவரின் சொத்தை, பணம் பெற்றுக் கொள்ளாமல் வேறு யார் பெயருக்காவது மாற்றி பத்திரம் எழுதி இருந்தால், அந்த பத்திரத்தை, கடன் கொடுத்தவர் ரத்து செய்து கொள்ளலாம்.
உண்மையில் பணம் கொடுத்து அந்த சொத்தை, அந்த கடன் வாங்கியவரிடமிருந்து ஒருவர் கிரயம் வாங்கி இருந்தால், அந்த கிரயம் செல்லும்.
கடன் வாங்கியவர், அவ்வாறு கடன் கொடுத்தவரை ஏமாற்ற நினைத்து, வேறு ஒரு நபருக்கு விற்றதுபோல (பணம் வாங்கிக் கொள்ளாமல்) எழுதிக் கொண்ட பத்திரத்தை, கடன் கொடுத்தவர் நினைத்தால் ரத்து செய்து கொள்ளலாம்.
கடன் கொடுத்தவர்களில் ஒருவர் அவ்வாறு அந்த ஏமாற்று கிரயப் பத்திரத்தை ரத்து செய்ய தாக்கல் செய்யும் வழக்கில், மற்ற கடன் கொடுத்தவர்களும் சேர்ந்து கொள்ளலாம், ஒவ்வொருவரும் தனித்தனியே வழக்கு போடத் தேவையில்லை என்றும் அந்தச் சட்டம் தெளிவுபடுத்தி உள்ளது.
1939ல் தீர்ப்பான ஒரு வழக்கு இது:
வெள்ளையாக் கோனார் <எதிர்> ராமசாமிக் கோனார் மற்றும் ஒருவர் (1939) 2 MLJ 400.
வாதி, 2-ம் பிரதிவாதிக்கு புரோ நோட்டில் கடன் கொடுத்திருக்கிறார். அவர் மீது வழக்குப் போட்டு டிகிரியும் வாங்கி உள்ளார். ஆச்சரியம் என்னவென்றால், 1924 ஆகஸ்டு 2ல் வழக்கு போட்டார். 1924 நவம்பர் 12ல் தீர்ப்பு வந்துவிட்டது. மூன்றே மாதத்தில் தீர்ப்பு என்பது ஆச்சரியம்தான்!
அதில் கடன் வாங்கிய 2-ம் பிரதிவாதி, அந்த டிகிரிக்கு கட்ட வேண்டிய கடன் பணத்தை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அவரின் மச்சானுக்கு (1-ம் பிரதிவாதிக்கு) ஒரு கிரயபத்திரம் எழுதிக் கொடுத்து, அவரின் சொத்தை விற்றுவிட்டதாக சொல்கிறார். சொத்து இருந்தால்தானே கோர்ட் அதை ஜப்தி செய்ய முடியும். அதை விற்றதுபோல பத்திரம் எழுதிவிட்டால், இந்த கோர்ட் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறார். இதைத்தான், சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 பிரிவு 53ல் Fraudulent transfer ஏமாற்றும் நோக்கில் எழுதிக் கொண்ட பத்திரம் என்று சட்டம் சொல்கிறது.
எனவே கடன் கொடுத்தவர் (வாதி) இந்த ஏமாற்றுக் கிரயம் செல்லாது என்றும், அவரின் கடனுக்கு அந்த சொத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கை தாக்கல் செய்தார். வாதி, அந்த வழக்கில், “அந்த ஏமாற்றுக் கிரயம் செல்லாது” என்று கேட்கிறார். ஆனால் “அந்த கிரயம் என்னைக் (வாதியைக்) கட்டுப்படுத்தாது” என்று டிக்ளரேஷன்தான் கேட்க முடியும் என்றும் கேன்சலேஷன் கேட்க முடியாது என்றும் தீர்ப்பு சொல்லி உள்ளது.
வெங்கடகிருஷ்னையா எதிர் அலிசாகிப், AIR 1938 Mad 921  என்ற வழக்கில், ஒரு மைனரின் சொத்தை, அவரின் கார்டியன், அந்த மைனருக்காக கார்டியன் என கையெழுத்துச் செய்து விற்றுவிடுகிறார். அந்த மைனர், மேஜர் வயதை அடைந்தவுடன், அந்தக் கிரயத்தை ரத்து செய்ய நினைக்கிறார். இங்கு, அந்த சொத்தின் சுவாதீனம் இந்த மைனரிடம் இல்லை. எனவே சொத்தின் சுவாதீனத்தை கேட்பதற்கு முன், அவர் இந்த கிரயப் பத்திரத்தை ரத்து செய்ய (கேன்சல் செய்ய) வழக்கு போட வேண்டும். பத்திரத்தை ரத்து செய்யாமல், சொத்தின் சுவாதீனத்தை கேட்க முடியாது.
அவ்வாறு இருக்கும்போது, மேற்சொன்ன வெள்ளையாக் கோனார் வழக்கில், ஏமாற்றுக் கிரயப் பத்திரத்தை மொத்தமாகவே ரத்து செய்து விட முடியாது என்கிறது கோர்ட். காரணம்: உதாரணமாக, கடன் ரூ.10,000 மட்டுமே உள்ளது. சொத்தை ரூ.50,000க்கு விற்று விட்டார். பத்தாயிரம் கடனுக்கு ஐம்பதாயிரம் சொத்தின் பத்திரத்தை ரத்து செய்து விட்டால் நிலைமை என்னவாகும்? எனவே அவரின் கடன் தொகை வரைக்கும் அந்த பத்திரம் செல்லுபடியாகாது என்றுதானே வழக்கு போடமுடியும் என்று அந்த கோர்ட் கேள்வி கேட்டிருக்கிறது. ஒருவேளை கடன் தொகையானது, சொத்தின் கிரயத் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அந்த ஏமாற்றுப் பத்திரம் முழுவதையும் ரத்து செய்யலாம்.
What the creditors therefore seek is not the cancellation of the sale, but a declaration that it is not valid so far as their claims are concerned.
எனவே கிரயத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு போடக்கூடாது; அதற்குப்பதிலாக கடன் தொகையைப் பொறுத்தவரை அந்த கிரயம் கட்டுப்படுத்தாது என்று டிக்ளரேஷன் வழக்குத் தான் போடமுடியும் என கோர்ட் சொல்லிவிட்டது.
**
Fraudulent Transfers:
Sec.53 of the Transfer of property Act 1882
(1)         Every transfer of immoveable property made with intent to defeat or delay the creditors of the transferor shall be voidable at the option of any creditor so defeated or delayed.
Nothing in this sub-section shall impair the rights of a transferee in good faith and for consideration.
Nothing in this sub-section shall affect any law for the time being in force relating to insolvency.
A suit instituted by a creditor (which term includes a decree-holder whether he has or has not applied for execution of his decree) to avoid a transfer on the ground that it has been made with intent to defeat or delay the creditors of the transferor shall be instituted on behalf of, or for the benefit of, all the creditors.
(2)        Every transfer of immoveable property made without consideration with intent to defraud a subsequent transferee shall be voidable at the option of such transferee.
For the purpose of this sub-section, no transfer made without consideration shall be deemed to have been made with intent to defraud by reason only that a subsequent transfer for consideration was made.


Tuesday, May 17, 2016

சுடீசியல் ஆக்டிவிசம் Judicial Activism-(1)

(1) சுடீசியல் ஆக்டிவிசம் Judicial Activism
அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தில் ஆர்ட்டிகள் 3ன்படி, அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நியமிக்கப்பட்டுள்ளது. மற்ற பெடரல் கோர்ட்டுகளை, காங்கிரஸ் சபை நியமித்துக் கொள்ளும் அதிகாரத்தை கொடுத்துள்ளது.
Article III of US Constitution
It establishes the judicial branch of the federal govt.
The judicial branch comprises the SC of US and lower courts as created by Congress.
It sanctions the establishment of only one SC, but does not set the number of justices.
இப்போது யுஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தலைமை நீதிபதியும் எட்டு துணை நீதிபதிகளும் உள்ளனர். மொத்தம் 9 பேர்கள் மட்டுமே. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மட்டுமே அதன் அரசியல் சாசனத்தால் ஏற்படுத்தப்பட்டது. மற்ற சர்க்யூட் கோர்ட் நீதிபதிகள் உட்பட மாவட்ட நீதிபதிகளாக இருப்பவர்களை காங்கிரஸ் சபையே நியமிக்கும் அதிகாரம் கொண்டது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட், ஒரிஜினல் அதிகாரமும், அப்பீல் அதிகாரமும் உடையது. ஒரிஜினல் அதிகாரம் என்பது யுஎஸ் க்கும் மற்ற மாநிலங்களுக்கும், மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பது. அப்பீலேட் அதிகாரம் என்பது சர்க்யூட் கோர்ட் தீர்ப்பின் மீதும், மாநில சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மீதும் அப்பீல் அதிகாரம் கொண்டது.
Judiciary Act 1789: ஜூடிசரி ஆக்ட் 1789 என்பது முதல் காங்கிரஸ் சபையால் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஒரு தலைமை நீதிபதியும், 5 துணை நீதிபதிகளும் ஏற்படுத்தியது. இதன்படி 11 மாநிலங்களில் இயங்கும்படி, மொத்தம் 13 மாவட்ட சர்க்யூட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
மர்பரி வழக்கில், Marbury v. Madison 1893 (5 US 137) Congress cannot pass laws that are contrary to the Constitution என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
வில்லியம் மர்பரி என்பவர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். அவருடன் மிக அதிகமாக மாவட்ட நீதிபதிகளையும் நியமிக்கிறார்கள். அப்போது ஜான் ஆடம்ஸ் ஜனாதிபதியாக பதவியில் இருக்கிறார். அவர் பதவிக் காலம் முடியப் போகிறது. தேர்தல் நடந்து, புதிய ஜனாதிபதியாக தாமஸ் ஜெப்பர்சன் வந்துள்ளார்; ஆனால் அவர் பதவி ஏற்கவில்லை. காங்கிரஸ் சபை கலையாமல் இருப்பதால் பழைய ஜனாதிபதியே மேலும் புதிய 16 சர்க்யூட் கோர்ட் நீதிபதிகளையும், புதிய 42 மாவட்ட நீதிபதிகளையும் நியமித்து உத்தரவு பிறப்பித்துவிட்டார். இதை அப்போது “மிட்நைட் நீதிபதிகள்” Midnight Judges என்று வேடிக்கையாகவும் கூறினர். ஆனால், அப்படி அவரசரமாக அனுப்பி வைக்கப்பட்டமாவட்ட நீதிபதி நியமன உத்தரவானது மர்பரிக்கு கிடைக்கவில்லை. அதற்குள் புதிய ஜனாதிபதியும் அவரின் புதிய செக்ரட்டரியாக மேடிசனும் பதவிக்கு வந்துவிட்டார்கள். அந்த மாவட்ட நீதிபதியின் நியமன ஆணையை அனுப்பாமல் நிறுத்தி வைக்கிறார். அதை தனக்கு அனுப்பும்படி மர்பரி கடிதம் எழுதுகிறார். முடியாது எனப் பதில் வருகிறது. அப்போது யுஎஸ் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஜான் மார்ஷல் இருக்கிறார்.
ஜனாதிபதி பதவி காலம் முடியும் தருவாயில், வெளியேறும் ஜனாதிபதியான ஜான் ஆடம்ஸ், புதிய ஜூடிசரி ஆக்ட் 1801ஐ கொண்டு வந்து அதன்படி 10 புதிய மாவட்ட கோர்ட்டுகளை உருவாக்கி, அதற்கு மாவட்ட நீதிபதிகளை நியமித்துவிட தீர்மானித்து  இந்த சட்டத்தை இயற்றி, நீதிபதிகளையும் நியமித்து உத்தரவு போட்டு விட்டார். அதன்படி பல நீதிபதிகள் பதவிப் பிரமாணனமும் எடுத்து விட்டனர். ஆர்டர் கிடைக்காமல் தவித்தவரே இந்த வழக்கில் உள்ள மர்பரி. நீதிபதி ஆக முடிவில்லை.
புதிய ஜனாதிபதி தாமஸ் ஜெப்பர்சன் பதவி ஏற்றவுடன், அந்த அனுப்பாத ஆணைகளை நிறுத்திவிடும்படி உத்தரவு போட்டுவிட்டார். புதிய காங்கிரஸ் சபை கூடுகிறது. அது அந்த ஜூடிசரி ஆக்ட் 1801 சட்டத்தை செல்லாது என தீர்மானம் நிறைவேற்றுகிறது.
இதற்கிடையில், பழைய ஜனாதிபதி அதிகாரத்தில் உள்ளபோதே கையெழுத்துச் செய்த உத்தரவை தனக்கு அனுப்பும்படி, மர்பரி, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேன்டமஸ் வழக்கு தொடுக்கிறார்.
இப்போது அந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒரு கேள்வியை வைக்கிறது. Does the Supreme Court have the authority to review acts of Congress? Can Congress expand the scope of the SC’s original jurisdiction beyond what is specified in Article III of the Constitution?
காங்கிரஸ் சபை (சட்டசபை/பார்லிமெண்ட்) கொண்டு வந்த ஒரு சட்டத்தை சரி அல்லது சரியில்லை என சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய அதிகாரம் உண்டா? அரசியல் அமைப்பு சட்டத்துக்கு மீறி காங்கிரஸ் சபை ஒரு சட்டத்தைக் கொண்டுவர முடியுமா?
தீர்ப்பு: ஆம், 1789 ஜூடிசியல் சட்டப்படி, சுப்ரீம் கோர்ட்டுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளது. மர்பரியை நீதிபதியாக நியமித்த பழைய ஜனாதிபதியின் உத்தரவு செல்லும். அவர் கையெழுத்துப் போட்ட நேரத்திலிருந்து அது அமலுக்கு வருகிறது. அதை மாற்றி அமைக்க முடியாது. அரசு முத்திரையுடன் உத்தரவு போட்டபின்னர், அதை அமல் படுத்தாமல் இருப்பதால், அதனால் பாதிக்கப்பட்டவர் சுப்ரீம் கோர்ட்டை அணுக முடியும். அவருடைய உரிமை மறுக்கப்பட்டதாகவே இதை கருத வேண்டும். அடுத்து வந்த காங்கிரஸ் சபை அதை மறுத்து சட்டம் இயற்ற முடியாது. அப்படி காங்கிரஸ் சபை, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரான போக்கை எடுத்தால், அதை கேள்வி கேட்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு. அரசியல் சாசன சட்டமே தலைமையானது. காங்கிரஸ் இயற்றும் சட்டங்கள் அதற்கு கீழ்படிந்ததே. அவை ஒருநாளும் அரசியல் சாசன சட்டத்தின் நோக்கத்தை குறைக்க முடியாது.
ஆனாலும், அந்த ஜூடிசியல் சட்டமான 1789 சட்டம்தான் இத்தகைய அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொடுத்துள்ளது. அந்த 1789 சட்டமே, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்பதால், அதைக் கொண்டு மர்பரி கேட்கும் மேன்டமஸ் ரிட் வழங்க முடியாது. எனவே மர்பரி வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கி விட்டது.
இதனால், தெரிய வருவது என்னவென்றால், அரசியல் சாசனத்துக்கு எதிரான எந்த சட்டத்தையும் காங்கிரஸ் சபை /பார்லிமெண்ட் இயற்ற முடியாது. அவ்வாறு இயற்றினாலும் அதை செல்லாது என சொல்லும் அல்லது அதை வியாக்கியானம் செய்து நீக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ளது என்று தெளிவான தீர்ப்பை கொடுத்துள்ளது.
தொடரும்...