Friday, June 26, 2015

கருப்பன் செட்டியார் வழக்கு

கருப்பன் செட்டியார் வழக்கு; 
Commissioner of Income Tax Vs P.L. Karuppan Chettiar, 1993 Supp (1) SCC 580. மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச் வழங்கிய உச்சநீதிமன்ற வழக்கு இது.
இது மிகப்பிரபலமான வழக்காகும்.

பழனியப்ப செட்டியாருக்கு ஒரு மனைவி, கருப்பன் செட்டியார் என்ற ஒரு மகன், ஒரு மருமகள் இவர்களைக் கொண்ட கூட்டு இந்து குடும்பம். பழனியப்ப செட்டியார் தன் சொத்துக்களை பாகப்பிரிவினை மூலம் 1954ல் பாகம் பிரித்துக் கொண்டார். அதில் சில சொத்துக்களை பழனியப்ப செட்டியார் தனக்கு என்று தனியே ஒதுக்கிக் கொண்டார். அதேபால் தன் மகன் கருப்பன் செட்டியாருக்கும் பங்கு கொடுத்துவிட்டார்.  கருப்பன் செட்டியார் இப்போது தன் மகன்களுடன் கூட்டு குடும்பம் நடத்தி வருகிறார். பாகம் பிரிந்து தனி சொத்துக்கள் ஆகிவிட்டதை இருவருமே வருமானவரித்துறைக்கு சொல்லிவிட்டார்கள். பின்னர், தகப்பனார் பழனியப்ப செட்டியார் இறந்துவிடுகிறார். அவரின் சொத்து அவரின் மகன் கருப்பன் செட்டியாருக்கு வருகிறது.

இப்போது சட்டப்பிரச்சனையும் ஆரம்பமாகிறது. "தகப்பனாரின் சொத்து மகன் கருப்பன் செட்டியாருக்கு கிடைத்துள்ளது. இந்த சொத்து கருப்பன் செட்டியாரின் தனிச் சொத்தா? அல்லது கருப்பன் செட்டியாரின் கூட்டுகுடும்பச் சொத்தா?
இறந்த பழனியப்ப செட்டியாரின் சொத்தில் அவரின் மகன் கருப்பன் செட்டியாருக்கு மட்டுமே பங்கு உள்ளதா? அல்லது கருப்பன் செட்டியாரின் மகனுக்கும் (அதாவது பழனியப்ப செட்டியாரின் பேரன்களுக்கும்) பங்கு வருமா? இந்த சட்டப் பிரச்சனைதான் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. 

ஆனால், வருமானவரித்துறை என்ன சொல்கிறது என்றால், தகப்பனார் பழனியப்ப செட்டியார் இறந்துவிட்டதால், மகன் கருப்பன் செட்டியாரின் தனிச் சொத்து ஆகுமா? அல்லது கருப்பன் சொட்டியாருக்கும் அவரின் மகன்களுக்கும், கூட்டு சொத்து ஆகுமா? இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், பழனியப்ப செட்டியாரின் தனிச் சொத்தில் பங்கு அவரின் மகன் கருப்பன் செட்டியாருக்கு மட்டுமா? அல்லது அவரின் பேரன்களுக்கும் (கருப்பன் செட்டியாரின் மகன்கள்) பங்கு  உண்டா? (இறந்தவரின் சொத்தில் மகனுக்கு மட்டும் பங்கு உண்டா? பேரன்களுக்கும் பங்கு உண்டா?. என்பதே கேள்வி). 

பழனியப்ப செட்டியார் 1956க்கு பின்னரே இறக்கிறார். அதுவரை பழைய இந்து நடைமுறை சட்டமே அமலில் இருக்கிறது. இந்த பழைய இந்து சட்டப்படி ஒருவரின் சொத்தில் அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகியோர் பிறந்தவுடனேயே பிறப்பால் உரிமை பெறுவார்கள். அவரவர் பிறந்தவுடன் தானாகவே பங்குதாரர் ஆகிவிடுவார். (இது பழைய சட்டம்);

1956ல்: பின்னர் புதிய இந்து  வாரிசுரிமை சட்டம் 19560ல் கொண்டுவரப் படுகிறது. அதன்படி இறந்தவரின் சொத்தில் அவரின் மகன் மட்டுமே உரிமையாளர் ஆவார். பேரன், கொள்ளுப்பேரனுக்கு பங்கு கிடையாது என்று சட்டம் திருத்தப்படுகிறது. 

இந்த கருப்பன் செட்டியார் வழக்கில் இந்த பிரச்சனையைத்தான் கிளப்புகிறார்கள்.
புதிய இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, பிரிவு 8 என்பது ஒரு முக்கியமான பிரிவு ஆகும். இதில்தான், ஒரு இந்து ஆண் இறந்துவிட்டால் அவரின் சொத்தில் யார் யாருக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது,

இந்த சட்டம் வந்த 1956க்கு பின்னர் ஒரு இந்து ஆண் இறந்து விட்டால் (உயில் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால்), அவரின் சொத்து அவரின் வாரிசுகளான கீழ்கண்டவர்களுக்கு போய் சேரும். 
1) இறந்த ஆணின் தாயார், மனைவி, மகன்கள், மகள்கள் இவர்கள் தலைக்கு ஒரு பங்கு வீதம் சமமாக எடுத்துக் கொள்வார்கள்.
2) அவரின் மகன்களில் எந்த மகனாவது இறந்து போய் இருந்தால் அந்த இறந்த மகனின் மகன், மகள், இறந்தவரின் பங்கை பெறுவார். 
3) இறந்தவருக்கு பல மனைவிகள் இருந்தால் எல்லா மனைவிகளும் சேர்த்து ஒரு பங்கு பெறுவர்.(அந்தக் காலத்தில் பல மனைவிகள் சலுகை இந்து மதத்தில் உண்டு; 1955-ல் இந்து திருமணச் சட்டம் புதிதாக வந்தபின்னரே "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற கொள்கை சட்டமாக்கப்பட்டது. 

இப்போது, கருப்பன் செட்டியார் வழக்கில், அவரின் தகப்பனார் பழனியப்ப செட்டியார் விட்டுவிட்டு இறந்துபோன சொத்தில், அவரின் மகன் கருப்பன் செட்டியாருக்கு மட்டுமே மகன் என்ற முறையில் பங்கு கிடைக்கும் என்பது இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ன் பிரிவு 8-ம்படி கிடைக்கும். அதில் இறந்தவரின் பேரன் என்று எங்கும் தனியே குறிப்பிடவில்லை. ஒருவேளை இறந்தவரின் மகன், ஏற்கனவே இறந்து போயிருந்தால், அவரின் வாரிசாக அவர் மகன் பங்கு பெறுவார் என்று மட்டுமே அதில் சொல்லியுள்ளது. அதை நேரடியாக பேரன் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மிகத் தெளிவாக உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியும் விட்டது.

இந்த வழக்கு, அப்போது மிகப் பிரபலமான வழக்காக இருந்தது. இதைத்தான் எல்லா வக்கீல்களும், இந்தியாவில் உள்ள எல்லா கோர்ட்டுகளும் பின்பற்றியும் வருகின்றன; இதையே இன்றுவரை சரியான சட்டமாகவும் அங்கீகரித்தும் வருகின்றன.

அந்தளவுக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும். அதனால் இதற்கு பெயரே "கருப்பன் செட்டியார் வழக்கு" என்று குறிப்பிட்டு வந்தனர். 


Obstructed heritage தடையுடன் கூடிய சொத்துரிமை

Obstructed heritage (Saprati bandhadaya):
ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு சொத்து கிடைப்பதில் இரண்டு வகையில் கிடைக்கும். 1) Unobstructed heritage தடையில்லாத சொத்துரிமை; 2) Obstructed heritage தடையுடன் கூடிய சொத்துரிமை.

1) தடையில்லா சொத்துரிமை என்பது -- பூர்வீகச் சொத்துக்களில் தாத்தா, தகப்பன் இவர்களின் சொத்து அவர்களின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் தானாகவே வந்து சேரும். அதாவது பிறப்பால் சொத்துரிமை. ஒருவருக்கு மகன் பிறந்தால் அந்த மகன், தகப்பன் சொத்தில் தானாகவே உரிமையை அடைந்துவிடுவான். அதுபோல அந்த மகனுக்கு ஒரு மகன் பிறந்தால் (பேரன்) அவன் பிறந்தவுடன் அவனின் தாத்தா சொத்திலும், பிறப்பால் ஒரு பங்கு அவனுக்கும் உண்டு. இந்த சொத்துரிமையை எதுவும் தடை செய்யாது. பிறந்தவுடன் சொத்தில் உரிமை வந்துவிடும். எதுவும் தடை செய்யாமல் வரும் சொத்துக்கு பெயர் தடையில்லா சொத்துரிமை என்னும் Unobstructed heritage.

2) தடையுடன் கூடிய சொத்துரிமை - Obstructed heritage - இது பூர்வீகச் சொத்துப்போல தடையில்லாமல் வராது. ஒரு தடை இருக்கும். உதாரணமாக: ஒருவரின் தாயின் தகப்பனார்  (தாய்வழித்தாத்தா) ஒரு சொத்தை விட்டுவிட்டு இறந்தால், அந்த சொத்தில் அவரின் மகளுக்கு மட்டும் உரிமை வரும். அந்த மகளின் மகனுக்கு பிறப்பால் எந்த உரிமையும் வராது. ஆனால் அந்த பெண் (தாய்) இறந்துவிட்டால், அவருக்குச் சேரவேண்டிய பங்கு அவரின் மகனுக்கு வந்து சேரும். இங்கு அந்த தாய்வழித் தாத்தாவின் சொத்தில் அந்த பேரனுக்கு பிறப்பால் பங்கு கிடைக்கவில்லை; மாறாக அவனின் தாய் இறந்ததால் அந்த பங்கு அவனுக்கு வாரிசாக வருகிறது. நடுவில் ஒரு வாரிசு இருந்தால் பங்கு கிடைக்காது. அந்த வாரிசு இல்லாமல் போனால் பங்கு கிடைக்கும் சொத்துக்களை தடையுடன் கூடிய உரிமை Obstructed heritage எனலாம். 

பூர்வீகச் சொத்து

பூர்வீகச் சொத்து அல்லது மூதாதையர் சொத்து;
(என்.ஆர்.ராகவாச்சாரியாரின் ஹிந்து சட்ட கொள்கைகளும் முன்-தீர்ப்புகளும் என்ற புத்தகத்திலிருந்து):

ஒரு குடும்பத்தில் மகன் எப்போது பிறந்தான் என்பது முக்கியமில்லை; பாகத்தில் சொத்து தகப்பனுக்கு வந்ததற்குப்பின், அவருக்கு ஒரு மகன் பிறந்திருந்தாலும், அந்த சொத்து பாகம் வருவதற்கு முன்னரே அந்த மகன் பிறந்திருந்தாலும், (பாகத்துக்கு முன்னரோ பின்னரோ எப்போது பிறந்திருந்த மகனாக இருந்தாலும்) அந்த சொத்தில், அவரின் மகனுக்கும், பேரனுக்கும், கொள்ளுப்பேரனுக்கும் (அவரைத் தவிர்த்து மூன்று தலைமுறைக்கு) சொத்தில் சமமான பாக உரிமையுண்டு. இந்த மூன்று தலைமுறையில் யாரும் இல்லையென்றால் (முன்னரே இறந்துவிட்டிருந்தால்) அந்த சொத்தை அடைந்தவர் தனது "தனிச் சொத்தாகவே" முழு உரிமையுடன் அடைந்து கொள்வார். கொள்ளுப்பேரனின் மகன் இருந்தால் அவனுக்கு அந்த சொத்தில் உரிமை கிடையாது. அதாவது அவரைத் தவிர்த்து மூன்று தலைமுறைகளைத் தாண்டி உள்ளவர்களுக்கு "இது பூர்வீகச் சொத்து" என்று கேட்கும் உரிமையில்லை.. ஒருவர் மற்றும் அந்த ஒருவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகிய நான்கு தலைமுறைகள் அவரின் சொத்தை "பூர்வீகச் சொத்து" என்ற கணக்கில் சரி சம உரிமையுடன் அடைவார்கள். அதாவது அவர்கள் பிறப்பால் உரிமையை அடைவார்கள் என்பதே இதன் தத்துவம். 

ஒரு சொத்தை இவர்களுக்குள் பாகப் பிரிவினை மூலம் பங்கு பிரித்து பகிர்ந்து கொண்டாலும், அதை வைத்திருப்பவர், அவருடன் அவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுடன் அந்தச் சொத்தை "பூர்வீகச் சொத்து" என்றே கருதிக் கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் அனைவருக்கும் சரிசம பாகம் பிறப்பால் உண்டு. பாகம் பிரிந்து விட்டதால் மட்டும் அவர் தனி உரிமையை எடுத்துக் கொள்ள முடியாது. அது அவரின் தனிச் சொத்து ஆகாது. அப்போது அவருக்கு இருக்கும் மகன் பேரன் கொள்ளுப்பேரன் உட்பட இனி பிறக்கும் மகன், பேரன், கொள்ளுப்பேரன்களும் சரி சம உரிமை அடைவதே இந்த "பூர்வீகச் சொத்தின்" சிறப்பாகும்.

ஆனால், இவை எல்லாம் தலைகீழாக மாற்றி, 2005ல் புதிய இந்து வாரிசுரிமை சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் மகன், பேரன் கதையெல்லாம் நீக்கிவிட்டு, மகள், பேத்தி இவர்களும் மகன், பேரன் போலவே சரி சமமாக பங்கு பெறுவார்கள் என்று சமநிலைப்படுத்திவிட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்ற கோட்பாடு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தில் ஆண் பெண் என்ற வேறுபாடு காண்பிக்க கூடாது என்று உள்ள விதிப்படி இந்த சட்ட திருத்தம் ஏற்பட்டது. 

Thursday, June 18, 2015

மியூச்சுவல் உயில்: Mutual Will

மியூச்சுவல் உயில்: Mutual Will
இது ஒரு வித்தியாசமான உயில். உதாரணம் சொல்லித்தான் விளக்க முடியும்; கணவன் மனைவி இருவரும் தனித்தனியே சொத்து வைத்திருக்கிறார்கள்; இவரும் ஒருவருக்கு ஒருவர் உயில் எழுதி வைத்துவிட விரும்புகிறார்கள்; அதாவது கணவன் இறந்தால் கணவனின் சொத்து மனைவிக்கு போய் சேரும்; அதே உயிலில் மனைவியும் உயில் எழுதி, அதன்படி மனைவி இறந்தால் மனைவியின் சொத்து கணவனுக்குப் போய் சேரும் என்று ஒருவருக்கொருவர் உயில் எழுதி ஒரே உயில் பத்திரத்தில் எழுதி வைத்துக் கொள்வார்கள்.

இப்படி எழுதிக் கொள்வதில் பிரச்சனை ஒன்றும் இல்லை; ஆனால், அந்த மியூச்சுவல் உயிலில், அவர்கள் இருவரும் இறந்தபின்னர் இருவரின் சொத்தும் யாருக்குச் செல்லவேண்டும் என்று எழுதியிருந்தால், அப்போது ஒரு சட்ட சிக்கல் வந்துவிடும்.

உதாரணமாக, கணவன் முதலில் இறக்கிறார். உயில்படி கணவன் சொத்து மனைவிக்கு வந்துவிடுகிறது. கணவன் சொத்தையும் மனைவி தனது சொத்தையும் சேர்த்து அனுபவித்து வருகிறார். இப்போது, மனைவி ஏற்கனவே எழுதிவைத்த மியூச்சுவல் உயிலை, கணவன்தான் இல்லையே என்று ரத்து செய்ய முடியாது. இது கிட்டத்தட்ட ஏமாற்றுவதுபோல் ஆகும் என்று சட்டம் சொல்கிறது. மனைவி அப்படி அந்த உயிலை ரத்து செய்தால் அந்த ரத்து செல்லாது.


இரண்டு பேரும் உயிரோடு இருக்கும் காலத்தில் இருவருமே சேர்ந்து அந்த மியூச்சுவல் உயிலை ரத்து செய்து கொள்ளலாம்.

Monday, June 15, 2015

சுக்கிர தெசை


கதைகளில்தான், ஒரு சாதாரண பெண், திடீரென்று ராணி ஆவது நடக்கும். ஆனால் உண்மையில் சுவீடன் நாட்டில் இது நடந்துள்ளது.

சுவீடன் நாட்டின் இளவரசர் கால் பிலிப் Carl Philip.
இவர் அந்த நாட்டின் மன்னர் ஆவதற்குறிய வாய்ப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இளவரசர் ஆவார். இவர் திடீரென்று ஒரு 36 வயது மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்தப் பெண்ணோ, உடம்பில் மேல்பகுதியில் துணி இல்லாமல் மாடல் செய்யும் அழகி, மற்றும் யோகா கற்றுத்தரும் செய்முறையாளராகவும் இருக்கிறார்.

இளவரசருக்கு வேண்டியவர்கள் எல்லோரும், 'இந்த பெண்ணின் உறவு உங்களின் புகழைக் குறைக்கும்' என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்குப் பின்னரும் இவர் அவளையே மணக்க சம்மதித்து விட்டார்.

'எல்லா நாட்டு வாலிபருக்கும், பெண்ணைப் பார்த்தவுடன் புத்தி பேதலிக்கும்போல!'
அவள், ஒரே நாளில் இளவரசி ஆகிவிட்டாள்!!

திருமணம் முடிந்தவுடன் இருவரும் ஸ்டாக்ஹோம் நகரத்தின் தெருக்களில் குதிரை பூட்டிய சாரட்டில் ஊர்வலம் வந்தார்கள். 2010லிருந்தே அந்த பெண்ணின்மீது ஒரு கண்ணாய்தான் இருந்திருக்கிறார் இந்த இளவரச மணமகன்.

அந்த இளவரிசி மணமகளின் பெயர் ஹெல்குவிஸ்ட்.
நீங்கள் அரைகுறை ஆடையுடன் மேகஜின்களுக்கு மாடல் அழகியாக படம் கொடுத்துவிட்டு இப்போது இளவரசி ஆனதால் உங்கள் மனநிலை எப்படி உள்ளது என கேட்டதற்கு, "நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை; எல்லா அனுபவங்களுமே என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது" என்று கூலாக பதில் சொல்லியுள்ளார்.

கடவுள் நல்ல வாழ்வை கொடுக்கும்போது, பழையனவற்றை மறப்பதுதானே வாழ்வின் தத்துவம் என்று நினைக்கிறாள் போலும்!!!
**

போலிச் சான்றிதழ்?

போலிச் சான்றிதழ்?

டெல்லி யூனியன் பிரதேசத்தின் ஆம் ஆத்மி கட்சி  மாநில சட்ட அமைச்சராக இருந்தவர் டோமர் . இவரின் முழுப்பெயர் 'ஜீதேந்தர் சிங் டோமர்.'

இவர் படித்து வாங்கியதாகச் சொல்லும் படிப்புச் சான்றிதழ் போலி என்று டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று, டெல்லி மாஜிஸ்டிரேட், இவரை மேலும் 2 நாட்களுக்கு (திங்கட்கிழமைவரை) போலீஸ் காவலில் (கஸ்டடிக்குள்) வைத்து விசாரித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளார்.

அரசு வக்கீல் சொல்கிறார், "பிகாரில் பகல்பூரில் உள்ள 'தில்கா மஞ்சில் பல்கலைகழத்தின்ரெக்கார்டுகள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இதில் பல்கலைகழக அலுவலர்களும் சம்மந்தபட்டிருக்கக்கூடும் என்றும் சந்தேகம் இருப்பதாக சொல்கிறார். டோமர் ஏற்கனவே கொடுத்திருந்த பண்டல்கண்ட் பல்கலைகழகத்தின் மைக்ரேஷன் சான்றிதழும் போலி என்றும் கூறுகிறார்.

ஆர்டிஐ சட்டத்தின்படி கேள்வி கேட்டபோது, தில்கா மஞ்சில் பல்கலைக்கழகம் 'இது சரியான சான்றிதழ்தான்' என்று கொடுத்த பதிலும் போலி என்று கூறுகிறார் அந்த அரசுவக்கீல். ஆர்டிஐ பதிலே அந்த பல்கலைக்கழகம் கொடுக்கவில்லையாம்.
எனவே, மந்திரி டோமர் மீது, ஏமாற்றுதல், போலிஆவண மோசடி (forgery),கூட்டுசதி (conspiracy) ஆகிய பிரிவில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாம்.

ஆனால் இவரின் வக்கீல் சொல்வது, 'ஏற்கனவே எல்லா இடத்துக்கும் சென்று சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இனியும் போலீஸ் கஷ்டடி தேவையில்லை; உண்மையில் அவரை மிரட்டுவதற்கே போலீஸ் மேலும் அவகாசம் கேட்கிறது. விசாரனை செய்ய ஒன்றுமில்லை. வேறு யாருடைய தூண்டுதல் பேரிலேதான் காவல்துறை இந்த குற்றத்தை சுமத்துகிறது.

டோமரை விலக்கிவிட்டுவிட்டு மற்றொரு மந்திரியான கப்பீல் மிஸ்ராவை சட்ட அமைச்சராக்கி உள்ளது ஆம் ஆத்மி.

டோமரை கைது செய்வதற்கு சற்று முன்னர்தான் டோமருக்கே நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாம். இது தவறு என்கிறார்.

அரசு வக்கீல் சொல்கிறார், 'எல்லா வகையிலும் சாட்சியம் இருப்பதாலும், போலி சான்றிதழ் என கருதுவதாலும் அரெஸ்ட் செய்ததாக கூறுகிறார்.'

செசன்ஸ் கோர்ட்டில் இடைக்கால பெயில் கேட்டதற்கு செசன்ஸ் கோர்ட் மறுத்துவிட்டது. போதிய ஆவணங்கள் இன்னும் இந்த கோர்ட்டுக்கு வரவில்லை என்று காரணம் சொல்லியுள்ளது.
**
கோர்ட் சொல்கிறது, On this, the court observed that there were hundreds of records in a university regarding a student -- like admission register, fee slips, classroom records and teacher records.'
ஒரு மாணவன் படிக்க வேண்டும் என்றால், அவனைப் பற்றி அந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு ரெக்காடுகள் தானாகவே உருவாகி இருக்கும். இதைக் கொண்டே முடிவு செய்து கொள்ளலாம் என கோர்ட் சொல்கிறது.
**
ஒருவருடைய படிப்பு சான்றிதழை சரிபார்க்க இந்தியாவில் போதுமான வசதியும் இல்லை; இதனால்தான் போலி சான்றிதழ்கள் உருவாகின்றன. லாயம் சரியாக பூட்டப்பட்டிருந்தால், குதிரை எங்கும் ஓடிவிடாது. இதைச் செய்வதில், கல்வி நிறுவனங்களுக்கோ, பல்கலைகழகங்களுககோ, அரசுக்கோ என்ன சிரமம் இருக்கப் போகிறது. டாக்டர்கள் முதல் வக்கீல்கள் வரை பல போலிகள் உலவும் காலம் இது.

ஓட்டுபவன் சரியாக ஓட்டினால், வண்டி ஒழுங்கான பாதையில்தானே ஓடும்!

**

Wednesday, June 3, 2015

பாகப் பிரிவினை-10

பாகப் பிரிவினை-10
இந்து மத சொத்தின் பாகப்பிரிவினையில் இறந்தவரின் மனைவிக்கு பிள்ளைகளைப் போலவே (மகன்கள் மகள்களைப் போலவே) ஒரு பங்குதான் உண்டு; அதாவது மொத்த மூன்று பிள்ளைகள் இருந்தால், அந்த பிள்ளைகள் மூன்றுபேரும் அந்த தாயும் சேர்ந்து மொத்தம் நான்கு பேர்கள் ஆவார்கள். இந்த நான்கு பேர்களும் தலைக்கு ஒருபங்கு வீதம் நான்கில் ஒரு பங்கு பெறுவர். அதாவது தாய்க்கு ஒரு பங்கு; அதாவது இறந்த கணவரின் சொத்தில் அவர் மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு. ஒருவேளை, ஏழு பிள்ளைகள் இருந்தால், 7+1=8 பேர்கள். அதில் அந்த தாய்க்கு எட்டில் ஒரு பங்கு;
இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ல் இதுபோல சொல்லப்பட்டுள்ளது. ஆக, இந்து மதம் ஒருவரின் மனைவியை சிறப்பாக மதிக்காமல், பிள்ளைகளுடன் பங்கு பெற்றுக் கொள்ளட்டும் என பிள்ளைகளின் வரிசையில் நிற்க வைத்திருப்பது உண்மையில் கொடுமையே! கணவனின் சொத்தில் மனைவிக்கு ஒரு பெரும் பங்கை கொடுத்திருக்கலாம். செய்யவில்லை அந்தச் சட்டம்.
1956க்கு முன் இதுகூட இல்லை; 1956-க்கு முன்னர், இறந்தவரின் சொத்தில் மகள்களுக்கு பங்கே இல்லை. விதவை மனைவி மட்டும் மகன்களுடன் சேர்ந்து பங்கு பிரித்துக் கொள்ளும்போது, மகன்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் ஆகியோருடன், அவளின் கணவனுக்கும் (இறந்த கணவனுக்குத்தான்) ஒரு பங்கு ஒதுக்கி, அந்த கணவனின் பங்கை (அவர் இறந்ததால்) அவரின் விதவை மனைவி பெற்றுக் கொள்வார். அந்தப் பங்கைக்கூட அந்த விதவை மனைவி முழுஉரிமையுடன் அனுபவிக்க முடியாதாம். விதவையின் ஆயுட்காலம்வரை அதில் வரும் வருமானங்களை அடைந்து அனுபவித்து வந்து, (கிரயம் செய்ய உரிமையில்லை; அப்படியே கிரயம் செய்தாலும், விதவையின் ஆயுட்காலம்வரை தான் அந்தக் கிரயமும் செல்லும். அவரின் இறப்புக்குப்பின்னர், அந்த பங்கு மறுபடியும் மகன்களுக்கே சரிசமமாகப் போகும். பெண்களுக்கு சொத்தில் ஒருசிறு அளவு உரிமை கொடுப்பதற்கே வழியில்லாமல் இருந்தது;
பின்னர், சுதந்திரத்துக்குப் பின்னர், 1956ல் ஒரு புது சட்டம் வருகிறது; அது The Hindu Succession Act 1956 என்று பெயர்; அதில் பூர்வீகச் சொத்துக்களாக இருந்தால், அதில் பெண்களுக்கு ஒரு குழப்பமான சிறிய உரிமையை கொடுத்து விட்டு, மீதியை ஆண்களுக்கு கொடுத்து விட்டனர். இறந்த கணவனுக்கு கிடைக்கும் பங்கில், மகன்களும், மனைவியும், மகள்களும் பங்கு பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தாலும், இறப்பதற்கு முன்னரே அவருக்கும் அவரின் மகன்களுக்கும் ஒரு பாகப்பிரிவினையை கற்பனையாக நடத்தி அதில் இறக்கும் தகப்பனார், மகன்கள், தலைக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்வார்களாம்; பின்னர், இறக்கும் தகப்பனாரின் அந்த ஒரு பங்கில், மறுபடியும் எல்லா மகன்களும், மனைவியும், மகள்களும் பங்கு பிரித்துக் கொள்வார்களாம். இதிலும் கொடுமை என்னவென்றால், இறந்தவரின் மனைவிக்கு ஒரு சிறு பங்குதான் கிடைக்கும்; மகன்களுக்கு அதிக பங்கு கிடைக்கும்; இங்கும் மனைவிக்கு கொடுமையே நடந்திருக்கிறது;
1988ல், பின்நாளில் இதை தெரிந்து கொண்ட மகாராஷ்டிர மாநில அரசு, பழைய ஆந்திரபிரதேச அரசு, தமிழ்நாடு அரசு இவை மூன்றும், பெண்களுக்கும் (மகள்களுக்கும்) மகன்களைப்போலவே சரி சமமான பங்கை கொடுத்துவிட வேண்டும் என்று ஒரு திருத்தல் சட்டத்தை கொண்டு வந்து அதன்படி பங்கு பெற உரிமையை அளித்தது; அதன்படி அந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது, திருமணம் ஆகாமல், பிறந்தவீட்டில் இருக்கும் பெண்களுக்கு (மகள்களுக்கு) மட்டும் இது பொருந்தும் எனவும், அதற்கு முன், அதாவது இந்த சட்டம் வருவதற்கு முன், திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்ற மகள்களுக்கு அவ்வாறு கேட்க உரிமையில்லை என்றும் அந்த சட்டம் விளக்கி இருந்தது;
இதுவும் ஓரளவே சரியான சட்டம்; இதுவும் குறையுடைய சட்டமே! எனவே மத்திய அரசு 2005ல் ஒரு திருத்த சட்டத்தை கொண்டு வந்தது, அதன்படி, பூர்வீகச் சொத்தில், மகன்களுக்கு எவ்வளவு பங்கு கொடுக்கிறோமோ அதேபோலவே மகள்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்து அதுவே இப்போது நடைமுறையில் உள்ளது; அதில், அந்த பெண், திருமணம் ஆகி கணவன் வீட்டுக்குச் சென்றிருந்தாலும், திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டிலேயே இருந்தாலும், சரிபங்கு பெற அந்த பெண்ணுக்கு உரிமையுண்டு எனவும் விளக்கி இருக்கிறது.
இப்போதுள்ள சட்டப்படி, மகள்களுக்கு சம உரிமை கொடுத்திருக்கிறார்கள்; ஆனாலும், கணவனின் சொத்தில் மனைவிக்கு சிறப்பான உரிமை கொடுக்கவில்லை என்பது ஒரு பெரும் குறையே! மகன்களைப் போலவும், மகள்களைப் போலவும், மனைவியும் ஒரு பங்கு பெறுவாராம்!
மகனும் மகளும் மனைவியும் ஒன்று என்றும், பிள்ளைகளைப் போல தாயையும் (இறந்தவரின் மனைவியையும்) ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது, இந்து மதச் சட்டத்தின் ஒரு குறையாகவே கருதவேண்டியுள்ளது.
கிறிஸ்தவ மதச் சட்டம்
 கிறிஸ்தவ மதச் சட்டமான இந்தியன் வாரிசுரிமைச் சட்டம் 1925ன்படி, கணவன் இறந்தால், மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும். மீதி உள்ள மூன்றில் இரண்டு பங்கை மட்டும் பிள்ளைகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. இது ஓரளவுக்கு பரவாயில்லை. இந்து சட்டத்தைக் காட்டிலும், ஒருபடி மேல்; மனைவிக்கு ஒரு சிறப்பு மரியாதை கொடுத்திருக்கிறது.
முஸ்லீம் சட்டம்
ஷரியத் என்னும் முகமதியர் சட்டத்தில், பிள்ளைகள் இருக்கும்போது, மனைவிக்கு எட்டில் ஒரு பங்குதான்; பிள்ளைகள் இல்லாவிட்டால்தான் நான்கில் ஒரு பங்கு உரிமையுண்டு; அதேபோல, மனைவியின் சொத்தில் கணவனுக்கு (பிள்ளைகள் இருக்கும்போது) நான்கில் ஒரு பங்கு பெற உரிமையுண்டு;
இங்கு மனைவிக்கு எட்டில் ஒரு பங்கு என்பது, மனைவிக்கு முக்கியத்துவம் இல்லாததுபோலவே இருக்கிறது; காரணம் தெரியவில்லை; புனிதநூலான குரானிலிருந்து இந்த பங்குவிபரம் சொல்லப்பட்டுள்ளதால், இதன் காரணம் நபிகள் நாயகத்துக்கு மட்டுமே தெரியும்.
இவை எல்லாவற்றிலிருந்தும் தெரியவருவது ஒருவிஷயம் மட்டும்தான்; மனைவிக்கு ஒரு சிறப்பு அந்தஸ்த்து இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை.

வெளிநாடுகளில், டைவோர்ஸ் பெறும் மனைவிக்கு, கணவனின் சொத்தில் பாதி பங்கு கொடுக்க சட்டம் உள்ளது; அதைப் போலவே இந்தியாவிலும் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், இறந்த கணவனின் சொத்தில் ஒரு சிறு பங்குதான் மனைவிக்கு கிடைக்கிறது என்பது வருத்தமே!!!

பாகப் பிரிவினை-9

பாகப் பிரிவினை-9
கோர்ட் மூலமாக வழக்குப் போட்டு பாகப் பிரிவினை செய்து கொள்ளலாம். பங்குதாரர்கள் அல்லது வாரிசுதாரர்களுக்குள் சமாதானமாக சொத்தை பாகம் பிரித்து பத்திரம் எழுதிக் கொள்ள முடியாவிட்டால், அல்லது ஒரு பங்குதாரர் அல்லது பல பங்குதாரர்கள் பாகம் பிரித்துக் கொள்ள உடன்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தால், அவ்வாறு கொடுக்க மறுப்பவர்மீது கோர்ட்டில் வழக்குப் போடலாம்.
அதற்குமுன், “எனக்கு பங்கு வேண்டும்; பிரித்துக் கொடுக்கவும்” என்று  அவருக்கு கடிதம் அனுப்பலாம்; இல்லையென்றால், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம்; அதற்கும் உடன்படாமல், பங்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தால், அவர்மீது பாக வழக்கு தொடுக்கலாம்.
சொத்தில் நாம் குடியிருக்கவில்லை என்றாலும், பத்திரம் நம்மிடம் இல்லாமல் இருந்தாலும், நமக்கு அதில் வாரிசு முறைப்படி பங்கு இருக்கிறது என்பது உறுதியானால், வழக்கு தொடுக்கலாம்; நாமும் கூட்டுப் பங்குதாரர்தான்; எனவே நாம் பங்கு கேட்கும் பாகத்துக்கு எவ்வளவு பங்கு என்று குறிப்பிட்டு அதற்குறிய கோர்ட் கட்டணத்தை செலுத்தி (மிகக் குறைவான கட்டணம்தான்) வழக்கை தொடுக்கலாம்.
நமக்கு, அந்த சொத்தில் உரிமையே இல்லை என்றும் ஏற்கனவே ஒரு பங்குதாரர் சொத்தை அடைந்து கொண்டார் என்று இருந்தால், பங்கு கேட்பவர் அவர் கேட்கும் பங்குக்கு உரிய சொத்தின் மார்கெட் மதிப்புக்கு அதிக கோர்ட் கட்டணம் செலுத்தி பாக வழக்கில் பங்கும், சொத்தின் சுவாதீனமும் கேட்கலாம்.
பாகவழக்கு போட்டவுடன், எதிர் பார்ட்டிகளான மற்ற பங்குதாரர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பப்படும். அதை வாங்கிக் கொண்டு அவர் கோர்ட்டுக்கு வரவேண்டும், அவரோ, அவரது வக்கீலோ ஆஜராகி, அவரின் நியாயத்தை எழுத்து மூலமாக சொல்ல வேண்டும்,. பின்னர் சாட்சிகள் விசாரனை நடக்கும், வக்கீல் வாதம் நடக்கும். பின்னர் நீதிபதி தீர்ப்பு சொல்வார்.
பொதுவாக பாக வழக்குகளில் இரண்டு தடவை தீர்ப்பு (Decree) சொல்லப்படும். அதை Preliminary Decree and Final Decree முதல்நிலை தீர்ப்பானை, கடைசி தீர்ப்பானை என இரண்டு தீர்ப்புகள் வேறு வேறு காலக்கட்டங்களில் சொல்லப்படும். முதல் தீர்ப்பில், எவ்வளவு பங்கு பெற உரிமையுண்டு அல்லது பங்குபெற உரிமையில்லையா என்பதை தீர்ப்பாக சொல்லப்படும்; பின்னர் அடுத்த தீர்ப்பில் அந்த பங்கை பிரித்து நீள அகலத்துடன் வரைபடத்துடன் பங்கு கேட்டவர்களுக்கு தனித்தனியே ஒப்படைத்து பத்திரத்தில் எழுதி முடிவான தீர்ப்பாக கோர்ட் கொடுக்கும்.
அந்த பத்திரத்தில் எழுதிய தீர்ப்பை பெற்றவர்கள் நேரடியாக பத்திர பதிவு அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே வைத்துக் கொண்டு தனிதனியே அனுபவித்தும் வரலாம்;
ஒரேவேளை, வழக்குப் போட்ட சொத்தை தனிதனி துண்டு பாகங்களாக பிரிக்க முடியாவிட்டால், அதை கோர்ட் உறுதி செய்து கொண்டு, அந்த பிரிக்கு முடியாத சொத்தை கோர்ட் ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடும். அந்த ஏலத்தில் பங்குதாரர்களும் கலந்து கொள்ளலாம், வெளியாட்களும் கலந்து கொள்ளலாம்; அந்த ஏலத்தில் யார் அதிக விலைக்கு ஏலம் கேட்கிறார்களோ அவர்களுக்கு அந்த சொத்தை கிரயப்பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுப்பார் நீதிபதி. அதில் கிடைக்கும் பணத்தை, அந்த சொத்தின் பங்குதாரர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவார்.
வழக்கு போட்டதிலிருந்து, கடைசி தீர்ப்பு வந்து, சொத்தினை பங்கு பிரித்து கொடுப்பது அல்லது ஏலவிற்பனை செய்து பணத்தை பங்கு பிரித்துக் கொடுப்பதுவரை உள்ள செயல்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான சட்டங்கள் உள்ளன. அதை நீதிபதி பின்பற்றி மிகச் சரியாக செய்துமுடிப்பார்.
அதில் குறைகள் ஏதேனும் இருப்பின் அப்பீல் என்னும் மேல்முறையீடும் செய்து கொள்ள வழியுண்டு.


பாகப் பிரிவினை-8

பாகப் பிரிவினை-8
முகமதிய ஷரியத் சட்டம் 1937:
இதன்படி, முகமதியர் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள், கீழ்கண்டபடி சொத்துக்கு வாரிசுகள் ஆவார்கள்.
கணவன், மனைவி, தகப்பனார்,. பாட்டனார், தாயார், பாட்டி, மகள், மகனின் மகள், சகோதரி இவர்கள் இறந்தவரின் சொத்துக்கு “பங்குதாரர்” ஆவார்கள்.
இறந்தவருக்கு ஆண்வழி உறவுகள் அனைவரும் “மிச்சத்தை பெறுபவர்கள்” Residuaries  ஆவார்கள்.
(1)   பிள்ளைகள் இருந்தால், இறந்த கணவனின் சொத்தில், மனைவிக்கு எட்டில் ஒரு பங்கை பெறுவார். ஆனால், அதேபோல, பிள்ளைகள் இருந்தால், இறந்த மனைவி சொத்தில்,  கணவனுக்கு நான்கில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும், மீதி உள்ளதைத்தான் பிள்ளைகள் பங்காக எடுக்க முடியும்.
(2)   இறந்தவருக்கு குழந்தைகள் இல்லையென்றால், (1) இறந்த கணவன் சொத்தில் மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு; (2) ஆனால், இறந்த மனைவி சொத்தில் கணவனுக்கு பாதி பங்கு அதாவது இரண்டில் ஒரு பங்கு.) (3) தாயாருக்கு மூன்றில் ஒரு பங்கு; தகப்பனாருக்கு ஆறில் ஒரு பங்கு; தாத்தா, பாட்டிகளுக்கு ஆறில் ஒரு பங்கு;
(3)   மகள்களுக்கு – (1) தன் சகோதரனுடன் பங்கு பெறும்போது, சகோதரன்களுக்கு தலா இரண்டு பங்கு வீதமும், சகோதரிக்கு ஒரு பங்கு வீதமும். (2) சகோதரன் இல்லையென்றால், ஒரே மகளாக இருந்தால் இரண்டில் ஒரு பங்கும், பல மகள்கள் இருந்தால் அனைவருக்கும் மூன்றில் இரண்டு பங்கும்;
(4)   இப்படியாக ஒரு பெரிய பட்டியலே இருக்கும். மிகக் கவனமாக பங்கு கணக்கை தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே சரியாக பங்கை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
மிகச் சுலபமாக தெரிந்துகொள்ள;
கணவன் இறந்துவிட்டால், கணவனின் சொத்தில் மனைவிக்கு எட்டில் ஒருபங்கும், மீதி சொத்து பிள்ளைகளுக்கும் சேரவேண்டும். (அதில் மீதி உள்ளதை, ஆண்கள் (மகன்கள்) இரண்டு பங்குகள் வீதமும், பெண்கள் (மகள்கள்) ஒரு பங்கு வீதமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஷரியத் சட்டம் என்னும் முஸ்லீம் சட்டம் விளக்குகிறது.
மனைவி இறந்தால், மனைவியின் சொத்தில், கணவனுக்கு நான்கில் ஒரு பங்கும், மீதி உள்ளது பிள்ளைகளுக்கு மேற்சொன்னபடி, மகன்களுக்கு தலா இரண்டு பங்கும், மகள்களுக்கு தலா ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.
இந்த பங்கீட்டு விபரம் சரியாக கணக்குப் போடத் தெரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும்.


பாகப் பிரிவினை-7

பாகப் பிரிவினை-7
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவர் (ஆணோ, பெண்ணோ) இறந்துவிட்டால், அவரின் வாரிசுகள் அவரின் சொத்தை கீழ்கண்ட வாரிசுக் கணக்குப்படி சொத்தைப் பிரித்துக் கொள்வார்கள்.
இறந்தவர் கிறிஸ்தவ ஆணாக இருந்தால், அவரின் மனைவி, இறந்த கணவனின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு பாகம் பெறுவார். அவரின் குழந்தைகள் (மகன்களும் மகள்களும்) மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கு சொத்தை எத்தனை மகன், மகள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் சரிசமமாக பங்கிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல, இறந்தவர் கிறிஸ்தவ பெண்ணாக இருந்தால், அவரின் கணவர், இறந்த மனைவியின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் கொள்வார். மீதி உள்ள மூன்றில் இரண்டு பங்கு சொத்தை அவளின் குழந்தைகள் சரிசமமாக பகிர்ந்து கொள்வார்கள்.
இறந்தவருக்கு (கணவனோ, மனைவியோ) பிள்ளைகள் ஏதும் இல்லையென்றால், அவரின் மனைவி/அல்லது கணவர் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு மீதியை அவரின் தகப்பனாருக்கு கொடுக்க வேண்டும்.

தகப்பனாரும் இல்லையென்றால், அவரின் தாயாரும் சகோதர சகோதரிகளும் சரிசமமாக எடுத்துக் கொள்ளலாம். 

Monday, June 1, 2015

பாகப் பிரிவினை-6

பாகப் பிரிவினை-6
குடும்ப பாகப் பிரிவினைகளில், சொத்தானது, வாரிசு முறைப்படிதான் கிடைத்திருக்கும். நமக்கு கிடைத்த அந்த சொத்து நம் முன்னோர்கள் மூலம் கிடைத்த சொத்து. அதை நாம் சம்பாதித்து வாங்கவில்லை. எனவே அது வாரிசு முறைப்படி கிடைக்கும். இறந்தவருக்கு யார் யார் வாரிசுகள் என்பதிலும், எந்தெந்த வாரிசு எவ்வளவு பங்கை அடைய முடியும் என்பதிலும், ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு சட்டத்தையும், மத கோட்பாட்டையும் வைத்துள்ளது. இந்து மதத்துக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956”ம், கிறிஸ்தவ மதத்துக்கு “இந்தியன் வாரிசுரிமைச் சட்டம் 1925”ம், முஸ்லீம் மதத்துக்கு “ஷரியத் சட்டம் 1937”ம், பார்சி மதத்துக்கு “இந்தியன் வாரிசுரிமைச் சட்டம் 1925-ன் ஒரு பகுதியும்” என ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு தனி வாரிசு சட்டமே உள்ளது.
இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 (திருத்தம் 2005ல்):
இந்த சட்டமானது இந்துக்களுக்கு மட்டும் பொருந்தும். “இந்து” யார் என்பதை இந்திய அரசியல் சாசன சட்டம் 1950ன் ஆர்ட்டிகிள் 25(2)(பி) விளக்குகிறது. “இந்து மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், (ஜெயின்கள்), புத்த மதத்தவர்கள், இவர்கள் எல்லோருமே “இந்து” என்ற மதத்தில் அடங்குவர். இவர்களுக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956”ல் சொல்லப்பட்டுள்ள சட்டங்கள் பொருந்தும். வேறுசிலரும் இந்து மதம் என்கிறது சட்டம், அதாவது, ஒருவர் “கிறிஸ்தவராகவோ, முஸ்லீமாகவோ, யூதராகவோ” இல்லாமல், அதாவது அந்த மூன்று மதத்தையும் சாராமல் வேறு ஏதாவது ஒரு கொள்கையில் இருந்தால், அவரையும் பொதுவாக இந்து என்று ஏற்றுக் கொண்டு, அவருக்கு இந்த “இந்து வாரிசுரிமை சட்டத்தை” உபயோகிக்கலாம் என்கிறது சட்டம்.
இந்துமதச் சட்டப்படி, “ஒரு இந்து ஆண்” அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரின் வாரிசுகள் அந்த சொத்தை அடைவார்கள். இந்து மதச் சட்டத்தில், வாரிசுகள் என்பவர்கள் (1) முதல் வாரிசுகள், (2) இரண்டாம் வாரிசுகள் (3) பங்காளி உறவுகள் என பல வகைகள் உண்டு.
இந்து ஆணின் முதல் வாரிசுகள்:
ஆணின் முதல்வாரிசுகள்: அவரின் தாய், மனைவி, மகன், மகள், இறந்த மகனின் விதவை மனைவி, இறந்த மகனின் குழந்தை, இறந்த மகளின் குழந்தை, இறந்த மகனின் இறந்த மகனின் குழந்தை, இறந்த மகளின் இறந்த மகனின் குழந்தை இவர்கள் மட்டுமே முதல் வாரிசாக வருவார்கள். (இவர்களில், இறந்தவரின் தந்தை, முதல் வாரிசாக வரவில்லை என்பது ஆச்சரியமே!).
இந்து ஆணின் இரண்டாம் வாரிசுகள்;
முதல் வாரிசுகளில் யாருமே உயிருடன் இல்லையென்றால், இரண்டாம் வாரிசுகள், அவரின் சொத்தை அடையலாம். இரண்டாம் வாரிசு வேறு யாருமல்ல, தகப்பனார் மட்டுமே. முதல் வாரிசுகள் இல்லையென்றால், தகப்பனார் அவரின் இறந்த மகனின் சொத்தை முழுவதுமாக அடையலாம்.
இரண்டாவது வாரிசுகளில், தகப்பனாரும் இல்லையென்றால், இறந்தவரின் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் எல்லோரும் சமமாக அடையலாம். (ஆனால், அவர்கள் அப்போது உயிருடன் இருக்க வேண்டும்; ஏற்கனவே இறந்த சகோதர சகோதரிகள் பங்கு பெறமுடியாது).
சரி, சகோதர சகோதரிகள் யாருமே அப்போது உயிருடன் இல்லையென்றால், அவர்களின் மகன்கள், மகள்கள் (அதாவது சகோதர சகோதரிகளின் பிள்ளைகள்) வாரிசாக அந்த சொத்தை அடையலாம். இப்படியாக இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்து பெண்ணின் வாரிசுகள் யார்?
இந்து  பெண் ஒருவர், அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்துவிட்டால், கீழ்கண்ட முறைப்படி வாரிசுகள் அடைவார்கள்.
(1)   அந்த பெண்ணின் மகன்கள், மகள்கள், (முன்னரேஇறந்த மகனின் குழந்தைகள், முன்னரே இறந்த மகளின் குழந்தைகள்) மற்றும் அவரின் கணவர் – இவர்கள் மட்டும் சொத்தை அடைவார்கள்.
(2)   இவர்கள் யாரும் இல்லையென்றால், அவரின் கணவனின் வாரிசுகள் அடைவார்கள்;
(3)   கணவனின் வாரிசுகளும் இல்லையென்றால், அவளின் தகப்பனாரின் வாரிசுகள் அடைவார்கள்; தகப்பனார் வாரிசுகளும் இல்லாவிட்டால், அவளின் தாயாரின் வாரிசுகள் அடைவார்கள்.
(4)   மேலும் ஒரு சிக்கல் இதில் உள்ளது; ஒருவேளை அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லையென்றால், கணவன் மட்டுமே வாரிசா அல்லது வேறு யாரும் வாரிசா என்ற கேள்வியும் எழும்.
(5)   அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லையென்றால், அவள் இறக்கும்போது அவள் விட்டுச் செல்லும் சொத்தானது அவள் சம்பாதித்த சொத்தாக இருந்தாலும், அல்லது அவளின் கணவன் வழியில் வாரிசு முறையில் கிடைத்திருந்தாலும், அந்த சொத்து அவளின் இறந்த கணவனின் வாரிசுகளை சென்று அடையும்.

(6)   இந்தப் பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இருந்தால், அவளின் சொத்து அவளின் தகப்பனார் வழியில் வாரிசு முறையில் கிடைத்திருந்தால், அந்த சொத்து மட்டும் அவளின் தகப்பனார் வழி வாரிசுகளையே திரும்பச் சென்று அடையும்; அவளின் கணவன் வாரிசுகளை சென்று அடையாது. (குழந்தை இல்லாதபோது மட்டும் இந்த வாரிசுக் குழப்பத்தைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்).

பாகப்பிரிவினை-5

பாகப்பிரிவினை-5
கூட்டு குடும்ப சொத்துக்களை தனி உரிமையாகப் பிரித்துக்கொள்ள விரும்பினால், பாகப் பிரிவினைப் பத்திரங்களை எழுதிப் பிரித்துக் கொள்ளலாம். பாகப் பத்திரங்களுக்கு முத்திரைத் தீர்வை என்னும் ஸ்டாம்ப் கட்டணமும் (ஸ்டாம்ப் பேப்பராக), அது இல்லாமல், பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும். அதில் தமிழ்நாடு அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி –
(1)   முதல்வகை பாகப் பிரிவினைப் பத்திரம்::-  பாகம் பிரித்துக் கொள்ளும் சொத்தானது பூர்வீகச் சொத்தாக இருந்தாலும், அல்லது நம் தகப்பனார், தாயார் போன்ற முன்னோர்கள் மூலம் கிடைக்கும் சொத்தாக இருந்தாலும், (அவர்கள் இறந்தபின், நமக்கு வாரிசு முறைப்படி கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்) அந்த பூர்வீகச் சொத்தைப் பிரித்துக் கொள்பவர்கள் அனைவரும் “ஒரே குடும்ப உறுப்பினர்களாக” இருக்க வேண்டும். அவ்வாறு ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவரவர் பாகச் சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000/-ம் பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000/- செலுத்தினால் போதும் என்று இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப் பட்டுள்ளது. அதாவது சொத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் வரை 1% ஸ்டாம்பு கட்டணம் என்றும், சொத்தின் மதிப்பை அந்த ரூ.25 லட்சத்தை தாண்டிவிட்டால், அது எவ்வளவு அதிகமான மதிப்பாக இருந்தாலும், அதிக பட்ச ஸ்டாம்ப் கட்டணமாக ரூ.25,000/- செலுத்தினால் போதும். மேலும் இந்த கட்டணத்தை பிரித்துக் கொள்ளும் ஒவ்வொரு பங்கின் மதிப்புக்கும் செலுத்தி இருக்க வேண்டும். இவ்வாறான ஸ்டாம்ப் கட்டணம் அல்லாமல், பதிவுக் கட்டணமாக அதிக பட்சமாக ரூ.4,000/- ஒவ்வொரு பங்குக்கும் செலுத்த வேண்டும்.
“ஒரே குடும்ப உறுப்பினர்கள்” என்பது ‘தாத்தா, பாட்டி, (தந்தைவழி தாய்வழி, இரண்டும்தான்), தந்தை, தாய், மகன், வளர்ப்புமகன், மகள், வளர்ப்பு மகள், பேரன், பேத்தி, சகோதரன், சகோதரி” ஆகிய இந்த உறவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். (இதைத் தாண்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் மகன், மகள், அண்ணி, மைத்துனன் போன்றவர்கள் இரத்த உறவாக இருந்தாலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்ற இந்த விளக்கத்துக்குள் வரமாட்டார்கள். (சட்டத்தை அவ்வாறு வைத்துள்ளார்கள், என்ன செய்வது! உடன்பிறந்த சகோதரன், சகோதரியைக் கூட குடும்ப உறுப்பினர் இல்லை என்று வைத்திருந்து, வெகுகாலம் கழித்து, இப்போதுதான், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான், அவர்களும் குடும்ப உறுப்பினர்கள்தான் என மத்திய அரசு முத்திரைச் சட்டத்தை திருத்தியுள்ளது).
(2)   இரண்டாம் வகை பாகப் பிரிவினையானது ‘குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குள் நடக்கும் பாகப் பிரிவினை. இதில், உறவே இல்லாத இரண்டு, நபர்கள் சொத்தை வாங்கி வைத்திருந்தால், அவர்கள் இந்த இரண்டாம் வகைப்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு உறவினர்கள் கூட்டாக ஒரு சொத்தை வாங்கி இருந்தாலும், அல்லது வாரிசு முறையில் அடைந்திருந்தாலும் அவர்களும் இதன்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.
இதில், சொத்தை இரண்டாகவோ, அல்லது பல பங்குகளாகவோ பிரித்துக் கொள்வர். இந்தமுறை பாகப்பிரிவினைப்படி, ஸ்டாம்ப் கட்டணம் சற்று வித்தியாசமாக இருக்கும். இதில் எது பெரிய பங்காக இருக்கிறதோ அதை விட்டுவிட்டு, மற்ற சிறிய பங்குகளின் மொத்த மதிப்பை கணக்கெடுத்து அந்த தொகைக்கு 4% வீதம் (அதாவது பிரிந்த பங்கு சொத்துக்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.4,000/- என்றும், மதிப்பு இரண்டு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.8,000/- என்றும் செலுத்த வேண்டும்.) பின்னர் பதிவுக் கட்டணமாக இதேபோல பிரிந்த பங்குகளின் (பெரிய பங்கு தவிர மற்ற பங்குகள் பிரிந்த பங்குகள் எனப்படும்) மதிப்புக்கு 1% வீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
இந்த பாகப் பிரிவினைகளில், எல்லாப் பங்குகளும் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஒருவருக்கு அதிகபங்கும் மற்றவருக்கு குறைந்த பங்கும் ஒதுக்கிக் கொள்ளலாம். அவரவர் விருப்பம்தான். அதற்கான காரணத்தை விளக்கிவிட்டால் பின்னாளில் பிரச்சனை இருக்காது.

சரிசமமாக பிரித்துக் கொள்கிறோம் என்று சொல்லி ஒரு சொத்தை பல பங்குகளாக பிரித்துக் கொண்டு, பின்னர் ஒருவருக்கு மதிப்பு குறைவான சொத்து கிடைத்திருந்தால் அவர் அந்த பாகப் பிரிவினையை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்று, அந்த பாகப் பிரிவினையே செல்லாது, சொத்தை நியாயமாகப் பிரிக்கவில்லை என்றும் கோர்ட் டிகிரி வாங்க முடியும்.