Friday, October 28, 2016

ரேரா சட்டம்

ரியல் எஸ்டேட்டின் “ரேரா சட்டம்”
Real Estate Regulatory Act 2016

அபார்ட்மெண்ட் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதில் முறைகேடுகளை தடுப்பதற்காக இந்த ரே-ரா சட்டம் 2016 கொண்டுவரப் படுகிறது; பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை கட்டிக் கொடுக்க காலதாமதப் படுத்தினால், பில்டர்களை தண்டிக்கும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது; இது தங்களை வெகுவாகப் பாதிக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் வியாபாரிகள்;
பில்டர்கள், ப்ளாட்டுகளை விற்பனை செய்யும்போது, சூப்பர் பில்ட்அப் ஏரியா என்று அதிக விஸ்தீரணத்தை சொல்லி விற்று விடுகிறார்கள்; இனி அப்படிச் செய்யமுடியாது;

இந்த சட்டம் வந்தபின்னர், இதில் பதிவு செய்து கொண்ட ரியல் எஸ்டேட் வியாபாரிகள் மட்டுமே  பிளாட்டுகள், ப்ளாட்டுகள் விற்பனை செய்ய விளம்பரம் செய்ய முடியும்;

ரியல் எஸ்டேட் பிரச்சனைகளையும், வழக்குகளையும் விசாரிக்க தனிக் கோர்ட்டுகள் உருவாக்கப்படும்:
இந்த ரேரா சட்டம் மொத்தம் 92 பிரிவுகளைக் கொண்டது;

**

புதிய பினாமிச் சட்டம் 2016

புதிய பினாமிச் சட்டம் 2016

Benami Transaction Prohibition Amendment Act 2016
இந்த புதிய பினாமி தடுப்புச் சட்டம் 2016 நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறதாம்!

ஏற்கனவே 1988ல் இருந்து நடைமுறையில் உள்ள பழைய சட்டமான பினாமி தடுப்புச் சட்டம் 1988-ஐ மாற்றி, அதற்கு இன்னும் வலு கொடுப்பதற்காக இந்த புதிய சட்டமான பினாமி தடுப்பு திருத்தல் சட்டம் 2016 வந்துள்ளது;

பழைய 1988 சட்டத்தில், யாரும் பினாமியாக சொத்து, வேறு ஒருவர் பெயரில் சொத்து வாங்கி வைத்துக் கொள்ள முடியாது; 1988 சட்டம் வருவதற்கு முன்னர் அப்படி பினாமியாக வேறு ஒருவர் பெயரில் சொத்தை வாங்கி வைத்துக் கொள்ள முடியும்; பின்னர் அந்தச் சொத்து தனக்குத்தான் சொந்தம் என்று திரும்ப பெற முடியும்; பினாமி பெயரில் இருந்தவர் என் சொத்து என்று கேட்க முடியாது; இதனால், மிக அதிகமானவர்கள், சொத்துக்களை தங்கள் பெயரில் வாங்காமல், பினாமி பெயரில் வாங்கி வைத்துக் கொள்வார்கள்; 

இதைத் தடுப்பதற்காக, திரு. ராஜிவ்காந்தி பிரதம மந்திரியாக இருந்த காலத்தில், 1988ல் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது; அந்த 1988 பினாமி தடுப்புச் சட்டத்தில் மொத்தமே 9 பிரிவுகள் தான் இருக்கிறது; அந்த 1988 சட்டப்படி, யாரும் பினாமி பெயரில் சொத்து வாங்க கூடாது என்றும், அவ்வாறு வாங்கினால், அதை அரசு எடுத்துக் கொள்ளும் என்றும், நான் பினாமியாக வாங்கிய சொத்து, அந்த சொத்து எனக்குத் தான் சொந்தம் என்று எந்தக் கோர்ட்டிலும் வழக்குப் போட முடியாது என்றும், கூறப்பட்டுள்ளது; ஆனாலும், ஒருவர், தன் மனைவி, மைனர் மகன், திருமணமாகாத மகள் இவர்கள் பெயரில், அவர்களின் வருங்கால நன்மைக்காக, இவரின் பணத்தைக் கொண்டு, அவர்கள் பெயரில் சொத்தை பினாமியாக வாங்கி வைக்கலாம்; அப்படி வாங்கி வைப்பது சட்டப்படி தவறு ஆகாது; ஆனாலும், அந்தச் சொத்தை வாங்கியவர், எனக்குத்தான் சொந்தம் என்றும், நான்தான் பினாமியாக என் மனைவி பெயரில் வாங்கினேன் என்று திரும்ப அந்தச் சொத்தை வாங்க முடியாது;

பழைய 1988 சட்டத்தில், பினாமி சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்வதில் சரியான வரைமுறை  அந்த சட்டத்தில் செய்யப் படவில்லை; எனவே சொத்தை அரசு பறிமுதல் செய்வதில் குளறுபடி இருந்தது; பினாமியாக சொத்து வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை என்றும் இருந்தது;

இருந்தும், 1988ன்படி கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த முடியவில்லையாம்! அதனால் அந்தப் பழைய 1988 சட்டத்துக்கு புத்துயிர் கொடுத்து இந்த 2016 புதிய திருத்தல் சட்டம் நடைமுறைக்கு நவ-1 முதல் வருகிறது; இதன்படி, பினாமி சொத்துக்களை விசாரனை செய்யும் கோர்ட்டுகளையும், அதிகாரிகளையும் விவரித்துள்ளனர்; பினாமியில் சொத்து வாங்கினால் 7 ஆண்டுகளுக்கு சிறை என்று சட்டம் திருத்தப் பட்டுள்ளது;   இந்த புதிய திருத்த சட்டத்தில் மொத்தம் 71 பிரிவுகள் உள்ளன; அதிகமாக கிடுக்கிப் பிடி போடப் பட்டுள்ளது;
**


Friday, October 21, 2016

சொத்துரிமை-9

சொத்துரிமை-9
பிரிவு-28 என்பது உடல் குறை உள்ளவர்கள், வாரிசுகளாக இருந்தால் அவர்களும் சொத்தை வாரிசு முறைப்படி அடையலாம் என்று சொல்கிறது;
ஆனால், இதற்கு முன் இருந்த பழைய இந்து சட்டப்படி, ஊமை, கண் தெரியாதவர், பைத்தியம், லெப்ரசி என்னும் குஷ்டரோக நோய் இருப்பவர்கள் சொத்தில் வாரிசு உரிமை கோர முடியாது என்று இருந்தது; அதை முழுவதுமாக மாற்றி, உடல் குறை ஒரு குறையே அல்ல என்றும், அவர்களும் வாரிசு முறைப்படி வாரிசாக சொத்தை அடைவார்கள் என்று சொல்லி உள்ளது, அந்த 1956 வாரிசுரிமை சட்டத்தின் சிறப்பு ஆகும்;

பிரிவு-29ன்படி ஒரு வாரிசு சொத்தை அடைய முடியாத நிலை சட்டத்தில் இருந்தால், அவர் இறந்து விட்டதாகவே கருதிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது; அதாவது, தகப்பனை கொலை செய்த மகன், அந்த தகப்பனின் சொத்தில் உரிமை கேட்க முடியாது; இவர் சட்டப்படி சொத்தை அடைய முடியாத நிலையில் இருக்கிறார்; எனவே இவர் இறந்ததாகவே சட்டம் கருதுகிறது; அதாவது அவர் இறந்துவிட்டார் என நினைத்துக் கொண்டு, மற்ற வாரிசுகள் சொத்தை அடையலாம்;

பிரிவு-30 இறந்தவரின் வாரிசுகளைப் பற்றி பேசவில்லை; மாறாக, சொத்தை வைத்திருப்பவர் அவர் உயிருடன் இருக்கும்போதே, உயில், செட்டில்மெண்ட் எழுதி வைத்திருப்பார்; அப்படிப்பட்ட சொத்துக்கள் அந்த உயில்படியே போய்ச் சேரும் என்று சொல்லி உள்ளது; அதில் வாரிசுகளுக்கு எந்த வேலையும் இல்லை;

மேலும், ஒருவரின் தனிச் சொத்துக்களுக்கு அதாவது சுய சம்பாத்திய சொத்துகளுக்கு உயில் எழுதலாம்; ஆனால் பூர்வீகச் சொத்துக்களுக்கு உயில் எழுத முடியுமா என்ற கேள்வி எழும்; அதற்கும் இங்கு பதில் கொடுக்கப்பட்டுள்ளது; பழைய இந்து சட்டப்படி, பூர்வீக சொத்துக்கள் எனப்படும் கோபார்சனரி சொத்துக்களில் யாருக்கு எவ்வளவு பங்கு என்று தெரியாது, எனவே அவரின் பங்கைப் பொறுத்து உயில் எழுதி வைக்க முடியாது; பாகம் பிரித்துக் கொண்டால்தான் தனிப் பங்கு கிடைக்கும் நிலை இருந்தது; ஆனால், 1956 சொத்துரிமைச் சட்டப்படி பூர்வீகச் சொத்துக்களில் தன் பங்கு சொத்தைப் பொறுத்து உயில் எழுதி வைக்கலாம் என்ற சலுகை கிடைத்துள்ளது என்றே கருத வேண்டும்;
**



சொத்துரிமை-8

சொத்துரிமை-8

மேலும், பிரிவு-26ல் மதம் மாறியவர் யார் யார் சொத்தில் பங்கு கேட்க முடியும் அல்லது முடியாது என்பதைப்பற்றி விளக்குகிறது; அதாவது தகப்பன் சொத்தை விட்டுவிட்டு இறந்து விடுகிறார்; பொதுவாக மகனுக்கு அதில் பங்கு கிடைக்கும்; அந்த மகன் இந்துவாக இருந்தால் பங்கு கிடைக்கும்: அந்த மகன் வேறு மதத்துக்கு மதம் மாறி விட்டிருந்தாலும் தகப்பன் சொத்தில் மதம் மாறிய மகனுக்கு பங்கு கிடைக்கும்: ஏனென்றால், இங்கு இறந்த தகப்பன் இந்து; எனவே இந்துவின் சொத்து  அந்த இந்துவின் வாரிசுகளுக்குப் போய் சேரும்;

ஆனால், அந்த மதம் மாறிய இந்து மகனுக்கு ஒரு மகன் பிறக்கிறான் என நினைத்துக் கொள்வோம்; அதாவது இறந்தவருக்குப் பேரன்; அந்த பேரன் ஒரு இந்துவின் மகன் அல்ல, மாறாக, மதம் மாறியவரின் மகன் ஆவார்; அதாவது இறந்தவரின் மகன் கிறிஸ்தவராக மாறி இருந்தார் என நினைத்துக் கொள்வோம்; எனவே அந்த கிறிஸ்தவரின் மகனுக்கு, தன் தாத்தா சொத்தில் உரிமைஇல்லை;

இதை இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சொத்தை விட்டுவிட்டு இறந்த மகனோ, மகளோ எந்த மதத்துக்கு மாறி விட்டாலும் பிரச்சனை இல்லை; அவர்களுக்கு அவர்களின் தகப்பன் சொத்தில் பங்கு கிடைக்கும்;

ஆனால், சொத்தை விட்டுவிட்டு இறந்தவரின் மகன் மதம் மாறிவிட்டு, அவரின் தகப்பனார் இறப்பதற்கு முன்னரே இறந்து விட்டிருந்தால், தாத்தா இறக்கும்போது, பேரன் இருப்பான்; அவனுக்குச் சொத்து போக வேண்டும்; ஆனால் இங்கு, தாத்தா இறந்தபின்னர், அவரின் இறந்த மகன் மதம் மாறி இருப்பதால், அந்த மதம் மாறியவரின் மகனுக்கு அல்லது மகளுக்கு பங்கு கிடைக்காது; அதுதான் இந்த பிரிவு சட்டத்தின் சிறப்பு;

இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், இறந்த இந்துவின் சொத்தை அவரின் வாரிசுகள் யார் வேண்டுமானாலும் அடைந்து கொள்ளலாம்; அவர்கள் மதம் மாறி இருந்தாலும் கவலையில்லை; ஆனால், இறந்த இந்துவின் சொத்தை, அவரின் வாரிசுகளில் யாராவது மதம் மாறி இருந்தால், அவர்கள் மூலம் அவர்களின் வாரிசுகள் அடைய முடியாது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்;



சொத்துரிமை-7

சொத்துரிமை-7

மேலும் பிரிவு-23ம் அதேபோல, குடும்ப சொத்தான குடியிருக்கும் வீட்டை, உடனடியாக பங்கு பிரித்துக் கொள்ள முடியாது: அங்கு ஒரு ஆண் (சகோதரன்) குடியிருந்தால், அவனின் சகோதரி, அந்த குடியிருக்கும் வீட்டை பிரித்துக் கொடுக்கும்படி கேட்க முடியாது; ஏனென்றால், பெண் அவளின் கணவர் வீட்டில் குடியிருப்பாள்; அவள், பிறந்த வீட்டின் வீட்டை பங்கு பிரிக்க முதலில் கேட்க முடியாது; ஆனாலும் மற்ற சகோதரர்கள் அதை பங்கு பிரித்துக் கொண்டால், இவளுக்குறிய பங்கு இவளுக்கு கிடைக்கும்; இந்த சட்டத்தில் இப்போது திருத்தம் செய்து விட்டார்கள்; இப்போது அந்த பெண்ணும் பங்கு கேட்டு வழக்கு போட முடியும் என்று மாற்றப்பட்டுள்ளது;

மேலும் பிரிவு-24 சற்று வித்தியாசமான சட்டம்; கணவர் இறந்து விட்டால், அவனின் மனைவி விதவை என்று சட்டம் கருதுகிறது; அவள் விதவையாக இருக்கும்வரை அவள் கணவர் சார்ந்த சொத்துக்களில் பங்கு கேட்க முடியும்; ஆனால், அவள் வேறு யாரையாவது மறுமணம் செய்து கொண்டால் அவ்வாறு இறந்த கணவரின் சொத்துக்களில் பங்கு கேட்க முடியாது; (இறந்த கணவரின் சொத்தில் பங்கை வாங்கிக் கொண்டு மறுமணம் செய்திருந்தால் அது சட்டப்படி செல்லும்) அதுவல்ல இங்கு பிரச்சனை! கணவர் இறந்து விடுகிறார்; அவனுக்கு தனிச் சொத்து ஏதும் இல்லை; அந்த விதவை மனைவி வேறு ஒருவரை மறுமணம் செய்து கொள்கிறார்; அதற்குப்பின்னர், இறந்த கணவரின் தகப்பனார் இறக்கிறார்; அவருக்கு சொத்து இருக்கிறது; அந்தப் பங்கு அவரின் மகனுக்கு வரும்; அந்த மகன் ஏற்கனவே இறந்தவிட்டதால், அவனின் விதவை மனைவிக்கு வரும்; அப்போது அந்த மனைவி விதவையாகவே இருந்தால், (அதாவது மறுமணம் செய்யாமல் இருந்தால்) மாமனார் சொத்தில் பங்கை அடைவார்; மாறாக, மாமனார் இறந்த நாளில் அவள் மறுமணம் செய்திருந்தால், அந்த சொத்தில் பங்கு கிடைக்காது என்ற நிலையை விளக்குவதற்காக இந்தப் பிரிவு-24 கொண்டுவரப்பட்டது;

மேலும், பிரிவு-25 கொலைசெய்தவன், கொலை செய்யப்பட்டவனின் சொத்தில் பங்கு பெற முடியுமா என்றால் முடியாது என்று சொல்கிறது; அதாவது தகப்பனை கொன்ற மகன், அந்த தகப்பனின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை என்று விளக்குகிறது;



சொத்துரிமை-6

சொத்துரிமை-6

மற்றும் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ல் பிரிவு-20ல் ஒரு சிறப்பு உண்டு; பிறந்த குழந்தைகள் மட்டும்தான் சொத்தில் வாரிசுரிமை கொண்டாட முடியுமா? பிறக்காத அதாவது ஒரு இந்து ஆண், அவரின் சொத்தை விட்டுவிட்டு இறக்கும்போது, அவரின் மனைவி அப்போது கர்ப்பமாக இருந்தால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு பங்கு உண்டா என்பதை இந்த பிரிவு-20 சொல்கிறது; ஆம்! வயிற்றில் வளரும் குழந்தையும் பங்கு கேட்கலாம்; அது உயிருடன் இருப்பதாகவே கருத வேண்டும்; ஒருவேளை அது இறந்து பிறந்தால் (Stillbirth) அதற்கு பங்கு கிடைக்காது; மாறாக உயிருடன் பிறந்தால் கண்டிப்பாக பங்கு உண்டு; அந்தக் குழந்தை பிறப்பதற்கு முன்னரே, சொத்து பங்கு பிரித்திருந்தாலும், அந்தக் குழந்தை பிறந்தவுடன் அந்த பாகப் பிரிவினையை மாற்றி, அந்தக் குழந்தைக்கும் பங்கு கொடுத்தாக வேண்டும்: மறுக்க முடியாது; கருவில் இருக்கும்போதே சொத்துரிமையை அடைந்துவிடும்;

மேலும் மற்றொரு பிரிவான பிரிவு-21 ஒரு சூழ்நிலையை விளக்குகிறது; அதாவது தந்தை இருக்கும்போது மகன் பங்கு கேட்க முடியாது; தந்தை முன்னரே இறந்தால் மகன் வாரிசு ஆவான்; ஆனால் மகன் முன்னரே இறந்தால், தந்தை வாரிசு ஆகமாட்டார், மாறாக தாய்தான் வாரிசு ஆவார்; இப்படிப்பட்ட சில நிகழ்வுகள் இருக்கும்; அப்போது யார் முதலில் இறந்தார் என்பதைப் பொறுத்தே பங்கு வாரிசுகளை அடையும்; ஆனால் இந்தப் பிரிவு ஒரு அசாதாரண சூழ்நிலையைச் சொல்கிறது; அதாவது தகப்பனும் மகனும் ஒரே விபத்தில் ஒரே நேரத்தில் இறந்தால், யார் முன்னர் இறந்தார், யார் பின்னர் இறந்தார் என்ற குழப்பம் வரும்; அப்படி ஒரு குழப்பம் வரும்போது, இந்தப் பிரிவு விளக்கம் சொல்கிறது; அதாவது, வயதில் மூத்தவர் முதலில் இறந்ததாக சட்டம் கருதிக் கொள்ள வேண்டும் என்று முடிவுக்கு வருகிறது;

மேலும் பிரிவு-22 வேறு ஒரு சூழ்நிலையை விளக்குகிறது; அதாவது, கூட்டாக அனுபவித்துவரும் சொத்துக்கள் மற்றும் கூட்டாக செய்து வரும் வியாபாரங்கள் இவைகள் கூட்டாகவே இருந்துவரும்; பல வாரிசுகள் வாரிசு முறைப்படி அடைந்த சொத்தை முதல் நிலை வாரிசுகள் கூட்டாக அனுபவித்து வரும்; அந்தச் சொத்துக்களில் ஒரே ஒருவர் மட்டும் தன் பிரிவுபடாத பங்கை, வெளி நபருக்கு உடனேயே விற்றுவிட முடியாது; அப்படி அவர் விற்பனை செய்ய வேண்டும் என்றால், மற்ற பங்குதாரர்களுக்குத்தான் முதலில் விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டும்; அவர்கள் வாங்க மறுத்தால் மட்டுமே வெளி நபர்களுக்கு விற்பனை செய்ய முடியும்; மற்ற பங்குதாரர்களுக்கு தெரிவிக்காமல் விற்பனை செய்த சொத்தை, மற்ற பங்குதாரர்கள் கேள்வி கேட்டு, அதை ரத்து செய்ய முடியும்; அவ்வாறான அதிகாரம், அந்த சொத்தை விற்பனை செய்த ஒரு வருடத்துக்குள் செய்ய வேண்டும்; அதற்குமேல் அதை கேள்வி கேட்க முடியாது; இந்த உரிமையை Preferential right முன் உரிமை அதிகாரம் என்று சொல்லலாம்; அந்த பங்கை, பங்காளிகளே வாங்குவதற்கு வந்தாலும் வேண்டுமென்றே குறைந்த விலைக்கு கேட்பர்; அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், அதை மாவட்ட கோர்ட் முடிவு செய்யும்;



சொத்துரிமை-5

சொத்துரிமை-5

மற்றும் பிரிவு-15, இந்து பெண்ணின் “தனிப்பட்ட சொத்தை” அவரின் இறப்புக்குப் பின்னர், அவரின் வாரிசுகள் எப்படி அடைய வேண்டும் என்றும், அதில் யார் யார் வாரிசுகள் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது; அதாவது, ஒரு இந்து பெண்ணுக்கு மூன்று வழிகளில் சொத்து கிடைத்திருக்கும்; முதல்வகை: அவர் கிரயம் வாங்கிய சொத்து அல்லது யாராவது அவருக்கு தானமாக (செட்டில்மெண்டாக) கொடுத்த சொத்து; இரண்டாவது வகை: அந்தப் பெண்ணுக்கு அவரின் கணவர் வழியில் வாரிசு முறையில் கிடைத்த சொத்து (அதாவது, கணவர் இறந்து விட்டால், கணவரின் தகப்பனார் சொத்தில் இந்த பங்கானது, பாகப் பிரிவினையில் கிடைத்திருக்கும்); மூன்றாவது வகை: அந்த பெண்ணின் தகப்பனார், தாய் வழியில் கிடைத்த சொத்து (இதுவும், அவரின் பெற்றோர் வீட்டில் நடந்த பாகப் பிரிவினையில் கிடைத்த சொத்தாக இருக்கும்); இப்படி மூன்று வகைகளில் ஒரு இந்து பெண்ணுக்கு சொத்து கிடைத்திருக்கும்; இந்த சொத்துக்களில் ஏதாவது ஒரு வகையை விட்டுவிட்டு, அந்த பெண் இறந்திருந்தால், அந்த சொத்துக்கள் கீழ்கண்டபடி வாரிசுகளை அடையும்; முதல் வகைச் சொத்துக்களை (அதாவது அந்தப் பெண்ணின் தனிச் சொத்துக்களை) அவள் காலத்துக்குப் பின்னர் அவளின் கணவரும், குழந்தைகளும் அடைவார்கள்; இரண்டாம் வகைச் சொத்துக்களை, அவள் இறந்தபின்னர் அவளின் கணவரும், குழந்தைகளும் அடைவார்கள்; ஆனால் குழந்தை இல்லை என்றால், அவளின் கணவரின் வாரிசுகளுக்கே திரும்பச் சென்று விடும்; மூன்றாம் வகை சொத்துக்களை அவள் காலத்துக்குப் பின்னர் அவளின் கணவரும் குழந்தைகளும் அடைவார்கள்; ஆனாலும், அவளுக்கு குழந்தைகள் இல்லையென்றால், அவளின் தகப்பனாருக்கே திரும்பச் சென்று விடும்; ஏனென்றால், இந்த மூன்றாம் வகைச் சொத்தானது, அவளுக்கு, அவளின் பெற்றோர் மூலம் கிடைத்த சொத்தாகும்: அவளின் பெற்றோரிடம் கிடைத்த சொத்தானது, அவளுக்கு குழந்தை இல்லையென்றால், அவளின் கணவரின் வாரிசுகளுக்குப் போகாது, மாறாக அவளின் தகப்பனார் வாரிசுகளைச் சென்று அடையும்; இதுதான் இந்து பெண்களின் சொத்துக்களின் வாரிசுரிமையின் சிறப்பு;

சொத்துரிமை-4

சொத்துரிமை-4

1956 இந்து வாரிசுரிமைச் சட்டம்;
இப்படியாக இந்து சொத்துரிமைகள் 1956 வரை இருந்து வந்தது; 1956-ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது: The Hindu Succession Act, 1956: இது 17.7.1956ல் இருந்து அமலுக்கு வந்தது; இது மொத்தம் 31 பிரிவுகளைக் கொண்டது; (It consists of 31 sections); இதில் முக்கியமான செக்ஷன்கள் (பிரிவுகள்-Sections) பல உண்டு: இதில் பிரிவு -6 மட்டும் கோபார்ஷனரி என்னும் பூர்வீகச் சொத்துக்களில் வாரிசுரிமையைப் பற்றி சொல்கிறது; பழைய முறையை மாற்றி புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது; இதிலும் பெண்களுக்கு சரிசம பங்கு கிடைக்கவில்லை; (எனவே பின்னர் மத்திய அரசு, 2005ல் இதில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது; அதைப் பின்னர் பார்க்கலாம்);

மற்றும், பிரிவு-8 என்பது இந்து ஆண்களின் தனிச் சொத்தின் வாரிசுரிமையைப் பற்றிச் சொல்கிறது; யார் யார் இந்து ஆணின் வாரிசுகள் என்றும், அவர்களுக்கு எவ்வளவு பங்குகள் என்றும் சொல்லப் பட்டுள்ளது;

பிரிவு-14 என்பது ஒரு முக்கியமான பிரிவு; இதன்படி இந்து பெண்கள் ஏற்கனவே ஆயுட்கால உரிமையுடன் அனுபவித்து வரும் சொத்துக்கள் அனைத்தும், இந்தச் சட்டம் வந்தபின்னர் முழு உரிமையுடன் முழு உரிமையாளராக எடுத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை பெண்களுக்கு வழங்கி உள்ளது; அதாவது, கோபார்சனரி சொத்துக்களில் கணவரின் பங்கை விதவை மனைவி ஆயுட்கால உரிமையுடன் அனுபவித்து வந்த சொத்தை (விற்க உரிமை இல்லாமல் இருந்து வந்த சொத்தை) இந்தப் பிரிவு-14 முழு உரிமையுடன் அனுபவித்துக் கொள்ள வழி வகை செய்தது;

சொத்துரிமை-3

சொத்துரிமை-3
இந்து விதவைகளின் சொத்துரிமை சட்டம் 1937:
(The Hindu Women’s Right to Property Act, 1937)
இந்தச் சட்டம் 1937ல் ஏப்ரல் 14ம் தேதி அமலுக்கு வந்தது; இந்தச் சட்டப்படி, கோபார்சனர்கள் என்று சொல்லப்படும் ஆண்கள் இறந்து விட்டால், அவர்களின் விதவை மனைவிகள் மட்டும் இந்த முறையில் சொத்துக்களை கீழ்கண்டபடி பெற உரிமையை ஏற்படுத்திக் கொடுத்தது இந்தச் சட்டம்; இதன்படி, கோபார்சனரி ஆண்கள் இறந்து விட்டால், அவரின் விதவை மனைவிகள், அந்த இறந்த கணவரின் பங்கை மட்டும் அடைந்து கொள்வர்; ஆனாலும், அந்த விதவை அவரின் வாழ்நாள்வரை மட்டும், அவரின் கணவரின் பங்கை, அனுபவித்து மட்டுமே வர முடியும்; கிரயம் செய்ய முடியாது; அப்படியே கிரயம் செய்தாலும், அந்தக் கிரயம் அந்த விதவையின் வாழ்நாள் வரை மட்டுமே செல்லும்; அதற்குப் பின்னர், அந்தச் சொத்து, அவளின் இறந்த கணவரின் மற்ற கோபார்சனர்களுக்கு திரும்ப வந்து சேர்ந்துவிடும்; ஆக, பெண்களுக்கு சொத்தை கொடுப்பதுபோலக் கொடுத்து அதை அனுபவிக்க மட்டும் கொடுத்துவிட்டு, விற்பனை உரிமையைக் கொடுக்காமல், விட்டு விட்டார்கள்; இதுதான் அன்றைய இந்து விதவைகளின் நிலை; ஆனாலும், அந்த விதவைகளிடம், சீதனச் சொத்துக்கள் (பெண்களின் தனிச் சொத்துக்கள்) இருந்தால் அதை அந்தப் பெண்கள் முழு உரிமையுடன் அனுபவித்துக் கொள்ளலாம்;

எனவேதான், பெரும்பாலும் பெண்கள் சீதனச் சொத்துக்களை வாங்குவதில் முனைப்புக் காட்டினர்; தமிழகத்தின் தென்பகுதியில், இப்படிப்பட்ட சீதனச் சொத்துக்களுக்கு “சிறுவாட்டுச் சொத்து” என்றும் பெயர் உண்டு; சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கப்பட்ட சொத்து என்று பொருள்; இத்தகைய சொத்துக்களில் பெண்களுக்கு தனிப்பட்ட முழு உரிமை உண்டு: அதில் அவர்களின் கணவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது; சீதனச் சொத்துக்களை விற்பனை செய்யும்போது, கணவரின் சம்மதமும் தேவையில்லை;

இப்படித்தான், பெண்களுக்கு தனிச் சொத்துரிமை வந்தது; ஆனாலும், இந்து கூட்டுக் குடும்பத்திலோ, கோபார்சனரி சொத்துக்கள் என்று சொல்லப்படும் ஆண்வழி பூர்வீக சொத்துக்களிலோ, பெண்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை;


சொத்துரிமை-2

சொத்துரிமை-2

பெண்களின் சீதனச் சொத்துக்கள் (Stridhana):
அப்படியென்றால், பெண்களுக்கு சொத்து வாங்கவும், அதை வைத்துக் கொள்ளவும் உரிமைகள் ஏதும் கிடையாதா என்ற கேள்வி எழும்; ஆம்! அவர்கள் ஆண்களின் துணையுடனேயே வாழ்ந்து வந்துள்ளனர்; ஆனாலும், அவர்களின் திருமணத்தின்போது, அவர்களின் உறவினர்களிடமிருந்து கிடைக்கும் பரிசுப் பணத்தை கொண்டு அவர்களுக்கே தனிச் சொத்தாக வாங்கி வைத்துக் கொள்ளலாம்; ஆனாலும் அதை விற்பனை செய்யும்போது, அவளின் கணவனின் சம்மதம் வேண்டுமாம்! (ஸ்ரீதானம் = சீதனம்; ஸ்ரீ என்றால் பெண்; ஸ்ரீதானம் =பெண்ணுக்குக் கொடுக்கும் தானம்; தனம் = பொருள், சொத்து; ஸ்ரீதனம் = பெண்ணிடம் உள்ள சொத்து; இப்படியாகப் பொருள் கொள்ளலாம்); இந்த சீதனச் சொத்துக்கள் பெண்களின் தனிச் சொத்தாகும்; இதற்கும் கூட்டுகுடும்ப சொத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை; பெண்களுக்கென்று தனி சொத்து வைத்துக் கொள்ள இது ஒன்றுதான் அப்போதுள்ள ஒரேவழி ஆகும்!

இந்து விதவைகளின் நிலை:

தாத்தா இறந்து விடுகிறார்; அவரின் சொத்தில் அவரின் விதவை மனைவிக்கு எந்தப் பங்கும் கிடையாது; ஆனால், அந்த விதவை இறக்கும்வரை அந்த கூட்டுக் குடும்பத்தில் வசித்து வரலாம்; அவருக்கு வேண்டிய சௌகரிகங்களான உணவு, உடை, இருப்பிடம் இவற்றை மற்ற ஆண் உறுப்பினர்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்; இதுதான் அன்றைய இந்து கூட்டு குடும்ப முறை, கோபார்சனரி கூட்டமைப்பின் முறையும் கூட; ஆனால், இறந்த கணவர் சொத்தில் அவரின் விதவை மனைவிக்கு ஒரு பங்கும் கிடையாது; கோபார்சனரி என்னும் அந்த தாத்தாவின் மகனும், பேரனும், கொள்ளுப்பேரனும் அந்த கூட்டுக் குடும்பச் சொத்தை அனுபவித்து வருவார்கள்; 

சொத்துரிமை-1

சொத்துரிமை-1
இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ல் “பூர்வீகச் சொத்து”:

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், பழைய இந்து சட்டமே நடைமுறையில் இருந்துள்ளது; தென் இந்தியாவில் மித்தாஷரா இந்து கூட்டு குடும்ப முறை இருந்து வந்துள்ளது; அதாவது, இந்து கூட்டுக் குடும்பம் என்பது குடும்பத்தில் மூத்தவர் கர்த்தா (காப்பவர், மேனேஜர்) என்று அழைக்கப்படுவார்; இவர்தான் அந்த குடும்பத்தை நிர்வகித்து வருவார்; அந்த குடும்பத்தில் உள்ள ஆண் பெண் அனைவரும் கூட்டு குடும்ப உறுப்பினர்கள்; ஒரு சொசைட்டி போல இந்த அமைப்பு இருக்கும்;

இந்து கூட்டு குடும்பத்தில், வெளிக் குடும்பத்திலிலிருந்து திருமணம் செய்து மனைவியாக வருவர்; அதேபோல இந்தக் குடும்பத்து பெண்கள், திருமணம் செய்து கொடுக்கப்பட்டு வெளிக் குடும்பத்துக்கு மனைவிகளாக செல்வர்; ஆக, பெண்கள், குடும்பத்தின் நிரந்தர உறுப்பினர்கள் இல்லை; ஆனாலும், அவர்கள் அந்த குடும்பத்தில் இருக்கும் வரை, உணவு, உடை, இருப்பிடம் இவைகளைப் பெற உரிமையானவர்கள், அவ்வளவே!

கோபார்சனரி குடும்பம்:
மேலே சொன்ன “இந்து கூட்டு குடும்ப” முறையில் ஆண்கள் பெண்கள் அனைவரும் உறுப்பினர்கள்; ஆனால், அந்த “இந்து கூட்டு குடும்பத்தில்” ஆண்கள் மட்டும், அதிலும் குறிப்பாக ஒருவரும், அவரின் மகனும், பேரனும், கொள்ளுப்பேரனும், சேர்ந்த நான்கு தலைமுறையான நேர்வழி ரத்த சொந்தங்கள் மட்டும் “கோபார்சனர்” என்று அழைக்கப்படுவர்; ஆக, “இந்து கூட்டுக் குடும்பம்” என்பது ஆண், பெண் சேர்ந்த மொத்த குடும்பம் ஆகும்; ஆனால் “கோபார்சனர்” என்பது ஒரு ஆணும், அவரின் மகன்களும், பேரன்களும், கொள்ளுப்பேரன்களும் அடங்கிய ஒரு சிறு கூட்டம் மட்டுமே கோபார்சனர்; அந்த ஆண்களுக்கு மனைவிகள் இருப்பார்கள், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் இருப்பார்கள்; இவர்கள் எல்லாம், கோபார்சனர்கள் ஆகமாட்டார்கள்; அவர்களுக்குறிய வாழ்க்கை ஆதரவும் பாதுகாப்பும் மட்டும் அந்தந்த ஆண்களிடமிருந்து கிடைக்கும்; சொத்தில் பங்கு ஏதும் கிடையாது;

இப்படித்தான், இந்து கூட்டு குடும்ப முறை இருந்து வந்தது; பெண்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டு பூர்வீகச் சொத்தில், அல்லது ஆண்கள் வழி வழியாக அனுபவித்துவரும் சொத்தில், பெண்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது; கொடுக்கவும் மாட்டார்கள்; 

Tuesday, October 18, 2016

Lis Pendense ( லிஸ் பென்டன்ஸ்):

Lis Pendense ( லிஸ் பென்டன்ஸ்):
லிஸ் என்றால் லிட்டிகேஷன்; (Lis = Litigation);
பென்டன்ஸ் என்றால் பென்டிங்; (Pendense = Pending):
லிட்டிகேஷன் பென்டிங் என்றால் “வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளது” என்று பொருள் கொள்ளலாம்;
இதைப்பற்றி “சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882-ல் (The Transfer of Property Act, 1882) அதன் பிரிவு 52ல் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது;
**
Sec.52:  ஒரு அசையாச் சொத்தின் உரிமையைப் பற்றி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு, அந்தப் பிரச்சனையை வழக்காக ஒரு கோர்ட்டில் தாக்கல் செய்திருந்து, அது அந்த கோர்ட்டில் நிலுவையில் இருந்தால், -- அந்த அசையாச் சொத்தை (அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள்) விற்பனை முதலிய எந்த சொத்து மாற்றத்துக்கும் உட்படுத்தக் கூடாது; (அதனால் எதிர்பார்ட்டிக்கு பாதிக்கும் வகையில் அந்த சொத்து மாற்றம் இருக்கும் என்பதால் இந்த தடை ஏற்படுத்தப்படுகிறது;)
ஆனால் – அதே கோர்ட்டின் அனுமதி பெற்று சொத்து மாற்றம் செய்து கொள்ளலாம்; கோர்ட்டும், ஏதாவது நிபந்தனையுடன் அதை அனுமதிக்கலாம்;
விளக்கம்: வழக்கு நிலுவையில் உள்ளது என்பது, வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து, வழக்கில் தீர்ப்பு நாள் வரை, கணக்கில் கொள்ள வேண்டும்; தீர்ப்பு வந்தபின்னரும் அது தொடரும், அந்த தீர்ப்பை நிறைவேற்றும் நாள் முடியும் வரை அது தொடரும்;
**
இந்தியாவில், இப்படிப்பட்ட சட்டப்பிரிவு இருந்தாலும், வழக்குப் போட்டவர்கள் சொன்னால் ஒழிய, மற்றவர்களுக்கு “இந்த சொத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது” என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை;

ஆனால் – அமெரிக்க நாட்டில், இதே சட்டப்பிரிவு உள்ளது; அதில், அவ்வாறு வழக்கு நிலுவையில் இருந்தால், அதை பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு தெரிவித்துவிடுவர்; எனவே வெளி நபர்கள் வெகு எளிதாக அதை அறிந்து கொள்ள முடியும்;

இந்தியாவில் இன்னும் அந்த நிலை வரவில்லை; யாரும் முயற்சிக்கவும் இல்லை; வழக்குப் போட்டவுடனேயே, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் வில்லங்கத்தில் பதிவு செய்தால், பல பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும்;

இந்தச் சட்டப்பிரிவின்படி, பொதுவாக, ஒரு சொத்தைப் பொறுத்து வழக்கு நிலுவையில் இருந்தால், அந்த சொத்தை, அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பார்ட்டிகள் விற்பனை போன்ற பத்திரங்கள் மூலம் சொத்து மாற்றம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது; அப்படி இருந்தபோதிலும், பார்ட்டிகள் விரும்பினால், அதே கோர்ட்டின் அனுமதியுடன் சொத்து மாற்றம் செய்யலாம் என்றும் சொல்லப் பட்டுள்ளது; அப்படி, கோர்ட் அனுமதி கொடுத்தால், ஏதாவது அதற்குறிய நிபந்தனைகளையும் விதிக்கலாம் என்றும் சொல்லப் பட்டுள்ளது;

இதில் இரண்டு சந்தேகங்கள் எழும்:
1). இந்த சட்டப்பிரிவை மீறி, “வழக்கில் பார்ட்டிகளாக உள்ளவர்கள்” விற்பனை செய்து விட்டால், அந்த கிரயத்தின் நிலை என்ன? அப்படியும் மீறி விற்பனை செய்திருந்தால், அந்தப் பத்திரம் சட்டப்படி செல்லாது என்றாலும், அந்த வழக்கில் தீர்ப்புக்கு அந்தப் பத்திரம் உட்பட வேண்டும் என்பதே அதன் மறைமுக அர்த்தம்; அதாவது, தீர்ப்பு சாதகமாக இருந்தால், அந்த பத்திரம் செல்லும்; தீர்ப்பு பாதகமாக இருந்தால், அந்தப் பத்திரம் செல்லாது; அவ்வளவே!

2). இந்த சட்டப்பிரிவை மீறி, “வழக்கில் பார்ட்டிகளாக இல்லாதவர்கள்” விற்பனை செய்திருந்தால் – அவர்களும் அந்த வழக்கின் தீர்ப்புக்கு கட்டப்பட்டவர்கள்தான்; ஏனென்றால், வழக்கு நிலுவையில் இருப்பது எனக்குத் தெரியாது; அதில் நான் பார்ட்டியாக இல்லை; எனவே அந்தத் தீர்ப்பை என்னைக் கட்டுப்படுத்தாது என்ற சட்ட வாதம் ஏற்றுக் கொள்ளப்படாது; ஏனென்றால், வழக்கு நிலுவையில் இருந்தாலே, அது பொதுவான அறிவிப்பு என்றே சட்டம் கருதுகிறது; அதாவது வழக்கு நிலுவையில் இருப்பது எல்லா மக்களுக்கும் தெரியும் என்றே சட்டம் கருதுகிறது; (அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் தகவலாகப் பதிவும் செய்து விட்டால், பொதுமக்களுக்கு பிரச்சனை இருக்காது: இந்திய அரசு அப்படி ஒரு சட்டப்பிரிவையும் கொண்டு வந்தால், நல்லது, எதிர்பார்ப்போம்!);
**

Saturday, October 8, 2016

பொது சிவில் சட்டத்தில் என்ன பிரச்சனை?--(2)

பொது சிவில் சட்டத்தில் என்ன பிரச்சனை?--(2) Common Civil Code

இருந்தபோதிலும், மதங்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களில் பிரிட்டீஸ் அரசு அவ்வளவாகத் தலையிடவில்லை என்றே கூறலாம்! அந்தந்த மதத்தைச் சார்ந்த பண்டிட்டுகள் பிரிட்டீஸ் அரசை குழப்பி விட்டனர்! என் கடவுள் இதைத்தான் ஆணித்தரமாகச் சொல்லி உள்ளான்! அதை நான் மீற முடியாது! அப்படி மீறுவதென்பது, என் கடவுளை மீறுவதாகும் என்று மிரட்டி விட்டான்! பிரிட்டீஸ் அரசும் ‘எப்படியாவது போய்த் தொலையட்டும்’ என்று விட்டுவிட்டான்! இந்தியன் ஜெயித்தாக நினைத்துக் கொண்டான்!

இது என் பொதுவான கருத்து: “மதங்கள் என்பதே, ஒரு பெரும் கூட்டத்துக்கான ஒரு நடைமுறை தர்ம, நியாய, சட்டங்கள் அடங்கிய ஒரு பொக்கிஷம்; அந்தந்த மதத்துக்கு அது ஒரு புனிதநூல்; இல்லையென்றால், மனிதன் மிருகமாகவே வாழ நேரிடும்; அவனை நெறிப்படுத்த மதங்கள் உருவாகின; அந்த அந்த பகுதிகளில் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றவாறு மதங்கள் உருவாகின; அவைகளுக்கு வேறு வேறு பெயர்கள் உண்டு; எல்லா மதங்களின் தற்போதுள்ள அவரவர்களின் புனித நூல்களை படித்துப் பார்த்தால், எல்லாமே ஒரு தலைவனை அல்லது இறைவனை முன்நிறுத்துகின்றன; அவனால் முடியாதது எதுவும் இல்லை என்றும் சொல்கின்றன; அதை உறுதிப் படுத்தி, அந்த இறைவனின் அதி அற்புதமான செயல்களை கதைகளாகவும், வீரதீர சாகசங்களாகவும் சொல்லி வைத்துள்ளன; அவனை “முழுவதுமாக நம்பினால்” இந்த உலகிலும், இம்மை உலகிலும் உனக்குப் பயம் இல்லை, என்றும், அவனை எதிர்த்தால், உன் கதி அதோகதிதான் என்றும் மிரட்டி உள்ளன; மனிதனை மதங்கள் பெரும்பாலும் பயப்படுத்தியே வைத்திருக்கின்றன; இவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு பெரிய நல்ல காரியத்தையும் எல்லா மதங்களுமே செய்திருக்கின்றன; அதுதான், “அன்பு”; எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இரு, என்றும், இரக்கம் கொண்டு உதவ வேண்டும் என்றும், உயிரினங்களுக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் தெள்ளத் தெளிவாக விளக்கியும் உள்ளன;”

ஆனால் நாம் அனைவரும், அவரவர் மதங்களின் “கதாநாயகனை” மட்டும் பிடித்துக் கொண்டு, வெறி கொள்ள வைத்து, மதங்களின் கொள்கைகளை சாக்கடையில் வீசி எறியும் வேலையை செய்து கொண்டிருக்கிறோம்! அது கிடக்கட்டும்!

பிரிட்டீஸ் அரசு, இந்தியாவில் மதங்கள் சம்மந்தப்பட்ட சட்டங்களில் அவ்வளவாக தலையிடவில்லை; அதனால் பிரச்சனை வரும் என்று நினைத்திருக்கலாம்! அந்த அந்த மதத்தின் திருமண நடைமுறைகள், திருமண முறிவு நடைமுறைகள், தத்து என்னும் சுவிகாரம் எடுக்கும் நடைமுறை, சொத்தில் வாரிசுகளுக்குப் பங்கு கொடுப்பது போன்ற சில விஷயங்கள் இன்றும் அந்த அந்த மதங்களின் நடைமுறையே சட்டமாகப் பின்பற்றப் பட்டு வருகிறது;

இந்தியன் மெஜாரிட்டி சட்டம், 1875 (The Indian Majority Act, 1875) இந்தச் சட்டமும் பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்த சட்டம்தான்; அப்போது இந்தியாவில் ஒவ்வொரு மதத்துக்கும், ஒருவரின் மேஜர் வயதைப் பொறுத்து ஒவ்வொரு விதமான கருத்து உண்டு; இந்து மதத்தில், ஒரு சிறுவன் இந்தியாவின் தென் பகுதியில் வசித்தால் அவன் தன் 15வது வயதில் மேஜர் வயதை அடைவான் என்றும், மற்ற பகுதியில் வசித்தால், அவனின் மேஜர் வயது 16 வயதுக்கு மேல் என்றும் கொள்கை உண்டு; இஸ்லாமிய மதத்தில் ஒரு சிறுவன் தன் 12 வயதில் மேஜர் வயதை அடைவான் என்றும், சிறுமியாக இருந்தால் அவள் “வயதுக்கு வந்தவுடன்” மேஜர் வயதை அடைவாள் என்றும் கொள்கை உண்டு; இப்படி ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு வகையான கொள்கை, அதுவே சட்டம்;

இப்படி குழப்பமாக இருந்தால், அவர்களுக்குள், மாற்று மதத்தினருக்குள் நடக்கும் ஒப்பந்தங்கள், கிரயங்கள், புரோ நோட்டுகள் என்ற பொதுவான விஷயங்களும் சேர்ந்து பாதிக்கப் படுகின்றன; எனவே பிரிட்டீஸ் அரசு, இந்த மேஜர் வயது விஷயத்தில் ஒரு பொதுவான சட்டம் தேவை எனக் கருதியது; அப்படிக் கொண்டு வரப்பட்ட சட்டமே மேலே சொன்ன இந்திய மேஜர் சட்டம 1875 (The Indian Majority Act, 1875); அதன்படி பொதுவான இந்தச் சட்டத்தை ஏற்படுத்தி, அதன்படி, இந்தியாவில் இருக்கும் எவரும், அவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் தன் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் மேஜர் வயதை அடைவார் என்றும், அதன்பின்னர் அவர் எல்லா விதமான சட்ட பத்திரங்களிலும் கையெழுத்துச் செய்ய முடியும் என்றும் சொல்லி விட்டது; ஆனாலும், இந்த சட்டம், இந்து, முஸ்லீம் போன்ற மற்ற மதங்களில் நடக்கும் திருமணம், டைவோர்ஸ், தத்து, சொத்துரிமை போன்றவற்றில் தலையிடாது என்ற சொல்லி விட்டது; அதனால்தான், அந்தக் காலத்தில், சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன; முஸ்லீம் மதப்படி அங்கு திருமணம் செய்து கொள்ளலாம்; தலக் என்னும் டைவோர்ஸ் முறையும் அங்கீகரிகப் பட்டது; அதற்கு வயது வித்தியாசம் தேவையில்லை; அந்தந்த மதங்கள் என்ன சொல்கின்றனவோ, அதையே நடைமுறைப் படுத்திக் கொள்ளும்படி பிரிட்டீஸ் அரசு சொல்லிவிட்டது;

(தொடரும்)…

பொது சிவில் சட்டத்தில் என்ன பிரச்சனை?—(1)

பொது சிவில் சட்டத்தில் என்ன பிரச்சனை?—(1) Common Civil Code
இந்தியாவில் உள்ள மக்களுக்கு பொதுவான சிவில் சட்டங்கள் வேண்டும் என்று இப்போது பேசப்பட்டு வருகிறது;
இந்திய அரசியல் சாசனச் சட்டம் 1950 (The Constitution of India, 1950) இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான சட்டமே!
இந்திய சிவில் நடைமுறைச் சட்டம் 1905 (The Code of Civil Procedure, 1905) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 (The Indian Contract Act, 1872) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 (The Transfer of Property Act 1882) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய பத்திரப் பதிவுச்சட்டம், 1908 (The (Indian) Registration Act, 1908) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய கிரிமினல் நடைமுறைச்சட்டம், 1861 (The Criminal Procedure Code, 1861) திருத்தச் சட்டம் 1973 எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய தண்டனைச் சட்டம், 1860 (The Indian Penal Code, 1860) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய சாட்சியச் சட்டம், 1872 (The Indian Evidence Act, 1872) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!
இந்திய போலீஸ் சட்டம், 1861 (The Police Act, 1861) எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானதே!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்; பெரும்பாலான சட்டங்கள் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான சட்டமே! இதில் மதங்களை வைத்து, இனங்களை வைத்து, மொழிகளை வைத்து, ஜாதிகளை வைத்து வேறுபாடு ஏதும் காட்டப்படவில்லை!

இந்தச் சட்டங்கள் எல்லாம், நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கொண்டு வரப்பட்டவை! அதையே நாமும் ஏற்றுக் கொண்டு இன்றுவரை சட்டமாக பின்பற்றி வருகிறோம்! ஏனென்றால், அந்தச் சட்டங்கள் பொதுவான சட்டங்கள் என்பதால் ஏற்றுக் கொண்டு விட்டோம்! உலக நாடுகளில், காமென்வெல்த் நாடுகள் எல்லாம் இந்த பிரிட்டீஸ் நடைமுறைச் சட்டங்களையே பின்பற்றுகின்றன என்பதால், நாமும் அவ்வாறே பின்பற்றி வருகிறோம்! இந்தச் சட்டங்கள் எல்லாம் இயற்கை நியதி என்ற தத்துவத்துடன் ஒத்துப்போவதால், அவைகள் இன்றுவரை சட்டமாக இருந்து வருகின்றன!
அப்படியென்றால், வேறு என்ன சிக்கல் உள்ளது?

பொதுவான விஷயங்களுக்குப் பொதுச் சட்டமும், மதம் சார்ந்த விஷயங்களுக்கு அந்தந்த மதம் சார்ந்த சட்டமும் உள்ளன! உதாரணமாக மதம் சார்ந்த தனிச் சட்டங்கள் கீழ்கண்ட விஷயங்களில் தன் அதிகாரத்தைச் செலுத்துகின்றன; அவை:-
திருமணம், அடாப்ஷன் என்னும் தத்துக் குழந்தை எடுக்கும் முறை, டைவோர்ஸ் என்னும் மணமுறிவு, இறந்தவரின் சொத்துக்களில் வாரிசு உரிமை, இப்படிச் சில குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் அந்தந்த மதம் தன் மூக்கை நுழைத்து உள்ளது!

பிரிட்டீசார் நம்மை ஆள்வதற்கு முன்னர், நாடு கடந்து வியாபாரம் நடந்து கொண்டிருந்தது; இப்போது, வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலும் நடந்து வந்தது; இதில் பிரச்சனை ஏற்பட்டால், எப்படி தீர்ப்பது என்பது தொன்று தொட்ட வழக்கமாக ஒரு வழக்கம் இருந்து வந்திருக்கிறது: அதன்படி, கடன் கொடுத்தவர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்து, கடன் வாங்கியவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவரிடம் பஞ்சாயத்துச் செய்யும் முறையானது, இந்து மத முறைப்படி இருக்க வேண்டுமாம்! அதாவது பாதிப்புக்கு உள்ளானர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருக்கிறாரோ அந்த மத சாஸ்திரங்களின்படி அவரிடம் விசாரனையும், தீர்ப்பும், தண்டனையும், இருக்குமாம்! எளியவனுக்குச் சாதகமாக இருப்பது என்பது ஒருவகைத் தர்மமே!

இது பொதுவான வியாபார விஷயங்களில் இப்படி நடந்து வந்திருக்கிறது; அதைத்தான் பின்னர், பிரிட்டீஸார் மாற்றி அமைத்து, எல்லோருக்கும் ஒரே பொதுவான சட்டம் கொண்டு வந்தால் என்ன என்றும், அதை பிரிட்டீஸ் இந்தியா முழுமைக்கும் அமல் படுத்தினால் என்ன என்றும் தோன்ற, அதையே இங்கிலாந்து அரசு சட்டமாக்கி விட்டது! அவைகள்தான் மேலே சொல்லப்பட்ட பலதரப்பட்ட இந்திய சட்டங்கள்! அவைகள்தான் இன்றும் அமலில் இருக்கின்றன!

(தொடரும்)…

Thursday, October 6, 2016

உயில் புரபேட்-5 (Will Probate)

Will probate-5
உயில் புரபேட்-5
உயிலை எழுதி வைத்தால் மட்டும் போதாது; அதை சட்டபூர்வமாக ஏற்படுத்தி வைக்க வேண்டும்; உயிலை கையாலும் எழுதி வைக்கலாம்; தட்டச்சு, கம்யூட்டர் பிரிண்ட் மூலமும் ஏற்படுத்தலாம்; எப்படி இருந்தாலும், அது ஒரு பேப்பரில் இருந்தால் போதும்; அதற்கு முத்திரை தீர்வை என்னும் ஸ்டாம்ப் பேப்பர் தேவையே இல்லை! வெறும் வெள்ளைப் பேப்பரில் எழுதி வைக்கலாம்; அதில் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியமும் இல்லை; அதை ரிஜிஸ்டர் என்னும் பதிவும் செய்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆனாலும், அந்த உயிலைப் பதிவு செய்து வைத்தால் (ரிஜிஸ்டர் ஆபீஸூக்குச் சென்று அந்த உயில் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து வைத்தால்) நல்லது; பின்நாளில் அது மிகுந்த நம்பிக்கைக்கு உரிய பத்திரமாக இருக்கும்; யாரும் ஒரு போலி உயில் என்று குற்றம் சொல்லி விட முடியாது; அதற்காக அந்த உயிலை பதிவு செய்து வைப்பது நல்லது;

ஆனாலும், உயில் எழுதியவர், அந்த உயிலில் உள்ள எல்லாப் பேப்பரின் பக்கங்களிலிலும் அவரின் கையெழுத்தைச் செய்து வைக்க வேண்டும்; கடைசி பக்கத்தில் அவரின் கையெழுத்துக்குக் கீழே கண்டிப்பாக இரண்டு சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்று இருக்க வேண்டும்; ஒரு உயில் செல்லும் என்று சொல்வதற்கு மிக முக்கியமானதே இந்த இரண்டு சாட்சிகளின் கையெழுத்துத்தான்! உயிலுக்கு சாட்சிகளின் கையெழுத்து அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது; சிலர் வெகு அஜாக்கிரதையாக சாட்சிகள் கையெழுத்தை வாங்காமல் வைத்திருப்பர்; அப்படி இருந்தால், அந்த உயிலே செல்லாமல் போய்விடும்;

இந்த இரண்டு சாட்சிகளும், அந்த உயிலை எழுதியவர் போடும் அவரின் கையெழுத்தை நேரில் பார்த்தவர்களாக இருக்க வேண்டும்; ஒரே நேரத்தில் உயிலை எழுதியவரும், சாட்களும் அந்த உயிலில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும்; இதை சட்டம் கட்டாயப் படுத்திகிறது; இரண்டு சாட்சிகளும் உயில் எழுதியவரின் கையெழுத்து போடுவதை நேரில் பார்க்கவில்லை என்றாலும், அதில் ஒரு சாட்சியாவது கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டும் என்றும், மற்றொரு சாட்சி, உயில் எழுதியவரின் கையெழுத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது; இப்படி இருக்கும்போது, பொதுவாக இரண்டு சாட்சிகளுமே நேரில் பார்த்த சாட்சிகளாக இருப்பது மிக நல்லது;

எனென்றால், உயிலை எழுதியவர் இறந்தபின்னர், இந்த சாட்சிகள் இருவர்தான் அந்த உயிலை உண்மையாக எழுதிய உயில் என்று நிரூபிக்க இருக்கும் சாட்சிகள் ஆகும்; வேறு யாருக்கும் தெரியாது, அந்த உயிலை, அதை எழுதியவர்தான் எழுதி வைத்தாரா என்பது; எனவேதான் உயிலுக்கு சாட்சிகள் முக்கியம், முக்கியம் என்று சட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது;

அப்படிப்பட்ட சாட்சிகள் எப்படி இருக்க வேண்டும்? நியாயமானவராக இருக்க வேண்டும்; குழப்பவாதியாக இருக்க கூடாது: எதிரியின் பக்கம் சாய்ந்து, பிறழ்ந்து சாட்சி சொல்பவராக இருக்க கூடாது; என்ன நடந்தது என்பதை உண்மையாகச் சொல்பவராக இருக்க வேண்டும்; அப்படியென்றால், சாட்சிகள், பொதுவானவராக இருப்பதுதானே நல்லது!

மேலும், சாட்சிகள் இருவரும் நிரந்தர விலாசத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும்; சாட்சி போட்டவுடன் கண்காணாத இடத்துக்கு போய் சேருபவராக இருந்து விடக் கூடாது; வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விடுபவராக இருந்து விடக் கூடாது;

மேலும், குறிப்பாக வயதானவராக இருக்கக் கூடாது; உயிலை எழுதியவர் இறப்பதற்கு முன்னரே, அதில் கையெழுத்துப் போட்ட சாட்சி இறந்து விட்டால், யாரை வைத்து அந்த உயிலை நிரூபிப்பது? சிக்கல் வந்துவிடும் அல்லவா? அல்லது உயிலை நிரூபிப்பதற்கு முன்னரே சாட்சி இறந்தாலும் கஷ்டமே! எனவேதான், குறிப்பாக உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், இளையவராகவே இருக்க வேண்டும்; (ஒவ்வொருவரின் ஆயுளின் விதி என்பது வேறு!); முடிந்தவரை சிறு வயதினராக இருப்பது நல்லது;

மேலும், சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்கள், அந்த உயிலின்படி பலனை (சொத்தை) அடைபவராக கண்டிப்பாக இருக்கக் கூடாது; அப்படி, அந்த உயிலில் பங்கு வாங்குபவரே சாட்சியாகவும் இருந்தால், அந்த உயிலும் செல்லாது ஆகிவிடும்; எனவே இதில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்;

மேலும், உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், நெருங்கிய உறவினராக இருந்தால் வேறு ஒரு சிக்கல் வரும்; உதாரணமாக, உயிலில் ஒரு மகளுக்குச் சொத்தை கொடுத்திருப்பார்; அதில் சாட்சி போட்டவர், ஒரு மகனாக இருப்பார்; முதலில் அப்பாவுக்காக அரை மனதுடன் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருப்பார்; அப்பா இறந்தவுடன், அந்த சொத்தில் மகனுக்கும் ஆசை வந்துவிடும்; அப்போது, சொத்தைப் பெறும் மகள், அந்த சாட்சி போட்ட மகனின் சாட்சியத்தை (வாக்குமூலத்தை) பெற வேண்டும்; அப்போது அந்த மகன் உதவுவதற்கு வர மாட்டார்; சாக்குப்போக்கு சொல்வார்; தேவையில்லாமல் திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல ஆகிவிடும்; எனவே நெருக்கமான, அல்லது பின்நாளில் வில்லத்தனத்துடன் நடந்து கொள்ளும் நபரின் சாட்சியை இப்போதே பெறாமல் இருப்பது நல்லது!
**




உயில் புரபேட்-4

Will probate-4
உயில் புரபேட்-4
உயில் எழுதும்போது தனியே தனக்கு மட்டுமே உயில் எழுதிக் கொள்வதே சிறந்தது; கூட்டாக இரண்டு பேர் எழுதும் உயிலில் நிறைய சட்டசிக்கல்கள் வருகின்றன; கணவர் சொத்தை கணவரும், மனைவி சொத்தை மனைவியும் தனித்தனி உயில்கள் மூலம் எழுதிக் கொள்ளலாம்; அதைவிட்டு விட்டு, இருவரும் ஒரே உயிலில் எழுதுவார்கள்; அதில் எழுதும் வாசகங்கள் அந்த கூட்டு உயிலை நடைமுறைப் படுத்துவதில் சட்ட சிக்கலை உண்டாக்கிவிடும்;
இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக எழுதும் உயிலுக்கு ஜாயிண்ட் உயில் (Joint Will) என்று பெயர்; அதில், கணவர் முதலில் இறந்து விட்டால், கணவரின் சொத்து மனைவிக்குப் போய்ச் சேரும் என்றும், மனைவி முதலில் இறந்து விட்டால், மனைவியின் சொத்து கணவருக்கு போய்ச் சேரும் என்றும் எழுதுவார்கள்; இப்படிப்பட்ட உயிலை கூட்டு உயில் என்று சொன்னாலும், அது உண்மையில் மியூச்சுவல் உயில் (Mutual Will) என்னும் வகையைச் சேர்ந்ததாகும்;
கணவனும் மனைவியும் கூட்டாக வாங்கிய சொத்தை, கூட்டாக ஒரே உயில் எழுதி அந்த சொத்தை தன் வாரிசுகளில் யாருக்காவது கொடுப்பர்: இப்படிப்பட்ட உயிலில், கணவர் முதலில் இறந்தால், அந்த உயில் நடைமுறைக்கு வராது; மனைவி நினைத்தால் அந்த உயிலை ரத்து செய்து விடலாம் என்று சில சட்டத் தீர்ப்புகளும் உள்ளன என்பதால், அந்த குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு தெளிவாக உயிலை எழுதி வைக்க வேண்டும்;
உயில்களில் எக்சிகியூட்டார்கள் என்னும் நிறைவேற்றாளர்களை நியமித்து இருப்பர்: உயிலை எழுதியவர் இறந்த பின்னர், இந்த உயிலில் சொல்லப் பட்டுள்ள விஷயங்களை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று ஒரு பொதுவான நபரை அந்த உயிலிலேயே அதை எழுதி வைத்தவர் நியமித்து வைத்து விட்டு போய் இருப்பார்; அவரைத்தான் எக்சிகியூட்டர் (Executor) என்பர்; சொத்துக்காரர் இறந்த பின்னர், அவரின் உயில்படி, அந்த எக்சிகியூட்டர் வந்து, அவரின் சொத்துக்களை கணக்கெடுத்து, அந்த உயிலில் சொல்லி கடன்கள், உயில் எழுதியவரின் இறப்புச் செலவு, உயில் எழுதியவர் யாருக்காவது பணம் கொடுக்கச் சொல்லி இருந்தால் அதைக் கொடுப்பது, அவரின் சொத்துக்களை, அந்த உயிலில் சொல்லி உள்ளபடி பிரித்துக் கொடுப்பது போன்ற பல வேலைகளைச் செய்வார்; அவரே அந்த உயிலுக்கு அதிகாரி; இறந்தவரின் வாரிசுகள் அதில் தலையிட முடியாது;
ஒரு உயிலில் ஒரு எக்சிகியூட்டர் மட்டும் நியமித்திருப்பர்; பொதுவாக இது போதும்; ஆனால் செய்ய வேண்டிய வேலையைப் பொறுத்து இரண்டுக்கு மேற்பட்ட பல எக்சிகியூட்டர்களையும் நியமித்திருப்பார்; அது உயிலை எழுதி வைப்பவரின் விருப்பத்தையும், நம்பிக்கையையும் பொருத்தது: ஒரு எக்சிகியூட்டர் அந்த வேலையை செய்ய விரும்பம் இல்லாமல் இருந்தாலும், மறுத்து விட்டாலும், இறந்து விட்டாலும், மற்ற எக்சிகியூட்டர்கள் இருந்து அந்த வேலையைச் செய்வர்; கூட்டாகவும் செய்வர், தனித்தனியாகவும் செய்வர்; அதை அந்த உயிலில் தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும் அவ்வளவே!
எல்லா உயிலிலிலும் எக்சிகியூட்டர் நியமித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; அது உயில் எழுதி வைப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது; அப்படி எந்த எக்சிகியூட்டார்களும் நியமிக்கவில்லை என்றால், வாரிசுகளில் யாராவது ஒருவர் அந்த வேலையைச் செய்து கொள்ளலாம், தவறில்லை; எனவே உயிலில் இரண்டு வகை; ஒன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயில்; மற்றொன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்படாத உயில் அவ்வளவே; கோர்ட்டில் ஒரு உயிலை புரபேட் செய்ய மனுச் செய்யும் போது, எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயிலில், அவரே மனுச் செய்ய வேண்டும்; எக்சிகியூட்டர் நியமிக்கப்படாத உயிலில், இறந்தவரின் வாரிசுகளில் யாராவது மனுச் செய்ய வேண்டும்;
**


உயில் புரபேட்-3 Will Probate

உயில் புரபேட்-3 (Will Probate)

இந்து மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; கிறிஸ்தவ மதத்திலும் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; ஆனால் முகமதிய சட்டத்தில் உயில் எழுத முடியாது; ஏனென்றால், முகமதியர்களின் புனித  நூலான குரானின் வாக்குப்படி, ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லாமல் செய்யும்படி உயில் எழுத முடியாது என்று சொல்லப் பட்டுள்ளது; ஆனாலும், சொத்தை வைத்திருப்பவர், அந்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு உயில் எழுதி வைக்கலாம் என்று சலுகை கொடுக்கப் பட்டுள்ளது; அந்த உயிலை எழுத வேண்டுமானால், அவரின் வாரிசுகள் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும் என்று கன்டிஷனும் போடப் பட்டுள்ளது; எனவேதான், முகமதியர் உயில் எழுத முடியாது என்று பொதுவாகச் சொல்லி விடுவர்;

இந்து, கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை; உயிலை எழுதி அவரின் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும், கொடுத்து விடலாம்; உயில் எப்போதும், அதை எழுதி வைத்தவரின் ஆயுட்காலத்துக்கு பின்னர்தான் அமலுக்கு வரும்; உயிலை எழுதியவர் உயிருடன் இருந்தால் அந்த உயில் நடைமுறைக்கு வரவே வராது; அவர் இறந்த பின்னர்தான் நடைமுறைக்கு வரும்;

ஒருவர் ஒரு உயிலைத்தான் எழுதி வைக்க முடியும்; அடுத்தடுத்து உயில் எழுதி வைத்தாலும், கடைசி உயில்தான் செல்லும்; மற்ற உயில்கள் செல்லாமல் போய்விடும்; ஆனாலும், சிலர், தன்னிடம் உள்ள பல சொத்துக்களை, வேறு வேறு உயில்கள் மூலம் எழுதி, தன் வேறு வேறு பிள்ளைகளுக்கு தனித்தனியே கொடுத்து விடும் வழக்கம் உள்ளது: இது தவறு என்று சொல்வதற்கு ஆட்கள் இல்லை;


உயில் என்றாலே, “அவரின் கடைசி ஆசை” என்றுதான் அதற்குப் பொருள்; உயில் என்பதற்கு ஆங்கிலத்தில் Will என்றே சொல்கின்றனர்; அப்படிப் பார்த்தாலும், அவரின் விருப்பம் என்றுதான் பொருள் வருகிறது; எனவே ஒரு மனிதனுக்கு  ஆசை என்பது கடைசி ஆசை மட்டுமே தன் கடைசி விருப்பமாக இருக்க முடியும்; எனவே ஒருவர் ஒரு உயில் மட்டும்தான் எழுதி நடைமுறைப் படுத்த முடியும்; ஏற்கனவே எழுதிய உயிலை மாற்றி எழுத வேண்டும் என்றால், அந்த உயிலை ரத்து செய்து விட்டு, வேறு ஒரு புதிய உயிலை எழுத வேண்டும்; அல்லது பழைய உயிலை திருத்தம் செய்து மட்டும் வைத்துக் கொள்ளலாம்; இப்படிப் பார்த்தால், ஒரு உயிருக்கு ஒரு உயில்தான் இருக்க முடியும் என்பதே உண்மை;

உயில் புரபேட்-2 Will Probate

உயில் புரபேட்-2 (Will Probate)

உயில் எழுதி வைக்காத சொத்துக்கள், அந்தந்த மதச் சட்டப்படி இறந்தவரின் வாரிசைச் சென்று அடையும்; இந்துவுக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956” உள்ளது; (இது 2005-ல் திருத்தம் செய்யப் பட்டது); அதுபோலவே, கிறிஸ்தவருக்கு வேறு ஒரு வாரிசு சட்டம் உள்ளது; அதன் பெயர் “இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925”; இதுபோலவே முகமதியர்களுக்கும் (முஸ்லீம்களுக்கும்) ஒரு வாரிசுரிமைச் சட்டம் உள்ளது; அதன் பெயர் “ஷரியத் சட்டம் 1937”; 

கிறிஸ்தவர்களுக்கு உள்ள வாரிசுரிமைச்  சட்டமான, இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-த்தின் படி, கிறிஸ்தவ ஆணோ, பெண்ணோ, உயில் எழுதாமல், சொத்தை விட்டு விட்டு இறந்து விட்டால், அவரின் சொத்து அவரின் கணவர் அல்லது மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கும், அவரின் பிள்ளைகளுக்கு (மகன்கள், மகள்கள்) மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கும் போய்ச் சேரும்; குழந்தைகள் இல்லையென்றால், அடுத்தடுத்த வாரிசுகளை போய் சேரும்;


முகமதியர்கள் வாரிசுரிமைச் சட்டமான ஷரியத் சட்டம் 1937-ன்படி, முகமதியர் ஒருவர், இறந்து விட்டால்,  அவரின் மகன்களுக்கு தலைக்கு இரண்டு பங்கும், அவரின் மகள்களுக்கு தலைக்கு ஒருபங்கும், இறந்தவரின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கிடைக்கும்; இதுபோக, மீதியுள்ள பங்குகள் மற்ற பங்காளிகளுக்குக் கிடைக்கும்; சற்று குழப்பமாக இருந்தாலும், அதற்கென்று அந்த சட்டத்தில் சில கணக்குகள் கொடுத்துள்ளனர்;

உயில் புரபேட்-1 (Will Probate)

உயில் புரபேட்-1 (Will Probate)

ஒருவர், தன் வாழ்நாளுக்குப் பின்னர், அவரின் சொத்துக்களை, உயில் மூலம், அவர் விரும்பும் நபருக்கு கொடுக்கலாம்! அப்படி எந்த உயிலும் எழுதி வைக்காமல் அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவரின் சட்ட பூர்வ வாரிசுகளுக்குச் சென்று விடும்; உயில் எழுதி வைத்தால், அவர் விரும்பியவருக்கு கொடுத்து விடலாம்; உயில் எழுதாமல் இறந்தால், சட்டபூர்வ வாரிசுகளை அடையும்;

இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஆண், அவரின் சொத்தை உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அவரின் வாரிசுகளான, அவரின் தாயார் (அப்போது உயிருடன் இருந்தால்), மனைவி, மகன்கள், மகள்கள் இவர்களுக்கு மட்டும் போய்ச் சேரும்; இவர்கள் அனைவருமே முதல்கட்ட வாரிசுகள் ஆவார்கள்; இறந்தவரின் தந்தைக்குப் போகாது; அவர் இரண்டாம் கட்ட வாரிசாக வருகிறார்; முதல் கட்ட வாரிசுகள் யாரும் இல்லை என்றால் மட்டுமே, இரண்டாம் கட்ட வாரிசாக, தந்தை, அவரின் இறந்த மகனின் சொத்து முழுவதையும் அடைவார்; முதல் கட்ட வாரிசுகள் யார் யார் அப்போது உயிருடன் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தலைக்கு ஒரு பங்குவீதம் சொத்தை அடைவார்கள்;

இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர், தன் சொத்தை விட்டுவிட்டு, உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அந்தச் சொத்து, அவரின் கணவர், மகன்கள், மகள்கள் அடைவார்கள்; இந்துமதப் பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை என்றால், அந்தப் பெண்ணின் சொத்து வேறு மாதிரி வாரிசுகளை அடையும்; அதாவது, (1)அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இறந்து விட்டால், இறந்த பெண்ணின் சொத்து சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவளின் கணவருக்குப் போய்ச் சேரும்; கணவரும் இல்லையென்றால், கணவரின் வாரிசுகளுக்குப் போய் சேர்ந்துவிடும்; (2)இறந்த பெண்ணுக்கு, குழந்தையும் இல்லாமல், இருந்தால், அவளின் சொத்து, தன் பெற்றோரிடமிருந்து கிடைத்த சொத்தாக இருந்தால், அந்த சொத்து, திரும்பவும் அவளின் தந்தைக்கே போய்ச் சேர்ந்துவிடும்; (3) இறந்த பெண்ணின் சொத்து, கணவரின் தகப்பனாரான மாமனாரிடமிருந்து கிடைத்து இருந்தால், அது அவளின் மாமனாருக்கே போய்ச் சேர்ந்து விடும்; இப்படியாக, குழந்தை இல்லாமல் இறந்த இந்து பெண்ணின் சொத்து மூன்று வகைகளில் அந்தந்த வாரிசுகளை அடையும்; 

இந்திய வக்கீல்களும் வெளிநாட்டு வக்கீல்களும்:

இந்திய வக்கீல்களும் வெளிநாட்டு வக்கீல்களும்:

இந்தியாவின் சட்ட திட்டங்கள், ஆங்கிலேய ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப் பட்டது; பிரிட்டீஸ் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களே இந்தியாவிலும் அமல்படுத்தப் பட்டது; சில சட்டங்கள் மட்டும் இந்திய மண்ணுக்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றாற்போல ஏற்படுத்தப் பட்டது;

இப்போதும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஏற்படுத்தப் பட்டவையே! சுதந்திரம் பெற்ற பின்னர், அதையே நாமும், ஏற்றுக் கொள்வதாக ஒரு சட்டம் ஏற்படுத்தி ஏற்றுக் கொண்டோம்; பொதுவாக, ஆங்கிலேய ஆட்சி நடந்த நாடுகளான காமன்வெல்த் நாடுகள் எல்லாவற்றிலுமே ஆங்கிலேய சட்டமே அடிப்படையாக இருக்கிறது என்றால் மிகையில்லை!

இப்படிப்பட்ட சூழலில், இப்போது ஒரு பிரச்சனை இந்திய நீதிமன்றங்களிலும், வக்கீல் சமூகத்திலும் நிலவி வருகிறது; இந்திய கோர்ட்டுகளில் இந்திய வக்கீல்கள் மட்டுமே தொழில் நடத்த வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் வெளிநாட்டு அல்லது அந்நிய நாட்டு வக்கீல்களை இந்திய கோர்ட்டில் அனுமதிக்க கூடாது என்றும் பெரும்பாலோர் கருதுகின்றனர்; தங்களது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று பயமும் ஒரு பெரிய காரணமாக இருக்கலாம்;

ஆனால் வேறுசிலர், வெளிநாட்டு வக்கீல்களை இந்திய கோர்ட்டுகளில் அனுமதிப்பதில் தவறில்லை என்றும், உலக நாடுகள் எல்லாம் பொதுவான வியாபார தொடர்புகளை கொண்டுள்ளதால், அது அவசியமும் கூட என்று சொல்கின்றனர்;

வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யும் வழக்காளி மக்கள், தங்களுக்கு பிடித்த அல்லது விருப்பமான வக்கீல்களை அமர்த்திக் கொள்வது என்பது அவர்களின் அடிப்படை உரிமை என்றும், அதை இந்திய வக்கீல்கள் தடை செய்ய முடியாது என்றும் வாதம் உண்டு;

அப்படி ஏற்படும் பட்சத்தில், இங்குள்ள தார்மீகத்தை மீறாமல், இந்திய வக்கீல்களுக்கும், வெளிநாட்டு வக்கீல்களுக்கும் சமமான ஆடுதளம் வேண்டும் என்றும், வக்கீல் பீஸ் கட்டணங்கள் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் ஒருசாரர் விரும்புகின்றனர்;

வேறுசிலர், அந்நிய நாட்டு வக்கீல்களை இந்திய மண்ணில் தொழில் நடத்த அடியோடு விடக்கூடாது என்று பிடிவாதமாக உள்ளனர்; அப்படி அவர்களை அனுமதித்தால், இந்திய சட்ட கலாச்சாரம் பாதிப்பதுடன், சாமானியன் கோர்ட்டை அணுக முடியாதவாறு அந்நிய நாட்டு வக்கீல்களின் பீஸ்-கட்டணம் இருக்கும் என்று பயப்படுகின்றனர்;

இந்தியாவில் உள்ள கோர்ட்டுகள், இன்னும் பிரிட்டீஸ் சட்ட நடைமுறைகளையே பின்பற்றுகிறது; வருடங்கள் கடந்தாலும், அதில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதே எதார்த்தம்! இந்திய கோர்ட்டுகளில் எண்ணிலடங்கா வழக்குகள் தீர்ப்புக்காக காத்துக் கிடக்கின்றன; வழக்குகள் தேங்கியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது; தேக்கத்துக்கு அனைத்து காரணங்களுமே காரணங்கள்தான்! இருந்தாலும், நாம் நீதி நிர்வாகத்தில் இன்னும் போதிய வசதியையும் விரைவையும் பெறமுடியாதற்கு, நாம் பின்பற்றி வரும் பழைய பிரிட்டீஸ் சட்ட அணுகுமுறைகளே பெரும்பாலான வழக்கு தேக்கத்துக்கு முக்கிய காரணம்;

எல்லா நாடுகளும் வேகமாக அடுத்த படிக்கட்டை தாண்டும்போது, இன்னும் நாம் இருக்கும் படிக்கட்டிலேயே இருப்பதே முக்கிய காரணம்; இதை எடுத்துச் செய்தவதற்கு இப்போது இருப்பர்கள் (அரசாங்கமும், நீதித்துறையும், வக்கீல்களும், சட்ட வல்லுனர்களும்) ஏன் முன்வரவில்லை என்ற காரணமும் தெரியவில்லை!

நீதித்துறையை இன்னும் வேகமாக கணணி மயம் ஆக்கவேண்டும்; கோர்ட் அன்றாட சட்ட நடைமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்; காலை மாலை என இரண்டு பிரிவாக கோர்ட்டுகள் இயங்க அனுமதிக்க வேண்டும்; பிரிட்டீஸ் சட்ட நடைமுறைகளை விட்டுவிட்டு, இன்றைய காலத்துக்கு ஏற்ப நடைமுறைகளை எளிதாக்கிக் கொள்ள வேண்டும் என்று இன்னும் எவ்வளவோ!

இப்போது ஒரு சிவில் வழக்கு கோர்ட்டுக்கு வந்தால், வருடக்கணக்கில், ஏன் பத்து வருடங்களுக்கு மேலும் நிலுவையில் உள்ளது; இந்த நடைமுறையை முதலில் மாற்றி, எந்த சிவில் வழக்கும் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்கும் முடித்தே ஆக வேண்டும் என்ற கட்டுப்பாடு வேண்டும்; அப்பீல் வழக்குகளை ஐகோர்ட் விசாரிக்காமல், மாவட்ட கோர்ட்டுக்கு அடுத்த “சர்க்யூட் கோர்ட்” (அமெரிக்காவில் உள்ளது போல) அல்லது மாவட்ட கோர்ட்டே கடைசி கோர்ட்டாக ஏற்படுத்த வேண்டும் (அதாவது மாவட்ட கோர்ட்டில் இப்போது இருப்பதுபோல ஒரேயொரு நீதிபதி விசாரனை என்ற முறை இல்லாமல், பெஞ்ச் நீதிபதிகளை கொண்ட முறையை கொண்டு வர வேண்டும்); மாநில ஐகோர்ட்டுகளின் சுமையை வெகுவாக இது குறைத்துவிடும்... இப்படி எத்தனை எத்தனையோ வழிமுறைகள் உள்ளன....

ஆனால், இப்போது, வெளிநாட்டு அரசுகள், அந்தந்த நாட்டு வக்கீல்களை இந்தியாவில் பிராக்டீஸ் செய்ய வைப்பதற்காக பிரமாண்ட் முயற்சிகளில் இறங்கி உள்ளன; அதில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய நீதித்துறையில் பெருத்த மாற்றம் ஏற்படும் என்றே யூகிக்கலாம்!
ஒருவேளை இந்திய வக்கீல்களும், நீதித்துறையும் இதுவரை செய்யத் தயங்கிய எல்லா விஷயங்களையும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வந்தவுடன் கேட்டு வாங்கி அமல்படுத்திவிடும் என்று சிலர் நம்புகின்றனர்;

அப்போது, வழக்குக்காக கோர்ட்டுக்கு வரும் இந்திய மக்களுக்கு வெளிநாட்டு வக்கீல் நிறுவனங்கள் உதவியாக இருக்கும் என்றும், வக்கீல் கட்டணம்கூட குறைவாகவே இருக்கும் என்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையே போட்டியும் இருக்கும் என்றும் கருதலாம்; அப்போது இந்திய வக்கீல்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.
**